“சார்! சார்! மண்டே பெட்டிஷன் பார்ட்டி” – சென்ட்ரியின் குரலைத் தொடர்ந்து மொத்த ஸ்டேஷனும் சட்டென கூர்மையானது. கணேசன் லேசான தயக்க நடையில் உள்ளே நுழைந்தார். வெயிலில் வந்ததால் ஸ்டேஷன் உள்ளே இருந்த இருட்டு இன்னும் கருமையாக கண்ணில் அறைந்தது. சிரமமாய் கண்களை இடுக்கி மனிதர்களைத் தேடினார். எல்லா மேசைகளிலும் போலீசார் கடமையில் இருந்தார்கள். இன்ஸ்பெக்டர் அவரின் இருக்கையில் இருப்பதை கணேசன் பார்த்தார். பழக்கமாகிவிட்ட முறையின் படி இடது மேசையை அணுகி
“அய்யாவ பாக்கலாமா இப்ப? ”
“இப்பவே பாத்துட்டுதானே இருக்கீங்க. அப்புறமென்ன?” தலையை நிமிர்த்தாமலேயே பதில் வந்தது.
“இல்ல சார் ! கேஸ் விஷயமா பேசலாமான்னு கேட்டேன்”
“வேற கேசே இல்லல்லா ! அவுரு உங்க கேசுக்குன்னுதான் சம்பளம் வாங்குதாரு ! போங்க! போய் பாருங்க ! லேட்டாக்கினா அதுக்கும் எம்பேருல புள்ளி வாங்கி குடுத்துராதீகய்யா ”
எதிர் இருக்கை ரைட்டர் சிரிக்கிறார் என்பது மீசையின் விரிவில் தெரிந்தது. கணேசன் சலனப்படாதவராக இன்ஸ்பெக்டரின் இருக்கைக்கு நகர்ந்தார். அவர் கைபேசியில் யாருடனோ பேசிக் கொண்டிருந்தார். கழுத்தறுபட்ட கோழியின் கடைசி இழுப்பு போன்ற தலையசைப்பில் கணேசனின் வணக்கம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. கணேசன் கைகளைக் கூப்பிய நிலையிலேயே நின்று கொண்டிருந்தார்.
“வே! ஒமக்கு நூறுமட்டம் சொல்லனுமா? உம்ம சோலி மயிருக்கு மட்டுமாவே நாங்க 22 பேரு இங்கனக்குள்ள ஸ்டேஷன் கட்டி குடியிருக்கோம்”
“…………”
“ஹலோ சிக்னல் கட்டாகுது போல … வாய்சு கரகரங்குது ”
“………………………………..”
“உம்மா கேசோட சேத்து மொத்தம் 124 கேசு ஸ்டேஷன்ல! ஆ,ஊ ன்னா போயி எங்கியாவது பேப்பர எழுதி நீட்டிரவேண்டியது. நாங்க கெடந்து அவன் அவன் அடிக்குத உடுக்குக்கு அவுத்துப் போட்டு ஆடணும் . எல்லாம் பேசிக்கிடுவோம் வே ! நீரு மொத நேருல வாரும் ”
கைப் பேசியை அனைத்து பட்டென மேசையில் எறிந்தார். “யோவ் குமாரு! இன்னுமாய்யா டீ வரல்ல? மண்டையிடி கூடிக்கிட்டே இருக்கு”
ஓரக்கழுத்தால் கணேசனைப் பார்த்தார். கணேசன் இன்னும் கூப்பிய கையை இறக்கவில்லை.
“என்ன சார் ? என்ன விஷயம்? அதான் எப்.ஐ.ஆர். போட்டு ரசீது வாங்கிட்டு போனீங்களே ? இப்ப என்ன?”
“இல்ல சார் ! கேசு என்ன அளவுல இருக்குன்னு கேக்கலாமுன்னுதான். நான் மேற்கொண்டு ஏதாவது செய்யனும்னா சொல்லுங்க அய்யா ன்னு கேட்டுட்டு போலாம்னுதான் வந்தேன் ”
“அதான் செஞ்சீரெ நல்லா மண்டே பெட்டிஷன்ல …போதாக்குறைக்கு சி.எம். செல்லுக்கு வேற மெயிலு ! அங்கனயே போயி நொட்ட வேண்டியதுதான ? இங்கன என்ன வே கேசு, வெங்காயம் , வெசாரனன்னு வாரீரு ? ”
கணேசன் இறுகி தளர்ந்தார் -“அய்யா ! உங்க மேல குத்தஞ்சொல்லி அதுல எழுதலய்யா! அவனுக 3 பேரும் இன்னும் வெளியிலதானேய்யா இருக்கானுவ ..வெசாரனைய கொஞ்சம் வெரசா செய்யனும்னிதான் எந்தங்கச்சி மவன் அனுப்பிட்டாம். அய்யா ! கொஞ்சம் பெரிய மனசு பண்ணுங்க!வெசாரனைய பண்ணி அவனுவள உள்ள புடிச்சு போடுங்கய்யா. கோர்ட்டுக்கு வந்து எத்தன மட்டம்னாலும் சாட்சி சொல்லுதேன்.”
கணேசனின் பதட்டமும், பரிதவிப்பும் இன்ஸ்பெக்டரை கொஞ்சம் ஆசுவாசப்படுத்தியது போலிருந்தது. கணேசனை ஒரு நேர்பார்வை பார்த்தார். கணேசனின் கண்களை அவர் பார்வை ஒரு பாம்பின் கொத்துதலாய் குத்திச் சென்றது. குரலை நிதானமாக்கி இழுத்துச் சொன்னார்.
