பெண்கள்-கடிதங்கள்

அன்பான ஜெயமோகன்

மிக மிகச் சிக்கலான பிரச்சனை. வழக்கம் போல உங்களிடம் இருந்து தெளிவான விளக்கம். இந்தக் கட்டுரைக்கு நன்றி.

ரவிச்சந்திரிகா

அன்புள்ள ஜெ ,

தங்களின் இந்த பதில் அபாரம் . படித்த பெற்றோர்கள் கூடத் தன் பெண் குழந்தைகளுடன் அறிவு சார்ந்த விவாதங்களில் ஈடுபடுவது மிகவும் குறைவு . தாங்கள் படித்த நூல்களைப் பரிந்துரைப்பது இல்லை .

இது ஒரு புறம் என்றால் , பெண்களிலும் பலர் இது எல்லாம் நமக்கு எதுக்கு என்றே இருக்கார்கள் .

சற்று விதி விலக்கான பெண்கள் கூட தாம் மிகவும் தனித்து இருக்கோமோ என்று குற்ற உணர்வுடன் உள்ளார்கள் .

நான் உங்களிடம் ஒரு முறை விதிசமைப்பவர்கள் கட்டுரை நீங்கள் எழுதிய தருணத்தில் , இந்த தனிமையைப் பற்றிக் கேட்டேன் , அப்போது தாங்கள் அளித்த பதில் என்னை மிகவும் பாதித்தது . அதன் பிறகு நான் இந்தத் தனிமை பற்றி யோசிப்பதோ குழம்புவதோ இல்லை .

இந்த பதில் பல பெண்களுக்கு உதவும் .
After all we are not just what we are biologically .

நன்றி
அசோக் சாம்ராட்

திரு.ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம்.

தங்களின் “பெண்களிடம் சொல்லவேண்டியவை” என்ற பதிவினைப் படித்தேன். என்னுடைய சில கருத்துகளை இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

பெண்களின் மனதிலும் எங்கோ, ஆண் தன்னைவிட மேலானவன் என்ற எண்ணம் இருக்கிறது. அதனாலேயே தாங்களும் ஆண்கள் செய்வதைப் போலவே செய்கிறார்கள். தங்களையும் ஆண்களைப் போன்றவர்களாகக் காட்டிக்கொள்ள முயல்கிறார்கள். ஆணுக்குப் பெண் சமம் என்ற கருத்து அவர்களால் இந்த அளவில்தான் புரிந்துகொள்ளப்பட்டு எடுத்துச் செல்லப்படுகிறது. பெண்மைத் தன்மை என்பது அவர்களிடம் இல்லாமலேயே போய்விட்டது. ஒவ்வொரு ஆணுக்குள்ளும் ஒரு பெண்தன்மை உண்டு; ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் ஒரு ஆண்தன்மை உண்டு என்று சொல்லப்படுவதுண்டு. அவர்கள் தங்களுக்குள் இருக்கும் அந்த ஆண்தன்மையை வளர்த்தெடுத்து அதைத் தங்களுக்கு ஒரு கேடயமாக ஆக்கிக்கொள்ள முயல்கிறார்கள். இயற்கையிலேயே ஆண், பெண் என்ற வேறுபாடு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அந்த வேறுபாடு எதனடிப்படையில் என்று சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். இயற்கையாகவே சில பொறுப்புகள் பெண்ணுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. அதுதான் தலைமுறை உருவாக்கம். இது ஏதோ இனப்பெருக்கம் செய்யப் படைக்கப்பட்டவள் என்ற கண்ணோட்டத்தில் பார்க்கப்படுதல் கூடாது. வேறுபாடுகள் எப்பொழுது பெரிதுபடுத்தப்படுவதில்லையோ அப்பொழுதுதான் உண்மையான மாற்றங்கள் நிகழும். வேறுபாடு என்பது வெறும் பாலினஉறவு சார்ந்ததாக இருக்கக் கூடாது. பெண்களுக்கான வெற்றி என்பது சுதந்திரம் அடைவது என்ற நிலையோடு நிற்காமல் ஒட்டுமொத்த சமூக மேம்பாட்டிற்கான விளைவாக இருக்க வேண்டும். ஆண், பெண் என்ற பெயரளவிலான வேறுபாடாக இல்லாமல் அனைவரும் மனிதர்கள் என்று மட்டுமே பார்க்கப்படவேண்டும்.

விஜயரெங்கன்

அன்புள்ள விஜயரெங்கன்

நான் சொல்வதற்கும் நீங்கள் சொல்லியிருப்பதற்கும் எந்த சம்பந்தமும் இருப்பதாகத் தெரியவில்லை. பெண் பெண்ணாக இருக்கவேண்டும், ஆண் ஆணாக இருக்கவேண்டும் என்பதுபோன்ற வரிகளை எல்லாம் ஒருவகை ‘நெடுஞ்சாலைச்சிந்தனைகள்’ என்று சொல்லலாம். அவற்றைத்தான் எல்லாரும் எங்கும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். இத்தகைய பொதுப்படையான வரிகளை சிந்தனைகள் பற்றிய விவாதங்களில் சொல்வதில் அர்த்தமே இல்லை.

ஜெ

முந்தைய கட்டுரைகி.ரா
அடுத்த கட்டுரைஇணையத்தின் வெறுப்பரசியல்