புதியவர்களின் கதைகள் 8, சோபானம் – ராம்

கான்சாகேப் நிதானமாக படிகளில் ஏறி வந்துகொண்டிருந்தார். அவர் வந்த கார் இன்னும் உறுமிய படி போர்டிகோவில் நின்றிருந்தது. ராம் நாராயணும், ரஷீதும் தம்பூரையும், சுர்மண்டலையும் காரிலிருந்து எடுத்துக் கொண்டிருந்தார்கள். தரையில் சதுர்லாலின் சந்தன நிற தபலா பை இறக்கிவைக்கப்பட்டிருந்தது.

ஒன்னரை ஏக்கர் நிலத்தில் கட்டப்பட்டிருந்த அந்த பங்களா, செட்டியார் அவரது விருந்தினர்களுக்காக கட்டியது. பால் வெள்ளையில் வண்ணம் தீட்டப்பட்டு, இரண்டு மாடிகளும், மேலே ஒரு கூம்பு கோபுரமும் கொண்ட கட்டிடம். விசாலமான போர்டிகோ, சுற்றிலும் தோட்டம். பர்மா தேக்கினைக் கொண்டு தூண்களையும், அலமாரிகளையும் செய்திருந்தார்கள். வீட்டின் நடுவே பெல்ஜியத்திலிருந்து வந்த ஷாண்ட்லியர் உயரே தொங்கிக்கொண்டிருந்தது. அதன் கீழே பட்டு உரையால் மூடப்பட்ட உயர்ந்த இலவம்பஞ்சு சோபாக்கள். உணவருந்த அமைத்திருந்த மேசையில் ஒரு நேரத்தில் இருபது பேர் அமர்ந்து சாப்பிடலாம். அருகிலிருந்த மேசையில் பித்தளைப் பளபளப்பில் பொன்னரளிப்பூ போல வாய் விரிந்த கிராமஃபோன் ஒன்று. அதன் கீழே அலமாரியில் வரிசையாக பெயரிடப்பட்டு அடுக்கி வைக்கப்பட்டிருந்த எல்.பி. ரிகார்டுகள்.

அந்த ஹாலின் ஒரு சுவற்றில் வரிசையாக கருப்பு வெள்ளையில் புகைப்படங்கள் மாட்டப்பட்டிருந்தன. இந்த மாதம் முழுவதும் கான்சாகேப் இங்கே தான் தங்குகிறார். கான்சாகேப் உள்ளே வந்ததும் தன் தலைப்பாகையை கழற்றி அருகில் இருந்த மேசையில் வைத்தார். வற்றிய தேங்காய் போன்ற முகம். முன்வழுக்கையில் ஒளி பட்டு பளபளத்தது. சற்றே துறுத்திய முன்பற்களால் மேலுதடு சீட்டியடிக்கப் போவது போல லேசாகக் குவிந்திருந்தது. பெரிய கிளிஞ்சல் போன்ற காது தலைப்பாகையை தாங்கிய வழக்கத்தில் சற்றே விலகி இருந்தது. மிகமெல்லிய மனிதர். கண்களை சுருக்கி சுவரோரம் நின்றிருந்த உமரை பார்த்தார். அவரது கண்கள் பட்டுப்பூச்சியின் இறக்கைகள் போல சிமிட்டிக்கொண்டே இருந்தன.

“உள்ளே படுக்க வைத்திருக்கிறேன். எப்படியும் எழுந்திரிக்க காலை ஆகும்”

“ம்ம்ம்”

“சாகேப் அவருக்கு நாலு நல்ல வார்த்தை சொல்லக்கூடாதா?”

“ம்ம்ம்”

“எத்தனை நாளைக்குத்தான் இவரை இப்படியே விட்டு வைப்பது?”