“ஆக உமக்கு அவனுவ வெளியே திரியுததுதாம் ஆத்தாமையா இருக்கு. அவனுவள உள்ள தூக்கி வச்சுட்டா நீரு எங்க வெசாரணய ஏத்துக்கிடுவீரு … அப்படித்தான?”
கணேசன் நீருக்குள் தலை அமிழ்த்தப்பட்டவராய் திணறினார். -“சார் ! அய்யா! அது அப்படி இல்லங்க .. தப்பு பண்ணுனது அவனுவளாச்சே …
“அத கோர்ட்டுல்லாவே சொல்லணும். ஒமக்கு இப்ப என்ன? வெசாரனதான ? நடத்திருவோம் .. உம்மட்ட இருந்தே ஆரம்பிப்போம் . என்ன ரைட்டரே, வெசாரனைய ஆரம்பியும் ..”
இன்ஸ்பெக்டர் சிரித்த மாதிரியும் இருந்தது, சிரிக்காத மாதிரியும் இருந்தது. ரைட்டர் கண்களில் சிறு விஷமம் வெட்டி மறைந்தது. மொத்த ஸ்டேஷனும் காதுகளை கண்களாக்கிக் காத்திருந்தது.
ரைட்டர் அழைத்தார். -” இங்க வாரும். ஒக்காரும்! கேக்க கேள்விக்கு நிதானமா, யோசிச்சு பதில் சொல்லணும். எதையும் ஒளிச்சுப் பேசப்படாது , கேட்டீரா ? ஒருக்கா பதிஞ்சிட்டோம்னா பெறவு மாத்த முடியாது, என்ன? ”
“சரிங்க அய்யா”
“அந்த எப்.ஐ.ஆர். காப்பி இருக்கா ? கொண்டாரும் இப்பிடி . கேஸ் நம்பரு … ஆங்! புகார்தாரர் பெயர் கணேசன், அம்பேத்கார் நகர், — சொந்தமா நாலு ஏக்கர் , தொழில் வெவசாயம் … ம்ம் … ம்ம்ம்… சரி”
“பொண்ணு பேரு மேரி … கிறிஸ்டினா ?”
கணேசனுக்கு மூன்றாம் முறையாக ஒரே மேஜையில் பதில் சொல்லுகிறோம் என்ற உணர்வு உறுத்தினாலும் மருந்தைக் குடிப்பது போல பதில் சொன்னார். “முழுப் பேரு மேரி குமாரி ! இந்துதான்யா ! பிரசவம் சிக்கலாகவும் காப்பாத்திக் கொடுத்த டாக்டரம்மா ஞாபகமா மேரின்னு பேரு சேத்தோம்” – குரல் குழறி வந்தது.
“பொண்ணுக்கு என்ன சோலி?”
“அய்யா! பிளஸ் டூ படிச்சிட்டுருந்த பொண்ணுய்யா ! யாரு வம்புக்கும் போகாது . அவ கிளாசுலேயே நாலாவது ரேங்கு. எப்பிடியாவது படிச்சு வக்கீலாயிரனும்னு ஆச சார் அவளுக்கு. அந்தப் புள்ளையப் போயி … அய்யா ! நாயி கொதறிப் போட்ட எச்சி எலையப் போல கிளிச்சுப் போட்டானுவய்யா ! பாவிப் பயலுவ! –” கண்களில் நீர் வடிந்து மூன்று மாத தாடியில் ஊறி நிறைந்தது.
“இங்க பாரும்! கேட்ட கேள்விக்குதாம் பதில் சொல்லணும்! உம்ம பாட்டுக்கு ஒப்பாரி பாடப்படாது கேட்டீரா ? சம்பவம் நடந்த அன்னிக்கு நீங்க எங்க இருந்தீங்க ?”
“அய்யா , நானு டவுனுல ட்ராக்டர் ரிப்பேருக்கு போயிட்டு எட்டு மணிக்குத்தான் வீட்டுக்கு வந்தேன் . இவளக் காங்கல்லன்னு வீட்ல சொன்னதும் ஒடனே பள்ளிக் கூடத்துக்கு போனோம் ”
“இரும், இரும், போனோம்னா யாருல்லாம் ? இதுக்கு முன்ன இப்பிடி வீட்டுக்கு லேட்டா வாறது, போறது உண்டுமா? பள்ளிக்கூடத்துல கூட பயகளும் படிக்கானுவல்லா ?”
கணேசனின் தாடை இறுகியது. அடிவயிற்றில் பாரமான ஏதோ ஒன்று புரண்டெழுந்து அழுத்தியது. காது மடல்கள் சிலிர்த்தன. கைகளை மார்புக்கு குறுக்காகக் கட்டிக் கொண்டார் . நெஞ்சோடு அழுத்திக் கொண்டார். “அய்யா ! பள்ளிக்கூடத்துல அதுக்கு பயலுகளோட பேச்சு, பழக்கம் கெடயாது! செல நேரம் பெசல் கிளாசு இருந்தா ஏழு மணி போல வருவா ! ஒரு வேள அதனாலதான் இருக்குமோன்னு நானும், எந்தங்கச்சி மவனும் போனோம் ”
“அவன் என்ன செய்யுதான்?”
