பசி வீற்றிருக்கும் நடுமுற்றம்

[1 ]

இலக்கியத்தில் உலகியல்விவேகத்தின் இடமென்ன? நான் இரு பெரும்படைப்பாளிகளை வாசிக்கையில் எல்லாம் அதைப்பற்றி நினைத்துக்கொள்வதுண்டு. தல்ஸ்தோய், ஐசக் பாஷவிஸ் சிங்கர். ஐசக் பாஷவிஸ் சிங்கரின் ‘காஃப்காவின் நண்பர்’ என்ற கதையை ஒருநாள் இரவில் நான் வாசித்தேன். அன்று உடல் திறந்து என்னுள் இருந்து இன்னொன்று வெளிவரும் அனுபவம் போல அந்த தரிசனத்தை அடைந்தேன்.

பல ஆண்டுகளுக்குப்பின் நித்யசைதன்ய யதியைக் காண ஒரு குடும்பம் வந்திருந்தது. எண்பதுவயதான ஒருபாட்டியும் வந்திருந்தார். குடும்பம் நித்யாவின் காலில் விழுந்து வணங்கியது. பாட்டி வணங்க வந்தபோது நித்யா எழுந்து நின்று அவள் கைகளைப்பற்றிக்கொண்டார். பின்னர் நித்யா சொன்னார் ‘அவளும் ஒரு யோகி’ நான் புரியாமல் ‘எப்படி ?’ என்று கேட்டேன். ‘அவ்வளவு பிள்ளைகளைப்பெற்று வளர்த்து அதனூடாக அவள் அறியவேண்டியவ்ற்றை எல்லாம் அறிந்துவிட்டாள்’ அதைப் பின்பு நான் உணர்ந்துகொண்டேன். அந்த தரிசனம்தான் அது. முதிந்ந்த லௌகீகவிவேகி ஞானியின் அருகே அமர்ந்திருக்கத்தக்கவன்.

ஏனென்றால் உலகம் ஒற்றைப்படையான அனுபவங்களையே நமக்களிக்கிறது. நமக்கு ஓர் உடல் மட்டும் இருப்பதனால், நாம் ஒரே இடத்தில் மட்டும் இருக்கமுடிவதனால் நம்மால் ஒன்றை மட்டுமே பார்க்கமுடிகிறது. நமது பசி, நமக்குவேண்டியவர்களின் மரணம், நம்மவர்களின் துயரம் என. நாம் ஒருவயதில் நம்மை இறுக்கிக்கொள்கிறோம். நம்முடைய எல்லைகளைத் தாண்டமுடியாதவர்களாக ஆகிவிடுகிறோம். நம் அனுபவங்கள் ஒற்றைக்கண் உடைய சைக்ளோப்களாக நம்மை ஆக்கிவிடுகின்றன

மாறாக நடுவயதில் தன் அகம் இறுக அனுமதிக்காத ஒருவர் தனக்கு வரும் அனுபவங்கள் வழியாகவே ஒவ்வொன்றுக்கும் மறுபக்கத்தைக் காணமுடியும். ஒவ்வொன்றும் இன்னொன்றால் சமன்செய்யப்பட்டிருப்பதை, ஒவ்வொன்றும் இன்னொன்றுடன் பிணைந்திருப்பதை அறியமுடியும். அது அவரை ஒரு மகத்தான சமநிலை நோக்கிக் கொண்டுசெல்லும். பிறப்பு வழியாக பசி வழியாக, மரணம் வழியாக பிரபஞ்சமெய்மையைச் சென்று தொட்டுவிடமுடியும். ஞானியின்பீடத்தில் அமரமுடியும். அத்தகைய விவசாயிகளை அன்னையரை நாம் எங்கேனும் கண்டிருப்போம்

