கன்னிநிலம் – நாவல் : 7

7

வெறும் பத்து நிமிடம்தான் அவகாசம். அதற்குள் தொலைவில் அவர்களின் அறிவிப்பு பியூகிள் முழங்குவதைக் கேட்டேன். நான் தப்பிவிட்டதை உணர்ந்துவிட்டார்கள். மெல்லிய ‘திப்திப்’களாக ரை·பிள்கள் வெடித்த ஒலியும் பறவைகள் எழுந்து கலைந்தொலித்த ஓசையும் கேட்டது. கலைந்த காட்டுபன்றியொன்று புதர்களினூடாக சீறி எங்களருகே ஓடியது. அவகாசமில்லை. வெறும் பத்துநிமிட இடைவெளி. காடு ஒரு திரை. ஆனால் அவர்களுக்கு காடு உள்ளங்கை போல தெரியும். நல்லவேளை அவர்களிடம் நாய்கள் இல்லை. பதுங்கித் தாக்கும் வசதிக்காக அவர்கள் நாய்களை வைத்துக் கொள்வதில்லை

ஒரு சாதக அம்சம் இருக்கிறது. அவர்கள் இந்தக்காட்டை முற்றிலும் அறியாத என்னைப்போன்ற ஒருவன் என்ன செய்யக்கூடும் என்று கற்பனைசெய்ய முடியாது. காட்டை அறிந்தவர்களின் கோணத்திலேயே அவர்களால் சிந்திக்க முடியும்.

மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. இலைகள் மீது வானத்தின் அருவி விழும் ஒலியை சுற்றிலும் கேட்டேன். அதுவும் நல்லதுதான். அசைவுகளையும் ஒலிகளையும் அது மறைத்துவிடும்.ஆனால் என் காயத்தை சீரழித்துவிழும் இந்த மழை. ரத்தம் இன்னும் நிற்கவில்லை. கொப்பளித்து நீரில் கரைந்து வழிந்தபடியே இருந்தது. நெருப்புத்துண்டு ஒன்றைசேர்த்துக் கட்டிவைத்தது போலிருந்தது. வேர்களில் கால்சிக்க தள்ளாடியபடி சென்றேன்.

சற்றுத்தள்ளி ஒரு மெல்லிய பேச்சுக்குரல். அவர்கள் அத்தனை அருகே வந்திருப்பார்கள் என்பது எனக்கு வியப்பளிக்கவில்லை. அதை எதிர்பார்த்திருந்தேன் போலும். சட்டென்று ஒரு குழிக்குள் சரிந்து சென்று புதருக்குள் எங்களை ஒளித்துக் கொண்டேன். அவள் இடையில் என் துப்பாக்கியை அழுத்தி வைத்தேன். அவள் என் முகத்தைப்பார்த்தாள். அச்சமில்லை. ஆனால் வேறு ஏதோ ஒன்று.என்ன அது?

பூட்ஸ¤கள் சேற்றை அழுத்தி அழுத்தி அதிர்ந்து தாண்டிச்சென்றன. அவர்களின் பயனெட் கிளைகளை வெட்டித்தள்ளுவதைக் கண்டேன். இரண்டுபேர். மண்நிற மங்கோலிய முகங்கள். அவர்களுக்குப்பின்னால் மேலும் இருவர். மௌனமாக எங்களைத்தாண்டிச்சென்றார்கள்.

