கன்னிநிலம் – நாவல் : 9

9

இரவில் அந்த இடத்தில் தூங்குவதற்கு அபாரமான க¨ளைப்பு நம்மை அடித்துச் சரிக்கவேண்டும். மண்ணிலிருந்து குளிர் பரவி நரம்புகளைக் குத்தியது.  மலைகளில் இருந்து வந்த குளிர் காற்று மரங்களைக் கோதியபடி ஊளையிட்டுச் சுழன்றுகொண்டிருந்தது. அதில் யானைகளின் பிளிறல்கள் அருகிலும் தொலைவிலுமாக கலந்து ஒலித்தன. எண்ணற்ற பிற விலங்கொலிகள். பூச்சிகள் எழுப்பிய ரீங்காரத்தின் தீவிரமான சுருதியில் அவ்வொலிகள் இணைந்து காடே ஒரு பெரும் இசையாக இருளுக்குள் நிகழ்ந்துகொண்டிருந்தது.

நான் அருகே கேட்ட ஒரு பிளிறலால் விழித்துக் கொண்டபோது ஒருகணம் எதுவுமே புரியவில்லை. என் கைகள் இயல்பாக பாய்ந்து என் கார்பைனைத் தேடின. அதன் இரும்பு சிலிண்டரை என் விரல்கள் தொட்டதும் நெஞ்சில் உறுதி உருவாயிற்று. எழுந்து அமர்ந்தேன். அருகே நிழல் போல அவள் அமர்ந்திருந்தாள். அவளது இருப்பை மெல்லிய வெம்மையாக உணர்ந்தேன். இல்லை அதை என் மனம்தான் உணர்ந்தது.

எங்கள் மீது நிலவு இலைகளை ஊடுருவிய மாபெரும் நிழலோவியவலை விரிந்து பரந்திருந்தது. கண்களை பிரமிக்கவைத்தபடி அதன் கண்ணிகள் அசைந்தசைந்து இழுபட்டன. என் உடல் கறுப்பும் வெளுப்புமாக உடைந்து அந்நிழல்வலையில் கரைந்து விட்டிருந்தது

“என்ன சத்தம் அது?” என்றேன்

“யானை….. கீழே ”என்றாள் அவள்

நான் கார்பைனை நெஞ்சோடு சேர்த்துக் கொண்டேன்.

அவள் அதை திரும்பிப்பார்த்தாள். ஒன்றும் சொல்லாமல் விழிகளைத் திருப்பிக் கொண்டாள்.

அப்பால் பாறைச்சரிவு மீது நிலவின் ஒளி பாற்பெருக்கென வழிந்தோடியது. நிலவில் நனைந்த உயர்ந்த சிகரப்பாறை ஒன்று குளிர்ந்த தியானத்தில் நின்றது. அதன் பின்னால் அதன் தோழர்கள் கனவில் ஆழ்ந்து நிழலில் பாதி மறைந்து நின்றனர்.

”இன்று தானே சித்ரா பௌர்ணமி ? ”என்றேன் நான்.

“ம்” என்றாள் அவள்.

“நிலவு எங்கே?”

“இன்னும் மேலே எழவில்லை. மலைக்குமேல் வரும்போது நல்ல வெளிச்சம் இருக்கும்”

காற்று சுழன்று சென்றது. சருகுகள் சில எங்களை நோக்கி வந்து நின்று வட்டமிட்டன. மனதில் ரகசிய நினைவுகளை கிளர்த்தும் மணம் ஒன்று விசியது

“என்ன மணம் அது?”

”நீங்கள் மணிப்பூருக்கு வந்து எத்தனை வருடம் ஆகிறது?”

“நான்கு”

“இதுவரை இந்த பூவின் மணத்தை அறிந்ததில்லையா?”

“நான் பெரும்பாலும் முகாம்களில்தான் இருந்திருக்கிறேன்”

“துப்பாக்கி நிழலில் ?”