அந்த பீடத்தில் அமரத்தக்கவர்கள் தல்ஸ்தோயும் சிங்கரும். அன்றும் இன்றும் இலக்கியம் கவித்துவத்தாலும் தரிசனத்தாலும்தான் ஆழம்பெறுகிறது. அவர்களின் படைப்புகள் கவிதையும் ஞானமும் முயங்கும் பரப்புகள். ஆனால் கண்ணுக்குத்தெரியாத ஆழ்நதியாக லௌகீக விவேகமும் அவற்றுடன் கலந்தபடியே உள்ளது. மற்ற அத்தனை இலக்கிய மேதைகளிடமிருந்தும் அவர்களைப்பிரிக்கும் அம்சம் இதுதான். மாபெரும் இலக்கியமேதையான தஸ்தயேவ்ஸ்கி அவர்களைவிடப் பலபடிகள் கீழே நிற்பது இந்த லௌகீகவிவேகம் அமையாதுபோனமையால்தான்

[ 2 ]

நாஞ்சில்நாடனின் கதைகளின் உலகியல்தன்மையைப்பற்றி சுந்தர ராமசாமிதான் முதன்முதலில் சுட்டிக்காட்டினார். சுந்தர ராமசாமி நாஞ்சில்நாடனை ஆ.மாதவன், நீல பத்மநாபன் ஆகியோரின் வரிசையில் வரக்கூடியவர் என்றும் அவர்களின் முதிர்ந்த லௌகீக நோக்கின் பிரதிநிதி என்றும் வகுத்துச்சொல்கிறார். நாஞ்சில்நாடன் எழுதவந்த ஆரம்பகாலத்திலேயே, தலைகீழ் விகிதங்கள் என்ற அவரது முதல்நாவல் வெளிவந்ததும் எழுதிய மதிப்புரையில், சுந்தர ராமசாமி சொல்லும் இந்த வரையறை மிக முக்கியமானது. நாஞ்சில்நாடனின் சாராம்சமான மன அமைப்பை அவரது அந்த ஒரு படைப்பைக்கொண்டே ராமசாமி தொட்டுக்காட்டியிருப்பது மிகுந்த முக்கியத்துவம் கொண்டது.

ஆ.மாதவன், நீலபத்மநாபன் இருவரையும் லௌகீகநோக்கு கொண்டவர்கள் என வகுப்பது இயல்பானதே. ஆ.மாதவன் மனிதனின் அகத்தில் உள்ள எதிர்மறைக்கூறுகளுக்கு, அல்லது அடிப்படை இச்சைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர். காமகுரோதமோகங்களை நோக்கியே அவரது கதைகள் எப்போதும் செல்கின்றன. மனிதன் குரூரமானவன் காமம் கொண்டவன் என்று அவரது கதைகள் தொடர்ந்து கண்டுகொள்கின்றன. நீல பத்மநாபன் மனிதனின் அற்பத்தனங்களை நோக்கியே எப்போதும் செல்கிறார். மனிதன் உயிர்வாழ்தலுக்காக, சுயநலத்துக்காக நுட்பமான பாவனைகள் மூலம் வாழ்க்கையைக் கலக்கிக்கொண்டே இருக்கிறான் என்கிறார் நீல பத்மநாபன்

அவ்விருவர் படைப்புகளில் இருந்தும் நாஞ்சில்நாடனைப் பிரித்துக்காட்டும் அம்சம் எது? ஏன் நாஞ்சில்நாடனின் எழுத்து மேலதிக அழுத்தம் பெறுகிறது? நாஞ்சில்நாடன் ஆ.மாதவன் போல மனித மனத்தின் இருட்டை நோக்கிச் செல்லக்கூடியவர்தான். அவரது பலகதைகளில் மனிதனின் குற்றமனநிலையும் காமமும் மிகத்தீவிரமாக வெளிப்பட்டிருக்கின்றன. நீலபத்மனாபனைப்போல அவரது எல்லாக் கதைகளிலும் மனிதமனத்தின் அற்பத்தனத்தை நோக்கி கவனம் செலுத்துகிறார்தான். அவ்வகையில் அவரை ஆ.மாதவன் நீலபத்மநாபன் இருவர் நடுவே நிகழ்ந்த அற்புதமான கலவை என்று சொல்லிவிடலாம்

