«

»


Print this Post

மனிதர்களின் வீழ்ச்சி-கடிதம்


என் பெரு மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,

நான் தங்களது நீண்ட நாள் வாசகன். தங்களது கொற்றவை, பின் தொடரும் நிழலின் குரல், ஏழாம் உலகம், காடு, அறம், இன்றைய காந்தி போன்ற நூல்களை வாசித்து இருக்கின்றேன். தங்களது வலைத் தளத்தை தினமும் படித்து விடுவேன்.

பின் தொடரும் நிழலின் குரல் கம்யூனிச சித்தாந்தத்தின் வீழ்ச்சியையும், அந்த சித்தாந்தத்திற்காகத் தங்கள் உடல், பொருள் உள்ளிட்ட அனைத்தையும் தியாகம் செய்தவர்களைப் பற்றியும், அத்தகைய தியாகத்தின் பொருள் என்ன என்றைய கேள்வியையும் முன் வைப்பதாகவுமே நான் புரிந்து கொண்டுள்ளேன்.

இன்று எனக்கு ஒரு சிக்கல். கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு என்னுடைய மேல் படிப்பிற்காகவும், என்னுடைய வேலை வாய்ப்பிற்காகவும்
சென்னைக்கு என் பெற்றோருடன் தென் தமிழ்நாட்டிலிருந்து புலம் பெயர்ந்தேன். இங்கு எனக்கு மனித நேயத்துடன் உதவி புரிந்தவர்கள் பலர். பல நல்ல உள்ளங்களின் உதவியால் இன்று பெங்களூரில் ஒரு நல்ல பணியில் உள்ளேன். நான் கேட்காமலேயே எனக்கு உதவி புரிந்தவர்கள் பலர்.

சென்னையில் என்னுடைய முதல் பணியில் எனக்கு மேலாளராக இருந்தவர் எனக்குத் தனிப்பட்ட முறையில் செய்த உதவிகள் பல. மனிதத்தை எல்லாவற்றிக்கும் மேலாக முன் நிறுத்தியவர். அதை செயலிலும் காட்டியவர். அவருடைய அந்தப் பண்பிற்காகவே அவரை எனது குருவாக ஏற்றுக் கொண்டேன். அதையே என் வாழ்வியல் கொள்கையாகவும் ஏற்றுக் கொண்டேன். பிறகு இருவரும் வேறு வேறு நிறுவனங்களுக்குச் சென்று விட்டோம். பொதுவாக நட்பைப் பெரிதாகப் பேணுபவனும் அல்ல. என்னுடைய எந்த நட்பும் அதிகபட்சம் 3 ஆண்டுகளுக்கு மேல் நீடித்தது இல்லை. எந்த இடத்தை விட்டு நான் நீங்கினாலும் அத்துடன் அந்த இடத்து நட்பும் முடிந்து விடும்.

ஆனால் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நான் வேறு ஒரு இடத்துக்குச் சென்ற பின்பும் தொடர்ந்து கொண்டிருக்கும் உறவு என்பது அவருடன் மட்டும் தான். அவருடன் எனக்கு இருக்கும் இந்த நீடித்த உறவினால் எனக்கும், என் பெற்றோருக்கும் இடையே வெடித்த பிரச்சினைகள் பல. மனிதத்தை முன் வைப்பதை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. குடும்பத்தையும், குடும்பப் பெருமையையும் முன் வைத்து வாழும் தலைமுறையைச் சேர்ந்தவர்கள் அவர்கள். இதன் விளைவாக நான் என் பெற்றோரைப் பிரிந்து பெங்களுரு வந்து சேர்ந்தேன்.

ஒரு மாதம் முன்பு என்னுடைய குருவும் பெங்களூரில் வேலை கிடைத்து என்னுடன் வந்து சேர்ந்தார். கடந்த ஒரு மாத்தில் அவரிடம் மனிதத்தை முன் வைக்கும் ஒரு சொல்லோ, அல்லது ஒரு செயலோ என்னால் காண இயலவில்லை. அவர் இப்போது முன் வைப்பது எல்லாம் செயல் திட்ட முறைகள் (Process) மட்டுமே. ஒரு எளிய உணவகத்துக்குச் சென்றால் கூட இப்பொழுது அவர் கூறுவது இங்கு எந்த செயல்திட்ட முறைகளும் இவர்கள் கையாள்வதில்லை. ஆகவே இது ஒரு சிறந்த உணவகம் இல்லை என்பதே. தன்னை நம்பி வந்தவர்களுக்கு உதவி செய்து வந்த ஒருவர் இன்று இப்படிக் கூறுவது எனக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.மிக எளிதாக இதை ஒரு தனி மனிதனின் வீழ்ச்சி என்று எடுத்துக் கொள்ளலாம். ஆனால் ஒரு குருவின் வீழ்ச்சி எனும் போது இதை எப்படி ஏற்றுக் கொள்வது என்று எனக்குப் புரியவில்லை.