நான் சிரித்து ”ஆமாம்”என்றேன்

“அது மதூக மலர்”

“கேள்விப்பட்டதில்லை”

”மகாபாரதத்திலேயே அதைப்பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. இங்குள்ள பிஷ்ணோய் வைஷ்ணவர்களுக்கு அது மிகப்புனிதமான மலர். ஆங்கிலத்தில் ஷிராய் லில்லி என்று பெயர். ” அவள் சொன்னாள் ” இங்கே உள்ள மிக உயரமான மலைகளில் ஒன்று ஷிராய் கான்ஹாங் . அங்கே இந்த மலரை பிரிட்டிஷ் நேச்சுராலஜிஸ்ட் டாக்டர்.கிங்வார்ட் 1948ல் கண்டுபிடித்து டாக்குமெண்ட் செய்தார். அவர்தான் அதற்கு ஷிராய் லில்லி என்று பெயர் சூட்டியது. மிக அபூர்வமான மலர். சாதாரணமாக தோட்டத்தில் மலராது.”

“எப்படி இருக்கும் அது?”

” அதைப்பார்க்காமல் சொல்லி புரியவைக்க முடியாது. மூன்றடி உயரமுள்ள சிறிய புதர்ச்செடிதான். மலர்கள் இலேசாக பிங்க் நிறத்தில் இதழ்கள் கொண்டிருக்கும். பவளத்தாலான பூ போலிருக்கும்”

“இங்கே மலர்ந்திருக்கிறதா அது?”

“எங்கே என்று சொல்ல முடியாது. அதன் மணம் மென்மையானது, ஆனல மிகவும் தூரத்துக்கு வீசும். ” அவள் கையை நீட்டினாள் ”அந்த மலைச்சரிவில் இருக்கலாம். அது சதுப்புமண்ணில் வளராது. ஆகவே அனேகமாக உயரமான மலைச்சரிவில்தான் பூக்கும்”

நான் அதை மூச்சுக்குள் நிறைத்தேன்.

”பறக்க முடியும்போலிருக்கிறது. ”என்றேன் ”போதையேற்றும் மணம். ” கொஞ்சம் செண்பகம் கொஞ்சம் நாகலிங்கப்பூ கலந்த மணம்

”இதை சித்ராங்கதை அர்ச்சுனனுக்குக் கொடுத்தாள் என்கிறார்கள். ”

“யார்?” என்றேன்.

“மகாபாரதத்தில் உள்ள கதை அது. அர்ச்சுனன் நாடுகாணப் போகும்போது மணிப்பூருக்கு வந்தான் . இங்கே அப்போது சித்ரவாகனன் என்ற மன்னன் ஆட்சிசெய்திருந்தான்.அவனது அழகான மகள்தான் சித்ராங்கதை. காட்டில் இனிய மலர்மணம் கேட்டு அதைத்தேடிவந்த அர்ஜ்ஜுனன் காட்டில் வனபோஜனத்துக்கு வந்த சித்ராங்கதையை சித்திரைமுழுநிலவில் சந்தித்தான். அவளைச்சுற்றி மணமெழுப்பும் மதூக மலர்ச்சோலை இருந்தது. அர்ஜுனன் அவளை அக்கணமே காதலித்தான். இருவரும் காந்தருவ மணம் செய்துகொண்டனர்.பின்னர் அவர்கள் திருமணத்தை சித்ராங்கதன் அங்கீகரித்தான். அவர்களுக்கு பப்ருவாகனன் என்ற குழந்தை பிறந்தது.”

”ஆமாம் .ஞாபகம் வருகிறது. ராஜ்குமார் நடித்த ஒரு கன்னடப்படம்கூட வந்திருக்கிறது…”

“இந்த மதூகமலரைத்தான் சித்ராங்கதை வரதட்சிணையாக கொடுத்தாள். அர்ஜுனன் அவளை பிரிந்து ஹஸ்தினபுரம் போகும்போது அவள் நினைவாக ஒரு மதூக மலரைத்தான் கொண்டுபோனான். அது அவன் திரும்பிவந்து அவளைக் கூட்டிக் கொண்டுபோவதுவரை வாடவேயில்லை”

