ஆபிரகாம் பண்டிதரும் பிராமணர்களும்

திரு ஜெயமோகன்

இந்தப் பதிவைக் கவனித்தேன். பன்னிரண்டு எண்ணிக்கையில் தான் சுவரங்கள் உள்ளன என்பது ஆபிரஹாம் பண்டிதருக்கு அன்று அவரோடு வாழ்ந்த வித்துவான்கள் சொல்லவில்லை என நினைக்கிறேன்.

ஒரு சிறு உதாரணம் சரஸ்வதி வீணை. இது ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகளாக உள்ளது. பண்டிதரின் காலத்துக்கு வெகு காலம் முற்பட்டது. மேலை நாட்டவரின் அனைத்து தந்தி/ பியானோ வாத்தியங்களுக்கும் முற்பட்டது. ஆனால் சம்பந்தர் காலத்துக்குப் பிற்பட்டதாக இருக்கலாம். அவரது வாழ்க்கையில் திருநீலகண்ட யாழ்ப்பாணர் தன்னுடைய யாழில் சம்பந்தர் பாடிய பாடலை வாசிக்க முடியவில்லை என ஏங்குவதாக ஒரு நிகழ்ச்சி உள்ளது.

சரசுவதி வீணையில் 24 மெட்டுக்கள் உள்ளன. (இரண்டு முழு ஸ்தாயிகள்). ஒரு ஷட்ஜம், இரண்டு ரிஷபம், இரண்டு காந்தாரம், இரண்டு மத்யமம்,ஒரு பஞ்சமம் இரண்டு தைவதம், இரண்டு நிஷாதம் ஆக பன்னிரண்டு ஸ்வரங்கள் ஒரு ஸ்தாயிக்குள் வருகிறது. இதை ஆபிரஹாம் பண்டிதர் எங்கே புதிதாகக் கண்டு பிடித்தார் ? ஏதோ மகா வைத்தியநாதய்யர் சொல்லி விட்டார்  என்பதற்காக ஒரு எண்ணிக்கையைத்தான் அன்றைய வித்துவான்கள் அனைவரும் சொல்லி இருக்கின்றனர் என்ற கற்பனையைத் தவிர அதில் நான் ஒன்றும் காணவில்லை.

72 மேள கர்த்தாக்களும் அவைகளின் ஜன்ய ராகங்களும் இந்தப் பன்னிரண்டு சுரங்களுக்குள் ( ஸ்வர ஸ்தானங்கள் மாறினாலும் ) தானே வரும் ? உதாரணத்துக்கு நாட்டையில் அந்தர காந்தாரம் தானே ரிஷபத்துக்கு ஸ்வர ஸ்தானம் ? இவை எல்லாம் நம் ‘பண்டிதருக்கு’ முன்னாலேயே அரங்கேறி விட்டவை.

நான் அவரது நூலை ஒரு கால் பகுதி படித்தேன். சங்கீதத்தை விட தேவையற்றதை உள்ளே போட்டு பக்கங்களை வீணடித்துள்ளார். அவரது ஆராய்ச்சி அவரே புகழும் “மகா கனம் பொருந்திய ஆங்கிலேய சர்க்காரின் ‘ ஆராய்ச்சிதான் . இன்று பலரும் எள்ளி நகையாடும் முடிவுகளின் துணை கொண்டே அவர் அங்கே பக்கங்களை நிரப்புகிறார்.

பொதுவாக நான் இது போன்ற படைப்புகளை ஒதுக்கித்தான் செல்கிறேன். ஒரு உந்துதலில் இதில் சங்கீதம் பற்றி அறிய உதவும் என்று தான் ஆரம்பித்தேன். சங்கீதத்தை அதில் தேடித்தான் பிடிக்க வேண்டும். அவர் தனி நபர்/ குழு தாக்குதலில் இறங்கவில்லை என முதலிலேயே முழங்கினாலும், முழுக்க ஆரிய திராவிடப் பிரச்சினை தான். இன்னொன்று ஓம் காரம் பற்றிய விளக்கம். சிவாகமத்தில் விளக்கப் பட்டதால் அது தமிழ் மரபாம். எந்த பிரஹஸ்பதி அவருக்கு சொல்லித் தந்தாரோ ? ஒரு வேளை நம்முடைய தின்னவேலி சித்தாந்த மடமோ ? சலித்துப் போய் விட்டு விட்டேன்.

