கோயில்களில் கைநீட்டுவது…

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம்,

நான் உங்கள் இணயதள வாசகன். தொடர்ந்து உங்கள் இணயத்தில் வரும் கட்டுரைகளை வாசித்துவருகிறேன். உங்கள் கட்டுரைகள் என்வாழ்வில் படிநிலை அறிவை ஏற்படுத்தி உள்ளது. வாசகர்களின் கேள்விக்கு உங்கள் பதில்கள் மிகவும் பயன் உள்ளதாக இருக்கின்றது. அதில் பயனடைவதில் நானும் ஒருவன். உங்களிடம், சில கேள்விகள் ஊடாக நானும் எனது நண்பர்களும் சில அறிவைப் பெறுவதற்கு முற்படுகின்றோம்.

இங்குள்ள கோவில்களில் அர்ச்சனை பற்றுச்சீட்டு வேண்டித்தான் பூசை செய்யவேண்டும் ஏனெனில் இங்கு ஒரு கோவில் இயங்குவதற்கு பல செலவுகள்(அந்தணர்/பூசாரி சம்பளம், கோவில் நடை முறை செலவு) உண்டு. ஆனால் என்னால் ஏற்றுக் கொள்ள முடியாத நிகழ்வுகள் இங்கு நடைபெறுகின்றது. குறிப்பாக அந்தணர்/பூசாரி அர்ச்சனை/பூசை செய்து முடிய தட்சணையை மக்கள் இடம் இருந்து எதிர்பார்ப்பது, இது பல மக்களை தர்ம சங்கடத்திற்கு உள்ளாக்குகின்றது. குறிப்பாக வசதி படைத்தவர் தட்சணையை(பணத்தை) கொடுக்கும் போது வசதி குறைந்தவனையும் அவனுடைய சக்திக்கு மீறிப் பணம் கொடுக்கவேண்டிய இக்கட்டான சந்தர்ப்பத்துக்குத் தள்ளுகின்றது. பூசகர்/அந்தணர் கூடுதலாக தட்சணை கொடுக்கின்றவர்களுக்கு அதிகமாக ஏதாவது மந்திரங்கள் செய்வதையும் கண்கூடாகக் கவனிக்கக் கூடியதாக உள்ளது. கனடாவில் இன்று இவர்கள் கோவிலை வைத்துத்  தொழில் செய்வது மாதிரி எனக்குத் தென்படுகிறது. இதனால் இங்குவாழும் மக்கள் மூடநம்பிக்கையின் பின் செல்கிறார்கள் என்பது என் எண்ணம். இளம் சந்ததியினர் பலவகையான கேள்விகளைக்கேட்கும் போது எங்களிடம் தகுந்த பதில் இல்லை என்பதுதான் கவலைக்குரிய விடயம்.

உங்கள் நேரத்தை நாங்கள் எடுத்துக் கொள்வதற்கு முதலில் நன்றியைக் கூறிக்கொண்டு எங்கள் கேள்வியை முன் வைக்கின்றோம்.
1. சைவர்கள்/இந்துக்கள் இறை வழிபாட்டில் எமக்கும் இறைவனுக்கும் இடையில் பூசாரி/குருக்கள்மார்கள் இருக்கிறார்கள். இவர்கள் எப்படி உருவாக்கப்பட்டார்கள்? எக்காலப்பகுதியில் இவர்கள் இந்து மதத்தில் உருவாக்கப்பட்டார்கள்? இவர்களின் உண்மையான தொழில் என்ன?

2. இவர்களுக்கு குருதட்சணை அவசியம் வழங்க வேண்டுமா?

3. தட்சணை வழங்குகின்ற இந்த சடங்கு சைவர்களின் ஒரு மதவழிபாட்டு முறையா? அல்லது இடையில் செருகப்பட்ட சடங்கா?

நன்றி,
க.சிவகுமார்

அன்புள்ள சிவக்குமார்,

பழைய கோயில் ஆவணங்களைப்பார்த்தால் தட்சிணை வழங்கும் மரபு இருந்திருப்பதாகத் தெரியவில்லை. அன்று மன்னர்களாலும் பிரபுக்களாலும் கோயில்கள் பேணப்பட்டன. கோயில் ஊழியர்களுக்கு நிலம் வழங்கப்பட்டது. அந்த மானியத்தால் அவர்கள் வாழ்ந்தார்கள். அவர்களின் சமூக இடம் மிக முக்கியமானதாக இருந்தது. பெருமதிப்புடன் அதிகாரத்துடன் இருந்தார்கள்.

