புதியவர்களின் கதைகள் 5, வாயுக் கோளாறு – ராஜகோபாலன்

வாடிக்கையாளர் ஒருவருடனான சந்திப்பினை முடித்துக் கொண்டு அலுவலகத்துக்குள் நுழைந்த கணமே அந்த வித்தியாசத்தை உணர்ந்தேன்.எனது அலுவலகம் என்பது ஐந்து மாடிகளில் ஒரு மாடியின் பாதியைத் தடுத்து 22 பேருக்கான இருக்கைகளுடன் இயங்கும் ஒரு பிரிவு. வித்தியாசம் அப்படி ஒன்றும் பதட்டப்படும்படியாக இல்லைதான். ஒரு வெற்றுக் குறுகுறுப்பு எனக்கு . எல்லோர் முகங்களிலும் பெரும் சிரிப்பினை செய்து முடித்த களைப்பின் மின்னல். கன்னங்களில் தேங்கிச் சிவந்திருக்கும் நகைப்பு. இன்னும் சிரிப்பினை மிச்சம் வைத்துக் கொண்டு அதற்கான சந்தர்ப்பத்தை உன்னிக்கும் கண்கள். எனது எதிர் இருக்கையில் இரண்டு பஜ்ஜிகள் பேப்பர் தட்டில் கிடந்தன. கணபதி சாரை காணோம்.
வலப்பக்கம் உட்கார்ந்திருந்த அருணிடம் திரும்பினேன். அவன் கொஞ்சம் நிதானமாய் பேசுவான். இடப்பக்கம் திரும்பி வாணியிடம் கேட்கலாமென்றால் அவள் ஐந்து நொடி தகவல் சொல்ல ஆறு நிமிடம் சிரிப்பாள்.
“டேய் அருண் ! என்ன நடந்தது?”

“”ஒண்ணுமில்ல சார்! வழக்கம் போல வாயுக் கோளாறுதான். வேறென்ன?”

கணபதி சார் இருக்கையில் இல்லாததன் காரணம் புரிந்தது. மனிதர் இன்னும் அரை மணிநேரத்திற்கு திரும்ப மாட்டார்.

“பாய் கடையில சேர்ந்திருக்கற புதுப் பையனுக்கு நம்ம வாயுக் கோளாறு பத்தி தெரியாது. நம்ம மணிவேலும்,ராஜேஷும் சேந்து அவர் டேபிளுக்கு ரெண்டு வாழக்காய் பஜ்ஜியை கொடுக்கச் சொல்லிருக்காங்க. இந்தப் பையனும் டேபிள்ள வச்சிட்டான். அவ்வளவுதான் ! மனுஷன் அவன கிழிச்சு காயப் போட்டாரு. எல்லாரும் சிரிக்கவும் கடுப்பாகி விடு,விடுன்னு வெளிய போயிட்டாரு.”

எனக்கும் சம்பவத்தை கற்பனையில் கண்டதில் புன்னகை வந்தது. இருந்தாலும் கணபதி சாரை எண்ணி கட்டுப்படுத்திக் கொண்டேன்.

“வயசுக்காவது மரியாதை கொடுக்கலாமில்ல.அவர்ட்ட போயாடா விளையாடுவீங்க?”

“விடுங்க சார்! நம்ம கணபதி சார்தான? எங்க போய்ட போறாரு? வந்ததும் சலாம் வச்சா ராசியாயிருவாரு. நீங்க நுழையும்போதுதான் வெளிய போனாரு. நீங்க பாக்கல ?”

“இல்ல அருண்! நான் படி ஏறி வந்துட்டேன். அவரு லிப்ட்ல போயிருப்பாரு போல”

அவர் எங்கே போயிருப்பார் என்று எனக்குத் தெரியும். போய் பேசி சமாதானப்படுத்தி உடனே அழைத்துவரலாம்தான். ஏனோ கொஞ்சம் அலுப்பாக இருந்தது. இந்தப் பிரிவின் கூடுதல் மேலாளராக வந்ததிலிருந்து இது நான்காம் முறை. அவர்தான் இப்பிரிவிலேயே வயது கூடியவர். நானும், மேலாளரும் முப்பத்தைந்துகளில். மற்ற எல்லோருமே முப்பதுகளை ஒட்டியவர்கள். எப்போதும் எங்கள் பிரிவு கொஞ்சம் கலகலப்பாகத்தான் இருக்கும்.