வேறுபாடாக ஒன்று உள்ளது. ஆ.மாதவன் நீலபத்மநாபன் இருவர் கதைகளிலும் கருணை என்ற அம்சம் இல்லை. அவர்கள் இருவரும் நவீனத்துவ யுகத்தைச் சேர்ந்தவர்கள். அறுவைசிகிழ்ச்சைக் கத்தியின் கருணையற்ற கச்சிதமே அவர்களின் இயல்பு. கீறிச்சென்று வெட்டி எடுத்து நம் முன் போடும் கதைகள் அவை. ஆ. மாதவனின் கிருஷ்ணப்பருந்து நாவல் மிகச்சிறந்த உதாரணம். ஒவ்வொரு கதாபாத்திரத்தின் ஆழத்திலும் உள்ள காமத்தை வெட்டிவைக்கும் அந்த நாவல் ஒருபோதும் அந்த மனிதர்களைக் கருணையுடன் அணுகுவதில்லை. இவ்வளவுதான் மனிதன் என்று சொல்லிநிற்கவே அது முனைப்புக் கொள்கிறது. நீல பத்மநாபனின் உறவுகள் நாவல் இன்னொரு உதாரணம். மொத்த உறவுகளும் அற்பத்தனத்தாலேயே கட்டப்பட்டிருப்பதன் சித்திரத்தையே அது கடைசியாக அளிக்கிறது

அங்கிருந்து ஒருபடி மேலே எம்புகிறார் நாஞ்சில்நாடன். அவருக்கு அவரது கதைமாந்தர்கள் மீது ஒரு பிரியம் எப்போதும் உள்ளது. ‘நம்ம சனங்க’ என்று அவர் அவர்களை உள்ளூரத் தழுவிக்கொள்வதை எப்போதும் காணமுடிகிறது. சகமனிதர்களை எத்திப்பிழைப்பவர்கள், எள்ளிநகையாடித் தங்களைக் காட்டிக்கொள்பவர்கள், பொறாமையால் புழுங்குபவர்கள், எச்சில்கணக்கை எப்போதும் கையோடு வைத்திருப்பவர்கள் என அவர்களைச் சித்தரிக்கும்போதும் அவர்களை எளிய மனிதர்களாகவே நாஞ்சில்நாடனின் புனைவுலகம் அணுகுகிறது. அவர்கள்மீது ஆசிரியனின் கருணை என்றும் உள்ளது. அவர்களிடம் சற்றேனும் மேன்மை வெளிப்படும் தருணத்தை அவரது புனைவுமனம் ஓடிச்சென்று தொட்டுக்கொள்கிறது.

அதையும் சுந்தர ராமசாமியே சொல்கிறார். ஆ.மாதவனையும் நீல பத்மநாபனையும் மனிதாபிமானிகள் என்று சொல்லிவிட முடியாது. ஆனால் நாஞ்சில்நாடன் ஐயத்திற்கிடமில்லாமல் மனிதாபிமானி. ஆகவேதான் நீல பத்மநாபனோ ஆ மாதவனோ நம் முற்போக்கு வட்டாரத்தில் அடையாத அங்கீகாரத்தை நாஞ்சில்நாடன் அடையமுடிகிறது.

இந்த விஷயம் மிக ஆர்வமூட்டக்கூடியது. ஒட்டுமொத்த நோக்கில் ஆ.மாதவனும் நீல பத்மநாபனும் அடித்தள வாழ்க்கையைச் சொல்கிறார்கள். எளிமையான யதார்த்தவாதப் படைப்புகள் அவை. ஆனாலும் இங்கே அவர்கள் முற்போக்கினரால் கொண்டாடப்படவில்லை. ஏனென்றால் அவர்களின் சாராம்சம் நவீனத்துவம். அது நம் முற்போக்கு யதார்த்தத்தில் இருந்து முற்றிலும் வேறுபட்டது.மனிதனைப்பற்றிய அவநம்பிக்கை அதன் சாராம்சம். மனிதநிலையை அது கைவிடப்பட்ட ஒன்றாகவே காண்கிறது. மனிதனை எப்போதும் தனித்த ஆழமான அகமாகவே அணுகுகிறது. அந்த வேறுபாடு எப்படியோ முற்போக்குவாசகனை உறுத்துகிறது.

