பீத்தோவனின் ஆவி பற்றி…

அன்புள்ள வேதா

பீத்தோவனின் ஆவி நல்ல கதை. சரளமான நடை. நுட்பமாகவும் மிகையில்லாமலும் அந்தப்பெண்மணியின் ஆளுமையையும் தோற்றத்தையும் பழகுமுறையையும் சொல்லியிருக்கிறீர்கள். அது சிறுகதையில் முக்கியமானது. பெரும்பாலும் சிறுகதை என்பது ஒரு மனிதர்தான். ஒரு புகைப்படச்சிமிட்டல்தான்

அந்தப்பெண்மணிக்கு இசை என்பது வாழ்க்கை. வாழ்க்கையின் ஏதோ ஒரு கணத்தில் யாரோ ஆன ஒருவர் நம் வாழ்க்கையை நமக்கு உறுதிப்படுத்தித் தரவேண்டியிருக்கிறது. எனக்கு இத்தகைய அனுபவங்கள் ஏராளமாக உண்டு. என்னிடம் தன் வாழ்க்கையைச் சொல்லும் அன்னியர்கள் அவ்வாறு சொல்லும்போதே தங்கள் பதிலையும் கண்டடைந்துவிடுகிறார்கள் என்று படும். இந்தக்கதையிலும் அந்தப்பெண்மணி அழுததுமே தெளிவடைந்துவிடுகிறாள்

முற்றிலும் அன்னியர்களிடம் மட்டுமே முழுமையாக மனம் திறக்கமுடிகிறது. ஒருபக்கம் அது உறவுகளில் ஊடாடும் அகந்தையைச் சுட்டினாலும் இன்னொரு பக்கம் உலகில் எங்கிருந்தாலும் சகமனிதன் நம்மவனே என நம்பும் மானுடத்தையும் சுட்டிக்காட்டுகிறது

இசை, இலக்கியம், ஓவியம் வழியாக கிழக்கையும் மேற்கையும் ஒப்பிட்டுக்கொள்ளக்கூடிய ஏராளமான கதைகளும் கட்டுரைகளும் வெளியாகியிருக்கின்றன. இந்தக்கதையில் உள்ள இதே விஷயம், கீழை இசையின் கட்டற்ற ஆலாபனைக்கும் மேலை இசையின் கட்டுப்படுத்தப்பட்ட ஒத்திசைவுக்குமான ஒப்புமை, பலராலும் பேசப்பட்டுள்ளது. இங்கே அது தனிமனித உறவில் எதிரொலிக்கிறது. சமகாலச்சூழலில் பேசப்படுகிறது.

கிழக்கும் மேற்கும் சந்தித்து மெல்ல உரசி மீளும் அந்த மகத்தான தருணம் மிக நுட்பமாக வெளியாகியிருக்கிறது. அந்தக் கோணத்திலான வாசிப்பு கதையை மேலும் பல புதிய தளங்களுக்குக் கொண்டு செல்கிறது. கட்டங்களினூடாக செல்லும் வாழ்க்கையும் கட்டற்று விரையும் வாழ்க்கையுமாக இருவேறு உலகங்கள். அவை ஒன்றை ஒன்று கண்டுகொள்கின்றன.

ஜெ

முந்தைய கட்டுரைஇலட்சியவாதமும் வாழ்க்கையில் வெற்றியும்
அடுத்த கட்டுரைசாதி அரசியலும் ஜனநாயக அரசியலும்