மனது கேட்கவில்லை. மெல்ல எழுந்து வாசலை நோக்கி நடந்தேன். காதின் பின் மடல்களில் கண்திறந்து, அலுவலகம் மற்றொரு கூட்டுச் சிரிப்புக்குத் தயாராவதைக் காட்டியது. புறக்கணித்து நடந்தேன். அலுவலகத்தை சுற்றிக் கொண்டு பின்புறம் போனால் வாகன நிறுத்தம். அதன் மறுகோடியில் வாட்ச்மேன் அறை. அதன் பின்புறம் பூவரசமரம் ஒன்றின் கீழ் உட்கார்ந்திருந்தார் கணபதி சார். என்னை எதிர்பார்த்திருந்தார் போல. பார்த்ததும் சட்டென ஆரம்பித்து விட்டார்.

” பாத்தியளா சார்வாள் ! எப்புடி நக்கல் பண்ணுதானுவன்னு . இவனுவள்ள எவனுக்காவது ஒடம்புல வலு உண்டுமா சார்? இந்த மணிவேல் பய… காலங்காத்தால் ஆட்டாம்புழுக்கையில வரட்டி தட்டுன மாரி ஒண்ணக் கொண்டுட்டு வந்து பால்ல போட்டு முழுங்குனாம் . என்னடே இதுன்னேன். இதுதாம் ப்ரேக்பாஸ்டுங்காம் . சரிடே! வயிறு நெறையனுமில்லா , இது அர மணி நேரத்துக்கு தாங்குமாடே வயத்துக்குன்னு கேட்டா, டயட்டுங்கான்.அந்தால அவனுக்கு வாயுக் கோளாறு என்ன செய்யும்னு சொன்னேன். அதுக்கு இன்னைக்கு இப்பிடி புத்தியக் காட்டிட்டான் சார்!”

“சரி விடுங்க! நம்ம பயலுகதான! சும்மானாலும் வெளையாட்டுக்கு செய்வானுகளே தவிர சூது, வாது கெடயாது ”

“சார்! நீங்க என்ன? எனக்கு என்ன கோபமா? தாபமா? என்ன இன்னும் 3 வருசத்துல ரிடயராயிடேம்னா எம்பாட்டுக்கு சிவா,சிவான்னு சங்கரங்கோயிலுக்கு போயிருவேன் சார்! என்னதாம் சொல்லுங்க , நம்ம ஊர் மாதிரி வராதுல்லா?”

என் தலையசைப்பை புன்னகையோடு ஏற்றுக் கொண்டார் -” நானும் போயிட்டா இந்தப் பயலுவளுக்கு இதெல்லாம் யாரு சார் சொல்லுவா? வாயுக் கோளாறுன்னா என்ன வெனைய வைக்கும்னு இவனுவ யாராவது கண்டானுவளா சார்? இந்த நெஞ்சு வலி, நெஞ்சு வலிங்கானே , அது என்னது? மொதல்ல அது வாயுக் குத்துலல்லா ஆரம்பிக்கும். கவனிக்காம விட்டொம்னா அப்புடியே நெஞ்சுக்குள்ள ஏறி நின்னுரும். நெஞ்சு சுருங்கி விரியையில காத்தப் பூரா வெளியேத்தி , பெறவு உள்ள இழுக்கும். இந்த வாயு போய் வெளிஏறாம நிக்கவும்தான் இருதயம் அப்படியே சிக்கிருது. இந்த வாயுக் கருமம் கொஞ்சம், கொஞ்சமா சேந்து ஒரு நா இல்லாட்டி ஒரு நா சோலிய முடிச்சிப் போடும்லா ….. வாயுக் கோளாறுக்கு வழி வைக்காதீங்கடேன்னா சொன்னா இவனுவளுக்கு இளக்காரமா இருக்கு…”

அவரது நம்பிக்கையை அசைத்துப் பேசுவது முடியாத காரியம் என்பது என் அனுபவம். ஏதாவது சொல்ல வேண்டுமென்பதற்காக ” விடுங்க சார்! ஹார்ட் அட்டாக் வந்தா ஆபரேஷனுக்கு ஆபீசுல காசு தராங்க. அப்பறமென்ன?”

“சார்! நீங்க என்ன இந்த ஊர்காரனுவள மாரி பேசிட்டு … அதென்ன பை பாசு ஆபரஷன்? நெஞ்சக் கீறி , உள்ள நிக்குத வாயு அம்புட்டையும் பிதுக்கி வெளியே வுட்டுருதாம். பெறவு ஒரு தையலு . அம்புட்டுதான் கத. ஒரு மட்டம் கத்தி வச்சிட்டா உடம்பு கூடி வருமா பெறகு?”