“ம்ம்ம்”

கான்சாகேப் மெதுவாக அந்த அறையின் கதவை திறந்து உள்ளே எட்டிப்பார்த்தார். கடைவாயோரமாக எச்சில் வழிய கைகால்கள் விரித்து மல்லாந்து கிடந்தான். மேலாடைகளை உமர் கழற்றி வைத்திருக்கவேண்டும். அழுக்கு வேஷ்டியை கச்சமாக கட்டியிருந்தான். கரும்பாசி போல அவனது தலைமுடி முகத்தில் வழிய மண்டியிருந்தது. நல்ல தீர்க்கமான மூக்கு. நெஞ்சுக்கூடு மெல்ல ஏறி இறங்கியதில் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதாக பட்டது. இது அல்ல இவன் சென்று சேர்ந்திருக்கவேண்டிய இடம். எங்கோ ஏதோ ஒன்று தப்பிப்போய்விட்டது. மிக சந்தோஷமானவனாகத்தான் இருந்தான். அலகாபாதில் ஐந்து நாட்கள் நடந்தது திருமணம். இரு குழந்தைகள். சட்டென ஒருநாள் படியிறங்கி ஜன சமுத்திரத்தில் கலந்துவிட்டான். சில ஆண்டுகள் கழித்து திரும்பியபோது இவனிடம் இந்த பழக்கங்கள் சேர்ந்திருந்தன. கூடவே அபரிமிதமான கோபமும். இப்போதும் வீட்டில் தங்குவதில்லை. திடீரென ஏதாவது ஒரு ஊரில் தென்படுவான். அவன் விரும்பும் வரை அங்கே இருப்பான்.

காலையில் எதேச்சையாக கண்ணில் பட்டபோது தவிர்த்துப்போகத்தான் பார்த்தான். சாகேப்தான் வற்புறுத்திக் கூட்டிவந்தார். மொட்டை மாடியில் அமர்ந்து சிலும்பியில் அடைத்து புகைத்துக்கொண்டே இருந்தான். சாகேபே இரண்டு ரொட்டிகளையும், பருப்பையும் கொண்டு தந்தபோதும், எதுவும் உண்ணவில்லை. உமர் அவனுக்கென்று பாயசம் செய்து எடுத்துச்சென்றபோது, இரண்டு டம்ப்ளர் குடித்துவிட்டு, கோணலாய் சிரித்தான். மாலை கச்சேரிக்கும் கூட்டிச்சென்றார். கச்சேரியின் இடையில் ஆளனுப்பி வீட்டில் கொண்டுவந்து சேர்க்கும்படி ஆகிவிட்டது. தபலா பையை ஓரமாக ஒரு மேடையில் வைத்துவிட்டு சதுர்லால் கான்சாகேப் வருவதற்காக ஹாலில் காத்திருந்தார்.

“என்ன நேரமாகி விட்டதா?” என்று கேட்டபடியே கான்சாகேப் அறைக்கதவை மூடிவிட்டு ஹாலுக்கு வந்தார். மிக மெல்லிய குரல். கண்கள் இலக்கில்லாமல் எங்கோ பார்த்தபடி இருந்தது. மனிதர் மிகவும் சோர்ந்து போயிருக்கிறார் என்று சதுர்லால் நினைத்தார். “இல்லை. இன்னும் நேரம் இருக்கிறது. வாசலில் கார் வந்து காத்திருக்கிறது.” அழுத்தப்பட்ட குரலில் பதில் வந்தது. “ம்ம்ம்” என்றபடி ஜரிகை போட்ட மேல் அங்கியை களைந்து நீட்ட உமர் அதை வாங்கி அவரது அறையில் கொண்டு வைக்கப்போனான். கையில்லாத கதர் பனியன் அனிந்திருந்தார். பித்தளை லோட்டாவிலிருந்த நீரை இரு மடக்கு குடித்துவிட்டு, “குளித்து உடை மாற்றிக்கொண்டு வருகிறேன். புறப்படலாம்” என்றார்.

