அன்புள்ள ஜெ.,
இந்தி பற்றிய விவாதம் கண்டேன். தங்கள் விளக்கத்துக்கு நன்றி.
ஒரு மொழியைப் பேசிப் பழக , அம்மொழி புழங்கும் சூழலில் ஆறு மாதத்துக்குமேல் ஆகாது. நான்கு வருடப் பொறியியல் படிப்பில் பல கணிமொழிகளை மூன்று மாதங்களில் படிக்கும் நாம், மனித மொழிகளைப் படிக்க முடியவில்லை என்று புலம்புகிறோம்! காரணம் அலட்சியம், சோம்பேறித்தனம். தமிழ்நாடு தவிர உலகத்தில் எங்கு போனாலும் இந்தியை வைத்தே “சமாளிக்கலாம்” என்பதே இந்திக்கு ஆதரவான முதன்மையான வாதம். இங்கு சமாளிப்பதுதான் வருகிறது. தான் வாழும் ஊரின் பண்பாட்டை அறிமுகப்படுத்திக் கொள்ளத் தேவையில்லை என்கிற அலட்சியம்.
அதிகம் படிக்காதவர்கள் பிற மொழிகளை மனத்தடையில்லாது எளிதில் கற்கிறார்கள். ஒருவேளை நம் கல்விமுறையால் அவர்கள் களங்கப்படவில்லையோ என்னவோ?
தமிழர்கள் இல்லாத நாடில்லை. ஒவ்வொரு நாட்டில் வாழ்வோரும் தனக்கு இன்னின்ன மொழிகளால் வேலை கிடைத்தது அதனால் அதைத் தமிழ்நாட்டில் அனைவருக்கும் கற்றுத்தர வேண்டும் என்று கேட்டால் என்னவாகும்?
பள்ளியில் கற்பிக்காததை வெளியே படிக்கவே முடியாத முடவர்கள் பெருகிவிட்டபடியால், இந்தச் சிக்கலைப் போக்க மொழிக்கொள்கையில் , கல்வியில் மாற்றம் தேவை – இது இந்தியா முழுவதற்கும், வட இந்தியாவுக்கும் சேர்த்து அவசியம். பலநூறு மொழிகளை பாடத்தில் வைத்து சுமையேற்றுவதற்குப் பதில்,எந்த மொழியையும் எளிதில் கற்பதற்குரிய திறனை வளர்ப்பதற்கு வேண்டிய பாடங்களைப் பயிற்றுவித்தல் ஒரு வழி என்று படுகிறது. அந்தப் பாடங்கள் குழந்தைக்கு இயற்கையாக இருக்கும் அவதானத்திறனை நசுக்காமல் இருந்தாலே போதும். மேலும்,உலகின் மொழிகள் பலவும் செம்மொழிகளிலிருந்து தோன்றியவையாதலால், தாய்மொழி, ஆங்கிலம் தவிர ஏதாவது ஒரு செம்மொழியைப் பயிற்றுவித்தல் பலவகையிலும் நன்மை தரும்.
நன்றி
வெங்கட் சி
அன்புள்ள ஜெயமோகன்,
நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
தங்களுடைய கடிதம் கிடைத்தது.நீங்கள் கூறியதுபோல நமது குழந்தைகள் ஒன்றுக்கு மேற்பட்ட மொழியின் எழுத்து வடிவங்களைக் கற்க முற்படும்போது சிரமமாக இருக்கத்தான் செய்யும். உலகில் வேறு எந்த நாட்டின் குழந்தைகளுக்கும் இந்த பிரச்சினை இல்லை என்றுதான் நினைக்கிறேன்.
வேலை நிமித்தமாக இத்தாலியைச் சேர்ந்த இரண்டு நண்பர்கள் இந்தியா வந்தபோது ஒரளவு இந்தியைக் கற்றுக்கொண்டு எங்களிடம் பேசுவார்கள்.நான் எனது நண்பர்களிடம் தமிழில் பேசும்போது , அவர்கள் என்னிடம் நீங்கள் ஏன் இந்தியில் பேசாமல் வேறு மொழியில் பேசுகின்றீர்கள் என்று கேட்டபோது நான் உடனே தமிழ் எனது தாய் மொழி என்று சொன்னேன். அதற்கு அவர்கள் எண்ணிக்கையில் அதிகமாகப் பேசப்படும் இந்தி இருக்க ஏன் எண்ணிக்கையில் குறைவாகப் பேசப்படும் உங்களது மொழியில் பேச வேண்டும்(அவர்களுக்குத் தமிழ் பேசும் மக்களின் எண்ணிக்கை தெரியாது) என்று கேட்டனர். தமிழ் பேசும் மக்கள் 7 கோடிக்கும் அதிகம் என்று சொன்னவுடன் அவர்களுக்கு அதிர்ச்சியாகிவிட்டது. எப்படி உங்களால் மூன்று மொழியில் பேச முடிகிறது என்று ஆச்சரியப்பட்டனர். வந்த இரண்டு நண்பர்களில் ஒருவருக்கு ஆங்கிலம் தெரியாது.
பெரும்பாலான சீனாவைச் சேர்ந்த நண்பர்களுக்கும் சுத்தமாக ஆங்கிலம் தெரியவில்லை. வேலை செய்யும் இடத்தில் அவர்கள் ஆங்கிலமும் சீன மொழியும் தெரிந்த ஒரு மொழிபெயர்ப்பாளரை வைத்துக்கொள்கின்றனர். இத்தாலி, ஜெர்மனி, ரஷிய மொழிகளைப் போன்று நாமும் இந்திக்கு ஆங்கில அகரவரிசையைப் பயன்படுத்தலாம். உங்களுக்குத் தெரியும் இந்தி தெரியாமல் இந்தியாவில் பயணம் செய்வது அவ்வளவு எளிதல்ல. ஆனால் நீங்கள் சொன்னதுபோல என்னதான் நாம் ஒரு மொழியை முழுவதுமாகப் படித்தாலும் நடைமுறை சார்ந்த வாழ்க்கைப் பயன் இல்லாவிட்டால் அதைப் பேசுவதோ, எழுதுவதோ கடினம்தான்.
அன்புடன்,
மா.பா.இராஜீவ்