கணபதி சாருக்கு அலுவலகப் பெயரே வாயுக் கோளாறுதான். எந்த உடல்நலக் குறைவையும் அவரால் வாயுக் கோளாறுடன் இணைத்துவிட முடியும். அது மட்டுமல்ல. வாயுக் கோளாறுக்கான அனைத்து சாத்தியங்களையும், அதற்கான மருத்துவ முறைகளையும் அவரை விட சிறப்பாக சின்னத்திரை பரம்பரை மருத்துவர்களாலும் சொல்ல முடியாது.

ஒரு தடவை நான் சாப்பிடும் போது என் மதிய உணவுப் பாத்திரத்தில் உருளைக் கிழங்கு வறுவலைப் பார்த்துவிட்டார். ” சார்! பூமிக்கு கீழ வெளையுத கெழங்குகள் எல்லாமே வாயுக் கோளாற உண்டுபன்னிரும். அது ஏந்தெரியுமா ? வெளிய உள்ள காய்கறி எல்லாம் வேணுங்க காத்தை உறிஞ்சி, வேண்டாங்குத காத்த துப்பிரும். இந்த கெழங்கெல்லாம் பூமிக்குள்ளயே இருக்கதுனால , அது மேல உள்ள செடி உறிஞ்சுத காத்துல கொஞ்சத்தை வாங்கி, வாங்கி வச்சிக்கிட்டே இருக்கும். வெளிய வுடவும் அதுக்கு முடியாது. வாயு கிழங்குக்கு உள்ளயே இருந்து போய் , நாம திங்கவும் டக்குன்னு நமக்கு வாயு கோத்துரும் ”

நான் வாயில் வைத்த பொரியலை என்ன செய்வதென தெரியாமல் திகைத்தேன். அவர் எனக்கு ஆறுதலளிக்க முயன்றார் -“இப்ப ஒண்ணுமில்ல ! வீட்டுக்குப் போயி வெரத்தண்டி இஞ்சிய எடுத்து தோல் சீவி நல்ல சவச்சி தின்னுட்டீங்கன்னா , அது போயி இந்த வாயுவ எடுத்துரும் ”

நான் என் தர்க்க அறிவைக் காட்ட முயன்றேன்-“இஞ்சியும் கெழங்குதான? அதுல வாயு சேர்ந்துருக்காதா ?”

“அப்படி கேளுங்க சார்! கெழங்குலய மண்ணுல வெளையுதது, மலையில வெளையுதது ன்னு ரெண்டு ஐட்டம் உண்டு. மலையில வெளையுத கெழங்கு எல்லாம் வாயுவ எதுக்கும். ஏன்னா மலையில ஆக்சிஜன் கம்மில்லா …”

உருளைக்கிழங்கும் மலையில்தான் விளைகிறது என்று கேட்க நினைத்து அடக்கிக் கொண்டேன்.

“ஆனா ஒன்னு சார் ! … மண்ணுல வெளையுத கெழங்குகள்ளயே வாயுவ அண்ட விடாத ஒண்ணு உண்டுன்னா அது கருணக் கிழங்குதான். அதைத்தாம் நாம சாப்பாட்டுக்கு சேக்கணும். வாயுக் கோளாறு செய்யாதுங்கப்போயிதான் அதுக்கு கருணைக் கிழங்குன்னேன் பேரு வந்தத பாத்துகிடுங்க ”

அவரது வாயு மருத்துவ அறிவிற்கு உட்பட்டு ஏற்கப்பட்ட காய்கறிகள் மூன்றுதான். வெண்டை, பாகல், முருங்கை. வெள்ளைப் பூண்டின் மகத்துவத்தைப் பற்றி அவர் சொல்லுவதைக் கேட்டால் அவர் வீட்டில் பாயசத்திலும் பூண்டு இருக்குமோவென்ற சந்தேகம் கட்டாயம் வந்து விடும்.