கான் சாகேபாக இல்லாமல் வெறும் கரீம்கான் மட்டுமாக இருந்த ஆரம்பகாலங்களில் இவரது மேடைக்கச்சேரி என்பது எல்லாம் கலந்த ஒரு பல்சுவை நிகழ்ச்சி மட்டும் தான். ஆனால் அதற்காகவே மராட்டா சமஸ்தானத்தின் கேளிக்கை இசை மேடைகளில் மிகப்பிரபலமாகவும் இருந்தார். இவரது சிஷ்யைகள் இருவர் சாரங்கி இசைப்பார்கள், பின்னர் ஜலதரங்கம். அடுத்து மேடையில் உஸ்தாத் திப்பு பாடுவார் என்று அறிவிக்கும் போதே ஆரவாரம் ஆரம்பமாகிவிடும். கானும் அவரது நண்பர் திப்புவும் சேர்ந்து பாடுவார்கள். இவர் பாடுவதை அப்படியே திரும்பப்பாடும் திப்புவை, யாரும் நாய் என்று சொல்வதை இவர் விரும்பியதில்லை. பல்சுவைக் கச்சசேரி நிகழ்த்தும் இவரல்ல உண்மையான கான் என அவரது சிஷ்யைகளுள் ஒருவராக இருந்த தாராபாய்க்கு மட்டுமே தெரிந்திருந்தது. இயல்பாக கானை நெருங்கினார். பிரதான சிஷ்யையானார். பின்னர் கானுடன் மேடையில் பாடுமளவுக்கு வந்தார். கான் மெல்ல மெல்ல இசையிலும் தாராபாயிலும் தீவிரமானார். முதல் மனைவியை விட்டு விலகி தாராபாயையே மணந்துகொண்டார். ஐந்து குழந்தைகள், சண்டைகளின் நடுவே எப்படி பிறந்தன என்று இவருக்கே சில சமயம் ஆச்சரியமாக இருக்கும். சங்கீதம் என்பது திறமையாகப் பாடுவது என்பதில் இருந்து இன்னமும் முக்கியமான வேறு எதுவோவாக அவருக்கு தோன்ற ஆரம்பித்ததும், பிறர் அறியாமல் இசையின் அடியாழங்களுக்குள் நீந்தி எதையோ தேடிக்கொண்டிருந்தார். ‘பெரும் இசைமேதை கான் சாகேப்’ என்று அனைவரும் கொண்டாட ஆரம்பித்த காலத்தில் அவர் மனைவி, மக்கள், சிஷ்யர்கள், புகழ், பணம் என அனைத்திலிருந்தும் விலகியிருந்தார். புதிதாக யாருக்கும் இசை பயிற்றுவிப்பதையும் நிறுத்தினார். நெருப்பு ஓடையை தாவிக் குதித்து தாண்ட முயற்சிப்பவர் போல எப்போதும் ஒரு தவிப்பும் அவஸ்தையுமாகவே இருந்தார். ஹூப்ளியில் தங்கியிருந்தபோது ஒரு இளைஞன் இசை கற்க வேண்டும் என்று அவர் காலில் விழுந்தான். கண்களில் குழந்தைத்தனமான கனவும், கலைந்துகிடக்கும் தலைமுடியைக் குறித்து அலட்டிக்கொள்ளாத தீவிரமுமாக இருந்த அவனை கொஞ்ச நேரம் ஆழ்ந்த சிந்தனையுடன் உற்றுப் பார்த்தார். குறைந்தது எட்டுவருடமாவது கூட இருக்கவேண்டும் என்று சொன்னபோது ஒப்புக்கொண்டு கற்றுக்கொள்ள வந்தான். பசுவின் அகிட்டில் பால் முட்டிக் குடிக்கும் இளங்கன்று போல ஆர்வமாக இசை கற்றான். ஆனால் கடைவாயில் நுரைதள்ள பால்குடித்துக் கொண்டிருக்கும் போதே யாரோ கழுத்துக்கயிற்றை பிடித்து இழுத்தது போல பாதியிலேயே ட்ராமா டான்ஸ் என்று ஒடிப் போய்விட்டான்.

