அன்புள்ள ஜெயமோகன்….
வணக்கம். எனக்கு நீண்ட நாளாக ஒரு சந்தேகம். பெரியாருக்குப் பின்னான காலகட்டத்தில் வந்த பெரும்பாலான நபர்கள்… சில நேரங்களில் இலக்கிய எழுத்தாளர்களும் சேர்ந்தே… ஜாதியை ஒழிக்க வேண்டும்… மதத்தை ஒழிக்க வேண்டும்…. என்பதைத் தொடர்ந்து வலியுறுத்துகிறார்கள் .
ஜாதியும் மதமும்….பிறர் மீதான அடக்குமுறையாக மாறும் போது தானே அது எதிர்க்கப் படுகிறது.
நாம் ஏன் இந்த அடக்குமுறையும் மேட்டிமை சிந்தனையும் மட்டும் மாற வேண்டும் எனப் போராடுவதே இல்லை.
நான் முதலியார் பிரிவைச் சேர்ந்தவன். எந்த ஒரு நொடியிலும் இந்த சாதீய அடையாளம் காரணமாக மற்றவரை இழிவாக நினைக்க வேண்டும் என்று எனக்கு என் வீட்டார் மூலமாக கற்றுத் தரப்படவும் இல்லை…. எனக்கும் அப்படித் தோன்றியதும் இல்லை.
என் போன்றோரின் சார்பாக ஒரு கேள்வி…நான் ஏன் என் ஜாதியைத் துறக்க வேண்டும்…மதத்தை துறக்க வேண்டும்…
ஒரு வேளை மேற்சொன்னவை சார்ந்து எனக்கு ஏதானும் மேட்டிமை சிந்தனையும், மற்றவர்களை இந்த அடையாளத்தின் காரணமாகக் குறைவாக எண்ணும் சிந்தனையும் இருந்தால் அதைத்தானே துறக்க வேண்டும்… அடையாளங்களை இல்லையே….
ஆனால் ஏன் இதைப் பற்றிய ஆரோக்கியமான உரையாடல்களோ… கட்டுரைகளோ.. வருவதே இல்லை…
மிகவும் தட்டையான கருத்துக்களான சாதி ஒழிய வேண்டும்.. மதம் ஒழிய வேண்டும் என்றே பேசுகிறோம்…
இப்படிப் பேசுபவர்கள் அனைவருமே ஒரு சீர்திருத்தவாதியாக சமூகத்தில் தோற்றம் அளிப்பது ஏன்…?
அடையாளம் இல்லாமல் எப்படி ஒருவன் வாழ்வது….நான் ஜெய்ஹிந்து புரத்தில் வசிக்கிறேன் மதுரைக்காரன்…தமிழன்….இந்தியன்…
இப்படி எனக்கான அடையாளங்களை நான் என் பெருமையாக சொல்வதால் என்ன நேர்ந்து விடும்…
அது ஒரு குற்றம் போலவே மேதைகளால் போதிக்கப்படுகிறது…ஆனால் இப்படிக் கற்பிக்கும் தலைவர்களோ..ஆசிரயர்களோ தங்களின் ஒரு சிறு அடையாளங்களையும் துறப்பதே இல்ல… பல நேரங்களில் அது போலியான அடையாளமாக இருந்தால் கூட……
அடையாளங்கள் தானே வரலாறுகளை உருவாக்குகிறது..சமூகக் கட்டமைப்பை உருவாகுகிறது…
தொலைந்த வரலாறுகளும்… காப்பியங்களும் ஏதேதோ சாதீய… மதம் சார்ந்த அடையாளங்கள் மூலமாகதானே கண்டெடுக்கப்பட்டன.இப்போது சீனா நம் எல்லைப் பகுதிக்குள் நுழைந்தவுடன் நமக்குக் கோபம் வருகிறதே அதுவும் கூட எல்லை சார்ந்த ஒரு அடையாளம் தானே
இறுதியாக ஒன்றே ஒன்று…
அடையாளங்கள் துறக்கப்படவேண்டுமா ?
இல்லை அது சார்ந்த அடக்குமுறையும்… போலியான உயர் மனோபாவமும் மறைய வேண்டுமா ?
கொஞ்சம் விளக்க முடியுமா…?
அன்புடன்
பிரசன்னா
அன்புள்ள பிரசன்னா,
சாதியைப்பற்றி ஒரு மொண்ணையான எதிர்ப்பிரச்சாரம் செய்யப்பட்டமையின் எதிர்விளைவாக இன்று மிகப்பிரலமாக உருவாகி வந்திருக்கும் எதிர்வினா இது.
சாதி என்பது ஒடுக்குவதற்காக உருவாக்கப்பட்ட சமூக ஏற்பாடு அல்ல. அது பழங்குடிக்காலத்தில் இருந்தே வரும் ஒரு பண்பாட்டுச் சுய அடையாளம். பழங்குடி இனக்குழுக்களின் வளர்ச்சியடைந்த வடிவமே சாதி. பழங்குடிப்பண்பாட்டில் இருந்து நவீன யுகம் வரை வந்து சேர்ந்திருக்கும் பல்லாயிரம் பண்பாட்டுக்கூறுகள் சாதியில் உள்ளன.
