இன்னொருவரின் ஆன்மீகம்

1

வணக்கம் சார்.

எனது பெயர் கே. நான் என்னுடைய பட்டப்படிப்பை முடித்துவிட்டு என்னுடைய அண்ணன் வீட்டிலிருந்து வேலை தேடிக்கொண்டு இருக்கிறேன். என்னுடைய அண்ணனுக்கு திருமணமாகி 8 மாதங்கள் முடிந்துள்ளன. அவர் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். என்னுடைய அண்ணி கிறிஸ்துவ மதம் சார்ந்தவர். ஆனால் நாங்களோ இந்து மதம். நான் எங்கள் வீட்டில் இருந்தவரை இந்து மதம் வழிபாடுகள் முறைகளை பார்த்து வளர்ந்து வந்தவன். ஆனால் என் அண்ணியோ அதற்கு மாறாக வேறுவிதமாக இருக்கிறார்.

இதனால் எனக்கு சில விஷயங்கள் அவரிடம் பிடிக்கவில்லை. நான் சில நேரங்களில் என்னுடைய அண்ணி என்ற உரிமையில் இவ்வாறு செய்யாதீர்கள் என்று சொல்லியிருக்கிறேன். ஆனால் அவர்கள் திரும்பவும் அதையே செய்கிறார்கள். இதனால் நான் என்ன செய்வதென்று புரியாமல் இருக்கிறேன். இதை நான் எப்படி எடுத்துகொள்வது? மறுபடியும் அவர்களிடம் சென்று ஏதும் சொல்லலாமா, இல்லை அவர்களிடம் பேசாமல் இருக்கலாமா?  இதைப் பற்றி என் அண்ணனிடம் கேட்டால் அவர் அது போகப் போக சரியாகி விடும் என்று சாதாரணமாகக் கூறுகிறார். எனக்கு மனதில் பெரிய கவலையாக இருக்கிறது. நான் என்ன செய்யலாம் மற்றும் என்ன செய்யக்கூடாது? கொஞ்சம் தயவு செய்து சொல்லுங்கள் சார்.

இப்படிக்கு,

கே

அன்புள்ள கே,

நீங்கள் உங்கள் அண்ணி கிறித்தவர் என்று தெரிந்துதான் அவரை ஏற்றுக்கொண்டிருக்கிறீர்கள். அதன்பின் அவரது மத வழிபாட்டுரிமையை கட்டுப்படுத்த, மாற்ற உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை. ஒருவருடைய ஆன்மீக விஷயத்தில் தலையிடுவது பெரும் பிழை. அவரை கட்டாயப்படுத்துவது அல்லது பிரச்சாரம் மூலம் அவரை திசை திருப்ப முயல்வது ஒரு குற்றம்.

ஒருபோதும் ஓர் இந்து அதை செய்யக்கூடாது. அவர் தன் வழியில் வழிபட எல்லா உரிமையையும் அளிப்பதும் ஒத்துழைப்பதும்தான் ஓர் இந்து செய்யவேண்டியது. உண்மையான இந்துவுக்கு எல்லா வழிபாடும் சமம்தான். ஏசுவும் கண்ணனும் முருகனும் ஒன்றே. அது இன்னொரு வகை இறைவழிபாடு. அவ்வளவுதான்.

அதேசமயம் உங்களுக்கு உங்கள் மத நம்பிக்கையில் உறுதி இருக்குமென்றால் அதில் அவர் தலையிடாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். எவரும் உங்களை கட்டாயப்படுத்த அல்லது பிரச்சாரம் மூலம் திசைதிருப்ப அனுமதிக்கக் கூடாது. அதை ஆரம்பத்திலேயே கறாராக தடுத்துவிட வேண்டும்.

பொதுவாக நம்மிடம் ஒரு எண்ணம் உள்ளது. நம் கருத்தை பிறர் மீது திணிப்பது ஒரு சரியான செயல்பாடுதான் என. காரணம் நாம் நல்லதுக்குத்தானே சொல்கிறோம் என்ற எண்ணம். ஒழுக்கம், தொழில் முதலிய விஷயங்களிலேயே அப்படி கருத்துத்திணிப்பு பெரிய வன்முறை. ஆன்மீக விஷயத்தில் அது கடும் குற்றமேயாகும்.

ஏனென்றால் ஆன்மீகமாக எவரும் மிக உறுதியான நிலையில் இருப்பதில்லை. ஊசலாடிக்கொண்டும் ஐயம் கொண்டும்தான் முன்னகர்வார்கள். ஆகவே தொடர் பிரச்சாரம் மூலம் ’நொச்சு’ பண்ணியே ஒருவரை கொஞ்சம் வலுவான சொற்களும் விருப்புறுதியும் கொண்ட இன்னொருவர் மாற்றிவிடமுடியும்.

அப்படி மாற்றுவதன் வழியாக அவர் அந்த மாற்றப்பட்ட நபர் இயல்பான ஆன்மீக மலர்ச்சி அடைந்து தனக்கான சொந்த ஆன்மீகநிலையை அடைவதை எப்போதைக்குமாக தடுத்துவிடுகிறார். அதன் வழியாக அந்த மனிதருக்கு மிகப்பெரிய அநீதியை, வன்முறையை இழைக்கிறார். அவரை தீராத இருளுக்குள் தள்ளிவிடுகிறார்.

ஏனென்றால் ஆன்மீகத்தின் விடைகள் ஆளுக்கு ஆள் மாறக்கூடியவை. சுயமான தேடல் மூலம் கண்டடைய வேண்டியதே ஆன்மீகம்.

நாம் இன்னொருவருடைய ஆன்மீகத்தில் தலையிடக்கூடாது. நம் ஆன்மீகத்தில் இன்னொருவர் தலையிட அனுமதிக்கவும் கூடாது.

ஜெ

மறுபிரசுரம்/முதற்பிரசுரம்

Sep 2, 2013
முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 87
அடுத்த கட்டுரைநல்லதோர் வீணை