ராஜமையரின் வீடு அரை மணி நேரத்தொலைவில் இருந்தது. கான்சாகேப் வழியில் ஒரு வார்த்தை கூட பேசாது கார் ஜன்னல் வழியே வெளியே வெறித்து பார்த்துக்கொண்டு வந்தார். காற்றடிப்பதனாலோ என்னவோ அவர் கண்களில் நீர் துளிர்த்திருப்பதுபோல பட்டது. இன்றைய கச்சேரி குறித்து பேசவேண்டும் என்று நினைத்து சதுர்லால் இரு முறை உரையாடலை துவங்கியபோதும் சாகேப் அதை கண்டுகொண்டதாகவே தெரியவில்லை. ராஜம் இவரது நெடுநாள் சினேகிதர். மைசூர் சமஸ்தானத்தில் தங்கியிருந்த காலத்தில் பழக்கம். ராஜத்திடம் இவர் கர்நாடக சங்கீதத்தின் நுணுக்கங்களை கேட்டுத்தெரிந்துகொண்டது உண்டு என்று சொல்லியிருக்கிறார். விஸ்தாரமாகவே இருந்தது அந்த வீடு. மரங்கள் சூழ்ந்திருந்தது, அருகில் ஒரு பூங்காவும் இருந்ததால், பெரிதாக வெக்கை தெரியவில்லை. ராஜம் வாசல் படியிலேயே நின்றிருந்தார். கூடவே அவருடைய முக்கியமான ரசிகர் பாலுவும், இன்னும் சிலரும். சாகேபை கட்டித்தழுவி வரவேற்று உள்ளே கூட்டிச்சென்றார். சம்ப்ரதாயமான விசாரிப்புகளும், உபசரிப்புகளும் கழிந்து, இரவுணவின் போது சாகேப் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. எல்லோர் முகத்தையும் வெறுமையாக பார்த்தபடி இருந்தார்.

மாடி அறை சுத்தப்படுத்தப்பட்டு, தரை விரிப்புகள் போடப்பட்டு திண்டுகள் வைக்கப்பட்டிருந்தன. சுவர் முழுவதும் ராஜத்தின் பல்வேறு புகைப்படங்கள் ஃப்ரேம் செய்யப்பட்டு மாட்டப்பட்டிருந்தது. தனியே ஒரு அலமாரியில் ராஜம் வாங்கிய கேடயங்கள் அடுக்கப்பட்டிருந்தது. நடுவே ஜமக்காளத்தில் தாம்பூலத்தட்டில் நெய்யில் வறுத்து, தேங்காய்ப்பூ தூவிய சீவலும், கிளிஞ்சல் சுண்ணாம்பும், பன்னீர் புகையிலையும், வெற்றிலையும் நிறைந்திருந்தன. சாகேப் அவரது பையில் இருந்து ஒரு உருண்டையை எடுத்து வாயில் ஒதுக்கிக்கொண்டார். “தாம்பூலம்” என்றார் ராஜம். சாகேப் சிரித்துக்கொண்டே தலையசைத்தார். சோழிகள் போல பற்கள், லேசான கரையுடன் இருந்தன.

“இன்றைக்கு சங்கீதம் அற்புதம். அதுவும், அந்த தர்பாரி..” என்றார், பாலு. “தர்பாரியிலே அந்த வழுக்கல், இளநீ்ர் வழுக்கையை சாப்பிடுவது போல. அத்தனை பதம்” ராஜம் சொன்னவரைப் வெறித்துப்பார்த்தார். சாகேப் அவரை பார்த்து புன்னகைத்தார். கண்களும் சிரித்தன. “சரிதான். அவரவர் அனுபவம் அவரவருக்கு” என்றார் சாகேப். ராஜம் அறையின் மூலையில் இருந்த கிராமஃபோனில் சன்னமாக சாகேபின் பைரவ் ஆலாபனையை ஓடவிட்டு வந்து அமர்ந்தார்.

“மியான் என்னைப் போல யாரோ ஒருத்தனெல்லாம் பிறந்து வந்து இதைப் பாடுவான் என்று நினைத்திருக்க மாட்டார் இல்லையா?” சாகேப் கண்களை மூடியபடியே சொன்னார்.

“ஆனால் தியாகையர் தீர்க்கதரிசி. கீர்த்தனம் பண்ணுகின்ற போதே ராஜம் என்று ஒருத்தன் கும்பகோணத்திலிருந்து வந்து பாடப்போகிறான் என்று சொல்லிவிட்டுத்தான் போனாராம்” ராஜம் சொன்னதும் பாலு தொடையில் தட்டிக்கொண்டு சிரித்தார். சாகேப் தலையை தூக்காமல், கண்களை மட்டும் உயர்த்தி ராஜத்தை பார்த்து லேசாய் சிரித்தார்.