நான் மனதை நிறைத்த இனம் புரியாத ஏக்கத்தை பெருமூச்சுகளாக விட்டு தீர்த்துக் கொண்டிருந்தேன். சட்டென்று அவள் எழுந்து ”போகலாமா? மதூகம் எங்கே மலர்ந்திருக்கிறது என்று பார்க்கலாம்”என்றாள்

நான் அவளை புரியாமல் பார்த்தேன். அவள் என்னை கவனிக்கமல் பாய்ந்தோடிவிட்டிருந்தாள். நானும் பாய்ந்து எழுந்து அவளைத்தொடர்ந்து ஓடினேன்  இருவரும் பாறைச்சரிவில் ஓடினோம்.

ஒளியும் நிழலும் கலந்து கிடந்த காடு உயிருள்ள கருப்புவெள்ளை ஓவியக்கோலம் போலிருந்தது. நிழல்கள் அசைந்து அசைந்து உருமாற தன் உள்ளே ஓடிய காற்றின் ஒலியாக காடு மூச்சுவிடுவதைக் கேட்ட்டேன். இன்பமான முனகல்களை எழுப்பியபடி தன்னுள் நிறைந்த நறுமணத்தில் தானே மெய்மறந்திருந்தது அது.

காட்டில் புதர்களை விலக்கிச்சென்றோம். மெல்லமெல்ல காடு துலங்க தொடங்கியது. கண்பழகியதா இல்லை மேலே சித்திரை முழுநிலவெழுந்ததா? இலைகள் வெள்ளித்தகடுகளாக ஒளிவிட்டன. தளிர்கள் ஒளிபட்ட பளிங்குச்சிமிழ்கள் போலிருந்தன. அவ்வப்போது இலைகளில் இருந்து சொட்டும் நீர் ஒளித்துளியாக மண்ணைத் தொட்டு உச் உச் உச் என்றது.

நாங்கள் பேசவில்லை. கனவொன்றில் செல்வதுபோலச் சென்று கொண்டிருந்தோம்.அல்லது மகத்தான இனிமைகொண்ட பாடல் ஒன்றுக்குள் வழிதவறி உள்ளே நுழைந்துவிட்டது போல. 

நிலவின் ஒளி சிதற ஒரு சிற்றோடை பாறையிலிருந்து விழுந்து சிரித்துச் சென்றது. அதில் சரிந்து புதர்கள் நீர் அருந்தின. புதர்களுடன் புதர்போல நின்றிருந்த இரு மான்கள் தலை தூக்கின. அவற்றின் கண்கள் பச்சைநிற வைரங்களாக ஒளிவிட்டன. அவற்றின் கழுத்துமயிர் சிலிர்த்திருப்பதைக் கண்டேன். காதுகளை பின்னால் தள்ளியபடி எங்களைப் பார்த்தபின் அவை மீண்டும் நீர் அருந்தின. சட்டென்று இரண்டு மான்களும் ஒரே போன்ற காலசைவுகளுடன் புதர்கள் மீது துள்ளி சென்றன. அவை நிலவு பொழிந்த ஒர் வெளியை தாண்டியபோது வெள்ளிச்சிலைகள் உயிர்பெற்றது போல மாறி காற்றில் காலத்தில் ஒருகணம் நிலைத்து கனவாகி இருளுக்குள் மறைந்தன.

மெல்லிய இருள் சரிந்த மரநிழலில் தனியாக நின்ற யானை ஒன்று உடலை அடிமரத்தில் சாய்த்து தூங்கிக் கொண்டிருந்தது. எங்கள் காலடி ஓசையில் அது கால்களை சரியாக ஊன்றி ”ம்ம்ம்ம்”என்று வயிற்றுக்குள் அதிர்ந்த ஒலியை எழுப்பியது. துதிக்கையை நீட்டி வாசனை பிடித்தது. காதுகள் தோளில் படிந்தன. பின் அலுப்புடன் நகர்ந்து மறுபக்கம் சென்றது அது.