திடீரென்று என் பார்வை அலையடிப்பதை உணர்ந்தேன். அதை வெல்ல என் மனம் முயன்றபோது எண்ணங்கள் வழுக்கிச்சென்றன. மணிப்பூர் காட்டில் ஏன் நெல்லையப்பர் கோயில் கோபுரம் நினைவில் எழவேண்டும். இரவும் நிலவும் காயுது என் நினைவில் தென்றல் வீசுது…. எண்ணங்களை என் தொகுப்பில் நிறுத்த முயன்றேன். முடியவில்லை. எண்ணங்கள் தான் எத்தனை இதமானவையாக பாதுகாப்பானவையாக இருக்கின்றன. பாப்புலர் தியேட்டர். ரஜினியின் ‘தில்லுமுல்லு ‘ ஓடுகிறது. புழுக்கம். வியர்வை நெடி. மழைபோல ஒலிப்பது ·பேன்களின் ஓசை. இல்லை இது மனிப்பூர் காடு. நான் செத்துக் கொண்டிருக்கிறேன். மரணம். மரணம்தான் இத்தனை இனிமையான விடுதலை. மரணத்துக்குப்பிந்தான் சுதந்திரமாக இருக்கமுடியும். பாதுகாப்பாக இருக்க முடியும். இருப்பா? மரணம் என்பதே இல்லாமலாதல்…. இல்லாமலாகி….முற்றிலும் இல்லாமலாகி….அதுகூட தவறு. இல்லை என்பது கூட ஒருவகை இருப்பு.லில்லை என்ற சொல்லாவது இருக்கிறது…. மரணம் முழுக்கருமை. முழு வெறுமை….எத்தனை பயங்கரம்…நினைக்காதே…மரணத்தைப்பற்றி நினைக்காதே….எத்தனை நினைப்புகள். மழை பெய்கிறது. அருணாச்சலா மெஸ். நெல்லையில் எப்போதுமே இட்லி சுவையானது. சாம்பார் புதினா சட்டினி. மரணம்…மரணம். மரணமும் இட்லியும்… .மரணம் என்றால் மூழ்கி மூழ்கி போவது. இது யார் அருகே இருப்பது. நாயர்? இல்லை நாயர் செத்துப்போய்விட்டான். இது வேறு. இது ஒரு பெண். இளமையின் வாசனை. வெம்மை. இவளை நான் நீண்டநாட்களாகவெ அறிவேன். நான் பிறக்கும்முன்பே அறிவேன். பிறந்தது இவள் கைகளில்தான். இவள். இது என் அம்மா. இளமையான அம்மா. இவளுக்காகத்தான் காத்திருந்தேன்.அம்மா….அம்மா ..வழுக்குகிறது பிடித்துக்கொள்… அம்மா அம்மா…..

பளீரென்று ஒளி என் கண்களின்மீது பொழிய நான் விழித்துக் கொண்டபோது காட்டின் இலைகள் ஒளிரும் தகடுகளாக காற்றிலாடின. ஒளித்துளிகளாக நீர் சொட்டியது. இனிய வெம்மை கொண்ட சிறு மண்பொந்தில் கிடந்தேன். உடம்பெங்கும் மெல்லியவலியும் கனக்கும் சோர்வும். தாகம். ” தண்ணீர்”என்றேன்.

என் மேல் அவள் முகம் தெரிந்தது. இளமையால் எப்போதும் புதியதாக இருந்த முகம். புன்னகை. நீலமணிக்கண்கள். இவள்தான். எத்தனை காலமாகத்தெரிந்தவள் எனக்கு!”நீயா? நீ எங்க போனே? ” இவள்தான் .என் இளமையில் சங்கரன்கோயிலுக்குபோய் கருவறையில் கண்ட சிற்றாடைகட்டிய கோமதியம்மன். என்னை நன்கறிந்த குறுஞ்சிரிப்புடன் மெல்லிய இடை ஒசித்து நின்றவள். தெரியுமா உனக்கு? எத்தனை நாள் உன்னை எண்ணி எண்ணி பகல்கனவுகளில் மூழ்கி அமர்ந்திருக்கிறேன் என்று? குறுக்குத்துறை தாமிரவருணிக்கரையில். சுப்ரமணிய சாமி கோயில் படிகளில். நீண்ட நெல்லையப்பர் பிரகாரங்களில். என் அறையின் தனிமையில் . மீண்டும் மீண்டும் விதவிதமாக நம் முதற்சந்திப்பு. நம் முதல் தொடுகை. முதல் முத்தம்….. நீ குளித்து ஈரம் உலராது சொட்டும் கூந்தலில் துளசிக்கதிர் சூடி மலையாள முண்டு உடுத்து நெற்றியில் சந்தனத் தொடுகுறி அணிந்து குளத்துப்புழை கோயில்முன் கைகூப்பி நிற்கிறாய். கொல்லம் காயலில் கூந்தல் விரித்துப்போட்டு பாடலொன்றை முனகியபடி மார்புகள் தளும்ப தோணியோட்டுகிறாய். தாவணியும் பாவாடையும் அணிந்து ரெட்டைச்சடை போட்டு குங்குமப்பொட்டு வைத்து தாமிரவருணிக்கரையின் சிறிய ஓட்டுவீட்டின் கொல்லைப்பக்கம் துவைகல் மீது அமர்ந்து நிலவைப்பார்க்கிறாய்….உன் முன்நெற்றிக்கூந்தல் அலையாடுகிறது…  உன் நினைப்பு எப்போதும் என் அகத்துக்குள் ஏற்றிவைக்கப்பட்ட சிற்றகல். அணையா ஒளி. அனைத்தையும் பொன்னாக்கும் மாயச்சுடர். நீ தான் அது. என் மீது நிலவெழுந்ததுபோல் தெரியும் உன் முகம். உன் புன்னகை. உன் நீலமணிக்கண்கள்…. ”எனக்கு ரொம்ப தாகம்”