“இல்லை, எல்லாம் விளையாட்டாக ஆரம்பித்தது. அப்துல்லா மாமா என்னை இழுத்துப் பிடித்துவைத்து சொல்லிக்கொடுத்தார். அப்போதெல்லாம், இவர் எப்பொழுது முடிப்பார் நாம் வெளியே போகலாம் என்று மனதுக்குள் நினைப்பேன். அவர் என்னை விட்டுவிட்டார். ஆனால் இது என்னை பேய் மாதிரி பிடித்துக் கொண்டுவிட்டது. பிடி விடமுடியாமல் இத்தனை தூரம் வந்தாயிற்று.” என்று சொல்லி பற்கள் தெரிய சிரித்தார்.

ராஜமும் அடக்கமாகச் சிரித்தார். பின்னர் மெதுவாக திரும்பி ஒரத்தில் நின்றிருந்தவனைப்பார்த்து, தலையசைத்தார். அவன் வந்து ராஜம் அருகிலே நின்றான், தலையைத் தூக்கி மேலே பார்த்து, “இவரைத்தானே பார்க்கவேண்டும் என்று சொன்னாய், நன்றாகப் பார்த்துக்கொள். நமஸ்காரம் செய்து ஆசீர்வாதம் வாங்கிக்கொள்” என்றார். சாகேப், அவன் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தார். இளைஞன், சுமார் இருபத்தியிரண்டு வயது இருக்கக்கூடும். இந்த பக்கத்தில் வழக்கமாக வைக்கும் குடுமி இல்லை, க்ராப் வைத்திருந்தான். அடர்த்தியான புருவங்கள் அதன் நடுவே கருஞ்சிவப்பில் குங்குமம். வெள்ளைவெளேரென வேஷ்டியும், கதர் சட்டையும் அணிந்திருந்தான். சாகேபிற்கு ஏனோ இவன் சுலபமாக ட்ராமா பக்கம் போய்விடுவான் என்று தோன்றியது.

சுவாமிநாதன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி, குனிந்து அவர் காலை தொட்டு கண்களில் ஒற்றிக்கொண்டான். “இவன் என் சிஷ்யன், உங்களுடைய பரம ரசிகன். இவனுக்கு உங்கள் ஆசிகள் வேண்டும்” ராஜம் கூப்புவது போல வைத்துக்கொண்டு மெண்மையான குரலில் சொன்னார். சாகேப் கண்களை நீளமாக மூடித்திறந்தார்.
இரு கைகளையும் தலையில் வைத்து ஆசீர்வதித்தார். இங்க உட்கார் என்று அருகில் இருந்த விரிப்பை தட்டினார். சுவாமிநாதன் பதட்டமாக அவர் அருகில் அமர்ந்துகொண்டான். சாகேப் கைகளை ஆதுரமாக அவன் தோளில் வைத்துக்கொண்டார்.

“சாகேபின் பாட்டு நிறையக் கேட்டிருக்கிறேன். பத்து வருடமாக பாட்டுக் கற்றுக்கொண்டிருக்கிறேன்.” அவன் மிகுந்த பணிவுடன் அதிகம் சத்தமில்லாமல் சொன்னான்.

“ம்ம்ம்.. ” என்றவர் கண்களை சுறுக்கி அவனது முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தார்.

“நீ எதற்காக சங்கீதம் கற்றுக்கொள்கிறாய்?”

“நான்.. நான்.. நன்றாகப் பாடவேண்டும்.. அதுதான்”

“ஏன் பாட வேண்டும்..?”

“தெரியவில்லை.. பாட வேண்டுமென்று தோன்றகிறது..”

“ட்ராமா எல்லாம் பார்ப்பாயோ?”

“இல்லை, கச்சேரி நிறைய கேட்கிறேன்”

“நல்லது.. நல்லது.. உனக்கு விருப்பமானதைப் பாடேன்.. கேட்கலாம்” என்றார்.

