கன்னிநிலம் – நாவல் : 12

 

இரண்டாம் நாள் என்னை இழுத்துச்சென்று துப்பாக்கி காவலுடன் குளிக்கச் செய்தார்கள். ஷேவ் செய்து விட்டனர். ஜட்டியுடன் நடக்கவைத்து அறைக்குள் கொண்டுசென்று என் சீருடைகளை அளித்தனர். அவை பல இடங்களில் கிழிந்திருந்தாலும் சலவைசெய்யப்பட்டிருந்தன.  அவற்றை கையால் தொட்டபோது மிக அன்னியமான எதையோ தொடுவதுபோல உணர்ந்து தயங்கினேன். ”உம்”என்றார் லான்ஸ் நாயக். நான் அவற்றை அணிந்துகொண்டேன். இரண்டு தங்கபப்ட்டைகள் கொண்ட அச்சீருடையை ஒருகாலத்தில் நான் எவ்வளவு விரும்பியிருக்கிறேன். ஆனால் அப்போது அவை இரும்பால் செய்யப்பட்டவை போல என்மீது கனத்தன. விலங்கு போடப்படவில்லை.

இருவர் கைகளில் கார்பைன்களுடன் காவல் செய்ய என்னை உள்ளே ஒரு தனி அறைக்குக் கொண்டு சென்றார்கள். அது அப்பள்ளியின் ஒருவகுப்பறையாக இருந்திருக்கலாம். நிறைய சுவர் கிறுக்கல்கள்.  சில மேஜைகள் மட்டும் கிடந்தன. பெரிய ஜன்னல்களில் புதிதாக அடிக்கப்பட்ட இரும்புப்பட்டைகள். குளிர்ந்த காலியான அறையில் நான் காத்து நின்றேன். என் தலைசுழன்றது. காதுகளில் கிர்ர் என்ற ரீங்காரம் இருந்தது.

பூட்ஸ் ஒலிகள் கேட்டன. நாலைந்துபேர். மேஜர் திரிபாதி எங்கள் பட்டாலியன் தலைவர் லெ·ப்டினெண்ட்  கர்னல் டேனியல் ஞானப்பிரகாசம் . அவர்களைச் சூழ்ந்து கார்பைன்கள் ஏந்திய எட்டு ஜவான்கள். அனைவரும் ஹவல்தார் பதவி கொண்டவர்கள்.

அவர்கள் உள்ளே வந்ததும் என்னுடைய காவல் ஜவான்கள் எழுந்து விரைப்பாக சல்யூட் வைத்தனர். நான் பேசாமல் நோக்கி நின்றேன். லேசான குமண்டல் போல என் வயிறு ஒருமுறை அதிர்ந்தது. சற்று நேரம் கழித்து தள்ளி காப்டன் ஒரு பெரிய மணிலா கவருடன் உள்ளே நுழைந்து கதவை மூடினார்.

அவர்கள் மேஜைக்குப்பின் அமர்ந்தார்கள். காவலர்கள் விலகி சுவர் ஓரமாக நின்றனர்.

”உட்காருங்கள்”என்றார் காப்டன்

நான் அவர்களை பொருளில்லாமல் பார்த்தபடி நின்றேன்

”நீங்கள் இப்போதும் லெப்டினென்ட்தான் மிஸ்டர் நெல்லையப்பன்”என்றார் லெ·ப்டினெண்ட் கர்னல்”நீங்கள் தாராளமாக உட்காரலாம்”

நான் எனக்கென போடப்பட்ட நாற்காலியில் அமர்ந்துகொண்டேன். அவர்கள் என்னை உற்று பார்த்தனர். ஒரு ஜவான் மேஜைமீது ஒரு வீடியோ கருவியை பொருத்தினான். விளக்குகள் போடப்பட்டன.

‘…என்ன நடந்தது?”என்றார் லெ·ப்டினெண்ட் கர்னல் இயல்பாக, மெல்ல குனிந்து அனுதாபமான முகத்துடன். அவர் குரலும் மென்மையாக இருந்தது. மெழுகு போட்டு கூர்மையாக முறுக்கபப்ட்ட வெண்ணிற மீசை. கரிய சதுர முகத்தில் வெண்ணிறமான பற்கள். நரைத்த கிருதாக்கள். 