மறுகணம் விழித்து துடித்தெழுந்தேன். விலாவிலும் வயிற்றிலும் வலித்தது.  கையால் அழுத்தியபடி சுற்றும் பார்த்தேன். யாருமில்லை. ”இது எந்த இடம்?”

“காடு”என்றாள் ”அவர்கள் நம்மை இன்னும் தேடுகிறார்கள். ஆனால் தாண்டிச்சென்றுவிட்டார்கள்” அவள் கமுகுப்பாளையால் செய்த நீர்க்குடுவையிலிருந்து நீரை நீட்டினாள். நான் அதை வாங்கி மடமடவென்று குடித்தேன்.

“நான்…”

“மயக்கமாகிவிட்டீர்கள். ராத்திரியெல்லாம் நினைவேயில்லை….”

நான் பெருமூச்சுடன் தளர்ந்து அமர்ந்தேன். என் சட்டை கழட்டப்பட்டிருந்தது. காயங்கள் இளம் வாழைப் பட்டையால் நன்றாக கட்டப்பட்டிருந்தன.

”நீயாக கட்டினாய்?”

“ஆமாம். இங்கே காட்டில் நல்ல பச்சிலைகள் உண்டு. எங்களுக்கு அதெல்லாம் நன்றாகவே தெரியும்” அவள் புன்னகைத்தாள்.

நான் என் துப்பாக்கியை பற்றி நினைத்தேன். அதை என் கை அறிந்ததுபோல இடையை தொட்டது

” உங்கள் துப்பாக்கி இதோ ”என்று காட்டினாள். கார்பைனும் பிஸ்டலும் அருகருகே இருந்தன.

நான் சொற்களிழந்து அவளையே நோக்கி அமர்ந்திருந்தேன். அவள் ஒரு பெரிய பப்பாளிப்பழத்தை எடுத்து பயனெட்டால் துண்டுபோட்டு ஒரு பெரிய துண்டை எனக்கு நீட்டினாள். அதை வாங்கிக் கொண்டேன் ” நீ ஏன் தப்பி ஓடவில்லை?”என்றேன்

“நீங்கள் சாகக்கூடும்” என்றாள் சுருக்கமாக.

“செத்தால் என்ன?எங்கள் ஆட்களில் யாருமே மிஞ்சவில்லை”

“நீங்கள் என்னைக் கொல்லவில்லை” என்றாள் பப்பாளிப்பழத்தையே பார்த்தபடி.

நான் அப்பதிலால் ஏமாற்றம் கொண்டேன்.அவள் முகத்தை உற்றுப்பார்த்தேன். பப்பாளிப்பழத்தை சீவிக் கொண்டு எங்கோ பார்த்தாள்.

”சரி ”என்று எழுந்தேன். ”இப்போது நான் போய்விட முடியும். நீ உன் ஆட்களிடம் திரும்பிப்போ”

”நீங்கள் அப்படிபோய்விட முடியாது. காட்டில் உங்களுக்கு யாராவது வழிகாட்டவேண்டும். இங்கே எங்கள் ஆட்கள் உங்களைத்தேடுகிறார்கள்…”  அவள் என்னைப்பார்த்தாள்.” உங்கள் காயமும் ஓரளவு ஆழமானது”’

“நீ குத்திய காயமா?”என்றேன். அந்தக் குரூரமான கேள்வி எனக்குப் பிடித்திருந்தது

அவள் பார்வையை விலக்கி ” இல்லை குண்டு பட்டது. நல்லவேளை குண்டு உள்ளே இல்லை ” என்றாள்.

“நன்றி. எதிரியானாலும் நீ அன்புடன் இருக்கிறாய்”

“இது ஒரு மனிதாபிமானம்தானே?”