ராஜம் அங்கே நின்றிருந்த இன்னொருவரைப் பார்த்து சைகை செய்தார். அவர் காலோசை எழும்பாமல் மெதுவாக ஓடிச்சென்று கிராமஃபோனை நிறுத்தினார். செம்பட்டு போர்த்தி மூலையில் சாத்தியிருந்த தம்புராவை எடுத்துவந்து ராஜத்திடம் கொடுத்தார். ராஜம் எழுந்து புன்னகைத்துக்கொண்டே தம்புராவை சாகேபிடம் கொடுத்தார். சாகேப் பையில் இருந்து இன்னொரு உருண்டையை எடுத்து வாயில் அதக்கிக்கொண்டார். தம்புராவை மடியில் சார்த்திக்கொண்டு தலையை சாய்த்து காதை அதன் பக்கம் திருப்பி, பதினைந்து நிமிடங்கள், ஒவ்வொரு தந்தியாக மீட்டி திருகுகளை சரிசெய்து, கீழிருக்கும் கம்பளி நூல்களை இழுத்து, இன்னும் ஒரு ஐந்து நிமிடங்கள் மிகச்சரியாக வந்திருப்பதாக திருப்தி வந்ததும் சுவாமிநாதனிடம் கொடுத்தார்.

“இந்த தந்தி நாம் தான். தொய்ந்து போய்விட்டால் சங்கீதம் வராது, ரொம்ப இழுத்து கட்டினால், சட்டென அறுந்துவிடும். சரியாக..பதமாக இருக்க வேண்டும், ராஜம் போல” என்று சொல்லிவிட்டு சிரித்தார். பாலு வாய்நிறைய சிரிப்புடன் பெருமையாக ஒருமுறை ராஜத்தைப் பார்த்தார். ராஜம் சுவாமிநாதனைப் பார்த்து தலையசைக்க, கண்களை மூடிக்கொண்டு, எச்சில் விழுங்கிவிட்டு தொடங்கினான்.

“ஜகமேலே பரமாத்மா எவரிதோ மொரலிடுது…வகஜுபகு தாளனு நன்நேலுகோரா ” , சகேப் கண்களை மூடி அமர்ந்திருந்தார். பாடி முடித்ததும், தம்புராவை அவன் கையில் இருந்து வாங்கி மீட்டிக்கொண்டே இருந்தார். “இந்த ஆபேரி இருக்கிறதே, சாத்தியமில்லாத, ஆனால் மிகமிக அற்புதமான ஒரு கனவு போல. ஒருமுறை நமக்குள் தோன்றிவிட்டால், பிறகு ஆயுள் முழுவதும் அதை மறக்க முடியாமல் நாம் சுமந்து அலைய வேண்டும்..என்ன? ராஜம் இவனை விட்டுவிடாதீர்கள்..” என்று சொல்லி சிரித்தார். இருகைகளையும் அவனது தலையில் வைத்து மீண்டும் ஆசீர்வதித்தார்.

லேசாக வெளிச்சக்கீற்று தோன்றும் வரை பேசிக்கொண்டிருந்துவிட்டு கான்சாகேப் விடை பெற்றுக்கொண்டார். ராஜமும் கூடவே இறங்கி வழியனுப்ப வந்தார். தீடீரென்று ராஜம் கான்சாகேப் காலில் விழப்போனதும், தடுத்து அவரை மார்போடு அனைத்துக்கொண்டார் சாகேப். கார் கிளம்பிப்போன பின்னும் ராஜம் படிக்கட்டுகளிலேயே நின்றிருந்தார்.

பாலு சங்கடமாக “என்ன அண்ணா இது.. அவர் ஹிந்துஸ்தானி இசையில் எவ்வளவு பெரிய மேதையோ அவ்வளவு பெரிய மேதை கர்நாடக சங்கீதத்தில் நீங்கள். இது கான்சாகேப் உட்பட சங்கீத உலகத்திற்கே தெரியும். நீங்கள் அவர் காலில் விழலாமா??” என்றார். கேட்டுமுடித்த பின்னும் இன்னமும் அவர் முகத்தில் சங்கடம் மீதமிருந்தது.

வாசலையே கொஞ்ச நேரம் பார்த்துக்க் கொண்டிருந்துவிட்டு மெதுவாக பாலு பக்கம் திரும்பினார் ராஜம். “சங்கீத மேதைமை எல்லாம் ஒருகட்டத்துக்கு மேல் ஒன்றுமில்லை பாலு. பாருங்கள்… சங்கீதம் கங்கை போல. நாம் அறியாத எங்கோ அப்பாலிருந்து ஆகாய கங்கை போல மனிதர்களில் மௌனமாக விழுந்து, அவர்கள் மனதுக்குள் பாதாள கங்கையாக எதை நோக்கியோ காலம் காலமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதன் பிரவாகம் பெரும்பாலானவர்களுக்கு கேள்வி மட்டும் தான், மிகச்சிலருக்கே அதை வெளிப்படுத்த முடிகிறது.”