“லா காலேஜுல மூணாம் வருசம் படிக்கான்யா “-ரைட்டரின் பார்வை நொடிக்கும் குறைவாக இன்ஸ்பெக்டரைத் தொட்டு மீண்டது. அவரது தலை விவரிக்க முடியாத ஒரு கோணத்தில் அசைந்தது. ரைட்டர் கண்களை ஒரு முறை சுருக்கி பின் மலர்த்தி விரித்தார்.
“சரி! பள்ளிகூடத்துக்கு போனீங்க .. அப்புறம்”
“அங்க அவ இல்ல! சரின்னு வீட்டுக்கு வாறதுக்கு எலங்கொளத்து கரமேடு வழியா சுருக்குப் பாதையா வெரசா வந்தோம். கலுங்கடிக்கு மேப்பொறத்துல இருக்க அவனுவ வயலுல உள்ள பம்புசெட்டு ரூமுலருந்து மொனகலு சத்தம் கேட்டது. யாரோன்னுதான்யா மொத நெனச்சேன். எதுக்கும் பாத்திருவோம்னுதான் எறங்கி சத்தங்காட்டுனேன் ! யப்பான்னு எம் புள்ள அலறுனதக் கேக்கவும் கொடலந்து அங்கேயே வுழுந்துட்டேன்யா ! உள்ள வராதப்பா , உள்ள வராதப்பா ன்னு கதறுனாய்யா .. யம்மா , உனக்கு என்ன செய்யுதும்மா, ஏம்மா உள்ள வரக்கூடாதுங்க ன்னு வெளியே நின்னு நானும், ஆறுமுகமும் சுத்தி , சுத்தி வாரோம். ! யப்பா வராத, அண்ணே வந்துராதேன்னு மொனகி, மொனகி அனத்துனாய்யா …
கண்ணீர் தாடி முழுதும் ஊறி நெஞ்சுச் சட்டையை நனைக்க ஆரம்பித்தது. கண்களில் நீர் கொட்ட ஆவேசம் வந்தவராய் கணேசன் சொல்லிக் கொண்டே போனார். “ஆனது ஆவட்டும்னு உள்ள நொழஞ்சிட்டேன்யா. ஐயோ! பாக்கச் சகிக்காமக் கெடந்தாளே எம்பொண்ணு … வாழக் குருத்து போலல்லா வளத்தோம் ….”
“சரி, உள்ள எப்புடி இருந்தான்னு சொல்லும்?” -ரைட்டரின் கண்கள் நண்டின் வளைக்கு வெளியே நிற்கும் நரியின் கண்களை ஒத்திருந்தது.
கணேசன் சட்டென பல் கடித்து நாற்காலியின் கைகளைப் பற்றினார். காது மடல்கள் சூடாகி உடல் மொத்தமும் இறுகியது. கைகள் கடப்பாரை போல் இறுகி விரைத்தன. மூச்சு மீசையைக் கருக்கி விடும் போல வந்தது.
சட்டென புதுக் குரல் எழுந்தது “ஒம்ம பொண்ண மூணு வயசு வர எந்தக் கோலத்துல பார்த்தீரோ அந்தக் கோலத்துலன்னு எழுதும் ”
ரைட்டர் குரல் வந்த திக்கைப் பார்த்து ஆத்திரத்தோடு திரும்பியவர் உடன் தளர்ந்தார். அவர் பார்வை இன்ஸ்பெக்டரைத் தேடியது. இன்ஸ்பெக்டர் குரலுயர்த்தினார்.
“ராமகிருஷ்ணன்! என்ன இது இன்டிசிப்ளினா ? விசாரணையில எடஞ்சல் பண்ணனும்னு ட்ரைனிங்ல சொல்லிக் கொடுத்தாங்களோ ? ரைட்டரு விசாரிக்கும்போது உங்களுக்கென்ன வந்தது? உம்ம சோலிய மட்டும் பாரும்.”
“சார்! இதுவா சார் விசாரண?”
“இல்லாம வேற என்ன? தம்பி ! நீ இன்னும் ட்ரைனிங் எஸ்.ஐ.தாம்பா. ஞாபகம் இருக்கட்டும்டே ! பதினஞ்சு வருஷ சர்வீசுல நான் பண்ணாத வெசாரனையாடே ? சி.ஆர்.பி.சி.ல என்ன உண்டுமோ அதுபடிதாம் விசாரிக்கோம் .. நீ போய் ரோல் கால் ரிப்போர்ட கொண்டா !”
“சார் ! ரேப் கேஸ் விக்டிம்னா சி.ஆர்.பி.சி. 327 ல உள்ள 2 ஆவது பிரிவுப்படி இன் காமிரா , ரகசிய விசாரணைதான் செய்யணும். இப்படி நடு ஸ்டேஷன்ல வச்சு விசாரிச்சதா தெரிஞ்சாலே ஹை கோர்ட்டுல சட்டைய கழட்டிருவாங்க. எனக்கென்ன சார் ? ரேஞ்சுல உள்ள எட்டு ட்ரைனிங் எஸ்.ஐ.க்களுக்கும் எஸ்.பி. அடுத்த வாரம் மீட்டிங் போட்ருக்காரு.நான் அதுக்கு வேற ரிபோர்ட் ரெடி பண்ணனும் ”
இம்முறை ரைட்டர் வெகு துரிதமாய் சுதாரித்தார். ” ராமகிருஷ்ணன் சார் ! கேசுக்கு ஸ்ட்ராங் பாய்ண்டா ஏதாவது கெடைக்கும்ன்னுதான் .. வேற ஒன்னும் நீங்க தப்பிதமா நெனைக்காதீங்க ”
“கேசுக்கு வேணும்னா அக்யுஸ்ட் அடையாளத்தைக் கேளுங்க! அத விட்டுட்டு விக்டிம் அடையாளத்தைக் கேட்டீங்கன்னா? அதத்தான் மெடிக்கல் ரிபோர்ட்ல வெளக்கமா எழுதிருக்கே ? ”
இன்ஸ்பெக்டர் கைப்பேசியை எடுத்துக் கொண்டு உள்ளறைக்கு நகர்ந்தார். ரைட்டர் திணறி மீண்டார். “கணேசன்! சொல்லுங்க , உங்களுக்கு யார் மேல சந்தேகம்?” -ரைட்டரின் குரலில் பரிவு போன்ற வன்மம் தொனித்தது.
