இலக்கிய விற்பனை-கடிதம்

அன்புள்ள ஜெ,

ஓங்கி சமட்டியால் அடித்தது போல் இருந்தது உங்களது பதில்.
நான்காம் வகுப்பில் காமிக்ஸ் படித்து ஆரம்பித்த இந்த வாசிக்கும் பழக்கம் இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னரும் விடாமல் என்னுடன் வளர்ந்து வந்திருக்கிறது. எப்பொழுதும் எதையாவது படித்து கொண்டே இருப்பேன். ஒரு கட்டத்தில் தினமும் ஒரு மணி நேரமாவது எதையாவது படிக்காவிட்டால் எதையோ பறி கொடுத்தது போல் ஒரு உணர்வு அன்று என்னுடன் தங்கிவிடும் என்ற நிலைக்குப் போய்விட்டது.

பள்ளியிலும், கல்லூரியிலும் கிடைக்கும் குறைவான பணத்தில் என்னால் வாங்க முடிந்தது மலிவான விலையில், இரண்டாம் கை மாறி விற்கப்படும் ஆங்கில நாவல்களே. தமிழில் அன்று என் பட்ஜட்டிற்குள் அடங்கியது ராஜேஷ்குமாரும், இந்திரா சௌந்தர்ராஜன் அவர்களும் தான் (அந்த நேரத்தில் உங்களுடையதோ, சு.ராவின் புதினங்களோ படித்திருந்தால் கூட என்னால் அதனை புரிந்துகொண்டு முழுமையாக உள்வாங்கியிருக்க முடியுமா என்று தெரியவில்லை). இப்போது வேலையில் சேர்ந்து கை நிறைய சம்பாதிக்கும்போதுதான் எவ்வளவு விலையென்றாலும் சலிக்காமல் கொடுத்து வாங்குகிறேன்.

நீங்கள் உங்கள் கடிதத்தில் குறிப்பிட்டிருந்த Erich Segal, Frederick Forsyth, மேலும் நிறைய commercial எழுத்தாளர்கள் Michael Crichton, Jeffrey Archer, Agatha Christie, John Grisham, Stephen King என்று பலரையும் படித்துள்ளேன். இப்படிப் படித்து வந்த எனக்கு, இப்புத்தகங்களின் மகத்தான விற்பனையும், அதனைத்தொடரும் அற்புதமான பின்னோட்டங்களும் என்னுள், என் கடிதத்தின் கருத்துகளை ஊன்றிவிட்டது இயல்பு தானே?
வாசகனுக்காக மட்டுமே இப்படைப்புகள் எழுதப்படுகின்றன.
ஆம்
வாசகனுக்காக என்றில்லை, வாசகன் எதை ரசிப்பான் என்று அறிந்துகொண்டு அதற்கேற்ப இந்நூல்கள் எழுதப்படுகின்றன. எத்தனை உண்மை!!! நன்றாக யோசித்தால் Commercial நூல்களில், மிகுதியான பகுதி , ஒரேவித Template’ஐப் பின்பற்றுவது ஓரளவு யூகிக்க முடிகிறது. வாசகன் எதை ரசிப்பான் என்று தெரிந்துகொண்டு எழுதும்போது அந்த எழுத்தின் உண்மைத் தன்மை போய்விடுகிறது அல்லவா? அது பொய்யாக, ஒரு சாரரைக் கவர்வதற்காக அவர்களுக்குப் பிடித்தாற் போல் உருவாக்கபட்டது அல்லவா? பொய்யானதொரு எழுத்தில் விறுவிறுப்புத் தன்மையும், நான் கூறிய உலகத்தன்மையும் இருந்தாலும் கூட அவை அழுத்தமாக மனதில் பதியாது அல்லவா??