நான் பெருமூச்சுவிட்டேன். புண்பட்டு கட்டுபோடப்பட்ட என் கைகளை பார்த்தேன்

”நாங்கள் இங்கே உங்கள் மீது அனுதாபத்துடன் தான் இருக்கிறோம். உங்கள் பழைய ரிக்கார்டுகள் நன்றாக இருக்கின்றன” என்றார் லெ·ப்டினெண்ட்  கர்னல்”ஆக்சுவலி நானும்கூட திருநெல்வேலிப் பக்கம்தான். இடையான்குடி.. கேட்டிருப்பீங்க…கால்டுவெல் இருந்த ஊர்”

”ம்”

”நான் இங்க உங்களுக்கு ஹெல்ப் பண்ணத்தான் வந்திருக்கேன்… கன் யூ அண்டர்ஸ்டேன்ட் ? ”

நான் ஒன்றுமே சொல்லவில்லை. உண்மையில் என் மனதில் மொழியே இல்லை.

”லெ·ப்டினெண்ட் நீங்கள் எதிரியுடன் சேர்ந்துகொண்டு கம்பெனியை காட்டிக்கொடுத்ததாக புகார் இருக்கிறது. எதிரியுடன் தப்பி மியான்மார் எல்லை நோக்கி செல்லும்போது கைதுசெய்யப்பட்டிருக்கிறீர்கள். உங்கள் ராணுவச்சின்னங்களையும் துறந்திருக்கிறீர்கள்” மேஜர் சொன்னார்

நான் நிமிர்ந்து பார்த்தேன்.

மேஜர் திரிபாதி லெப்டினெண்ட் மேஜரின் கையிலிருந்த மணிலா கவரை வாங்கி பிரித்து இருந்து ஒரு புகைப்படத்தை எடுத்துப்போட்டார். தியாகராஜனின் படம். அருகே நான். நாங்கள் இம்பால் ஏரியில் எடுத்த படம். என் மனம் அதிர்ந்தது.

மேஜர் படங்களாக எடுத்துப்போட்டார் . ஸ்ரீகண்டன் மாணி¢க்கம் சண்முகம் சிராஜ்……

”இவர்களெல்லாம் கொல்லபப்ட்டார்கள் லெ·ப்டினெண்ட். அவர்கள் சடலம் கூட கிடைக்கவில்லை”

என் தொண்டை அடைத்தது

”அவர்களுடன் சேர்ந்து வாழ்ந்த நாட்களை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள்..”

நான் விசும்பிவிட்டேன்

”சொல்லுங்கள் லெ·ப்டினெண்ட். ஏன் இதைச்செய்தீர்கள்?” என்றார் மேஜர்

“முப்பதுவெள்ளிக்காசுக்காக யூதாஸ் செஞ்சான்னு பைபிள்ல சொல்லியிருக்கு.. ”என்றார் லெ·ப்டினெண்ட் கர்னல் அவர் கண்கள் சிறிது இடுங்கி ஒளிவிட்டன.

“நான் துரோகி இல்லை” என்றேன். அதற்குள் என் குரல் உடைந்தது.  ”என் தோழர்களை நான் காட்டிகொடுக்கவில்லை. நான் எங்களால் முடிந்தவரை எதிரிகளுடன் போராடினேன்…”

”அப்படியானால் ஏன் மியான்மாருக்குத் தப்பி ஓடினீர்கள்?”

”மியான்மாருக்குப் போகவில்லை. நான்…”

”எங்கே போனீர்கள்? சொல்லுங்கள்….”

“மியான்மாருக்குப் போகவில்லை…” என்றேன் உரக்க, அடம்பிடிக்கும் குழந்தைபோல என்று உடனே எண்ணிக் கொண்டேன். இன்னும் முதிர்ச்சியாக இருக்கவேண்டும். இன்னும் ஆழமாக பதில் சொல்லவேண்டும்.

“அப்படியானால் எங்கே? அங்கமி லிபரேஷன் ·ப்ராண்ட் தலைமையகத்துக்கா?”

என் சொற்கள் என்னுள்ளே உறைந்தன. இவர்களிடம் நான் பேசமுடியாது. இவர்கள் மனம் ஒரே திசை நோக்கி மட்டுமே ஓடும்…

”பேசுங்கள் லெ·ப்டினெண்ட்” என்றார் காப்டன் ”இந்தக் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் நீங்கள் மரணதண்டனைக்கு ஆளாவீர்கள் தெரியுமல்லவா? ”

“ஆம்”

”உங்கள் அம்மா அதை எப்படி எடுத்துக் கொள்வார்கள்? யோசித்தீர்களா?”