“ஆமாம். மனிதாபிமானம்தான்” நான் மெல்ல என் சுயத்துக்கு திரும்பினேன்.”சரி ,நாம் கிளம்புவோம்”

” ஆமாம். கிளம்பவேண்டும். உங்களை நான் படகுத்துறைவரைக்கும் கொண்டுசென்று விடுகிறேன்.படகுவழியாக நீங்கள் எளிதாக உங்கள் பிராந்தியத்துக்குள் போய்விடலாம்”

“நன்றி” என்றேன் .”உன் மனிதாபிமானத்தைப்பற்றி நான் எங்கள் யூனிட்டில் சொல்வேன்”

அவள் சட்டென்று திரும்பி என்னைப்பார்த்தாள். கண்களில் ஒரு  கணம் சினத்தின் முள். நான் பார்வையை விலக்கி எழுந்துகொண்டேன்.

நான் தயாரானதும் இருவரும் கிளம்பினோம். மலைச்சரிவில் புதர்களை விலக்கி நடந்தோம். நான் அவள் பார்வையை என் மீது உணர்ந்தபடியே இருந்தேன். அவளை நான் பார்த்தபோது அவள் மிகுந்த எச்சரிக்கையுணர்வுடன் வேறெங்கோ பார்த்தாள். சிறிய குருவி போலிருந்தாள். கச்சிதமாக. முற்றிலும் புதிதாக. எக்கணமும் விருட் என்று சிறகடித்து எழுந்துவிடுவதுபோல.

ஒரு இடத்தில் நான் தடுமாறியபோது அவள் வந்து என்னைப்பிடித்தாள் .நான் அதை மெல்ல உதறினேன்

“ஸாரி” என்றாள்

“ஏன்?”

“நான் குத்திய காயம் அது”

“நல்ல காயம். ஆனால் ஆழமில்லை. நீ போதிய பயிற்சி எடுக்கவில்லை என்று நினைக்கிறேன்”

“நான் இதுவரை யாரையும் கொன்றதில்லை”என்றாள் .கண்களில் மெல்லிய கண்ணீர்.

“குத்தியிருக்கிறாயா?”

“ம்”

“யாரை?”

“கல்லூரியில் ஒருவன் என்….’சட்டென்று வெட்கி ”….அவன் ஒரு பர்மிய இளைஞன். லேசாக கையில் கீறினேன். பயந்து ஓடிப்போனான்”

“நீ மியான்மாரிலா படித்தாய்?”

“ஆமாம்.எங்கள் ஆட்களின் குழந்தைகள் அதிகமும் பர்மவில்தான் படிக்கிறார்கள்”

“என்ன படித்தாய்?”

“மெட்ரிக் எண்ட்ரி. நான் ஆக்ஸ்போர்டில்கூட நேராகப்போய் கல்லூரியில் சேரமுடியும்”

“ஏன் போக வேண்டியதுதானே?”

“நான் அம்மாகூட இருக்கலாம் என்று ஆசைப்பட்டேன்…” அவள் பெருமூச்சுவிட்டாள் ”நான் பிறந்தது முதல் அம்மாவைப் பிரிந்துதான் இருந்திருக்கிறேன். அம்மா ஏ.எல்.எ·ப் போராளி. ·போர்த் கமாண்ட் காப்டனாக இருந்தாள்”

”இப்போது?”

“இல்லை. சென்றவருடம் ஒரு தாக்குதலில் கொல்லப்பட்டாள்”

“ஐ யம் ஸாரி”என்றேன் அபத்தமாக

“அது சாதாரணம்தான். நாங்கள் எல்லாரும் எப்படியோ கொல்லப்படுகிறோம். அம்மாவைப்பார்க்கத்தான் நான் இங்கே வந்தேன். இதில் சேர்ந்தேன்.”

“நீ போராளியா?”

“இல்லை. நான் மியான்மாரில் நர்ஸிங்கும் படித்தேன். இங்கே ஒரு கமாண்டுக்கே நான்தான் ·பிஸிஷியன், சர்ஜன் எல்லாம். ”– சிரித்து வெட்கி ”எட்டு பிரசவம் பார்த்திருக்கிறேன்” என்றாள்

அக்கணம் அவள் மிக அழகாக இருந்தாள். நான் புன்னகை செய்தேன். அவள் கன்னம் சிவக்க வேறு பக்கம் திரும்பிக் கொண்டாள்.