நிலவின் ஒளி அதிகரித்தபடியே வந்தது. ஒரு பாறை மீது ஏறினோம். எங்களைச்சுற்றி காடு மர உச்சிகளில் நிலவு அருவியெனப்பொழிய அலையலையாகக் கிடந்தது. காற்றில் அந்த கடல் கொந்தளித்தது. மலைச்சிகரங்கள் நனைந்தவை போல பிரமை கொண்டு நின்றன. கண்ணாடித்துருவல் மேகங்களுக்கு நடுவே நிலவு உருகிய தங்கம்போல ஆரஞ்சு நிற வட்டமாக அசைவிலாது நின்றது. வெண்ணிறச்சுடர் எரிந்த மேகம் ஒன்று நிலவை நோக்கி நகர்ந்தது. அது நிலவைத் தொட்டதும் நிலவு கத்தி போல அதைக் கிழித்துச் சென்றது. மேகம் சல்லாபோல ஒளி ஊடுருவ நிலவைக் காட்டியது. காடு இருண்டு பின் வெளுத்தது.

”இங்கே எங்கோதான்” அவள் கிசுகிசுப்பாகச் சொன்னாள்.

நான் பெருமூச்சு விட்டேன். அவளுடைய கன்னங்களின் பூனைமயிர் பொன்பிசிறுகள் போல ஒளிர்ந்தது. கூந்தல் இழைகள் சிதறி நிலவில் சுடர்ந்து ஒரு ஒளிவட்டம் செய்தன. கழுத்து வளைவும் கன்னங்களின் மெல்லிய உப்பலும் சருமத்தின் மலர் மென்மையைக் காட்டின. நிலவு அவற்றை மீண்டும் மீண்டும் கழுவிக் கொண்டிருந்தது. வெண்ணொளியில் அவள் சருமம் மெல்ல எரிந்து கரைந்துகொண்டிருந்தது. நெற்றியில் மென்மயிர் சுருள்கள் நிழல்களுடன் சேர்ந்து விழுந்தாடின. சிறிய குருவி போல உடலெங்கும் பரவியிருந்த பதற்றத்துடன் அவள் சட் சட்டென்று திரும்பினாள். பாறைகளில் ஏறி இறங்கினாள். தூய கைகால்கள். தூய உடல். தூய்மையே உருவாக ஒரு பெண்.

என்னிடம் திரும்பி ”இங்கே அருகேதான்…வாருங்கள் ”என்றாள்.

சுட்டிய கரங்களில் பளிங்கின் ஒளி. சிறிய உதடுகளின் ஈரத்தில் மலரிதழின் ஒளி. உள்ளே தெரிந்து மறைந்த பற்களில் முத்துக்களின் ஒளி. ஒரு பெண்ணா நீ? பெண்ணைதேவதையாக்கும் மாயக்கரம் உன்னை தீண்டும் தருணமா இது? என்ன செய்வாய்?அப்படியே பறந்து எழுந்துவிடுவாயா வெண்சல்லா போல? ஒளிர்ந்து பிரிந்து கரைந்தழிவாயா வானில் வெண்மேகக்குவை போல?

அவளை தொடர்ந்து நானும் ஓடினேன்.

காடு அசைவிழந்திருந்தது இப்போது. ஒலியின்மை காதை நிறைத்தது. மாயக்கணம் ஒன்று நீண்டு நீண்டு காலமாகியது போல. 

பாறையின் மறுபக்கம் சரிவில் இரண்டடி உயரமான புதர்செடிகள் அடர்ந்து கம்பளமாகியிருந்தன. அவற்றில் மலர்ந்த பூக்களிலிருந்து காற்று ஓடிவந்து என்னைச்சூழ்ந்தது. குளிர்ந்த காற்று. நறுமணமே தொடுகையாக மாறிய காற்று. அகம் கிளரும் எண்ணங்களே புறவயமாக மாறியுருவான காற்று.

அவள் ஓடிப்போய் அந்த செடிகளினூடாக நடந்தாள். கைகளால் வருடினாள். அணைத்தாள். என்னால் அதை வெறுமனே பார்க்கத்தான் முடிந்தது.