பதினோரு நாட்கள் மருத்துவ விடுப்பு எடுத்து அடிவயிறு உபாதை குறைத்து வந்த சுப்ரஜா அய்யருக்கு இவர் எடுத்த பாடம் வாயுக் கோளாறின் மற்றொரு பரிமாணத்தை உணர்த்துவது.
” அம்மா ! இப்புடி இரி! என் புள்ளையா நெனச்சி சொல்லுதேன். இது எல்லாம் ஒன் ஜாதகக் கோளாறுதான். கட்டத்துல ஐந்தாமிடத்துக்குரியவன் மறைவு. ஆரோக்கியகாரகனான சந்திரன் நீசம். சரி, எதிர் வீட்டுப் பார்வையாவது உண்டுமான்னா அதுவும் சுக்கிரன் மறைவு. ஒனக்கு சரியாப் பசிக்காதே? பெரட்டி, பெரட்டி ஏப்பமா , ஒரு மாதிரி எதுக்களிச்சிக்கிட்டே வருதா? ஆங் …பாத்தியா…. இது வாயு மந்தம். செவ்வாயும், கேதுவும் அஞ்சாம் வீட்டுல கூடியிருந்தானுவன்னா வேற வெனையே வேண்டாம். செவ்வாய் நிக்காம்னாலே வாயுக் கோளாறுதான். சயன்ஸ் படியே பாரேன் , செவ்வாய் கெரகத்துல எப்பவும் புயல் வீசிக்கிட்டே இருக்கும். பூமியிலயும் பெரிய புயல் எல்லாமே செவ்வாய் கிழமையிலதான் வீசத் தொடங்கும்…..”

சுப்ரஜா மிரண்டு மின்விசிறியைக் கூட திகிலாகப் பார்த்தாள். ஆனால் சட்டென ஆறுதல் அளிப்பதில் கணபதி சார் அமிர்தாஞ்சனுக்கு நிகர்.

“ஒன்னும் கவலப்படாதம்மா ! நீ என்ன செய்யி … திருநவேலி குற்றாலம் தெரிஞ்சிருக்குமே .. அங்க உள்ள குற்றாலநாதர் கோயிலுக்கு போயி செவ்வாக் கிழமையில உம பேருல அர்ச்சன வச்சுட்டு வந்தா சரியாயிரும் . இப்பம் புக்குலல்லாம் வாயு க்ஷேத்ரம் காளஹஸ்தி ன்னு போடுதான். என்னத்தக் கண்டான் அவன் ? குற்றாலம் கோயிலே சங்கு மாடல்ல கட்டிருக்கு. சங்குன்னா என்ன? காத்து ஒரு ஒரு மொனையில நொழஞ்சு மறு மொனையில வந்துருததுதாம். அது வாயு ஸ்தலம் ….

கூடவே ஆஞ்சநேயருக்கு வெண்ண சாத்து! ஆஞ்சனேயரு சிரஞ்சீவின்னு உனக்கு தெரிஞ்சிருக்கும். ஏன்னு தெரியுமா? ”
சுப்ரஜா யோசிக்கலாமா என்று யோசிக்குமுன்பே கணபதி சார் பாய்ந்தார் – ” அவரு யாரு? வாயு புத்திரன். வாயுவால அவருக்கு சங்கடம் கிடையாது. வாயுக் கோளாறு இல்லாட்டி எமன் வாற வாசலு எது? அதான் ஆஞ்சனேயரு சிரஞ்சீவி”

கூட இருந்து கேட்டுக் கொண்டிருந்த ரேச்சல் செல்வகுமாரியும் சுப்ரஜாவுடன் குற்றாலம் சென்று நெற்றியில் செந்தூரத்துடன் திரும்பி வந்தாள் . அலுவலகத் தகவல் பராமரிப்பு அவர் பொறுப்பு என்பதால் பிறந்த தேதிகளைக் கொண்டு ஜாதகம் குறித்து அதில் வாயு கோளாறு ஆட்களை வகைப்படுத்தி வைத்திருப்பார்.

போனஸ் பணம் வங்கிக் கணக்கில் சேர்ந்த குறுஞ்செய்தி வந்திருந்த மகிழ்ச்சியான தருணமொன்றில் அவரிடம் கேட்டேன். ” ஏன் சார்! இந்த வாயுக் கோளாறு விஷயங்கள எங்க புடிச்சீங்க? ”

