சராசரிகளின் சாரம்

அன்புள்ள ஜெ

உங்கள் கட்டுரை [ விற்பனையும் இலக்கியமும்] வாசித்தேன். நானே சிலநாட்களாக அமெரிக்க எழுத்திலும் சினிமாவிலும் உள்ள ‘டெம்ப்ளேட்’ தன்மை பற்றி யோசித்துக்கொண்டிருந்தேன். இவை யாரால் இப்படித் திட்டமிடப்படுகின்றன என்று எனக்குப்புரியவேயில்லை. யாரோ எங்கோ அமர்ந்து இவற்றை உருவாக்குகிறார்கள் என்றும் தோன்றவில்லை. அப்படியென்றால் சராசரி மனிதமனம் மாற்றங்கள் இல்லாமல் இருக்கிறதா என்ற கேள்விக்கும் பதில் இல்லை

நான் சிலவருடங்கள் முன்பு வரைக்கும்கூட தொடர்ந்து ஹாலிவுட் சினிமாக்கள் பார்த்துக்கொண்டிருந்தேன். ஆனால் இப்போது சிலசமயம் சீரியசான ஆக்‌ஷன் படங்களைப்பார்க்கும்போதுகூட சிரிப்பு பீரிட்டு வருகிறது. திரில்லை உருவாக்க அவர்கள் செய்யும் வழிகள் எல்லாருக்கும் தெரிந்தவை. ஹீரோக்களுடைய பாய்ச்சல்களும் தோரணைகளும் ஒரேபோல இருக்கின்றன. இவற்றைத்தான் உலகம் முழுக்கப்பார்க்கிறார்கள் என்பது நினைக்க நினைக்கத் திகைப்பாகவே இருக்கிறது

பிரபாகர்

அன்புள்ள பிரபாகர்,

சென்ற ஒருமாதத்தில் நான் மும்பை சென்னை எர்ணாகுளத்தில் உள்ள மூன்று மால்களுக்குச் செல்லவேண்டியிருந்தது. அங்கே நடந்துகொண்டிருந்த மக்களின் தோல்நிறம் தவிர வேறெந்தவகையிலும் அவை சிங்கப்பூர் அல்லது ஆஸ்திரேலியா அல்லது அமெரிக்காவின் மால்களில் இருந்து வேறுபடவில்லை. அதே கடைகள். அதே பிராண்டுகள். அச்சு அசலாக அதே போன்ற கட்டிட அமைப்பு, வெளிச்சம்.

நம் நாட்டில் இன்று உருவாகிவரும் தேசியநாற்கரச்சாலைகள் அனைத்தும் உலகமெங்கும் இருக்கும் சாலைகளைப்போலவே உள்ளன. சாலை அமைப்பு, அறிவிப்புகள், குறுக்குத் தடுப்புகள் எல்லாமே. சாலையோரக் கடைகளில் கூட அதே கெ.எஃப்.சி வகையறாக்கள். அதே வகையான கார்கள்.

முதல்முறையாக நான் கனடா சென்றபோது என் நண்பர் எனக்கு சென்னையில் காக்கி நிறமான கால்சட்டைகளை வாங்கிக்கொடுத்து உலகமெங்கும் அதுதான் ஃபேஷன் என்றார். மும்பை,மிலன், டொரொண்டோ எங்கும் அனைவரும் அதே கால்சட்டைகளை அணிந்திருப்பதைக் கண்டேன்.

இன்று நாம் அணியும் உடை, உண்ணும் உணவு, பேசும் பேச்சு, நம் உடல் அசைவுகள் எல்லாமே உலகம் முழுக்க ஒன்றுதான். அப்படி உலகம் முழுக்க இருக்கும் சராசரியைப்போல நம்மை மாற்றிக்கொள்வதைத்தான் நாம் ‘பேஷன்’ என்கிறோம் . அப்படி மாற்றிக்கொண்டவரைத்தான் நாம் நாகரீகமானவர் என்கிறோம்.

