அன்புள்ள ராம்
சோபானம் வாசித்தேன். கதை நன்றாக உள்ளது. ஒரு சிறுகதைக்குரிய இரு இயல்புகள் அழகாக நிகழ்ந்திருக்கின்றன. அது ஒரு மனிதனைக் காட்டுகிறது. ஒரு முரண்பாட்டைச் சித்தரிக்கிறது
கான்சாகிபின் தோற்றம் , ஆளுமை, அவரது தேடல் ஆகியவை நுட்பமாகவே சித்தரிக்கப்பட்டுள்ளன. கலைகள் எல்லாமே மனிதனின் முழுமைக்கான தேடலின் விளைவுகள். எங்கோ தன்னை நிறையாத பாத்திரம் என அவன் உணர்வதன் வெளிப்பாடுகள் அவை . ஆகவே எல்லாக் கலைகளும் எதையோ தேடுகின்றன. மனிதர்கள் வழியாக எங்கோ சென்றுகொண்டிருக்கின்றன.
ஆகவே கலைஞனின் முடிவு என்பது ஓர் அறுபடல்தான். முத்தாய்ப்பு அல்ல. அர்த்தமற்ற ஒரு எரிந்தணையல்.
மூன்று புள்ளிகளிலாகக் கதை நிகழ்கிறது. வீட்டில் தன் படத்தைப் பெரியதாக மாட்டிவைத்திருக்கும் ராஜம் ஒரு பக்கம். முழுமையாகத் தன்னிலை அழித்துக்கொண்டு அலையும் கான்சாகிபின் சீடர் இன்னொரு பக்கம். நடுவே அலைகிறது கான் சாகிபின் தேடல்
ஜெ