இப்போது புரிகிறது எனக்கு. கற்பனையை மிஞ்சும், தொழில்நுட்பத்தில் அசத்தும், விறுவிறுப்பு தன்மையில் அசத்தும் எத்தனையோ நாவல்களை நான் படித்தும், இது எதுவுமே இல்லாத படைப்பாகத் திகழும் காடு ஒருவித தாக்கத்தை, ஒருவித முழுமையானதொரு திருப்தியை எனக்கு தந்தது ஏன் என்று. காடு தந்தது போல் ஒரு வாசிப்பனுபவத்தை வேறு எந்த புத்தகமும் எனக்கு தந்ததில்லை. ஒரே Template’ஐப் படித்துப் பழகியிருந்த எனக்கு முற்றிலும் மாறுபட்ட உண்மையான் ஒரு ஆக்கம் ஆழமாகப் பதிந்ததில் வியப்பில்லையே. இதற்கு முன்னர் சு.ராவின் “ஒரு புளிய மரத்தின் கதை” படித்த போது அதன் வித்தியாசமான நடை என்னைக் கவர்ந்தது. ஆனால் காடு அளவிற்கு ஈர்க்கவில்லை.
எழுத்து வாசிப்பதற்குத்தான்- புதினங்கள் வாசகனுக்காகத்தான்- ஆனால் அவை வாசகன் வாசிக்க எழுதப்பட வேண்டுமே ஒழிய, அவன் வாசித்தலுக்கு ஏற்ப, அவன் விருப்பத்திற்கு ஏற்ப எழுதப்படக்கூடாது. இது தானே நீங்கள் கூற விழையும் கருத்து? சத்தியமான வார்த்தைகள். நன்றாக எடுத்துக் கூறி இருக்கிறீர்கள்.
என் ஒருவனுக்குப் புரிய வைக்க தங்களின் நேரத்தை செலவழித்து இத்தனை பெரியதொரு மின்னஞ்சலை எழுதி பதில் தருவீர்கள் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. குழந்தைத் தனமான, பொருளற்ற, ஒரு juvenile கேள்விக்கு இத்தனை தூரம் மதிப்பளித்து பதில் கூறியது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

தமிழில் வாசிக்கும் பழக்கம் மிகக் குறைவே. ஒத்துகொள்கிறேன். நான் சமீபத்தில்தான் வேலையில் சேர்ந்தேன். சென்ற ஆண்டு புதுச்சேரி புத்தகக் கண்காட்சியில் 2000ரூபாவிற்கு நான் புத்தகம் வாங்கிய போது வீட்டிலும் சரி, நண்பர்களும் சரி காசைத் தண்ணியாக நான் செலவு செய்வதாக எண்ணினார்கள். ஒரு கப் காபிக்கு 120ரூபாய் தருவது இவர்களுக்கு செலவாகத் தெரியவில்லை. ஆனால் புத்தகம் வாங்கி நான் சேர்த்து வைத்ததுதான் செலவாகத் தெரிகிறது. என்னை நொந்து கொண்டேன். புத்தகம் வாங்குவதையே ஏதோ ஒரு சகிக்காத செயல் போலப் பார்க்கும் கண்ணோட்டம் இவ்வளவு அதிகமாக இருக்கும் போது எங்கிருந்து வாசிக்கும் பழக்கம் மட்டும் உயரப்போகிறது?

பி.கு–>> நிஜமாகவே “காடு” இரண்டாயிரம் பிரதிகள்தான் விற்றதா? கடவுளே……

கிருஷ்ணகுமார்

அன்புள்ள கிருஷ்ணகுமார்

காடு மூன்றுபதிப்புகளிலாக மூவாயிரம் பிரதிகள் விற்றிருக்கும். ஆனால் நூலகங்கள் போக வாசகர் வாங்கியது இரண்டாயிரத்துக்கும் குறைவான பிரதிகளே. ஆனால் தமிழில் இது மிக அதிகம்.

மேலை இலக்கியங்களில் உள்ள ‘டெம்ப்ளேட்’ தன்மை அதன் தொகுப்பாளர்களால் கச்சிதமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. வேகப்புனைவுநாவல்களில் எவ்வளவு பக்கங்களுக்கு ஒருமுறை கொலை வரவேண்டும் என்றுகூட அவர்கள் கணக்கு வைத்திருக்கிறார்கள். சொற்றொடர் அமைப்பு, நீளம் பற்றிய விதிகள் உள்ளன. பலசமயம் தொகுப்பாளர்கள அமர்ந்து நூலைத் திரும்ப எழுதுவதும் உண்டு

அது வணிகக்கலையின் இயல்பு. தமிழ் சினிமா கூட இப்படிக் கூட்டமாக அமர்ந்து பேசி விவாதித்துத்தான் எடுக்கப்படுகிறது.

ஜெ