பாலு, ராஜத்தின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார். “வெளிப்படுத்த முடிந்தவர்களிலும், பலரும் சங்கீதத்தின் பிரவாகத்தில் புரட்டி அடித்துச் செல்லப்பட்டு விடுகிறார்கள். சிலர்மட்டுமே அதன் பிரவாகத்திற்கு இணையாக லாவகமாக நீந்துகிறார்கள். ஆனால் வெகு சிலர் மட்டுமே அந்தப் பிரவாகத்தை தனக்குச் சாதகமாக ஆக்கிக்கொண்டு தான் விரும்பிய கரையை அடைகிறார்கள்” என்றார். பாலு இன்னமும் தன் கேள்விக்கு பதில் சொல்லப்படவில்லை என்பது போல அவரைப் பார்த்தார்.

“வெகுசிலர் மட்டும் தான் சங்கீதத்தின் தலையில் காலை வைத்து எம்பி மேலே பறக்கிறார்கள்..” என்று கூறியபடி உள்ளே சென்றார். பாலு புரியாமல் குழம்பியபடி அதிருப்தியுடன் ராஜத்தின் முதுகைப் பார்த்துக்கொண்டே படியில் நின்றிருந்தார். சுவாமிநாதன், ‘நானும் பறக்கவேண்டும்’ என்று மனதுக்குள் எண்ணிக்கொண்டு படியிலிருந்து இறங்கி வாசலை நோக்கி நடந்தான்.

***

கான் சாகேப் படியேறி வரும்போதே உமர் ஹாலில் பதற்றத்துடன் நின்றிருந்தான். “என்ன கிளம்பிவிட்டானா?” என்றார் சாகேப்.

“சாகேப்… விடிகாலையில் கதவு திறக்கும் சத்தம் கேட்டு ஓடினேன். தெருவிலே இறங்கி நடக்க ஆரம்பித்துவிட்டார். தெருவில் நின்று கெஞ்சினேன். குரு வந்தால் என்ன சொல்வது என்று கேட்டேன். போடா.. என்று என் கையை உதறிவிட்டு போய்விட்டார்”

“ம்ம்ம்” என்றபடி சோபாவில் அமர்ந்தார். அருகிலிருந்த நீரை எடுத்து ஒரு மடக்கு குடித்துவிட்டு மேற்கொண்டு ஒன்றுமே சொல்லாமல் பெரிய தலைப்பாகையுடன் சோபாவில் தலையைச் சாய்த்து மேலே பார்த்துக் கொண்டிருந்தார். சிறுது நேரத்தில் அப்படியே உறங்கிப்போனார்.

எழுந்தபோது நன்றாக வெளிச்சம் வந்திருந்தது. கடிதம் எடுத்துக்கொண்டு பாண்டிச்சேரியில் இருந்து ஒருவர் வந்திருப்பதாக உமர் சொன்னான். உள்ளே வந்து வணங்கி அந்த கடிதத்தை அவரிடம் கொடுத்தார். அரோபிந்தோ எழுதியிருந்தார். பாண்டிச்சேரி வந்து அவருடன் சிலநாட்கள் தங்கியிருக்கவேண்டும் என்று கேட்டிருந்தார். உமரிடம் கடிதத்தை நீட்டினார். அவன் படித்துவிட்டு அவரை பார்த்தான். “கிளம்புகிறோமா?” என்றான்.

“ம்ம்… அங்கே போய் கொஞ்ச நாள் தங்கியிருந்தால் நன்றாக இருக்குமென்று தோன்றுகிறது. சாயங்காலம் கிளம்பலாம்.” என்றார்.

“அப்படியானால் நான் ரயில் டிக்கட்டுக்கு ஏற்பாடு செய்துவிட்டு வந்துவிடுகிறேன்” என்று வேகமாக இறங்கி ஓடினார் பாண்டிச்சேரியில் இருந்து வந்தவர்.