அவள் அதன் நடுவெ அமர்ந்தாள். நான் அவளருகே அமர்ந்தேன்.

வானத்தில் மேகங்கள் விலகத்தொடங்கின. ஓர்¢ரு நட்சத்திரங்கள் துலங்கிவந்தன

” நட்சத்திரங்கள் வருகின்றன”அவள் சொன்னாள் ”இங்கே மேமாத இறுதியில் மட்டுத்தான் நட்சத்திரங்களை நிறைய பார்க்கமுடியும்…இந்த பூவும் மேமாதம்தான் மலரும்.”

என்னால் ஒரு சொல் கூட பேசமுடியவில்லை. நான் அப்படியே மல்லாந்து மலர் நடுவே படுத்தேன். மேகங்கள் விலக நட்சத்திரங்கள் நீல இருளில் இருந்து எழுந்தபடியே இருந்தன. சில நிமிடங்களில் வானில் பல்லாயிரம்கோடி கண்கள் திறந்து மின்னத் தொடங்கின. நடுவே நிலவு நின்றது , வைரவிரிப்பிட்ட சாலையில் இனிய கனவொன்று கண்டு நடக்கும் அரசி .

”கான்ஹாங் மலைச்சிகரத்திற்கு கீழே இது பலநூறு கிலோமீட்டர் விரிவுக்கு மலர்ந்துகிடக்குமாம். அங்கே ஷிராய்லில்லி மட்டுமே ஒரே பூ என்றார்கள்” அவள் சொன்னாள் ”அதுதான் மண்ணில் உள்ள சொற்கம் . அந்த இடத்தை நாங்கள்  கொரௌ என்போம். பொன்னுலகம் என்று பொருள்…”’

” வெகுதொலைவா அது?”

“கான்ஹாங் மலை 8500 அடி உயரம். நான்கு பக்கமும் செங்குத்தாக இருக்கும். மிகமிக அடந்த காடுகள் சூழ்ந்திருக்கும். அங்கே யாரும் போக மாட்டார்கள். அதன் மேற்குபக்கம்தான் இந்தியா. கிழக்குபக்கம் மியான்மார்”

” அப்படியானால் கிழக்குச்சரிவு ‘நோ மேன்ஸ் லேண்ட்’ ஆக இருக்கும்”என்றேன்

“அப்படியென்றால்?”

“இருநாடுகளுக்கு நடுவே உள்ள பொது நிலம்.அது எந்த நாட்டுக்கும் சொந்தமில்லை. அது இந்தியாவும் இல்லை மியான்மாரும் இல்லை”

“அப்படியானால் அந்த மண் யாருக்குச் சொந்தம்?”

”யாருக்குமே சொந்தமில்லை. மனிதர்களுக்கு சொந்தமில்லாத மண் அது…”

“யாருக்குமே சொந்தமில்லாத மண்ணா!”என்றாள் அவள் வியப்புடன்.

”அங்குள்ள யானைகளுக்கு, மான்களுக்கு, மற்ற மிருகங்களுக்கு, பறவைகளுக்கு, பூச்சிகளுக்குச் சொந்தமான மண்.”

அவள் மார்பின்மீது கைவைத்தாள்.சட்டென்று மெல்ல விம்மினாள். இருளில் அவளது விம்மல் ஒலியைக் கேட்டேன்

“ஏய் ,என்ன? என்ன ?”என்றேன்

”ஒன்றுமில்லை”

“அழுதாய்”

“இல்லை”

“ப்ளீஸ் சொல்லு”

”இல்லை”

நான் பெருமூச்சுவிட்டேன். என்ன மணம் இந்த மதூகம்! நெஞ்சில் எண்ணங்கள் கூட நறுமணத்துடன் ஓடின.