நாஞ்சில்நாடன் அவ்வகையில் முழுக்கமுழுக்கத் தன் முன்னோடிகளிடமிருந்து வேறுபட்டவர். அவர் எழுதவந்த காலகட்டம் நவீனத்துவம் கொடிகட்டிப்பறந்தபோது. அவரில் நவீனத்துவத்தின் வடிவக்கூறுகள் , மொழிச்சிறப்புகள் எப்போதும் உண்டு. அவருக்கு முந்தைய முற்போக்கு எழுத்துக்கள் போல [உதாரணம் சின்னப்ப பாரதியின் தாகம்] நாஞ்சில் கட்டற்ற ஒழுக்கு கொண்ட யதார்த்தச் சித்தரிப்பு கொண்டவரல்ல. அவரது மொழியும் சித்தரிப்பும் சுந்தர ராமசாமி முன்னெடுத்த நவீனத்துவ யுகத்தின் கச்சிதம், கூர்மை என்னும் தனித்தன்மைகளை நோக்கியே செல்கின்றன. அவரது ‘என்பிலதனை வெயில்காயும்’ போன்ற நாவல்களை வடிவ அளவில் கச்சிதமான நவீனத்துவப்புனைகதை என்று சொல்லிவிடலாம்.

ஆனால் அவர் உள்ளடக்கத்தில் நவீனத்துவர் அல்ல. பழைய யதார்த்தவாத முற்போக்கு எழுத்தின் வகைமையைச் சேர்ந்தவர். அவரது புனைவுலகின் உள்ளடக்கம் மனிதாபிமான நோக்குதான். அதுதான் அவரை வேறுபடுத்தும் அம்சம். நாஞ்சிலை வரையறைசெய்வதாக இருந்தால் ’மனிதாபிமானநவீனத்துவர்’ என்று சொல்லலாம். அந்த மனிதாபிமானம் அவரது உலகியல்நோக்கைக் கனிந்த விவேகம் நோக்கிக் கொண்டுசெல்கிறது. அவரது இலக்கிய அடையாளம் அதுதான்.

[ 3 ]

நாஞ்சில்நாடனின் மனிதாபிமானநோக்கின் மையப்புள்ளியாக இருப்பது என்ன? மனிதாபிமான எழுத்தாளர்களைக் கூர்ந்துநோக்கினோமென்றால் ஒவ்வொருவருக்கும் ஒரு தூண்டுதல்புள்ளி இருப்பதைக் காணலாம். விக்டர் யூகோ எப்போதுமே அடித்தள மக்களின் நீதியுணர்ச்சி மீது தீராத ஈடுபாடு கொண்டவர். மாக்ஸிம் கார்க்கி thqa அவர்களின் எதிர்ப்பு மீது பற்று கொண்டவர். உணர்ச்சிகள் அடித்தள மக்களிடம் வெளிப்படும் நேரடித்தன்மை தகழி சிவசங்கரப்பிள்ளையைக் கவர்கிறதுஅப்படி அடையாளம் கண்டுகொண்டே செல்லலாம். அடித்தள மக்களின் வாழ்க்கையுடன் ஓர் எழுத்தாளனைப்பிணைக்கும் கூறு என்ன என்பதைக்கொண்டு அந்த எழுத்தாளரை ஒட்டுமொத்தமாக வகுத்துவிடக்கூட முயலலாம்

நாஞ்சில்நாடனின் புனைவுலகில் எளியமக்களுடன் அவரைப்பிணைப்பதாக நாம் காணும் முதன்மையான அம்சம் பசிதான். மிக இளம்வயதிலேயே பசியை முழுமையாக உணர்ந்த மனிதர் அவர். அடுத்தவேளை உணவு இருக்குமா என்று தெரியாத நிலையில் வரும் பசியைப்போலக் கொடூரமான சிலவே இவ்வுலகில் உள்ளன. மரணபயம்போல. தீவிரமான அவமதிப்பு போல. மொத்தப்பிரபஞ்சமும் நமக்கு எதிராகத் திரண்டு நிற்கும் அனுபவம் அது. வானமும் பூமியும் காற்றும் வெயிலும் மனிதர்களும் மிருகங்களும் நம்மிடம் செத்துத்தொலை என்று சொல்வதைப்போன்ற அனுபவம். அந்த அனுபவம் வழியாக இளமையில் கடந்துசெல்வது இன்னும் கொடுமை. உலகையே எதிரியாகக் காணக்கூடிய வீம்பும் அல்லது உலகைவிட மிகக்கீழாகத் தன்னைப்பார்க்கக்கூடிய தாழ்வுணர்ச்சியும் தன்னிரக்கமும் அதன் விளைவுகள். நாஞ்சில்நாடன் தாழ்வுணர்ச்சியாலும் தன்னிரக்கத்தாலும் உருவாக்கப்பட்ட புனைவுமனம் கொண்டவர்.