சாகேப் உணவெதுவும் வேண்டாம் என்று சொல்லிவிட்டு, நீண்ட பிரயானத்திற்கு ஆயத்தமாகிவிட்டவர் போல வாசலைப் பார்த்து மாலைவரை அந்த சோபாவிலேயே அமர்ந்திருந்தார். உமர் இருமுறை பால் மட்டுமாவது குடிக்கும்படி வற்புறுத்தவே, சிறிய குவளையில் பால் மட்டும் குடித்தார்.

***

ரயில் கரும்புகையை விசிறியடித்து, தனக்குத் தெரிந்த ஒற்றைப் பாடலை ஒரே சுருதியில் நீளமாக ஒருமுறை பெரும் சப்தத்துடன் பாடி ஓய்ந்தபின் புறப்பட்டது. தொடர்ந்து பயணத்திலேயே இருப்பதால், இவருக்கு தேவையானவற்றை சரியாக கட்டி எடுத்து தயாராக வைத்திருந்தான் உமர். கூடவே ராம் நாராயனும், ரஷீதும், சதுர்லாலும். சாகேப் நேற்றைப் போலவே ஜன்னலின் வழியே வெறித்து பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தார். இருட்டில் எதுவும் காணக்கிடைக்காத போதும் கண்கள் ஜன்னலை விட்டு அகல வில்லை. தலைப்பாகையை மீண்டும் ஒருமுறை சரி செய்துகொண்டார். “அடுத்த ஸ்டேஷன் என்ன?” என்றார் மெலிதான குரலில். ரஷீத் பக்கத்திலிருப்பவரிடம் கேட்டு “சிங்கபெருமாள் கோவில்” என்றான். ரயில் தடதடத்தபடி இருந்தது.

“உமர் நாம் சிங்கபெருமாள் கோவிலில் இறங்கிவிடலாம்” என்றார். ரயில் சத்தத்தில் என்ன சொல்கிறார் என்று கேட்காமல், ரஷீத் அவரருகே மண்டியிட்டு குணிந்தான். “இறங்கிவிடலாம்” என்றார். சதுர்லால் “என்ன ஆயிற்று, ஏன் இறங்க வேண்டும்?” என்றார். “போதும் இறங்கிவிடலாம்” என்றார் சாகேப்.

ரயில் சிங்கபெருமாள்கோவிலில் நின்றதும், ப்ளாட்பாரத்தில் இறங்கி ஒரு ஓரத்தில் பைகளையும், விரிப்புகளையும் சேர்த்து வைத்தார்கள். சாகேபின் தம்பூர் தபலா பையின் மீது சார்த்தி வைக்கப்பட்டிருந்தது. “உமர், என் விரிப்பை எடுத்துப்போடு” என்றார். அதன்மீது முழந்தாளிட்டு அமர்ந்து கண்களை மூடிக்கொண்டார். ரயில் ஒலியெழுப்பியபடி கடந்து சென்றது.

கண்களை மூடியபடியே ஏதோ பாட ஆரம்பித்தார். குரல் மிகவும் கம்பீரமாக இருப்பதாக பட்டது. ‘தர்பாரி’ என்றார் சதுர்லால். எல்லோரும் அவர் முன்னால் சுற்றி அமர்ந்துகொண்டனர். ஒவ்வொரு ஸ்வரமாக நின்று நிதானித்து இன்னும் இன்னும் என்று அதன் படிகளில் ஏறிக்கொண்டே இருந்தார். சட்டென ஒரு நொடியில் கண்திறந்து அனைவரையும் ஒருமுறை பார்த்தார். சிறு புன்னகை ஒன்று எட்டிப்பார்த்தது. “போதும். நான் கிளம்புகிறேன்” என்று சொல்லி தலைப்பாகையை உருவி கீழே இழுத்துவிட்டு, பின்புறம் சாய்ந்து அந்த விரிப்பில் அப்படியே விழுந்தார்.

முந்தைய கட்டுரைகே.ஜே.அசோக்குமார்
அடுத்த கட்டுரைராம், சோபானம்-கடிதங்கள்