நான் உடலை குறுக்கினேன். மனம் அதிர்ந்ததில் என் தோள்கள் குலுங்கின

”என்ன செய்யப்போகிறீர்கள்? ”    

என்னால் பெருமூச்சுவிடத்தான் முடிந்தது 

“மரணதண்டனையிலிருந்து நீங்கள் தப்பலாம். ஒரு வழி இருக்கிறது. ” லெ·ப்டினெண்ட் கர்னல் சொன்னார் ” உங்கள் தொடர்புகளை முழுக்க விரிவாக சொல்லிவிடுங்கள்.எப்படி உங்கள தொடர்புகொண்டார்கள்? யார் யார் உங்களுக்கு தெரிந்த வேறு துரோகிகள். உங்கள் செய்தித்தொடர்புமுறை என்ன…எல்லாம்…”

நான் அவர்களை தவிப்புடன் பார்த்தேன்.எப்படி சொல்வது? எதைச்சொன்னால் அவர்களுக்குப் புரியும்?

”சொல்லுங்கள்…நீங்கள் தப்ப மயிரிழையளவுக்கு இடம்தான் இருக்கிறது” மேஜர் ஊக்கினார்

நான் என் பதறும் விரல்களால் பாண்ட் பாக்கெட்டை துழாவினேன். பிரிந்த நூல்கள்…ஒரு சருகு கையில் பட்டது. மறுகணம் அது என்ன என்று தெரிந்தது. மதூகமலர். நான் அன்று பறித்து உள்ளே போட்டது. கைகளை வெளியே எடுத்தேன். மெல்ல மீசையை வருடுவது போல  முகத்தருகே கொண்டுசென்று முகர்ந்தேன். மிகமெல்லிய மணம். ஒருவேளை அது என் பிரமையாகக் கூட இருக்கலாம். சலவைக்குப்பின் எப்படி மணம் வரும்? ஆம், பிரமைதான்… ஆனால் அத்தனை தெளிவாக இருக்கிறதே….மீண்டும் முகர்ந்தேன். மலர் மணம் என்னை தூக்கி வீசியது. வெட்டவெளியில்.அங்கே மலர்கள் விரிந்து காலை ஒளியில் கண் நிறைத்து கிடந்தன. வண்ணத்துப்பூச்சிகள் பெரிய சிறகுகளுடன் பறந்தன. காற்றின் தூரத்து இரைச்சல் இசையாக ஒலிக்க ஒளிர்ந்து நின்ற மேகங்களுக்கு கீழே சிகரமுகடுகள் தியானத்திலாழ்ந்த மலைகள்….

”நான் எந்த நாட்டுக்கும் துரோகம் செய்யவில்லை.”என்றேன் உறுதியாக. ” கர்னல், உங்களுக்கு இதை என்னால் சொல்லி புரியவைக்கமுடியாது….”

” இங்கே பாருங்கள் லெ·ப்டினெண்ட், நீங்கள் இந்திய ராணுவத்தைச் சேர்ந்தவர்”

“இல்லை. நான் அந்த பதவியை துறந்துவிட்டேன்.எனக்கு அப்படி எந்தப்பொறுப்பும் இல்லை” நான் வேகத்துடன் சொன்னேன் ”நான் அந்த பதவியில் இருந்த நிமிடம் அவரை அதை முற்றிலும் விசுவாசமாகச் செய்தேன். என் உயிரைப்பணயம்வைத்து போராடினேன்… கடமைக்காக உயிர்துறக்க தயாராக இருந்தேன்…. ஆனால் அந்த பதவி தேவையில்லை என்று முடிவெடுத்த பின் ஒருகணம்கூட நான் அந்த அடையாளங்களை வைத்திருக்கவில்லை… ”

“லெ·ப்டினெண்ட்..நீங்கள் ஒரு இந்தியப்பிரஜை…”

“இல்லை இல்லை…நான் இந்தியப்பிரஜை இல்லை”

“பின் எந்த நாட்டுப்பிரஜை? மியான்மார்? பூட்டான்? பங்க்ளாதேஷ்?” கர்னல் சிரிக்காமல் கேட்டார், ஆனால் கண்களில் நக்கல் இருந்தது.