கணபதி சார் கொஞ்சம் அரைக்கண் மூடித் திறந்தார் ” சார்! நீங்க எனக்கு மேல உள்ள ஆளுன்னு இதச் சொல்லல்ல. நம்ம புள்ளையாச்சேன்னு சொல்லுதேன். எனக்கு பத்து வயசாயிருக்கையில எங்கம்மையும், ஆச்சியும் சொன்னது இது. நான் பொறந்த நாலாம் வருஷம் எங்கப்பா வாயுக் குன்மம் கூடிப் போயி அனேய சங்கடப்பட்டாரு . எங்கம்மை சொல்லுவா. அப்பா ஏப்பத்தையே ஏளா ன்னுதான் விடுவாராம். அந்தாக்குல எங்கம்மையும் அம்மில காயத்த தட்டி மோருல போட்டு கொண்டுட்டு ஓடுவாளாம். ஒரு நா இப்புடி ஏப்பம் தொடங்கி முடியுமுன்னையே சட்டுன்னு சாஞ்சிட்டாராம். அவ்வளவுதாம்! ஏப்பத்தோடையே உசுரும் போயிருச்சு. அவருக்கு ஆட்டத் திதி முடியவும் எங்கம்மையும், ஆச்சியும் என் ஜாதகத்தைக் கொண்டுட்டு குருக்கள்பட்டி சோசியர் கிட்ட போனாங்க. அவரு பாத்துட்டுதாம் எங்கப்பாக்கு வந்த வாயுக் கோளாறு என்னன்னு வெவரமா சொல்லிருக்காரு. சரி, எனக்கு வாயுக் கோளாறு உண்டுமான்னா , கெடையாதுதான். ஆனா, பூர்வ புண்ணிய ஸ்தானத்துல இருக்கப்பட்ட அப்பாவோட ரோகம் மகனுக்கும் உண்டுமானா எனக்கும் வாயுக் கோளாறுதான் வெனையே …. பெறவு வெவரம் தெரிஞ்சதும் நான் போயி சோசியரப் பாத்து கேட்டதுல அவரு எனக்கு சில பத்தியங்கள சொல்லிக் கொடுத்தாரு. அதான் கொஞ்சம் கண்டிசனா இருந்துக்கிடுதது. பெறவு நானும் இங்கன, அங்கன படிக்குதது, பாக்குதது எல்லாத்தையும் சேத்து சொல்லுததுதான் ……”

அவரது வாயு அறிவின் உச்சக் கட்ட சம்பவம் எம் 1 ஏஜென்சி மேனேஜர் ரகுநாதனின் அம்மா, அப்பா இருவரும் ரத்தக் கொதிப்புக்காக தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்ட போது நிகழ்ந்தது. கணபதி சார் ரகுவை தனியே அழைத்துப் போய் பேசினார் –
” ரகு! நான் முன்னையே சொல்லன்னும்னிதான் இருந்தேன். நேரம் வரல்ல . உன் பொண்ணு முதப் பொறந்த நாளுக்கு வந்தப்ப பார்த்தேன். வீட்டுல வாயு மூலையில சமயலறையக் கட்டிருக்கே. சமைக்குதது உங்கம்மா. உங்கப்பா மூணு நேரமும் வீட்டுலதாம் சாப்பாடு. நீயும் உன் வீட்டம்மாவும் ஒரு நேரத்துக்காவது வெளிய சாப்பிடுதீங்க ! அதனால உங்களுக்கு உடனே தெரியல. அவங்களுக்கு சட்டுன்னு பிடிச்சிருச்சு. வீட்டுல வாயு மூலை காலியா இருக்கணும். காத்து வந்து போக வழி இருக்கணும். இல்லாம அங்க இருந்து சாப்புட்டா என்ன ஆகும்? பிரஷர்தான் வரும். சயன்ஸ் படியே பாரேன் ! புயல் வாரத என்னன்னு சொல்லுதான் , லோ ப்ரஷர்னுதான! அதும் எங்க? கடல்ல … அப்பம் வாயு கோணினா நீர் பொங்கும் . உடம்புக்குள்ள வாயு சேந்தா ரத்தம் தான பொங்கும். கொஞ்சம் கவனமா இரிடே ….”

பதினைந்து நாட்கள் பால்கனியில் சமைத்து நடு ஹாலில் சாப்பிட்ட ரகுநாதனின் குடும்பம் ஒன்பது லட்சம் செலவு செய்து வீட்டை இடித்து மாற்றினார்கள். அலுவலகத்தில் எல்லோருக்கும் அவரிடம் ஒரு வாயு அனுபவம் உண்டு. விவரம் தெரிந்தோர் எவரும் அவர் காதுக்கெட்டும் தொலைவில் இருக்கும் வரை வாயு பிரிய விடுவதில்லை.