நாங்கள் ஒரு பாறைமீதேறி அதன் இடுக்கில் அமர்ந்தோம். ஒரு சிறு முயல் பாய்ந்தோடியது.”முயல்!”என்று அவள் பாய்ந்து எழுந்தாள். அது ஓடிவிட்டது

”இங்கே எங்காவது அதன் தாய் இருக்கும்” என்றாள். ”முயல் நல்ல இறைச்சி”

“நான் இறைச்சி சாப்பிடுவதில்லை”

“முயலிறைச்சி நன்றாகவே இருக்கும்”

“நான் எந்த இறைச்சியும் சப்பிடுவதில்லை”

“ஏன்?”

“எங்கள் வழக்கம். ”

“மீன்?”

“மீன் முட்டை இறைச்சி எதுவும்.”

“ஏன்?”

“உயிர்களைக் கொன்று தின்பது பாவம்”

“மணிப்புரிகளைக் கொன்றால் மட்டும் பாவமில்லையா?”

“இது போர். என் நாட்டுக்காக இதைசெய்கிறேன்”

”இது உங்கள் நாடு இல்லை. இது மணிப்புரி மக்களின் நாடு”

”இது இந்தியா”

“அதை நீங்கள் சொல்லக்கூடாது.நாங்கள் சொல்லவேண்டும்”அவள் முகம் சீறிச்சினந்தது.

“ஸாரி….நான் ராணுவ ஆள். எனக்கு சொல்லப்பட்டதுதான் எனக்குத்தெரியும்”

“நீங்கள் பயிற்சியளிக்கப்பட்ட வேட்டை நாய்கள்”

“நீங்கள்? மாலை போட்டு அனுப்பபடும் பலியாடுகளா?”

“ஷட் அப்!”

“ஸாரி”

அவள் மெல்ல மூச்சிரைத்து தணிந்தாள். ”இட் இஸ் ஓக்கே” என்றாள்

“ஸாரி”

“லீவ் இட்”

மீண்டும் கசப்பான மௌனம். அவளே அதை கலைத்தாள். “நீங்கள் எந்த ஊர்?”

நான் பேசாமலிருந்தேன்

”ஏன் நாம் சண்டைபோடவேண்டும்? மாறி மாறி மன்னிப்பு கெட்கவேண்டும்? நாம் ஒருவருக்கொருவர் ஒன்றும் தவறு செய்யவில்லையே”

நான் தலையசைத்தேன்.

”இந்தியனாக இருப்பதில் நீங்களும் மணிபுரியாக இருப்பதில் நானும் வெட்கம் கொள்ள ஆரம்பித்திருக்கிறோமா என்ன?”

“நான் ஒன்றும் வெட்கம் கொள்ளவில்லை”என்றேன் கோபமாக. ”ஐ யம் பிரவுட் டு பி என் இண்டியன்”

அவள் முகம் கூம்பியது.

”நீதான் வெட்கப்படவேண்டும்….” நான் அவளைக் கூர்ந்து பார்த்து வீம்பாகச் சொன்னேன்.

“சரி” என்றள் அவள், அடம்பிடிக்கும் குழந்தையிடம் பேசுவதுபோல.

”எவனோ ஆயுதம் கொடுக்கிறான் என்று தூக்கிக்கொண்டு வந்து கொல்கிறீர்கள் .நீங்கள்—-”

”— சரி”என்றாள் அவள் கறாராக

நான் நிறுத்திக் கொண்டேன்

இறுக்கமான மௌனம் நிலவியது இருவருக்குள். அவள் அதைக் கலைக்கும் முகமாக ” நீங்கள் எந்த ஊர் என்றாள்”

“திருநெல்வேலி. இந்தியாவில் தெற்கே. பசுவின் மடி போல தொங்குகிற நுனியில். நாங்கள் தமிழ் பேசுகிறோம்.”

”தெரியும். மியான்மாரில் நிறைய தமிழர்கள் உண்டு” என்றாள் ”என்ன படித்திருக்கிறீர்கள்?”

”எம்.ஏ. ஆங்கில இலக்கியம்..”

“அப்படியென்றால் ஏன் ராணுவத்தில்சேரவேண்டும்?”