“அங்கே போகவேண்டும் ”என்றாள்

“அங்கே யாரையும் அனுமதிக்க மாட்டார்கள்.இந்தியர்களை மியான்மார் அனுமதிக்காது. பர்மியர்களை இந்தியா அனுமதிக்காது… ”

” நான் இந்தியனோ பர்மியனோ இல்லை. நான் அந்த யானை போல மான் போல ஒரு உயிர்…” அவள் சொன்னாள் . குழந்தைக்குரிய வீம்புடன் ” அந்த மண்ணில் வாழ்ந்தால் எனக்கும் அது சொந்தமாகிவிடும்”

“முட்டாள்தனம்”

“இல்லை. இங்கே இபப்டி துப்பாக்கியைத்தூக்கிக் கொண்டு ஒருவரை ஒருவர் கொல்வதுதான் முட்டாள்தனம். மண்ணை இந்தியா மியான்மார் பூட்டான் என்றெல்லாம் பெயரிட்டு பங்குபோடுவதுதான் முட்டாள்தனம். நோ மேன்ஸ் லேண்டில் வாழ்பவன்தான் உண்மையான மனிதன்…”அவள் மூச்சுவாங்கியபடி சொன்னாள் ”அங்கே போகவேண்டும்… போகவேண்டும். ”

பின்னர் அப்படியே மல்லாந்து படுத்தபடி ” நோ மேன்ஸ் லேண்ட்…. ..நோ மேன்ஸ் லேண்ட்….” என்று முனகிக் கொண்டாள்.

விண்ணில் விரிந்த நட்சத்திரப் பிரவாகத்தை நான் நோக்கினேன். என்னை கண்ணிமைத்துக் கண்ணிமைத்து பார்த்தன. சட்டென்று ஒரு விண்மீன் உதிர்ந்தது

அவள் எழுந்து அமர்ந்து ”அது நட்சத்திரம்…. அங்கேதான் அது உதிர்கிறது… மதுகமலர்ச்சமவெளியில்…”என்றாள்.

”நெல்” என்றாள்

”ம்”

”அங்கே போனால் நீங்களும் வருவீர்களா?”

மெல்லிய பிளேடு சதையை கிழிப்பதுபோல என் ஆத்மாவை கிழித்துச்சென்றது அந்தக்குரல். நான் பதில் சொல்லவில்லை

”நெல்…”

‘ம்”

”சொல்லுங்கள்…வருவீர்களா?”

“நான் ஒரு ராணுவ வீரன்…எனக்கு கடமைகள் உள்ளன”

அவள் பதில் சொல்லவில்லை. இருளில் சட்டென்று அவளது தேம்பல் ஒலியை கேட்டேன்

”ஜ்வாலா…ப்ளீஸ்..” என எழ முயன்றேன்

“ப்ளிஸ் ப்ளீஸ் என்னை விட்டுவிடுங்கள்.. என்னை அழவிடுங்கள். ப்ளீஸ்”

நான் சிறியமனிதனாக புழுவாக என்னை உணர்ந்தபடி அப்படியே கிடந்தேன்.

இந்தக்கணத்தில் நான் என்ன செய்யவேண்டும்? மெல்லுணர்வுகளினால் கோழையாவதா? வீரம் என்பதுதான் என்ன? அழிப்பது, அதை வெற்றி என்று எண்ணிக் கொள்வது, வேறென்ன ? ஆணவமில்லாது வீரம் உண்டா என்ன? இல்லை. என்னுடைய கடமை . என் மண். என்னுடைய நாடு. நெல்லையில் சிறியவீட்டில் இந்நேரம் தூங்கிக் கொண்டிருக்கும் என் அம்மா..ஏன் அப்பா… என் நற்பெயர்…என் மூதாதையர்…

என் கன்னங்களை நனைத்தபடி கண்ணீர் ஓடியது.

நட்சத்திரங்களின் நடுவே வானம் வெளிறத் தொடங்கியது. நிலவின் ஒளி குறைந்து அது வெண்தகடாக மாறி கீழ்வானில் நின்றதைக் கண்டேன்.காட்டுக்குள் பறவை ஒலிகள் எழுந்தன. முதல் பறவை உபுஉபுஊப் என்று முழங்கியது. பின்னர் கிளிகள். வானின் அரையிருளில் பறவைகள் பறக்கும் அசைவு தெரிந்தது.