கணேசன் மூன்று பெயர்களை , அவர்கள் குறித்த தகவல்களைச் சொன்னார்.”எதனால அவங்க 3 பேரையும் சொல்லுதீங்க? ஏதாவது தனிப்பட்ட காரணம் உண்டா?”
“சார் ! அவங்க மூணு பேருமே எம்புள்ளைய மட்டுமில்லாம ஊருக்குள்ள இருக்க நெறைய புள்ளையள்ட்ட அடாவடி பண்ணிருக்காணுக. ரெண்டு மட்டம் எங்க பக்கத்துப் பிள்ளைகள்ட்ட தப்பிதமா பேசி, கேலி பண்ணி தகராறு ஆயிருக்கு. உள்ளூர் பஞ்சாயத்தா அத பேசி முடிச்சோம் .அதுல சாட்சிக்கு நின்னது எம்போண்ணுய்யா. அதுலருந்தே அவ பள்ளிக்கூடம் போகும் போதும், வரும்போதும் சாட பேசி ஒரண்ட இழுத்துக்கிட்டே இருந்துருக்காணுவ ”
“உங்க பொண்ணு அப்படிச் சொன்னாளா உங்கள்ட்ட? நீங்க என்ன நடவடிக்க எடுத்தீங்க?”
“ஆமாய்யா ! நானும் பழயபடி தகராறுன்னா அது ரெண்டு பக்கத்து ஆளுகளுக்குமான தகறாரா ஆயிருமோன்னுட்டு , பொண்ண கொஞ்சம் கவனமா இருக்கச் சொன்னேன். அடுத்த வருசம் அவளையும் காலேஜு ஆஸ்டல்ல சேத்துரலாம். இவனுவளும் மூணு, நாலு வருசத்துல கல்யாணம், குடும்பம்னு போயிருவானுவ . யாருக்கும் சிக்கலில்லாம வெசயம் பைசலாயிரும்னு நெனச்சிட்டேன்யா”
“சம்பவ எடத்துல அவங்க யாரையாவது பாத்தீங்களா?”
” இல்லய்யா ! எம்பொண்ணு தனியாத்தான் கெடந்தா. தூக்கிட்டு வந்து ஆஸ்பத்திரில சேத்தோம். அங்கேயும் அவ யாரு கூடயும் எதுவும் பேசாமத்தான் இருந்தா. எட்டாம் நாளு வீட்டுக்கு கூட்டு வந்தோம். அவள ஒரு நிமிசம் தனியா இருக்கவுடல்லையா நாங்க. ரெண்டு நாளு சும்மா இருந்தாய்யா. மூணாம் நாளு எப்படியோ நாங்க அசந்த நேரம் பருத்திக் காட்டுக்கு வச்சிருந்த மருந்த எடுத்துக் குடிச்சிட்டாய்யா பாதகத்தி! ” – துடிக்கும் உதடுகளை கட்டுப்படுத்த முயல்வது வெளிப்படையாகத் தெரிந்தது. மார்பும், முதுகும் விரிந்து , விரிந்து அடங்கின. முகத்தில் செம்மை படர்ந்தது. ஆனாலும் தொடர்ந்தார்.
“மருந்தக் குடிச்சவ ஒரு மணி நேரம் வாயத் தொறக்காமத்தான் இருந்துருக்கா . தன்ன மீறி வாந்தி எடுக்கவும்தான் , மருந்து வாட அடிச்சு ஒடனே ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டு ஓடினோம். அய்யா ! ஒரு நாதான் உசுரோட இருந்தா . விடிகாலைல எங்கிட்ட பேசனும்னா ன்னு நர்சு கூப்டுச்சு. அப்பத்தான் இந்த 3 பேரும் இப்பிடிச் செஞ்சானுவன்னு சொல்லி அழுதா. அடுத்த அரமணி நேரந்தான்யா உசுரோட இருந்தா. எங்கள நெருப்புல தள்ளிட்டு போய் சேந்துட்டாய்யா ”
கணேசனின் உடல் குலுங்கி அதிர்ந்தது ஐந்தாறு முறை. இரு கைகளிலும் முகத்தைப் புதைத்திருந்தார்.
ரைட்டர் உணர்ச்சியற்ற குரலில் கேட்டார். ” சம்பவத்துக்கு வேற சாட்சி ஏதாவது உண்டுமா?”