“இது எங்களூரில் மதிப்பான வேலை.”

“இப்படி காட்டில் அலைவதா? கொல்லப்படுவதா?”

என்னால் பதில் சொல்ல முடியவில்லை

“மாலை போட்டு அனுப்பபட்டவர் நீங்கள்தான்” என்றாள் சிரித்தபடி.

நானும் சட்டென்று சிரித்துவிட்டேன். ‘உண்மை” என்றேன்

“நெல்லையப்பன் என்றால் என்ன அர்த்தம்?”

“எங்கள் ஊரில் ஒரு மிகப்பெரிய கோயில் இருக்கிறது. அதில் உள்ள கடவுளின் பெயர் இது. சிவன்”

“மியான்மாரில் பெரிய கோயில்கள் நிறைய இருக்கிறது. பழைய பர்மாவில் மூன்று இந்து அரசுகள் இருந்தன…”

“நீ போயிருக்கிறாயா?”

“படிக்கும்போது கூட்டிப்போனார்கள்” அவள் எழுந்தாள் ”கிளம்பலாமா?” வலியுடன் ‘அம்மா” என்றாள்

”காயம் பட்டிருக்கிறதா?”என்றேன்

“சிறிய காயம்தான். ”

“எப்படி?”

“நீங்கள் அடித்தது”

“நானா?அடித்தேனா? எப்போது?”

அவள் என்னைப்பார்த்ததும் சட்டென்று நினைவுக்கு வந்தது

“ஸாரி…நான் ஒரு வெறியில்….”

“பரவாயில்லை. எனக்கு அது பிடித்திருந்தது”

“ஏன்?”என்றேன் அதிர்ச்சியுடன்

“உங்கள் ஆட்கள் அத்தனைபேரும் கொல்லப்பட்டார்கள்….” மெல்லியகுரலில் தலைதாழ்த்திச் சொன்னாள்.

“அதற்கென்ன…இது போர்”

“என்னால்தானே?”

“”போரில் எல்லாம் நடக்கத்தானே செய்யும் ?”

“என்னால் அந்த மனிதரை மறக்க முடியவில்லை. கருப்பாக இருப்பாரே…”

“தியாகராஜன். உன்னைக் கொல்ல அனுப்பினேனே?”

“ஆமாம். அவர் என்னை கொல்ல விரும்பவில்லை. நேரம் கடத்தினார்…”

நான் ”பாவம். நல்ல நண்பன்”என்றேன்.

”அவர் ஒன்று சொன்னார்”

“என்ன?”

அவள் சட்டென்று வெட்கி தலை குனிந்து ”இல்லை”என்றாள்

“என்ன?”

“ஒன்றுமில்லை” மேலும் வெட்கினாள்

“என்ன?”என்றேன் கோபத்துடன் ‘சொல்லு என்ன?”

”கோபப்பட்டால் எப்படிச் சொல்வது?”

“சரி கோபப்படவில்லை .சொல்லு”

“அவர் என்னைக் கொல்வதை நீங்கள் விரும்பவில்லை என்று சொன்னார். ஆனால் கொல்ல உத்தரவிடவேண்டும் அது உங்கள் கடமை என்பதற்காகத்தான் அவரிடம் கொல்லச் சொன்னீர்கள் என்றார் ” அவள் புன்னகைத்தபடி ” இதோ ஒரு நிமிஷத்தில் பாய்ந்து வந்து கொல்லவேண்டாம் என்று சொல்லி எதாவது காரணம் சொல்வார் பார் என்று சிரித்தார்”

நான் ஒன்றும் சொல்லவில்லை

”அவர் சொன்னார், நீங்கள் என்னை …”

”உன்னை?” என் மூச்சு அடைத்தது

”உங்களுக்கு என்னை பிடித்திருப்பதாக. ”

”ஷிட்”என்றேன் கோபத்துடன் ”உளறியிருக்கிறான்”

”நீங்கள் தனிமையில் நின்று என் பெயரை திரும்பத்திரும்பச் சொல்லியிருக்கிறீர்கள். அவர்கள் எல்லாரும் கூடி நின்று பார்த்து சிரித்தார்களாம்”

“டாமிட்”

“கையில் சிகரெட்டால் சுட்டீர்களாம்”

நான் துப்பாக்கியை கீழே வீசிவிட்டு அப்படியே அமர்ந்துவிட்டேன்

“ஐயம் ஸாரி” என்றாள் புன்னகையுடன்.