திருவனந்தபுரம் கோயில் பூசாரியை நம்பி என்பார்கள். அவர் குஞ்சன் நம்பியார் என்ற கவிஞரிடம் ‘ஆரு?’ என்று கேட்டார். ’நம்பி ஆர்?’ என்று அவர் சொன்னார். நம்பியை அவமதித்ததாக அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டது. நம்பியார் ஒரு விகடகவியாக மன்னிப்புக்கவிதை பாடினார். இந்தக்கதை பூசாரிக்கிருந்த அதிகாரத்தைக் காட்டுகிறது.

ஆனால் பதினெட்டாம் நூற்றாண்டில் இங்கே இருந்த பேரரரசுகள் அழிந்தன. அவற்றைத் தாங்கி நின்ற பிரபுக்கள் மறைந்தனர். பிரிட்டிஷ் ஆட்சியின் உக்கிரமான சுரண்டலால் . நம் நாட்டிலிருந்த உபரி முழுமையாகக் கொள்ளைபோனதன் விளைவாக பெரும் பஞ்சங்கள் வந்தன. ஆலயநிலங்கள் தனியாரால் கையகப்படுத்தப்பட்டன. கோயிலையும் பிரபுக்களையும் நம்பிவாழ்ந்த மரபுக்கலைகளும் தொழில்களும் அறிஞர்களும் அழிந்தனர்.

அதன்விளைவாகவே கோயில் ஊழியர்கள் கோயிலுக்கு வருபவர்களிடம் கைநீட்டி தட்சிணை பெற்று வாழும் இழிநிலைக்குத் தள்ளப்பட்டனர். இன்றும் அந்நிலைதான் நீடிக்கிறது. ஒரு கிறித்தவ மதபோதகர் இன்று அரசு உயரதிகாரி போல இங்கே வாழமுடியும். இஸ்லாமிய மதபோதகர் கௌரவமாக வாழ அந்த மதத்தவர் அவருக்கு வீடும் ஊதியமும் அளிக்கின்றனர். இந்துமதத்தினரின் பூசாரிகளுக்கு இன்றும் மாதம் ஆயிரம் ரூபாய்தான் சம்பளம், ஒரு டீ எட்டு ரூபாய் விற்கும் நாட்டில். அவர்கள் கைநீட்டித்தான் வாழவேண்டியிருக்கிறது.

இந்துக்கள் பிராயச்சித்தங்களுக்கும் பூசைகளுக்கும் சாமியார்களுக்கும் கோடிகளைக் கொட்டிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் பூசாரிகளின் தட்டுகளில் இன்றும் ஐந்துரூபாய்க்குமேல் போடமாட்டார்கள். கூடவே அந்தப் பூசாரிகள் கைநீட்டுவதாகக் கரித்துக்கொட்டவும் செய்வார்கள். அவர்களைப் ‘பணப்பேய்கள்’ என்று வசைபாடுபவர்களைக்கூடக் கண்டிருக்கிறேன்

ஒப்புநோக்க கேரளத்தில் பூசாரிகள் அவர்களுக்குரிய கௌரவத்துடன் இருப்பதைக் காணலாம். ஏனென்றால் அவர்கள் அங்கே அரசூழியர்களாகக் கருதப்படுகிறார்கள். அதற்கான ஊதியம் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் பழனி, திருச்செந்தூர் இரு கோயில்களின் வருமானம் மட்டுமே போதும் ஊழியர்களுக்கு கௌரவமான ஊதியம் வழங்க. ஆனால் நம் அரசுக்கும் அதிகாரிகளுக்கும் கோயில் கொள்ளையடிப்பதற்கான இடம். நமக்கு அது உலகியல் லாபங்களுக்காக கடவுளிடம் பேரம்பேசும் இடம்.

முதலில் மதிக்கத்தக்க ஊதியத்தை ஊழியர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யவேண்டும். அதன் பின் கைநீட்டக்கூடாது என அர்ச்சகர்களை விலக்குவோம். அவர்கள் தட்டை நீட்டுவதென்பது நம் மதத்துக்கு நாமே இழைக்கும் மாபெரும் அவமதிப்பு. நம் சுயமரியாதையை அது இன்னும் சீண்டவில்லை.

ஜெ

முந்தைய கட்டுரைஏழாம் உலகின் பண்டாரம்
அடுத்த கட்டுரைமதுரை சுல்தான்கள்