என்அளவில் எளிய கீர்த்தனங்களை சொல்லித்தரும் என் குருவின் காலடியில் அமர்ந்து பாடம் கேட்பேன். ஆபிரஹாம் போன்ற பண்டிதர்கள் நிஜத்தில் ரோஜாவைக் கசக்கி அதன் இயல்பை அறிய முயலும் இயல்பினர். நான் என்றும் தவிர்க்க விரும்பும் குழுவினருள் ஒருவர்.

இன்னொரு விஷயம் இந்தத் தொல் தமிழ் இசை . இசையின் இலக்கணங்களும் , நுட்பங்களும் பிராமணர்களாலேயே உருவாக்கப் பட்டிருக்க வாய்ப்புகள் அதிகம். இசை லலித கலைகளுள் ஒன்று. உபவேதமாகவே கருதப்பட்டது. பிற சாதியினர் அதனைக் கற்றாலும் விசேட அறிவு பிராமணர்களிடமே இருக்க வாய்ப்புகள் அதிகம். இன்று வரை உள்ள நிலைமையே அதற்குப் பிரமாணம் . ஏனெனில் அதற்கு அவகாசமும் அவர்களிடமே இருந்தது. பழந்தமிழ் நாட்டில் பிராமணர்கள் இல்லை என்று எந்த ஆராய்ச்சியாவது சொல்கின்றதா ? இங்கே கடல் சூழ்ந்தால் அவன் வேறிடம் செல்கின்றான். அங்கேயும் கலையை எடுத்துச் செல்கின்றான். இவ்வளவே கதை. இதற்குத்தான் அந்த ஆயிரத்தும் மேற்பட்ட ‘ஆராய்ச்சிப்” பக்கங்கள் . நீங்கள் இதற்குக் கொடுத்த முக்கியத்துவம் ஆச்சரியம் அளிக்கிறது.

வெங்கடசுப்ரமணியன்

அன்புள்ள வெங்கடசுப்ரமணியன்

நான் இசை அறிந்தவனல்ல. ஆகவே நான் ஆபிரகாம்பண்டிதரைப்பற்றி சில இடங்களில் எழுதியது தமிழில் இப்படி ஓர் ஆய்வு நிகழ்ந்திருக்கிறது என்பதனாலேயே. [இந்தக்குறிப்பு நான் எழுதியது அல்ல. அது சொல்புதிது இதழ் நா.மம்முது பேட்டியுடன் ஆபிரகாம் பண்டிதருக்குச் சிறப்பிதழ் வெளியிட்டபோது கலைக்களஞ்சியங்களை ஆதராமாகக் கொண்டு அன்றைய ஆசிரியரால் எழுதப்பட்ட அறிமுகக்குறிப்பு மட்டுமே.] நீங்கள் இசை கற்றவர். ஆகவே அதைப்பற்றி நான் என் அளவில் உங்களிடம் விவாதிக்க முடியாது

ஆபிரகாம் பண்டிதரைப் பின்பற்றி ஒரு விரிவான பண்ணாராய்ச்சி மரபே தமிழில் உள்ளது. குடந்தை சுந்தரேசனார் முதல் சேலம் ஜெயலட்சுமி வரை பற்பல இசை ஆய்வாளர்கள் மிக விரிவான நூல்களை எழுதியிருக்கிறார்கள். இந்த ஒட்டுமொத்த மரபை ’ஒன்றுமே தெரியாமல் எழுதப்பட்டது’ என்று தள்ளிவிட முடியுமா என்று எனக்கு ஐயமாக இருக்கிறது. அந்த மரபுடன் உரையாடும் தீவிரமான இசை ஆய்வாளர்கள் எவரும் கர்நாடக சங்கீதத்தின் தரப்பில் இல்லை என்ற எண்ணமே எனக்கிருக்கிறது. இன்னும் முறையாகவும் விரிவாகவும் எவரேனும் எதிர்வினையாற்றியிருந்தால் பார்க்கிறேன்

அத்துடன் ஒன்று. அன்றும் இசை பிராமணர்களிடமே இருந்திருக்கிறது என்பது போன்ற வரிகளைச் சொல்வதற்கு முன்னால் இன்னும் கொஞ்சம் ஆய்வு தேவை என்பதே என் வாசிப்பு எனக்குக் காட்டியது. தமிழில் சங்ககாலம் முதலே இசைச்செய்திகள் உள்ளன. இவை சங்ககாலம் முதல் இசையைத் தொழிலாகக் கொண்ட பாணர்களுக்குரியவையாகவே இருந்தன. நூற்றுக்கணக்கான ஆதாரங்களை சங்கப்பாடல்களில் இருந்து சொல்ல முடியும். சிலப்பதிகாரமும் பிந்தைய நூல்களும் அளிக்கும் சித்திரமும் இதுவே.