ஆகவேதான் கோடிக்கணக்கான மக்களுக்கு சாதி அவர்களின் சுய அடையாளமாக இன்று உள்ளது. சாதியை ஒட்டுமொத்தமாகத் துறப்பதென்பது அந்தப் பண்பாட்டுக்கூறுகளைத் துறப்பதுதான். அது தேவையா இல்லையா என்பதல்ல பிரச்சினை, அது சாத்தியமே இல்லை என்பதுதான்.
போலி முற்போக்குக் கூப்பாடாக ‘சாதி ஒழிப்பு’ பற்றிப் பேசினால் பண்பாட்டு சுயத்தை இழக்க விரும்பாத மக்கள் சாதியை ஒன்று ரகசியமாக வைத்துக்கொள்வார்கள். அல்லது ஒரு கட்டத்தில் பெரியாரியரான ராமதாஸ் போல ’ஆமா அதுக்கென்ன இப்ப’ என்று கிளம்புவார்கள்.
சாதியைப் புறவயமாக, வரலாற்றுப்பண்பாட்டு அடிப்படையில் ஆராய்வதே சரியான வழி. அது இங்கே கற்பிக்கப்படவேண்டும்.
அப்படிப்பார்த்தால் சாதி ஒரு பழங்குடிப்பண்பாட்டு நீட்சி. பழங்குடிப்பண்பாடு என்பது சமூக தளத்தில் முழுக்கமுழுக்கக் களையப்படவேண்டிய பல கூறுகள் கொண்டது. அது பிறனை உருவாக்கித் தன்னைத் தனித்து நிறுத்திக்கொள்ளும் தன்மை கொண்டது. சிறிய இறுக்கமான குழுக்களாகச் செயல்படும் தன்மை கொண்டது. தர்க்கசிந்தனையை விட நம்பிக்கைகளுக்கு முதலிடம் அளிப்பது. நடைமுறைச்செயல்பாடுகளை விட ஆசாரங்களுக்கு அதிக இடமளிப்பது. தனிமனிதனை விட சமூகத்திற்கு இடமளிப்பது.
இந்த அம்சங்கள் எல்லாமே சாதியில் உள்ளன. இந்தப் பழங்குடிக்குணங்களுக்கு எதிரான போராட்டம் பல நூற்றாண்டுகள் நடந்ததன் விளைவாகவே நம்முடைய இன்றைய பண்பாடு உருவாகி வந்துள்ளது. அப்படி மாற்றத்தை அடையாத இனக்குழுக்கள் இன்றும் பழங்குடிகளாகவே நீடிக்கிறார்கள். பழங்குடிமனத்தை உதறும்போதே நாம் ஜனநாயக யுகத்தில் நுழையமுடியும்.
பழங்குடிப்பண்பாட்டில் இருந்து இன்று நாம் பெற்றுக்கொள்ளவேண்டியவை எவை? இயற்கையையும் வாழ்க்கையின் ஒட்டுமொத்தத்தையும் எதிர்கொள்ளும் போக்கில் பழங்குடி மனம் உருவாக்கிக் கொண்டுள்ள குறியீடுகள் மட்டுமே நமக்கு முக்கியம். அக்குறியீடுகளில் பழங்குடிமனம் அடைந்த ஞானமும் விவேகமும் உள்ளது. அதை இழந்தால் அதன்பின் நாம் கவிதையையும் கலைகளையும் அசலான சிந்தனைகளையும் உருவாக்கிக் கொள்ளமுடியாது. இக்குறியீடுகள் மதமாக, ஆசாரங்களாக, அன்றாட அனுஷ்டானங்களாக நம்மிடம் உள்ளன
சாதி என்பது ஒரு பழங்குடிச்சமூக அமைப்பு என்று புரிந்துகொள்ளும் ஒருவர் அதில் எது ஏற்புடையது எது மறுப்புக்குரியது என்பதை அறிவுபூர்வமாகத் தீர்மானிக்கமுடியும். அது அளிக்கும் குறியீடுகளை அவர் சமகாலத்துக்கேற்ப மறுஅமைப்பு செய்துகொள்வார். அதை தன் பண்பாட்டு அடையாளமாகக் கொள்வார். சாதி அளிக்கும் குறுக்கல்போக்கை, பிரிவினைப்போக்கை முழுமையாக நிராகரிப்பார்
சாதியை இன்று ஒரு சுய அடையாளமாக ஒருவன் கொண்டானென்றால் அவன் பழங்குடி யுகத்தில் இருக்கிறான் என்றே பொருள். சாதி சார்ந்து இன்று எந்த சுய அடையாளத்துக்கும் இடமில்லை. இது முதலாளித்துவ ஜனநாயக யுகம்.தன் தகுதி, சாதனை சார்ந்தே சுய அடையாளம் உருவாக முடியும். நான் என்பதே அடையாளம். நான் வாழும் இடமோ நான் பிறந்த இனமோ அல்ல. அவ்வாறு வெளியே அடையாளம் தேடுவது ஏமாற்றத்தை மட்டுமே கொண்டுவரும்.
ஜெ