பசிபற்றிய பிரக்ஞையே நாஞ்சில்நாடனைத் தனித்து நிறுத்துகிறது. பிரபஞ்சவியலோ அழகியலோ பேசப்படும் இடங்களில் ‘மன்னிக்கவும், நான் வேறு ஆள்’ என அவரை ஒதுங்கி நிற்கச்செய்கிறது. நடைமுறையில் அப்படி ஒதுங்கிச்செல்லும் நாஞ்சில்நாடனைப் பலமுறை நான் கவனித்திருக்கிறேன். நாஞ்சில்நாடனின் அனுபவ உலகின் மையமாக இருப்பது அவரே ஒன்றுக்குமேற்பட்டமுறை எழுதி, பேசிய ஓர் அனுபவம். நெடுந்தூரம் மதியவெயிலில் ஓடிச்சென்று அழையாவிருந்தாளியாக ஒரு கல்யாணவீட்டுப்பந்தியில் அமர்ந்து சாப்பிடப்போகும்போது எழுப்பி வெளியேதள்ளப்பட்ட அவமதிப்பு. அன்று சோற்றுக்காக வெயிலில் வெளியே காத்துக்கிடக்கும் நரிக்குறவர்களைக் கண்டு தன்னையும் அவர்களில் ஒருவராக உணர்கிறார் நாஞ்சில். அந்த வயதில் அது ஓர் அவமதிப்பு. ஆனால் பின்னர் அந்த உணர்வை ஒரு தன்னடையாளமாகவே அவர் எடுத்துக்கொண்டார். ஆம், நான் பசித்திருப்பவர்களில் ஒருவன் என்ற உணர்வு. அதுதான் அவரது அறவியலையும் அழகியலையும் தீர்மானிக்கும் அம்சம்

1975இல் நாஞ்சில் எழுதிய முதல்சிறுகதையே பசியின் கதைதான். விரதம் ஒரு எளிய விவசாயியின் பசியையும் அதன்முன் அவர் கொண்டிருக்கும் வீராப்பையும் காட்டுகிறது. பசியுடன் மகள்கள் வீட்டுக்குச் சாப்பிடச்சென்று அவர்கள் அவர் குளித்ததும் அனிச்சையாக போட்ட நெற்றியின் நீறைக்கண்டு ஏற்கனவே சாப்பிட்டுவிட்டார் என நினைத்து சோறிடாமல் விட்டுவிடுகிறார்கள். அவர் எல்லா இடத்திலும் சாப்பிட்டாச்சு என்றே சொல்லித் திரும்பிவிடுகிறார். அந்தக்கதை முழுக்க பசிதான் ‘சின்னத்தம்பியாபிள்ளைக்கு இளையமகளின் வீட்டை நெருங்கும்போதே கொஞ்சம் திக்கென்றுதான் இருந்தது. போவதற்குள் அங்கே எல்லாரும் சாப்பிட்டுவிட்டால் என்ன செய்வது?’ என்ற வரியில் அவரது அலைக்கழிப்பு முனைகொள்கிறது.