பதினைந்து நிமிடங்கள் கழித்து கணேசன் படியிறங்கும்போது தடுமாறி இறங்கினார். எதிரிலுள்ள டீக்கடை பெஞ்சில் அமர்ந்தார். இரண்டு வாய்க்கு மேல் டீ குடிக்க முடியவில்லை. குமட்டிக் கொண்டே இருந்தது. ஸ்டேஷன் வாசலையே பார்த்துக் கொண்டிருந்தார். ராமக்ரிஷ்ணன் இறங்கி பைக்கை எடுப்பதைப் பார்த்ததும் எழுந்து வந்தார். அவரது கைகள் நெஞ்சுக்கு நேராக கூப்பியபடியே இருந்தன. ராமகிருஷ்ணன் வண்டியை விட்டு இறங்கினான் . அருகில் வந்து தோளில் கை வைத்து அழுத்தினான் -” அய்யா ! நான் வெறும் ட்ரைனிங் எஸ்.ஐ. தான் . ரெண்டு மாசத்துல வேற எடத்துக்கு மாத்திருவாங்க . ஒங்களுக்கு மேல யாரையும் தெரியும்னா உடனே மூவ் பண்ணுங்க . இவனுங்க ஒன்னுக்குள்ள ஒன்னு ”
“என்னால முடிஞ்ச வரைக்கும் பாப்பேன் சார்! ரொம்ப நன்றி! நீங்க நல்லா இருப்பீங்க!”
வேலிப்படலை திறக்கும் கணேசன் பாக்கியத்தின் கண்களுக்கு கிணற்றின் ஆழத்தில் கிடக்கும் சில்வர் குடம் மதிய நேரத்தில் தெரிவது போல தோன்றினார். அவளுக்கு கண்கள் வற்றவேயில்லை. மகளுக்கும், கணவனுக்குமாய் மாறி, மாறி ஊற்றெடுத்துக் கொண்டே இருந்தன . கணேசன் படியேறி திண்ணையிலேயே படுத்துக் கொண்டார். படுத்த வாக்கிலேயே கால்களை முழங்கால் வரை உயர்த்தி மடக்கி, ஒன்றின் மேல் ஒன்றைப் போட்டுக் கொண்டார். பார்வை மோட்டுவளையை வெறித்தது. பதில் என்ன வரும் என்று தெரிந்திருந்தும் பாக்கியம் கேட்டாள் –
“சோறு வைக்கட்டா?”
“கொண்டு போயி ஒடப்புல போடு” –
இனி விடிவது வரை அவர் அப்படியேதான் இருப்பார். பாக்கியம் மெல்ல செருமினாள். அவரது உடலசைவிலேயே அனுமதி கிடைத்தது. -“மாடசாமி மவன் மூத்தவன் வந்துருந்தாம். பேரு கூட புதுசா .. என்னவோ .. எளவு அளவனோ எதுவோ ? ”
“அவனுக்கென்னவாம் இப்ப?”
பாக்கியம் மெல்ல பார்வையைத் தழைத்தாள். சும்மாவாவது ஏதோ மறந்ததைப் போல வீட்டினுள் ஒரு முறை பார்த்துக் கொண்டாள் .சற்று நசுங்கிய குரலில் ” அடுத்த வாரம் கலக்டரு ஆபிசுக்கு முன்னே போராட்டம் நடத்துவானாம். டி .வி.க்கு சொல்ல, போஸ்டரு அடிக்கன்னு செலவு இருக்கு , ஒரு இருபதாயிரம் இருக்குமான்னு கேட்டான் ”
விலுக்கென எழுந்து அமர்ந்தார் கணேசன். பாக்கியத்தை கூசச் செய்யும் பார்வையொன்று அவரிடமிருந்து புறப்பட்டது. “ஏற்கனவே வாங்குன பத்தாயிரத்துக்கு எம்பொண்ணு மானம் பேப்பரு, புக்குலல்லாம் வந்து சீப்பாடு பட்டாச்சு. இன்னும் இருபதாயிரம் கொடுத்து எம்பொண்ணு சீரழிஞ்ச கதைய ஊரு பூராம் பாட்டாப் படிக்கப் போறானாமா ? நானில்லாம அவன்கிட்ட பேச்சு கொடுத்த , அவ்வளவுதான்…செத்தும் எம்மவ ஒவ்வொருத்தன் வாயிலயுமா சீரழியனும் …”
உச்சத்தில் வந்த குரல் அப்படியே நிற்க கை நழுவிய குடமாய் சரிந்தார். “பாதகத்தி! சின்னஞ் சிறுக்கி ! குடிச்ச மருந்துல எனக்கும் மிச்சம் வச்சாளில்லையே ? நெஞ்சு எரியுதே, எம்மா , என்னப் பெத்தவளே, யாத்தா, ஒரு வா சோத்தையும் நஞ்சாக்கிட்டுப் போனாளே ”
தொளி அடிக்கும் ட்ராக்டரின் இரும்பு சக்கரத்தை தனி ஆளாய் தூக்கி மாட்டும் கைகளால் அவர் நெஞ்சினை அறைந்து கொண்ட சப்தத்தில் பாக்கியத்தின் கேவல் வலுவிழந்தது.
கூகையின் அலறல் வாசல் முருங்கையின் மீது கேட்டபோதுதான் பாக்கியம் தன்னிலை மீண்டாள். வாசல் படியிலேயே சரிந்த நிலையில் அவளும், திண்ணையிலேயே கிடந்த அவரும். கதவைப் பற்றி எழுந்தாள். கொழு ஒடிந்த ஏர் போல குப்புறக் கிடந்த கணவனைப் பார்த்தாள். வெறும் மூச்சு எழுந்து அடங்கியது. உள்ளே நுழைந்ததும் மகள் படம் மேசையில் அவளை முறைத்தது. சிரிக்க முயன்று தோற்ற நிலையில் பத்தாம் வகுப்பு தேர்வுக்கு எடுத்த படம். இன்னும் பதினாறாம் நாள் காரியம் முடியாததால் சுவரில் மாட்டப்படாமல் மேசையில் இருந்தது.