பின்னர் சில பறவைகள் எங்கள் அருகே வந்து அமர்ந்தன. எழுந்து பறந்தன. மலை உச்சி வானிலிருந்து துலங்கி எழுந்துவந்தது. அதன் மடிப்புகளும் புடைப்புகளும் தெளிவாக அருகே நெருங்கிவர தலைமீதெழுந்து நின்றன பெரும் பாறைகள். அங்கிருந்து மலைக்கழுகுகள் சிறகடித்து வானில் சுழன்றன

திரைகள் ஒவ்வொன்றாக இழுபட்டு மறைந்தன. முதலில் கரிய திரை. பின் சாம்பல் நிற திரைகள். பின் மெல்லிய நீலத்திரை. இளநீல ஒளியில் அப்புதர்ச்செடிகளின் இலைப்பச்சை அடர்நிறத்தில் ஈரத்தின் பளபளப்புடன் காற்றில் சிலும்பியது. வாடாமல்லிப்பூ நிறத்தில் கவிழ்ந்த குவளை போன்ற மலர். மெல்லிய ஊதாவரிகள் இளம்சருமத்தில் ஓடும் உதிரக்குழாய்வலை போல. பளிங்கில் பரவிய வரிகள் போல. நீண்ட புல்லிகளில் மகரந்தம் செறிந்த பூனைமயிர்கள் புல்லரித்து நின்றன.

வானிலிருந்து மெல்லிய சிவப்பு நிறமான ஒளி மலைச்சிகரங்கள் மீது பொழிந்தது .அவை அதை காட்டுக்கு மேல் விரித்தன. தளிர்கள் ஒளிர காடு ஒளிகொண்டது. காற்றும் சிவந்திருந்தது. சிவந்த காற்றில் விரிந்த செஞ்சிறகுகளுடன் பெரிய பட்டாம்பூச்சிகள் பறந்துவந்தன. அவை மலர்களின் நடுவே மலர்களாகப் பறந்தன. அமர்ந்து படபடத்து எழுந்தன. காற்றில் மலர்ந்த அவற்றின் சிறகுவிழிகள் எங்களை பார்த்து இமைகொட்டின.

பட்டாம்பூச்சிகள் நடுவே அவள் கண்மூடிக்கிடப்பதைக் கண்டேன். பெரிய பட்டாம் பூச்சி ஒன்று இறகு ஒடுக்கிக் கிடப்பதுபோல.

நான் அந்தமலரை எடுத்து என் கைகளில் வைத்தேன். அதன் மென்மை. அதன் நிறங்களின் ஊடுபாவு.அதன் குளிர்.அதன் உயிர். அதை என் முகத்துடன் சேர்த்தேன். அதன் தொடுகையில் என்னுள் ஒரு நரம்பு முறிந்தது. என்னுள் காலை ஒளியின் கதிர்கள் விரிந்தெழுந்தன.  

”ஜ்வாலா” என்றேன்றாந்த மலருடன் அவளருகே குனிந்து

”ம்” என்றாள் கண்ணைத்திறக்காமலேயே

”நான் இனிமேல் எங்கும் திரும்ப மாட்டேன். என்னால் முடியாது”

அவள் கண்களை திறந்து என்னை பொருளில்லாமல் பார்த்தாள்.

”நாம் நோ மேன்ஸ் லேண்டுக்குச் செல்வோம்.”

”நான் நேற்று எதுவோ உளறினேன். விடுங்கள்”

“இல்லை. இனி என்னால் ஆயுதம் தூக்க முடியாது. இனி நான் சீருடை அணியவும் மாட்டேன்”  என்னுள் புதிய எண்ணங்கள் கொப்பளித்தெழுந்தன. உள்ளம் எழுந்து எம்பிய வேகத்தால் என்னால்  மண்ணில் கால் பாவி நிற்கக் கூட முடியவில்லை.