ஈ வே ரா போன்ற பலரின் வீழ்ச்சியை இதற்கு ஒப்பிடலாம். ஆனால் மனிதத்தை முன்னிறுத்திய ஒரு குருவின் வீழ்ச்சியை எப்படி எடுத்துக் கொள்வது?

உங்களது பதில் என்னுடைய அக நெருக்கடிக்கு ஒரு விடுதலை தரும் என்ற நம்பிக்கையுடன் காத்து இருக்கின்றேன்.

அன்புடன்,
வெங்கடேஷ்

அன்புள்ள வெங்கடேஷ்

இவ்வகைக் கடிதங்கள் எனக்கு அடிக்கடி வருவதைக் காண்கிறேன். இதிலுள்ளது அவரது பிரச்சினை அல்ல, உங்கள் பிரச்சினை. இதை முதிரா இளமையின் ஒற்றைப்படையான ஈடுபாடு சார்ந்த சிக்கல் எனலாம். அந்தவயது தாண்டினால் அதைக் கடந்துவந்துவிடலாம், வரவேண்டும்

மனிதர்கள் தட்டையான அட்டைவெட்டு வடிவங்கள் அல்ல. மாற்றமில்லாத கற்சிலைகள் அல்ல. அவர்கள் பல்வேறு பக்கங்கள் கொண்ட வைரங்கள் போல. தொடர்ந்து வளர்ந்து உருமாறும் மரங்கள் போல

மனிதர்கள் பல்வேறு அக, புற விசைகளால் இயக்கப்படுபவர்கள். ஆன்மீகமான சிக்கல்கள் முதல் உலகியல் தேவைகள் வரை அது பலவகை. ஒரு மனிதனை நான்குபக்கமும் நூற்றுக்கணக்கான வடங்கள் இழுத்துக்கொண்டிருப்பதைப் போலக் கற்பனைசெய்யுங்கள். நீங்கள் அவரைக் காணும் ஒரு தருணத்தில் அந்த வடங்களின் இழுவிசைகள் நடுவே உள்ள ஒரு சமரசப்புள்ளியில் அவர் இருக்கிறார். அடுத்த கணம் அவர் இடம் மாறிவிடுகிறார்

நீங்கள் அவரை ஒரு ஐம்பது அல்லது நூறு புள்ளிகளில் கண்டிருக்கிறீர்கள். அதன் சாராம்சமாக அவருக்கான ஓர் ஆளுமையை நீங்கள் அவருக்குக் கற்பிதம்செய்து அளிக்கிறீர்கள். அதை அவர் கடைப்பிடிக்கவில்லை என்றால் ஏமாற்றம் அடைகிறீர்கள். அவர் உங்களை ஏமாற்றிவிட்டார் என நினைக்கிறீர்கள்

முதிரா இளமையில் இது மிக அதிகம். அவர்கள் மனிதர்களைக் கற்பனைசெய்துகொள்ளவே விரும்புவார்கள். அந்தக் கற்பனைபிம்பம் மீது தற்காலிக மோகம் கொள்வார்கள். அது உக்கிரமான வேகமாக இருக்கும். அந்த பிம்பம் கலைந்ததும் கோபாவேசம் கொண்டு வெறுக்க ஆரம்பிப்பார்கள். அதுவும் உக்கிரமானதாக இருக்கும்

எந்த மனிதரையும் ஒற்றைப்புள்ளியில் வைத்து மதிப்பிடவேண்டாம். அவர்களின் எல்லாத் தளங்களையும் பார்க்க முயலுங்கள். அவர்கள் அப்படி இருக்கக் காரணமான விசைகளை அறியுங்கள். உலக அனுபவங்கள் எல்லையற்றவை. அவை ஒருவரை எப்படி இயக்கினவோ அந்த விசைகளை அறிய முயலுங்கள்

ஜெ

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

Permanent link to this article: https://www.jeyamohan.in/36325