“படு பாதகத்தி, ஒத்தக் கேள்வில அந்த மனுசன காத்துக்கு சாஞ்ச வாழையா ஆக்கிட்டயேட்டி , கட்டையில வச்சாலும் வேகுமா இந்த மனுசன் நெஞ்சுக் கொல? இத்தனையும் பாத்துட்டு சாவ மாட்டாம இருக்கேனே நானும் பொம்பளையா ?” -அவளது மார்பகங்கள் விம்மி இறுகின . உயிரின் வருகைக்கான வழியை பாக்கியம் அடிவயிற்றுக்கு பதிலாய் நெஞ்சில் உணர்ந்தாள் .
காற்றில் அலையும் தாடியுடன் கணேசன் நீதிமன்றத்துக்கு அலைவது ஊராருக்கு பழகிப் போன காட்சியானது. கோர்ட்டு வளாகத்தில் டீக்கடை வைத்திருக்கும் மந்திரமூர்த்தி கூட பழக்கமாகி விட்டான்.
“கணேசன்ணே , யாரு ஜட்ஜு ?”
“——— —— ——-”
“வெளங்கும் .. அவரும் ஒங்க இன்ஸ்பெக்டரும் மாமியா , மருமவ தோத்தாங்களே ? ஜட்ஜ மாத்தச் சொல்லி பெட்டிஷன் போடுங்கண்ணே . பி.பி. நம்ம தாடி கந்தசாமிதான ? நின்னு வெளையாடுவாரே ..”
நீதி மன்றங்களின் படிக்கட்டுகளில், நீளமான வராந்தாக்களில் , வாய்தா சொல்ல காத்திருக்கும் நீதிமன்ற அறைகளில் என பல முறை அவர்கள் கணேசனைப் பார்த்தனர். முதலிலெல்லாம் அவரைப் பார்க்கும் போது சட்டென குரல் குறைத்து வேறு பக்கம் பார்த்து குசுகுசுப்பார்கள். கொஞ்ச நாட்களுக்குப் பின்னர் வேண்டுமென்றே குரலுயர்த்தி, காரணமின்றி சிரித்து சகஜ பாவத்தை வலிய நடித்தார்கள். இப்போதெல்லாம் கணேசனைப் பார்த்தாலே பேச்சை நிறுத்தி விட்டு மௌனமாக வெவ்வேறு திசைகளில் வெறித்தார்கள். கணேசன் ஒரு முறை கூட அவர்களை நேராகப் பார்க்கவில்லை. சிறகசைக்கும் தொட்டி மீனின் பாசிக் கண்களைப் போன்ற ஈர மினுமினுப்புடன் கூடிய அவரது பார்வை காற்றில் மட்டுமே நிலைத்திருந்தது.
மந்திரமூர்த்தியின் கல்யாணத்திற்கு அவர் போயிருந்தபோது அவரை சாமியார் என நினைத்து முதல் திருநீறு பூசச் சொன்னார்கள். நெஞ்சைத் தாண்டியிருந்த அவரது தாடி அப்படி நினைக்க வைத்தது. அவர் பாதியாய் இளைத்தது போலவே அவரது நாலு ஏக்கர் நிலம் இரண்டு ஏக்கராக சுருங்கியிருந்தது.
ஒரு முறை மட்டும் தற்செயலாக இவரது வழக்கு விசாரணையின் போது டீ கொண்டுவந்த மந்திரமூர்த்தி கூடுதலாய் ஐந்து நிமிடங்கள் நின்றான்.
“இவனுவல்லாம் சோத்தத் திங்கானுவளா , நரகல நக்குதானுவளா ? இத்தன நாளா டீ கொடுத்துருக்கேன்னு பேரு, ஒரு நாளும் உள்ள நடக்க கூத்தக் கண்டேன்னு கெடயாது. தூ! வெருவாக் கெட்ட தாயோளிக ! அந்த வக்கீலு மட்டும் இங்கனக்குள்ள வரட்டும் , செருக்கிவுள்ளைக்கு எம் மூத்திரத்த மோண்டு டீ போடுதேனா இல்லையான்னு பாருங்க .
’ஒலக்க செஞ்ச குத்தத்த ஒரலுக்குள்ள கெடக்குதது மாவா, அரிசியான்னு பாத்தாத் தெரிஞ்சு போவுது .. நேருல பாத்த சாட்சியக் கேக்காம் பெரிய மயிராண்டி கணக்கா? இவன் வீட்டுல உலக்கைக்கு இஞ்ச் டேப் அளந்து பாத்துதாம் ஒரலுல நெல்லு குத்துவாரோ? ரெண்டு மட்டத்துக்கு மேல நானே டீத்தூள மாத்திருவேண்ணே. இந்தக் கூதிவுள்ளைக ஆறு வருசமா இதே கதைய எத்தன மட்டம்னே பேசுவாணுவ? சத்தியமாச் சொல்லுதேண்ணே , இவனுவ அத்தன பேரும் கொட்ட அழுகித்தான் சாவாணுவ ”
மந்திரமூர்த்தியின் ஆத்திரத்தை கணேசன் வெறும் கோலிக்காய் கண்களுடன் பார்த்துக் கொண்டிருந்தார். அவனுக்கு பெண்குழந்தை பிறந்தபோது அவரது ட்ராக்டரை விற்ற பணத்தில்தான் தோடு செய்து எடுத்து வந்தார். வாங்க மறுத்தவனிடம் கேட்டார் ‘பெறவு என்ன மயித்துக்கு புள்ளைக்கு செல்வகுமாரின்னு பேருவுட்ட “? உள்ளிழுத்த மூச்சு வெளியே வரும் இடைவெளிக்குள் மந்திரமூர்த்தி வாங்கிக் கொண்டான்.