சங்கப்பாடல்களும் சரி, பிற்காலத் தமிழிலக்கியங்களும் சரி, பிராமணர்களைப்பற்றி மிக மதிப்புக்குரிய சித்திரத்தையே அளிக்கின்றன. அவர்களைப்பற்றிச் சொல்லும் போதெல்லாம் அவர்கள் விரதத்தால் மெலிந்த பசலை படிந்த உடல் கொண்டவர்கள், மெல்லிய குரலில் பேசுபவர்கள், மூவேளை தீவளர்த்து ஆகுதி செய்பவர்கள் என்றெல்லாம் அவை மதிப்புடன் சொல்கின்றன. ஆனால் நானறிந்தவரை எங்கும் அவர்களைப் பாடகர்களாக அவை குறிப்பிடவில்லை.

அன்றைய பிராமணர்களின் கடமைகளாகக் கற்றலும் கற்பித்தலும் தூது போதலும் மட்டுமே சொல்லப்பட்டிருந்தன. அவர்கள் தொழில் ஏதும் செய்யக்கூடாது. மூவேளை அக்னிகாரியம் செய்தாக வேண்டும். ஆகவே அவர்களுக்கு நிறைய நேரமிருந்தது என்பதெல்லாம் உண்மை அல்ல.

மேலும் இந்திய மரபில் இசை கௌரவமான தொழிலாகக் கருதப்படவில்லை என்பதையும் சொல்லியாக வேண்டும். அது போகத்துடன் சம்பந்தப்பட்டதாகவே கருதப்பட்டது. சங்ககால கட்டத்திலேயே இசைக்கலைஞன் பாங்கன் [பெண்தரகனுக்கு சரியான தமிழ்ச்சொல்] என்று சொல்லப்பட்டிருக்கிறான். தலைவியால் வசைபாடப்படுகிறான். இது இந்தியா முழுக்க இருந்த நிலை. கதாசரிதசாகரம் இந்த சித்திரத்தை இன்னும் தீவிரமாக அளிக்கிறது. அதில் பாடகன் என்ற சொல்லே பெண்தரகன் என்ற பொருளில்தான் உள்ளது.

இசைக்கு கௌரவமான இடம் கிடைத்தது பிற்கால பக்திகாலகட்டத்தில். அப்போதுகூட ஆலயங்களில் பாடும் பாடகர்கள்தான் உருவானார்கள். தமிழகத்தில் அவர்கள் ஓதுவார்கள். பிராமணர்கள் அல்ல. அது ஆலயவழிபாட்டிலேயே கூட கௌரவமான பதவி அல்ல.

பிராமணர்கள் இசைக்குள் வந்தது மிகமிகப்பிற்காலத்தில். அதாவது பன்னிரண்டாம் நூற்றாண்டுக்குப்பின்னராகவே இருக்கவேண்டும். இசை ஒரு ஊதியம் தரும் கலையாக மாறிய பின்னர். இசைக்கு ஒரு மரியாதை வர ஆரம்பித்த பின்னர். இசைகேட்பவர்களாக அன்றும் பிற்காலத்திலும் இருந்த நிலக்கிழார்களும் மன்னர்களும் இசைக்கலைஞர்களை பேண ஆரம்பித்தபின்னர்.

ஆனால் பிராமணர்களுக்கு இசை தங்கள் தொழில் அல்ல என்ற எண்ணமும், இசைக்கலைஞர்களை இழிவாகப்பார்க்கும் பார்வையும் சமீபகாலம் வரைக்கும்கூட நீடித்தது. இசைக்கலைஞர்கள் மிகையான் ஆசாரவேடம் போட ஆரம்பித்ததும், பெரும் பக்தர்களாக நடிக்க ஆரம்பித்ததும் இதனாலேயே. இன்றும் அந்த மனநிலை நீடிப்பதாகச் சொல்கிறார்கள். கு அழகிரிசாமி இதைப்பற்றி ஒரு நல்ல கதை எழுதியிருக்கிறார்

ஜெ

முந்தைய கட்டுரைஏழாம் உலகம்-கடிதம்
அடுத்த கட்டுரைஆடும் ஊஞ்சலும் அந்தரத்தில் நிற்கும் கணங்களும் – ஏ.வி.மணிகண்டன்