” நான் எந்த நாட்டுக்கும் பிரஜை இல்லை.” நான் அதைச்சொல்லும்போது எனக்கு மயிர்கூச்செறிந்தது ” ஐ பிலாங்ஸ் டு நோ மேன்ஸ் லேண்ட்”

மறுகணமே அது எத்தனை அபத்தமானது என்று உணர்ந்தேன். அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகை செய்தார்கள்.

” ஐ பிலாங்ஸ் டு நோ மேன்ஸ் லேண்ட்” இம்முறை என் குரலில் கண்ணீர் இருந்தது. வெட்கி என் முகம் சிவந்து பழுத்தது.

” தாட் இஸ் வை யு ஆர் ரன்னிங் டுவேட்ஸ் நோ மேன்ஸ் லேண்ட் ? ” லெ·ப்டினெண்ட் கர்னல் கேட்டார்

நான் பலவீனமாக”ஆம்”என்றேன்

“லெ·ப்டினெண்ட், அங்கே ஒரு மேய்ச்சல் காளை போனால்கூட உயிர்வாழ முடியாது என்று தெரியுமா? அது மனித நடமாட்டமே இலலாத அடர்காடு….”

”தெரியும்”

“அங்கே இந்தப்பெண்ணோடு குடும்பம் நடத்தப்போனீர்கள், இல்லையா?” இம்முறை ஜவான்களே சிரித்தார்கள். மேஜர் அவர்களை கண்டிப்பதுபோல ஏறிட்டுப்பார்த்தார்.

“என்னுடைய மண் அது ”

“லெ·ப்டினெண்ட், நீங்கள் சின்னக்குழந்தை இல்லை. நீங்கள் சொல்வதை நம்ப நாங்களும் சின்னக்குழந்தைகள் இல்லை. ”என்றார் மேஜர். ” எங்களுக்கு உண்மை தேவை. நீங்கள் எங்கே போவதாக இருந்தீர்கள்? மியான்மார் ? பூட்டான்? கமான்…”

“நான் சொல்லிவிட்டேன். நோ மேன்ஸ் லேண்ட்…..இதுதான் உண்மை …நான் என்ன சொன்னாலும் உங்களுக்கு புரியப்போவதில்லை”

”நீங்கள் உங்கள் வாய்ப்புகளை தவறவிடுகிறீர்கள்….. இது ராணுவ விசாரணை. நீங்கள் சொல்வதெல்லாம் பதிவுசெய்யப்படுகிறது…”

”நான் உண்மையைத்தான் சொல்கிறேன்’

“ஆதாம் ஏவாள் விளையாட்டு விளையாட ஏதேன் தோட்டம் போனீர்கள் என்றா? புல் ஷிட்” என்றார் கர்னல்

”யூ ஸே புல் ஷிட் ” நான் திடீரென்று வீரிட்டேன். மறுகணம் என் மனதின் மூடிகள் தெறித்தன . எழுந்து அவர் முன் கைநீட்டி,” இத்தனை நேரம் நீங்கள் பேசியதுதான் புல் ஷிட். யார் நீங்கள்? யார்? வெறும் சாதாரண மனிதர்கள். திரிபாதி ,டேனியல், சுப்ரணியம் ,குப்புசாமி…. வெறும் சாதாரண மனிதர்கள்…யாரோ மாதாமாதம் சம்பளம் தருகிறார்கள். தொப்பியும் அடையாளமும் தந்து துப்பாக்கியை கையில் கொடுத்து போய் சுடு போ என்கிறார்கள். தேசமே உங்கள் பொறுப்பில் இருப்பதாக கற்பனை செய்கிறீர்கள். தேசத்துக்காக கொல்லவும் சாகவும் வந்து நிற்கிறீர்கள். தேசத்துக்காக நீங்கள் எதுவும் செய்யலாம்….. எல்லாமே நியாயம்…. தட் இஸ் ஷீர் புல் ஷிட் ஐ ஸே…”நான் தொண்டை புடைக்க கத்தினேன் ”..தேசம் என்றால் என்ன ? தேசமென்றால் மண்…. நீங்கள் யாராவது மண்ணை ஒருகணம் பார்த்தது உண்டா? மண்ணில் வளர்கிற செடிகளை பறவைகளை பூக்களை பார்தது உண்டா? பார்த்தவன் மண்ணுக்காக துப்பாக்கி தூக்கமாட்டான். முட்டாள்கள்…” நான் என்ன சொல்கிறேன் என்றே எனக்குத்தெரியவில்லை. எனக்குத்தெரிந்தது எல்லாம் கத்தினால் என் மனம் காலியாகிறது எண்ணங்களின் எடைகுறைகிறது மார்பு இலகுவாகிறது என்பது மட்டுமே.

