வேஷம் பற்றி…

அன்புள்ள பிரகாஷ்

வேஷம் கதை அசோகமித்திரனின் புலிக்கலைஞனை நினைவூட்டினாலும் முற்றிலும் வேறுபட்ட தளத்தில் வேறு ஒரு நுட்பமான பிரச்சினையை எதிர்கொள்கிறது.

மனிதர்கள் தங்கள் ஆளுமையாகக் கொள்வதற்கு அப்பால் தாங்கள் வேறு என்பதை எப்போதும் உணர்ந்தே இருக்கிறார்கள். ஆகவேதான் என்றும் வேடம் என்பது ஒரு பெரும் குறியீடாக உலக இலக்கியத்தில் உள்ளது. வேடம் பற்றி எழுதப்பட்ட கதைகளை ஆயிரக்கணக்கில் தொகுக்கமுடியும்.

வேடம் என்பது இன்னொன்றாக ஆவது. இன்னொன்றை நோக்கிச் செல்வது. தன்னை அழிப்பதும் வெல்வதும் கூட. வேடமுழுமை என்பது எப்போதும் தன்னைக்கடந்துசெல்வதாகவே உள்ளது.

ஆசானின் கலை அவரது முழுமைநோக்கிச் செல்வதாகவே கதையில் அறிமுகமாகிறது. புலி என்ற ஒன்று அவருள் இருந்து எழும் தருணம் கலைவெளிப்பாடு.

ஆனால் ஆசான் தன் முழுமையைக் கண்டடைந்த அந்தப்புலி அய்யப்பனின் வியாஹ்ரமாக இல்லை. மலைகளிலிருந்து இறங்கி வந்த காட்டுப்புலியாகவே இருக்கிறது.

மக்கள் கலையின் புலியை ரசிப்பதற்கும் நிஜப்புலியை அஞ்சுவதற்குமிடையே உள்ள பெரும் இடைவெளியை இக்கதை காட்டும் விதமும் அழகானது. கலையில் உள்ளது ‘பாடம்’ செய்யப்பட்ட புலி. உறுமும் பாயும் கவ்வும் ஆனால் கொல்லாது, குருதி குடிக்கவும் செய்யாது.

கலைக்கும் வாழ்க்கைக்குமான ஊடாட்டத்தைச் சொல்லும் பல கதைகள் இக்கதை வழியாக நினைவில் ஓடுகின்றன. எல்லாக் கதைகளும் மீண்டும் மீண்டும் ஒன்றையே சொல்கின்றன. மனிதனுக்கு வாழ்க்கை போதவில்லை.

எனக்கு இக்கதையுடன் ராம் எழுதிய சோபானம் கதையில் உஸ்தாத் இறக்கும் காட்சி இணைந்துகொண்டது. அவரும் கனவிலோ காட்டிலோ ஒரு புலியைத் தேடி அலைந்தவர்தான்

ஜெ

முந்தைய கட்டுரைதிருப்பூர் உரை-கடிதங்கள்
அடுத்த கட்டுரைபுறப்பாடு 1 – சூழிருள்