பத்து நாட்களில் எல்லாம் வழக்கமாகிவிட்ட ஒரு மாலையில் நானும், அருணும் மட்டும் அலுவலகத்தில் இருந்தோம். கணிப்பொறியை உறங்கச் செய்து கொண்டிருந்த நொடியில் கைபேசி அழைத்தது. கணபதி சார்.

“சொல்லுங்க கணபதி சார்”

“சார்! நான் ஈக்காட்டுதாங்கல் ட்ராபிக் சார்ஜெண்ட் பேசறேன். நீங்க யாரு?”

புதிய குரலும், குரலுக்கானவரின் பணியும் கேட்ட நொடியே மனம் யூகித்து விட்டது. சட்டென பதட்டம் உடலின் மொழியில் குடியேறியது.

“சார்! கணபதி சாருக்கு என்னாச்சு? ஏதாவது ஆக்சிடெண்டா ? அவருக்கு ஒன்னுமில்லையே? அவரப் பேசச்சொல்லுங்க … கணபதி சார்! கணபதி சார்! ….’

” சார் ! பதறாதீங்க! ஒன்னும் பிரச்சினையில்ல. இவரோட பேரு என்ன கணபதியா? உங்க பேரு, ஆபீஸ் சொல்லுங்க? இவரோட வீட்டு அட்ரெஸ் , காண்டக்ட் பர்சன் டீடைல் கொடுங்க”

“சார்! எதுவும் சீரியஸா ? ” எனக்கு வாய் குழறி , உடல் நடுங்கியது.

அருண் எனக்கு மிக அருகில் வந்து நின்று கொண்டான். விஷயம் பிடிபட்டிருந்தது அவனுக்கு. சைகையிலேயே கேட்டு கைபேசியை வாங்கினான். தள்ளிச் சென்று சில நிமிஷங்கள் பேசினான். கைபேசியை அணைத்து விட்டு ” சார்! வாங்க ! ஸ்பாட்டுக்கு நாம போயிட்டு வந்துரலாம். நாம போகல்லன்னா கேஸ் சிக்கலாகிரும் சார் ”

நான் எந்திரம் போல நகர்ந்து அவனுடன் பைக்கில் ஏறி அமர்ந்தேன். சம்பவ இடத்திற்கு அருகில் நாங்கள் போகும்போது இரைச்சலிட்டபடியே ஆம்புலன்ஸ் எங்களை எதிர் திசையில் கடந்து சென்றது. சார்ஜெண்ட் இளமையாக இருந்தார். பரஸ்பர உறுதிப்படுத்தல்கள், தகவல் பரிமாற்றங்களுக்குப் பின்னர் சொன்னார்.

“பெட்ரோல் போட்டுட்டு பங்குல இருந்து சட்டுன்னு ரோட்டுக்கு ஏறிட்ட்ருக்கார் ! கார்ப்பரேஷன் பஸ். ட்ரைவருக்கு லெப்ட்டு பிளைன்ட் சைடு. இருந்தும் எவ்வளவோ முயற்சி பண்ணி ப்ரேக் அடிச்சிதான் பார்த்துருக்காரு. ப்ச் ! ரியர் வீல் தலையில ஏறிடுச்சு !”

புத்தம் புதிய பேருந்து சாலையோரம் நின்றிருந்தது. அதன் இடப்பக்கம் ஸ்கூட்டர் குறைந்த சேதாரங்களுடன் அசிங்கமாய் மல்லாந்து படுத்திருந்தது . அருண் கொஞ்சம் பதட்டமானான்

“சார் ! இதுவா சார் அந்த பஸ்சு ? நல்லா புதுசா இருக்கு. எப்படி சார் ப்ரேக் புடிச்சு நிக்காம போகும்? ஓவர் ஸ்பீடா இருக்கும். கொஞ்சம் நல்லா விசாரிங்க சார்…”

“என்ன சார் நீங்க? எங்களுக்குத் தெரியாதா ? ஆயிரத்துல ஒரு வண்டிக்குத்தான் இந்தக் கம்பளைன்ட்டே … அதுல விதி வந்து உங்க ஆபீஸ் ஆளு மாட்டிக்கிட்டாரு ”

“எந்த கம்பளைன்ட்?”

“ஏர் ப்ரேக் பெய்லியர் “

முந்தைய கட்டுரைராஜகோபாலன்
அடுத்த கட்டுரைகதைகள் மேலும் கடிதங்கள்