இந்த முதல்கதை முதல் நாஞ்சில்நாடனின் கதைகள் வழியாகச் செல்லும்போது அவற்றில் உள்ள கணிசமான கதைகள் பசியைப்பற்றியவை என்பதைக்காணலாம்.ஒருவார்த்தை அழைக்காத காரணத்தால் நிறைந்த சோற்றுப்பந்தி முன் கொதிக்கும்பசியுடன் வீம்பாக நின்றுகொண்டிருக்கும் பண்டாரத்தின் கதையைச் சொல்லும் ’இருள்கள் நிழல்கள் அல்ல’, சோற்றுப்பந்தியில் அவமதிக்கப்பட்டு எழுந்துசெல்லும் ’இடலாக்குடி ராசா’, ஆசை தாளமுடியாமல் ஒரு வாய் கூட்டை வழித்துத் தின்று அவமதிக்கப்பட்டு அதற்குப்பழிவாங்கும் செல்லையாவின் கதையைச் சொல்லும் ’ஆங்காரம்’ கல்யாணவீட்டில் ஏழை என்பதனால் அவமதிக்கபப்டும் பண்டாரம்பிள்ளையின் கதையான ’கனகக்குன்னு கொட்டாரத்திலே கல்யாணம்’ என பல கதைகள் கிட்டத்தட்ட ஒரே கதைக்கரு கொண்டவை. அவமதிக்கப்பட்ட பசியின் ஆங்காரத்தையும் துக்கத்தையும் சொல்லக்கூடியவை.

இக்கதைகளில் பசி சமூக அடையாளமாக ஆகிவிடுவதைக் காணலாம். பசித்தவன் பசிக்காதவன் என சமூகமே இரண்டாகப்பிரிகிறது. பசித்தவன் பசிக்காதவர்களின் உலகுக்கு வெளியே அவமதிக்கப்பட்டு சிறுமைப்படுத்தப்பட்டு நின்றுகொண்டிருக்கிறான். அவனுடைய மூங்கையான கோபம் அவன் ஆன்மாவின் நெருப்பாக நின்றுவிடுகிறது. அது எந்த நகரையும் எரிப்பதில்லை. எந்த சொல்லிலும் எரிவதில்லை. அது வெளியே தெரியவருவதுகூட இல்லை. நாஞ்சில்நாடனின் ’கால்நடைகள் கனகதண்டிகள் ’ ஒரு கல்லூரியையே அவர்கள் கொண்டுவரும் சோற்றுப்பொட்டலத்தின் அடிப்படையில் இரண்டாகப்பிரித்துப்பார்க்கிறது.

நாஞ்சில் கணிசமான கதைகள் பசியைப்பற்றியவை என்ற மனப்பிம்பம் தொகுப்பை இந்த கட்டுரைக்காகப் புரட்டும்போது மேலும் மேலும் உறுதிப்படுகிறது. ஒருவேளை சோற்றின் மகத்துவத்தைச் சொல்லும் ’ராசாவும் சீட்டுக்கம்பெனிக்காரர்களும்’ , கடும் பசியில் நாய் தின்ற எச்சிலைத் தின்ன ஆரம்பிக்கும் பரமக்கண்ணுவின் கதை சொல்லும் ‘விலக்கும் விதியும்’ வேலைசெய்துவிட்டு வீடுவீடாகப் பசித்துக் காத்து நிற்கும் விசாலத்தின் கதை சொல்லும் ‘தவசி’ தொண்டை உடையப்பாடிவிட்டுப் பசித்துத் திரும்பும் குத்தாலம் ஆசாரியின் கதையைச் சொல்லும் பிசிறு – பிசிறற்ற அவன் இசையில் பசிமட்டுமே பிசிறாக உள்ளது என்கிறார் நாஞ்சில்- என்று கதைகளைச் சொல்லிக்கொண்டே போகலாம்.

கிட்டத்தட்ட நாற்பதாண்டுக்காலத்த்துக்கும் மேலாக நாஞ்சில் பசியைப்பற்றி மட்டுமே எழுதிக்கொண்டிருக்கிறாரோ என்ற எண்ணம் ஏற்பட்டுவிடுகிறது. சுரப்பு, ஒரு மதியக்காட்சி,ஒரு முற்பகல் காட்சி, ஒரு காலைக்காட்சி, எருமைக்கடா, எனப் பசியின் கதைகள் வந்துகொண்டே இருக்கின்றன நாஞ்சிலின் புனைவுலகில். நான்கு கதைகளைக் கொண்டு அவரது பசி சார்ந்த தரிசனத்தை முழுமைசெய்துபார்க்கலாமெனத் தோன்றுகிறது.