ஒரு மழை பெய்து ஓய்ந்திருந்த பிற்பகலில் மந்திரமூர்த்தி கடையின் பெஞ்சில் தலை கவிழ்ந்து உட்கார்ந்திருந்தார் கணேசன். கவிழப் போகும் உடலுக்கு முட்டு கொடுத்தது போல கைகள் பெஞ்சைப் பற்றியிருந்தன. மந்திரமூர்த்தியின் முகமும் கூட தனது முறைக்கு காத்திருக்கும் நோயாளியின் முகம் போலவே இருந்தது. இரண்டொரு காக்கைக் கரைதல்கள் தவிர வேறு சத்தங்களில்லை.
“நீங்க கணேசன்தான? எப்படி இருக்கீங்க? என்னை அடையாளம் தெரியுதா?”
கணேசன் அந்தத் தொடுதலில் மீண்டார். “ராமகிருஷ்ணன் சார் …. ” தொட்ட கைகளைப் பற்றிக் கொண்டார். “நல்லாருக்கேன் சார் , நீங்க எப்படி இருக்கீங்க ? கோர்ட்டு டூட்டியா? எந்த ஸ்டேஷன் சார்வாள் இப்ப?”
“வள்ளியூர் க்ரைம். கோர்ட் எவிடன்ஸ் ரிபோர்ட்டுக்கு வந்தேன். ” குரல் மெல்ல சுருதி மாறியது. “கேஸ் என்னாச்சு கணேசன்?”
மந்திரமூர்த்திதான் பதில் சொன்னான் -“எங்க சார்? அந்தா, இந்தான்னு ஏழு வருசம் இழுத்தடிச்சு நேத்துதான் ஜட்ஜுமெண்டு . என்னத்த சொல்ல , இருக்க வழக்கம்தான , பெனிபிட் ஆப் டவுட்டு ன்னு இழுத்து , போலிசு குத்தத்த சரிவர நிரூபிக்கல்லன்னு சொல்லிட்டாங்க. 93ல இதே கோர்ட்டு ஹாலு நடுவுலேயே வச்சு , இந்தா இன்னைக்கு ஜட்ஜா இருக்காரே ——, அவரு அப்ப பி.பி., அவரு கண்ணு மின்னையே சாந்தி நகர் செல்வத்த சோலிய முடிச்சானுவ. கண்ணு முன்ன நடந்த கொலைக்கே கேசு இன்னும் ஒடிக்கிட்டுருக்கு, போலிசு ஒழுங்கா விசாரிக்கல்லன்னு ஏழு வருசமாத் தெரியலையாமா?இப்பத்தான் கண்டுபுடிச்சாராம். பொட்டப்புள்ள சாபத்த கட்டிக்கிட்டு இவனுக குடும்பம் வெளங்கவா?”
ராமகிருஷ்ணன் கரிசனமாய் திரும்பினான் – ” கணேசன். அன்னைக்கே சொன்னேனே , இவனுக கூட்டுன்னு. மேல யாரையும் பாக்கலையா நீங்க?இப்ப என்ன பண்ணறதா உத்தேசம்?”
கணேசன் எந்த உணர்வையும் பிரித்தறிய முடியாத குரலில் சொன்னார். “வேறென்ன சார் ? அப்பீலுதான். ஹை கோர்ட்டு. அதுக்குதான் ஜட்ஜுமெண்டு காப்பி வாங்க வந்தேன் ”
“சார் , நீங்களாவது சொல்லுங்க சார் . ஏற்கனவே ட்ராக்டர், வயலு, நகை ன்னு வித்து அம்புட்டையும் இங்க வாய்க்கரிசி போட்டாச்சு. இனியும் அப்பீலுக்குப் போனா இடுப்புத்துணி மிஞ்சுமா சார்?”
ராமகிருஷ்ணன் கணேசனை சற்று நெருங்கி அமர்ந்தான். “கணேசன்! எனக்குப் புரியுது. தப்புப் பண்ணவணுக தைரியமா வெளிய நடமாடறதும் , பறி கொடுத்த நாம அநாதரவா நிக்கிறதும் பெரிய கொடுமைதான். ஆனா கொஞ்சம் யோசிங்க. அவங்க பணம், ஆளு, அரசியல்ன்னு இருக்காங்க. சரி, நீங்களும் இந்த மட்டும் போராடித்தான் பார்த்துருக்கீங்க. அப்பீல் போனாலும் இன்னும் அஞ்சு வருஷமாவது ஆயிடும். போலிஸ்காரனா சொல்றேன், அங்கேயும் இப்படி தீர்ப்பு வர வச்சிருவாங்க இவங்க. இப்படிச் சொல்ல எனக்கே சங்கடமாத்தான் இருக்கு , நம்ம பொண்ணு ஆக்சிடெண்ட்ல இறந்து போச்சுன்னு நெனச்சுக்குங்க. ஆண்டவன் அவங்கள நிச்சயம் கேப்பான். இருக்க சொத்தையாவது காப்பாத்திக்குங்க. உங்க நல்லதுக்குத்தான் சொல்றேன்”
கணேசன் மழைக்குப் பிந்தைய பனையைப் போல உறைந்து இருந்தார். எதிரில் மூக்குரசி நகரும் இரு எறும்புகளில் நிலைத்திருந்தது அவரது பார்வை.