“முட்டாள்கள்…  அயோக்கியர்களுக்கு அடிமையாக இருக்கும் முட்டாள்கள் நீங்கள்…. மனிதர்கள் வாழ்வதற்காகத்தான் மண்.சாவதற்காக இல்லை. நீங்கள் சாகுங்கள். வெட்டி சுட்டு எரித்து செத்து ஒழியுங்கள்.நான் இல்லை. நான் உங்களுடன் இல்லை.நான் எவருடனும் இல்லை. நான் உங்கள் நாட்டான் இல்லை. ஐ யம் நாட் என் இண்டியன்…ஐ பிலாங்ஸ் டு நோ மேன்ஸ் லேண்ட் ”

“லெ·ப்டினெண்ட்”என்றார் மேஜர் நிதானமாக. ”நீங்கள் இங்கே பேசியவை எல்லாம் பதிவாகும். ஆனால் இது ராணுவ நீதிமன்றத்தில் உங்களுக்கு உதவாது. உங்களை மனம் பிறழ்ந்தவர் என்று இதைவைத்து நிரூபிக்க முடியாது….நீங்கள் வேடம் போடுகிறீர்கள் என்று தான் பதிவாகும் . காரணம் உங்கள் பழைய ரிக்கார்டுகள் மிக தெளிவாக இருக்கின்றன” 

நான் சோர்ந்து அமர்ந்தேன். அழுகைதான் பீரிட்டுவந்தது. அழக்கூடாது என்று என்னையே கட்டுப்படுத்திக் கொண்டேன். மெல்ல சோர்ந்து அமர்ந்தேன் ”எனக்கு நாடு இல்லை. ராணுவம் இல்லை. எனக்கு எந்தப்பொறுப்பும் இல்லை. யார் மீதும் வெறுப்பும் இல்லை…. நான்… ….எனக்கு இதெல்லாம் அபத்தமாக தெரிகிறது”

” நாங்கள் உண்மையை விரும்புகிறோம்” என்றார் மேஜர் திரிபாதி . ”உண்மை. ஒரு துரோகி அகப்பட்டால் அவன் மற்றவர்களை காட்டிக்கொடுத்தாக வேண்டும். இதுதான் விதி”

”நான் துரோகி இல்லை . ஐ யம் என் அவுட்சைடெர்…”

”லெ·ப்டினெண்ட். நீங்கள் ஒத்துழைக்காவிட்டால் மிகக்கொடூரமான அனுபவங்களை அடையவேண்டியிருக்கும்” என்றார் காப்டன்

“நான் தயார்”என்றேன். ”நான் இன்பத்தின் உச்சத்தை அனுபவித்துவிட்டேன். ஊஞ்சல் மறுபக்கம் வருகிறது. இனி துன்பத்தின் மறுபக்கம். அது நியாயம்தான். நான் தயார்”

“என்ன பேசுகிறீர்கள் என்று புரிகிறதா?” மேஜர் பொறுமை இழந்தார்.

“உங்களுக்குப் புரியாது” என்றேன்

”பீட் இட் ஐ ஸே” என்று லெ·ப்டினெண்ட் கர்னல் வெடித்தார். எழுந்து நின்று முகம் சிவக்க” நான் இங்கே வந்தது முதல் இதை நீங்கள் சொல்லிக் கேட்கிறேன்…எங்களுக்குப் புரியாதது அப்படி என்ன உங்களுக்குப் புரிந்துவிட்டது? டாமிட்…..நங்களும் காதலித்திருக்கிறோம். நாங்களும் ராத்திரி பகலாக பெண் பின்னால் அலைந்து கவிதை எழுதி கனவுகண்டு கண்ணீர்விட்டு உருகியிருக்கிறோம்….எல்லாரும் கடந்து வரக்கூடிய அனுபவம்தான் அது…. அதற்காக பெற்ற தாய் தகப்பன்களை உதறவில்லை. பிறந்த நாட்டுக்கு துரோகம் செய்யவில்லை. சொந்த சகோதரர்களைச் கொல்லவில்லை”

அவரது கோபம் எனக்கு இதமாக இருந்தது. அந்த விசாரணையின் அமைதியும் அதன் உள்ளே இருந்த எள்ளலும் என்னை நிலைகுலைய வைத்திருந்தன. இந்த வேகம்தான் எனக்கு நெருக்கமாக இருந்தது.