ஊற்றுக்கண் நாஞ்சில்நாடனின் கதைகளில் மிக முக்கியமான ஒன்று. ஆடிமாசத்துப் பஞ்சம். வேலை இல்லை, கூலி இல்லை. ஊரே பட்டினி என்பதனால் ஒருவருக்கொருவர் கொடுப்பதற்கும் ஏதுமில்லை. செல்லையாவின் உச்சகட்டப் பட்டினியின் சித்திரத்துடன் ஆரம்பிக்கிறது கதை. தின்ன ஏதாவது கிடைக்குமா என்று அலைந்து திரிந்து தேங்காய் விழுந்த ஓசைகேட்டு ஒரு குடிலுக்குள் எட்டிப்பார்க்க அங்கே மாரியம்மை ஒருவனுடன் உறவுகொள்ளும் நிலையில் இருக்கிறாள்.

‘பாடையிலே போறவனே கஞ்சி குடிச்சு ரெண்டுநாளாச்சு…இவனாவது ரெண்டு ரூவா தருவான்னு வந்தா அதைக்கெடுக்க நீவந்து மொளைக்கே…காலனாப்போவான்’ என்று அழுகையும் ஆத்திரமுமாக அவள் பொரிய மாடசாமி முன்னால்வந்து அவள் கையைப்பிடித்தான். ‘வா சவமே என் பின்னாலே, பட்டினி கெடந்தாளாம் பட்டினி’ என அவளை இழுத்துக்கொண்டு தன் வீட்டுக்குக் கொண்டுசென்றான் என முடிகிறது கதை. உணவையும் பட்டினியையும் பங்கிடும் ஒரு வாழ்க்கையின் தொடக்கம். அந்த உச்சக்கணம் அபூர்வமானது. பசியைப் பசி புரிந்துகொள்ளும் தருணம் அது. தமிழில் எழுதப்பட்ட நல்ல புனைவுத்தருணங்களில் ஒன்று

அந்தத் தருணத்தை உலகளாவப் பெருக்கிக் காட்டுகிறது நாஞ்சில்நாடனின் ‘யாம் உண்பேம்’ என்ற புகழ்பெற்ற கதை. ரயிலில் தன் கடைசிப்பாதிச் சப்பாத்தியை உண்ணும் கதைசொல்லியின் கையைப் பிடிக்கிறார் பஞ்சம்பிழைக்கவந்து பசித்தலையும் மராட்டிவிவசாயிக் கிழவர். ‘நாம் உண்போம்’; என அவர் சொல்வது ‘யாம் உண்பேம்’ என அறைகூவிய ஒரு தொல்மரபின் ஆழத்தில் மோதி எதிரொலிக்கிறது. ஊற்றுக்கண் பசியில் இருந்து ஆரம்பிக்கும் அன்பின் சித்திரம் என்றால் பசியில் இருந்து முளைத்தெழும் மானுட அன்பின் சித்திரம் யாம் உண்பேம். நாஞ்சில்நாடன் முன்வைக்கும் அன்பின், கருணையின் ஊற்றுக்கண் அதுவே.

நாஞ்சில்நாடன் கதைகளில் மிகவும் சிலாகிக்கப்பட்ட ‘மனகாவலப்பெருமாள் பிள்ளை பேத்தி மறுவீடும் வெஜிடபிள் பிரியாணியும்’ கூடப் பசியின் கதைதான். பசி ஆன்மாவில் புகுந்துவிட்டது. உணவு எவ்வளவிருந்தாலும் பசி அழிவதில்லை. பசி நாவில் இல்லை, வயிற்றில் இல்லை, உயிரில் இருக்கிறது. மனகாவலப்பெருமாள் பிள்ளை வெஜிடபிள் பிரியாணியைத் தின்று உயிர்விடுகிறார்,. இங்கே பசி உணவு இரண்டும் மானுடத்தின் பற்று- பிரபஞ்சம் ஆகியவற்றின் குறியீடுகளாகவே ஆகிவிடுகின்றன. கடைசிக்கணம் வரை தொடர்ந்துவரும் ஆதிப்பற்று அது

அதை அறுத்துச்சென்று விடுதலைபெறும் ஒருவரின் கதையைச் சொல்கிறது ‘துறவு’. நமச்சிவாயம்பிள்ளைக்குப் பந்திச்சாப்பாடு என்பது பந்தபாசம் நிறைந்த இகமேதான். அதில் ஆழ்ந்து திளைத்துச் சுவையறிந்து வாழ்கிறார். அந்த பந்தியெனும் பந்தத்தில் இருந்து அவர் விடுதலைபெறுவதைச் சொல்லும் ’துறவு’ கதை முக்தி என்பதற்கான நாஞ்சில்நாடனின் வரையறை. அது உண்டு ,நிறைந்து, சமையலை அறிந்து, அமையும் நிறைநிலையேதான்.