“அண்ணே , யண்ணே , இப்படியே இருக்காதீங்கன்னே, போயி வெட்டிப் போட்டாவது வந்துருங்கண்ணே ! கொதியாவது அடங்கும். சோலிய முடிச்சுருங்கண்ணே. நான் வாரேண்ணே கூட” – ராமகிருஷ்ணன் சட்டென ஒரு போலிஸ் பார்வையில் மந்திரமூர்தியை அடக்கினான்.
கணேசன் மெல்ல அசைந்தார். ராமகிருஷ்ணனின் கண்களின் வழியே உள்ளே எங்கேயோ பார்த்தார். ராமகிரிஷ்ணனுக்கு வீட்டில் படமாய் தொங்கும் அப்பா ஏனோ நினைவில் வந்து போனார். சிலைகள் பேசினால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது கணேசனின் குரல்.
“தம்பி இதுவரைக்கும் எனக்கும், என் பொண்டாட்டிக்கும் மட்டுந்தான்யா இது தெரியும். மருந்தக் குடிச்சு எம் பொண்ணு சாகக் கெடக்கும் போது என்னைக் கூப்ட்டாய்யா , அப்ப அவ பேசுனதுல கொஞ்சத்ததான் நான் போலிசுலையும் , கோர்ட்டுலையும் சொன்னேன். ஆனா வேற ஆருட்டயும் சொல்லாத ஒன்னு இருக்கு. நான் உள்ள போனதும், அவ அவனுக செஞ்ச கொடுமையெல்லாம் சொன்னா, ஆளு இன்னாருன்னும் சொன்னா … சொல்லி முடிச்சதும் அவ மொகத்துல அப்பிடி ஒரு தெளிச்சி .. வேணாம்மா , அப்பாவப் பாத்து அப்பிடி சிரிக்காதே , தாங்க ஏலல்லையே சொன்னேன். அப்பா, அம்மைய ஓயாம வையாத, நல்லாப் பாத்துக்கன்னு சொன்னா.. ஐயோ ! எந்தங்கமே , இப்பிடி பேசாத, ஒனக்கு ஒண்ணுமில்ல , எல்லாம் சரியாயிரும்னு நான் சொல்லி அழுதேன். அப்ப அவ கேட்டாய்யா .. யப்பா, நாஞ்செத்தா எனக்கு கன்னிப் படையலு உண்டுமாப்பா? யாராவது எனக்கு கன்னிப் படையலு கெடயாதுன்னு சொன்னா , அது நாஞ் செஞ்ச குத்தமா அப்பா?ன்னு.
அய்யா ! நான் நல்ல தகப்பன்னா அங்கனககுள்ளயே நாண்டுக்கிட்டு நின்னுருக்கணும். வாயடைச்சு நின்னேன். விலுக்கு , விலுக்குன்னு ரெண்டு மட்டம் வெட்டி இழுத்துச்சு. அடங்கிப் போனாய்யா என் கண்ணு முன்னாடியே …..”
அவரது கண்ணீர் தன்னியல்பாய் ஓடி தாடிக்குள் எங்கோ மறைந்தது.
“அவளக் கொண்டு வச்ச அன்னிக்கே நாங்க ரெண்டு பேரும் பொணந்தான். இனி இருந்து ஆவப் போறது ஒண்ணுமில்ல. ஆனா அவ கேள்விக்கு பதில நான்தானய்யா சொல்லணும். இந்தக் கோர்ட்டு மட்டுமில்ல , எந்தக் கோர்ட்டுக்கு வேணும்னாலும் போவேன். சொத்த வித்து மட்டுமில்ல , பிச்ச எடுத்தாவது கேசு நடத்துவேன். இங்கேயே செத்து மண்ணாப் போவேனே தவுத்து சும்மா இருக்க மாட்டேன். அவனுகளுக்கு தண்டன கொடுன்னு நான் கேசு நடத்தல்ல அய்யா , கொடுக்காமலே போனாலும் எனக்கு பாதகமில்ல .
எனக்கு ஒத்தச் சொல்லு போதும். எம்பொண்ணு மேல குத்தமில்ல , தப்பு பண்ணினது அவனுகதான், செய்யாத குத்தத்துக்கு தண்டனையா எம் பொண்ணு போனா ன்னு ஒரு சொல்லு வேணும். அதுக்காக உசுரு போறவரைக்கும் நான் போராடிச் சாவேன். அந்த சொல்ல கேட்ட அன்னிக்குத்தான் அவளுக்கு படையலு”
ராமக்ரிஷ்ணனும், மந்திரமூர்த்தியும் இறுகி உறைந்திருந்தார்கள். கோர்ட்டின் கதவுகள் ஒவ்வொன்றாய் இழுத்து மூடப்படும் சப்தம் மட்டும் சீரான இடைவெளியில் கேட்டுக்கொண்டிருந்தது.