”அதாவது நீங்கள் காதலுக்காக எதையுமே இழக்கவில்லை. அதுதான்.அவ்வளவுதான்.. லெ·ப்டினெண்ட் கர்னல். உங்கள் காதலில் உங்களுக்கு உங்களைப்பற்றிய நினைப்பு இருந்திருக்கிறது. உங்கள் பெற்றோர் நாடு எதிர்காலம் எல்லாவற்றைப்பற்றியும் நினைப்பு இருந்திருக்கிறது… இதெல்லாம் எல்லைகள் கர்னல். எல்லைகளைத்தாண்டி ஓர் இடம் இருக்கிறது…  நீங்கள் எதையெல்லாம் வைத்திருக்கிறீர்களோ அதையெல்லாம் வீசிவிட்டுத்தான் அங்கே போக முடியும். எல்லா எல்லைக்கோடுகளையும் தாண்டித்தான் அங்கே போகமுடியும்… காதல் அங்கேபோவதற்கான பாஸ்போர்ட் அவ்வளவுதான்…அந்த இடம்தான் முக்கியம்….”நான் மூச்சிரைத்தேன்

”ஷட் அப் ஐ ஸே” என்றார் லெப்டினெண்ட் கர்னல். ”யூ மேக் மி எ ·பூல்”

பின்பக்கம் சுவரில் விரிந்திருந்த வரைபடம் மீது ஒரு எறும்பு ஊர்ந்து சென்றது. நான் எழுந்து அதை நோக்கி ஓடினேன் ” இங்கே பாருங்கள் லெ·ப்டினெண்ட் கர்னல், இது இந்தியா. இது மியான்மார். இது பூட்டான்……இங்கே பங்க்ளாதேஷ்….  எல்லாம் நாடுகள்…  இந்த எறும்பு எப்படிப்போனாலும் ஏதேனும் ஒரு நாட்டுக்குத்தான் போக முடியும்… ஆனால் இன்னொரு வழி இருக்கிறது…. ” நான் சிரித்தேன். கிறுக்குபோன்ற சிரிப்பு என்று எனக்கே தெரிந்திருந்தது. ” இன்னொரு வழி இருக்கிறது. மிக எளிமையான வழி…அப்படியே சிறகடித்து பறந்து எழுந்துவிடலாம்…. வானத்தில்….நாடுகள் இல்லாத வெளியில்…. ” அந்த வரைபடத்தைப் பார்த்தேன் ” நீங்களே யோசியுங்கள் …. சிறகு உள்ள  எந்த பூச்சியாவது அதன் மீது ஊர்ந்து போகுமா? சொல்லுங்கள்… அதைத்தான் நானும் செய்தேன்…. அங்கே நான் போனேன். அங்கே போனபிறகு எனக்கு இங்கே உள்ள எதுவுமே ஒரு பொருட்டாக இல்லை. இது எதுவுமே என்னுடையது அல்ல. இங்கு என்னால் வாழ முடியாது….அதுதான் நான் ஓடினேன்…”

“நோ மேன்ஸ் லேண்டுக்கு?” லெ·ப்டினெண்ட்  கர்னல் இப்போது அமைதியாக சென்று அமர்ந்து ஒரு சிகரெட் பற்றவைத்தார்.

“ஆமாம். அது யாருக்கும் சொந்தமில்லாத நிலம் ”

”ஓ மை காட்…தி புல் ஷிட்!”என்றார் மேஜர் எரிச்சலுடன். ”அவர் திட்டமிட்டு அதையே திருப்பி திருப்பிச் சொல்கிறார் லெ·ப்டினெண்ட்     கர்னல்”

”எனக்கு வேறு ஒன்றும் சொல்வதற்கு இல்லை. நான் ஒரு உச்சத்தை கண்டேன். இன்பத்தின் உச்சம். மனித வாழ்க்கையின் உச்சம்.அப்போதே செத்திருக்க வேண்டும்..இனி ஒன்றும் நான் அனுபவிக்கவேண்டியதாக இல்லை… ஆனால் சாகவில்லை. இத்தனை துன்பத்தையும் அனுபவிக்கிறேன்…இது கூட காரணமாகத்தான். இப்போதுதான் அந்த இன்பத்தின் உண்மையான மதிப்பு எனக்கு தெரிகிறது ” என் கண்கள் பளபளத்தன போலும் ” நான் இப்போதுதான் நிறைவாக இருக்கிறேன். பெரிய விஷயங்களை அடைந்திருக்கிறேன். அடைந்தது என்ன என்பதை இப்போது ஆழமாக உணர்கிறேன். ஐ ·பீல் மை லை·ப் இஸ் ·புல்·பில்ட் சர் ”