ஒரு கணத்திலெழுந்த ஆவேசத்தில் நான் எழுந்து என் கார்பைனை தூக்கி சுழற்றி வீசினேன். என் சீருடையில் இருந்த பட்டையை ஆங்காரத்துடன் பிய்த்துவீசினேன்.

அவள் எழுந்து என்னருகே என்னை வெறித்து நோக்கியபடி நின்றாள்.

என் மனதில் உற்சாகம் நிறைந்தது. வாய்விட்டுச்சிரித்தபடி என் தொப்பியை எடுத்து சுழற்றி வீசினேன். அது சுழன்று காற்றில் திரும்பி வந்தது. சிரித்தபடி ஓடிப்போய் எடுத்து மீண்டும் வீசினேன்.  போவதைக் கண்டு ”ஹா!”என்று கைவீசி சிரித்தேன். பெல்ட்டை கழற்றி மீண்டும் கூவியபடி வீசினேன். அவளும் என்னுடன் சேர்ந்துகொண்டாள்.இருவரும் சிறு குழந்தைகள் போல சிரித்து துள்ளி குதூகலித்தோம். அந்தக்கணங்களில் சிந்தனை இல்லாமல் மகிழ்ச்சி மட்டுமே மனமாக இருந்தோம்.

பின் அவள் இரு கைகளையும் விரித்தபடி என்னை நோக்கி நின்றாள். கண்ணீர் நிறைந்த கண்களும் உணர்ச்சியால் கொந்தளிக்கும் முகமுமாக. நான் அவளைப்பார்த்து அக்கணத்திலேயே உறைந்து காலமின்றி நின்றேன்.

அக்கணம் ஒளியுடன் உடைந்தபோது அவள் பாய்ந்து வந்து துள்ளிஎன்மீது தொற்றி என்னை இறுகப்பற்றிக் கொண்டாள். என் இருகைகளையும் அவளைச்சுற்றி முறுக்கி அவளை இறுக அணைத்துக் கொண்டேன். என் உடலுக்குள் அவளை அழுத்திச் செலுத்திவிடுபவனைப்போல. அவள் உடலிலிருந்து அவள் அக எழுச்சியை நெரித்துப் பிதுக்கி வெளியே எடுப்பவன் போல. அவள் முகத்திலும் கன்னங்களிலும் கழுத்திலும் வெறிகொண்டு முத்தமிட்டேன். முத்த்த்த்த்த்த்த்த்தமிட்ட்ட்ட்ட்ட்ட்டு அவளை மூச்சுத்திணறச்செய்தேன். என் உதடுகள் அவள் உதடுகளை கண்டடைந்த கணம் அந்த வேகம் நின்றது. அவள் இதழ்கள் வழியாக அவள் ஆத்மாவையே பருகினேன்.

பின் பிரிந்து ஒருவர் முகத்தை ஒருவர் நோக்கி ஒளிந்துவிளையாட்டில் கண்டுகொண்ட குழந்தைகள் போலக் கூவிச்சிரித்தோம். மீண்டும் முத்தம். பிறகு பிரிந்தபோது இருவர் கண்களிலும் நெடுங்காலம் பிரிந்தவர் கூடுவது போல கண்ணீர் . விம்மி விம்மி அழுதபடி தழுவி ஒன்றாகி நின்றோம். காலமேயில்லை. காலம் என்பது இன்ப துன்பங்களுக்குடையேயான ஊசலா? இன்பம் மட்டுமேயான உச்சத்தில் காலமே இல்லையா? காலமன்பது தனியுடல் ஒன்று கொள்ளும் பதற்றம்தானா? இணையும் உடல்களுக்கு காலமே இல்லையா?

எங்களைச் சுற்றி வண்ணத்துப்பூச்சிகளும் தேன்சிட்டுகளும் சிறகடித்துக் கலைந்தன. மலைகளுக்கு அப்பால் சிவந்த சிறகுகளை நாற்புறமும் வீசியபடி சூரியன்.

 

 

[மேலும்]

முந்தைய கட்டுரைகன்னிநிலம் – நாவல் : 8
அடுத்த கட்டுரைகிளிசொன்ன கதை:கடிதங்கள்