பசியில் இருந்து ஆரம்பிக்கிறார் நாஞ்சில்நாடன். பசியினூடாகவே சமூக அமைப்புகளை, உறவுச்சிக்கல்களை, ஆன்மீகத்தை அடையாளம் காண்கிறார். இகமும் பரமுமாகப் பசியே அவரது புனைவுலகில் பொருள்கொள்கிறது. அவர் அறிந்த பசியே அவரை அவரது சமகால நவீனத்துவர்களிடமிருந்து பிரித்து நிறுத்துகிறது. அவரது கருணைகொண்ட நோக்கை உருவாக்கி அவரைத் தமிழின் முக்கியமான புனைவெழுத்தாளராக நிலைநாட்டுகிறது.

[ 4 ]

லௌகீகத்தின் முதிர்ச்சி உலகவாழ்க்கையின் எல்லா பக்கங்களையும் தொட்டறிந்து சமநிலை கொள்வதேயாகும். நாஞ்சில்நாடனின் ஆரம்பகாலக் கதைகளில் உள்ள கோபமும் கசப்பும் ஒற்றைப்படையான விமர்சனமும் அவரது பிறகதைகளாலேயே சமன் செயயப்பட்டிருப்பதைக் காணலாம். பசி என்ற ஒரு புள்ளியைத் தொடும் நாஞ்சில் வைரத்தைத் திருப்பித்திருப்பிப் பார்ப்பதுபோல அதன் எல்லாப் பக்கங்களையும் ஆராய்கிறார். ஒரு கட்டத்தில் அது அவரை முதிர்ந்த விவேகம் நோக்கிக் கொண்டுசெல்கிறது.

பசி மீதான கவனம் அவரை மனிதாபிமானம் நோக்கிக் கொண்டு செல்கிறது. அவர் மனிதர்களைப் பசியால் பிணிக்கப்பட்டவர்களாகவே காண்கிறார். பரிதாபத்துக்குரிய எளிய உயிர்களாக. ஆகவே அவர் அவர்களை முடிவில்லாமல் மன்னிக்கிறார். உச்சகட்டமாக சற்று நையாண்டிசெய்கிறார் அவ்வளவுதான். அந்த மனிதாபிமானம் அவரை மேலும் கனியச்செய்கிறது. ஓர் உலகுதழுவிய முழுமையை அவரால் எங்கோ தொட்டுவிடமுடிகிறது. ஆன்னமிட்டு அன்னமிட்டு சமையற்கட்டில் நம் பாட்டிகள் அடைந்த முழுமை அது.ஆம், ஞானியின் பீடம்.

நாஞ்சிலை ஒரு நமச்சிவாயம்பிள்ளை என்று சொல்லத்தோன்றுகிறது. பந்தியில் இருந்து சமையற்கட்டுக்கு வந்தவர். இந்த உலகின் சமையலை அறிந்து அமைந்தவர். அவரது கனிவும் சிரிப்பும் அங்கே பிறந்தவை. மலைக்குகைகளில் தவச்சாலைகளில் நூல்நிலையங்களில் இருந்து பெற்றவை அல்ல. அவருடையது அவியலும் துவையலும் கூட்டும் பொரியலுமாக உருவாகி வந்த மெய்ஞானம் .

[காலம் இலக்கிய இதழ், டொரொண்டோ. நாஞ்சில்நாடனுக்கு இயல் விருது கிடைத்ததை ஒட்டி எழுதப்பட்ட கட்டுரை]

முந்தைய கட்டுரையானைடாக்டரும் பைரனும்
அடுத்த கட்டுரைவாசிப்பு -கடிதங்கள்