“ஐ காண்ட் ஸ்டேண்ட் இட் எனி மோர்” என்றார் மேஜர் ” எனக்கு மண்டை குழம்புகிறது” சிகரெட்டை ஓங்கி வீசினார். ”திஸ் பாஸ்டர்ட் மேக் மி சிக்”

லெ·ப்டினெண்ட் கர்னல் என்னை அருகே வந்து உற்று பார்த்தார். ”லெ·ப்டினெண்ட் நீங்கள் ஏதாவது போதை மருந்தை பயன்படுத்துவீர்களா?”

“இல்லை”

“அந்த காட்டுக்குச் சென்றீர்களே, அங்கே ஏதாவது போதையை உட்கொண்டீர்களா? ”

‘இல்லை”

“அவள் உங்களுக்கு ஏதாவது புகை அல்லது தின்பண்டம் கொடுத்தாளா?”

“இல்லை. இல்லை”

“நீங்கள் உங்கள் வசம் இல்லை…. இது எளிதாக கண்டுபிடிக்கபப்டக்கூடிய விஷயம். ஒரு டாக்டர் உங்களை சோதித்தால் போதும்”

“உங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை கர்னல்…நான் மிகத்தெளிவாக இருக்கிறேன்”

“எக்ஸாட்லி ”என்றார் மேஜர் ” தெளிவாக திட்டமிடப்பட்ட நாடகம். முதல் அங்கத்தில் நீங்கள் வென்றிருக்கிறீர்கள். இதோ விடியோ பதிவுகளில் உங்கள் பேச்சும் நடத்தையும் மிகத் தெளிவாக உள்ளது. ஒரு நல்ல அட்டர்னி உங்கள் மனநிலை மீதான ஐயத்தை வெற்றிகரமாக உருவாக்கிவிட முடியும்…”

லெ·ப்டினெண்ட் கர்னல் பெருமூச்சுவிட்டார். மீண்டும் சென்று சோர்ந்து அமர்ந்து கன்னத்தை வருடியபடி என்னையே பார்த்தார்.

மேஜர் தொடர்ந்தார் ”ஆனால் அது அத்தனை எளியவிஷயமல்ல லெ·ப்டினெண்ட் .நாங்கள் அப்படி விட்டுவிடமாட்டோம்.  இனிமேல்தான் நீங்கள் கடுமையாக முயற்சிசெய்யவேண்டியிருக்கும். ராணுவத்தில் அதற்கான முறைகள் நிறைய உண்டு…”

“சித்திரவதைகளுக்கு நான் தயார்”

லெ·ப்டினெண்ட்  கர்னல் சட்டென்று எழுந்து ” வைன்ட் இட் அப் ” என்றபடி நடந்து வெளியேறினார்

மேஜரும் எழுந்தார்.” இன்னும் நாலைந்து நாட்கள் இங்கே நீங்கள் இருப்பீர்கள் லெ·ப்டினெண்ட் அதற்குள் உங்கள் மன உறுதி உடைந்துவிடும். குழந்தைபோல கேட்பதற்கெல்லாம் பதில் சொல்வீர்கள்”என்றார். சிவந்த கண்களுடன் என்னை நோக்கி புன்னகை செய்தபின் ”பலபேர் மழலைகூட பேச ஆரம்பித்திருக்கிறார்கள் தெரியுமா?” அவரும் நடந்து கதவை திறந்து வெளியே சென்றார்.

காப்டன் பெருமூச்சுடன் ” ஓக்கே லெ·ப்டினெண்ட். உங்கள் விதி”என்ற பின் என்னை மீண்டும் கொண்டுபோய் அடைக்கும்படி ஆணையிட்டார். இருவர் என்னை நெருங்கி என் கைக¨ளை பற்றி எழுப்பினர்.

 

[மேலும்]

முந்தைய கட்டுரைகன்னிநிலம் – நாவல் : 11
அடுத்த கட்டுரைமுரளி:கடிதங்கள்