நான் சினிமாவுக்காக இப்போது மாதத்தில் இருபதுநாள் ஏதாவது நட்சத்திர ஓட்டலில்தான் தங்கியிருக்கிறேன். அங்கே இப்போது எனக்கு பெரும் மனமயக்கம், நான் திரும்பத்திரும்ப ஒரே மனிதர்களைச் சந்திக்கிறேனா என்று. அனைவரும் ஒரேபோல ஒப்பனைசெய்துகொண்டு பேசி , சிரித்து, அணைத்துப் பழகுகிறார்கள். ஆனால் சில நாட்களில் அதுபழகி ஒருவகை வசதியாகக் கூட இருக்கிறது. எதிர்கொள்ளமுடியாத ஒருவர் எதிரில் வரும் வாய்ப்பே இல்லை.

ஏன்? இது உருவாவதும் உருவாக்கப்படுவதும் ஆகும். செல்பேசி ஏன் உருண்டையாக இல்லை? நீள்சதுரமே அதற்கு நடைமுறைப்புழக்கத்துக்கு ஏற்ற வடிவம். அந்த எல்லைக்குள்தான் அதற்கான வடிவ வேறுபாடுகளை உருவாக்க முடியும். அதேபோன்றதுதான் மால்களும் சாலைகளும் அமைந்திருக்கும் விதம். ஆனால் இந்த விதம் தொடர் பிரச்சாரம் மூலம் உலகமெங்கும் பரப்பப் படுகிறது.அவ்வாறு அது அனைவருக்கும் உரியதாக ஆகிறது.

வேறுபாடுகள், முரண்பாடுகள் கூட இப்படி உலகமெங்கும் ஒன்றுதான். ‘சராசரியிடமிருந்து தப்பி ஓடுங்கள்’ என்ற அறிவிப்புடன் கூடிய மலைவாச இடங்கள், சாகசப்பயண அமைப்புகள் கூட உலகமெங்கும் ஒன்றுதான். அங்கே நாம் செய்யவேண்டியவை ஏற்கனவே வகுக்கப்பட்டுள்ளன. அவற்றை நாம் செய்யாவிட்டால் ‘நாகரீகமற்றவர்’ ஆகிவிடுவோம்.

ஹாலிவுட் சினிமாக்களின் வடிவம் மெல்லமெல்ல உருவாகி வந்திருக்கிறது. பொதுவாக கதாநாயகன் சுட்டுச்சுட்டுத் தள்ளுவான். அவனுக்கு குண்டு படாது. அவன் அதிகம் பேசமாட்டான். உறுதியானவனாக இருப்பான். மிகப்பிரபலமான ஓர் அமெரிக்க ‘டெம்ப்ளேட்’ கதாபாத்திரம் இது. அதன் பல்வேறு மாற்று வடிவங்கள் உலகம் முழுக்க உள்ளன. எம்ஜிஆர் முதல் சூரியா வரை நம்மிடமும் உள்ளன.

இவை ஒரு சாராரின் உருவாக்கங்கள் அல்ல. இவை சென்ற இரு நூற்றாண்டின் முக்கியமான பண்பாட்டு உருவகங்கள். கோடானுகோடி மக்களின் ரகசியக்கனவுகளைக் கடைந்து கடைந்து இவை திரட்டப்பட்டுள்ளன. இது அடையாளம் காணப்பட்டு பிரித்தெடுக்கப்பட்டு வரையறைசெய்யப்பட ஐம்பதாண்டுக்காலம் பல்லாயிரம்பேர் பங்களிப்பாற்றியிருக்கிறார்கள்.

நான் சமீபகாலமாக ஹாலிவு திரைக்கதை அமைப்பைக் கூர்ந்து கற்று வருகிறேன். அதன் விதிகள், கட்டமைப்புகள் எல்லாமே ஒட்டுமொத்த உலகச் சராசரியை நோக்கி மெல்லமெல்ல நகர்த்திக்கொண்டுசெல்லப்பட்டவை என்ற எண்ணமே ஏற்படுகிறது. அது கலை அல்ல. கலையின் வழி அது அல்ல. ஆனால் வணிகம் என்று பார்த்தால் அது மிகமிக வெற்றிகரமான ஒரு வழிமுறை. ஒரு சாதனை. மனிதனின் உலகளாவிய பகற்கனவு புறவயமான வடிவமாகத் திரட்டப்பட்டு வரையறைசெய்யப்பட்டிருக்கிறது அதில்!

ஜெ

முந்தைய கட்டுரைஇலக்கிய விற்பனை-கடிதம்
அடுத்த கட்டுரைஇந்தி இரு கடிதங்கள்