“ஷட் அப். என்ன நினைத்தாய் என்னைப் பற்றி ? பெண்ணைப்பார்த்தால் பல்லிளித்துக்கொண்டு வேலையை மறக்கக் கூடியவன் என்றா? மேலேயிருந்து ஆணை வராவிட்டால் இந்நேரம் செத்து மட்க ஆரம்பித்திருப்பாய்….”நான் ஆவேசத்துடன் துப்பாக்கியை எடுத்தேன் ”இதோ இந்தக்கணம் உன்னை சுட்டு வீழ்த்த என்னால் முடியும். கண்னை இமைக்காமல் சுட்டுத்தள்ளுவேன்.தெரியுமா?”

“சுடுங்கள்”

நான் அவளையே பார்த்தேன். துப்பாக்கியை பிடித்த என் கரம் நடுங்கியது.

மெல்ல சமாதானம் அடைந்தேன்

என்னை திரட்டிக் கோண்டேன். ” நான் மூன்று அக்காக்களுடன் பிறந்தவன். நீ ஒரு பெண். உன்னைப்பார்த்ததும் பரிதாபம் ஏற்பட்டது. அவ்வளவுதான். இரக்கம். என்னால் உன்னை கொல்ல முடியவில்லை அவ்வளவுதான். புரிகிறதா? ” எழுந்து ”வா போகலாம்”என்றேன்

இருவரும் சில அடி நடந்தோம் .” என் பார்வையில் இந்த ஊர் பெண்கள் எல்லாம் பெண்களாகவே தெரியவில்லை. எங்கள் ஊரில் பெண்களுக்குக் கண்கள் அழகாக இருக்கும். கரிய வண்டுபோல அகன்று மினுமினுப்பாக இருக்கும். மூக்கு நன்றாக கூர்மையாக இருக்கும். எனக்கு எங்கள் ஊர் பெண்களைப்பார்த்தால்தான் அழகிகளாகத் தெரிகிறார்கள்……உன்னைப்பார்த்தால் பர்மிய மரப்பொம்மை போல இருக்கிறாய்…”

அவள் அதிர்ந்து என்னைப்பார்த்தாள். தலை குனிந்தாள்.

இருவரும் வெகுநேரம் மௌனமாக நடந்தோம்.

குன்றின் சரிவேறி கீழே ஆற்றைப்பார்த்தோம். நீர் நுரைத்தோடியது. கரையில் புதர்கள் அடர்ந்திருந்தன. புதர்நடுவே ஒரு மூங்கில்தோப்பு தெரிந்தது. மறுகணமே அவன் பயனெட்டின் ஒளியும் கண்ணில்பட்டது. பிறகு இன்னொருவன். இன்னும் ஒருவன். கிட்டத்தட்ட பத்துபேர் அங்கே காவலிருந்தார்கள். ஒரு எம்.கெ 19-3 இலகு இயந்திரத் துப்பாக்கியையும் கண்டேன். 

”அந்த வழியாக நீங்கள் படகுகளில் இறங்குவதைக் கண்டிருக்கிறோம். படகுகள் திரும்பிச்செல்லாவிட்டால் இங்கே எங்காவதுதான் இருக்கும். ஆகவே கண்டிப்பாக நீங்கள் அங்கே வருவீர்கள் என்று எதிர்பார்க்கிறார்கள்” என்றாள் அவள்.

நான் சோர்வும் ”ம்”என்றேன்

”குன்றுக்கு அப்பால் சென்று இறங்கினால் ஆற்றுக்கு கீழே போகலாம். ஒரு நாள் ஆகும்”

”படகு?”

“ஒரு மரப்படகு அங்கே புதைக்கப்பட்டிருக்கிறது.எனக்கு இடம் தெரியும். ”

”சரி”என்றேன் எனக்கு வேறு வழிதெரியவில்லை. இருவரும் நடந்தோம். நான் அவளிடம் பேச முனையவில்லை. ஏதோ அவமானத்துக்கு ஆளானதுபோல மனம் புகைந்தது. 

 [மேலும்]

முந்தைய கட்டுரைபாலகுமாரன்,ஒருகடிதம்
அடுத்த கட்டுரைகாலச்சுவடு நூல்வெளியீட்டுவிழா