திரு ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம். என்னை எப்படி அறிமுகப்படுத்திக் கொள்வது என்று தெரியவில்லை. நான் உங்களது நாவல்களை வாசித்ததில்லை. கூகிள் ப்ளஸ்சில் புழங்கும் நண்பர்கள் (உங்களது வாசகர்கள்) பகிரும் படைப்புகளின் வழி சிறுகதைகளையும், எனக்கு ஆர்வமுள்ள கட்டுரைகளையும் வாசித்ததுண்டு.
இந்த வாசகர்களில் சிலர் விஷமக்காரர்கள் :) உங்களது கட்டுரையில் இருந்து வம்பு வளர்க்கத்தக்க வரிகளை மட்டும் எடுத்துப்போட்டு அதற்கு மற்றவர்கள் எப்படி எதிர்வினையாற்றுகிரார்கள் என்று வேடிக்கை பார்ப்பார்கள். அப்படித்தான் இந்தக் கட்டுரையை முதலில் எதிர்கொள்ள நேர்ந்தது. அதன் பின்னர் முழுவதையும் படித்து முடித்தாலும் பொதுப்படையாக எழுதப்பட்டிருக்கும் சில கருத்துக்களை ஒப்புக்கொள்ள முடியவில்லை. எனவே இந்த மடல்.
முதலில் சிலவற்றைத் தெளிவுபடுத்திவிடுகிறேன். நான் ஒன்றும் இங்கு ‘பெண் குலத்’தின் பிரதிநிதியாகப் பேச வரவில்லை. பெண்கள் எனப்படுபவர்கள் அனைவருக்காகவும் வக்காலத்து வாங்கப் போவதில்லை. மேலும் தனிப்பட்ட முறையில் என்னை வைத்தும் பேசவில்லை. அலுவலகம் சார்ந்த பெரும் பொறுப்புகளைத் தன்னார்வத்துடன் சுமக்கவோ அல்லது தலைமை ஏற்கவோ நான் முன்வருவதில்லை. இதற்கு நான் பெண் என்பது காரணமல்ல. நிர்ப்பந்தங்களற்றுப் பணி புரிய விரும்பும் மனநிலை. ஆண்களது விளையாட்டுக் குழுவொன்றை எடுத்துக்கொண்டால் அதில் உள்ள அனைவரும் கேப்டன் ஆக விரும்புவதில்லை அல்லவா, அதைப் போல. அதே நேரம் முடித்தாக வேண்டியதைச் செய்துவிடுவது உண்டு. ஆக என் சார்பாக அல்ல, எனது வாழ்வில் கடந்து வந்திருக்கும் கண்டு கொண்டிருக்கும் சிலரின் சார்பாகவே இதை எழுதுகிறேன்.
(ஆக்ரோஷத்துடன் இதை எழுதவில்லை என்றும் புன்னகையுடனே எழுதினேன் என்பதையும் கூடுதலாகத் தெரிவித்துக் கொள்கிறேன் :) )
ஒருமுறை எனது உறவினர் ஒருவர் (ஆண்), தான் அலுவலகம் ஆரம்பித்தால் அங்கு பெண்களையே அதிகம் வேலைக்கு வைப்பேன் என்றார். காரணம் கேட்டதற்கு, ஒழுங்காக வேலை செய்வார்கள், அதே நேரம் பிரிந்து சென்று போட்டியாக எதையும் ஆரம்பித்துவிட மாட்டார்கள் என்றார். எனக்குத் தெரிந்தளவில், ஆம் இது உண்மை. ஆண்களுடன் ஒப்பிடும் போது பெரிய அளவில் சாதிக்க விரும்பும் பெண்கள் குறைவே, நான் உட்பட. பெரும்பாலான பெண்கள் சவாலான வேலைகளை விடுத்து எளிமையான பணிகளையே தேர்ந்தெடுத்துக் கொள்கிறார்கள். சராசரி அலுவலக வேலை, குடும்பம் என்பதோடு தன்னிறைவு அடைந்து விடுகிறார்கள். காரணம், குடும்பப் பொறுப்பே பெண்ணுக்கான தலையாய கடமை என்பது அவர்களது மனதில் அழுத்தமாகப் பதிய வைக்கப்பட்டுள்ளது என்று கூறலாம்.
பாதுகாவலன் மனநிலை, பெண்கள் சார்புத்தன்மையுடன் வளர்க்கப்படுவது குறித்து நீங்கள் கூறியிருப்பதில் பெரிதாக ஒன்றும் மறுப்பதற்கில்லை. தொடர்ச்சியாகப் பொறுப்புணர்வு குறித்துச் சொல்லியிருப்பவை தான் விவாதத்தை ஏற்படுத்தியவை. மேலே மேலே செல்ல ஆர்வம் பெரிதாக இல்லாவிட்டாலும், அன்றாடப் பணிகளையும் பெரும்பான்மைப் பெண்கள் தட்டிக் கழிப்பதாகச் சொல்லியிருப்பது பெரிதும் உறுத்துகிறது.
//நான் என் இதுநாள் வரையிலான பொதுவெளி வாழ்க்கையில் அப்படி தன் பலத்தில் நிற்கவிரும்புகிற, தன் பொறுப்புகளை எந்நிலையிலும் தானே சுமக்கிற, ஒருதருணத்திலும் அதிலிருந்து பெண் என்று சொல்லி சலுகை கோராத ஓர் இந்தியப்பெண்ணைப் பார்த்ததே இல்லை என்று சொல்லிக்கொள்கிறேன்.//
எனது குறுகிய அனுபவத்தினூடே அலுவலகப் பொறுப்புடனான பெண்களைச் சந்தித்திருக்கும் பொழுது நீங்கள் அப்படி ஒருவரைக் கூடக் காணாதது ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது. உங்களது அலுவலகத்தின் சன்னல் வழியே உலகைக் காண்கிறீர்களோ என்று எண்ணத் தோன்றுகிறது. எனது தோழியரிலிருந்து பேராசிரியர்கள் வரை என்னால் சொல்ல முடியும். உதாரணமாக, எனது மேற்படிப்பின் பொழுது துறைத் தலைவராக இருந்தவர் ஒரு பெண்மணி. அவரைக் கண்டால் எதிர்ப்படும் ஆண் ஆசிரியர்கள் சிலர் தலையை ஒளித்துக் கொள்ளுமளவுக்கு அதிகாரம் கொண்டவர். துறையை வளர்த்ததிலும் அதற்குத் தேவையான நிதியாதாரத்தைப் போராடிப் பெற்றதிலும் கருவிகளை வாங்கிப் போட்டு நவீனப்படுத்தியதிலும் கல்விக் கட்டமைப்பை வகுத்ததிலும் குழுவின் தலைமையாக இருந்தவர்.
அலுவலக வேலைதான் என்றில்லை. தன்னார்வத்துடன் முன்னெடுத்து சமூக வேலைகளைச் செய்யும் சில பெண்களையும் இங்கே இணையத்தில் கண்டதுண்டு. இவர்கள் யாரும் celebrities அல்ல, சாமான்யப் பெண்களே.
அதென்ன எந்நிலையிலும் எந்தத் தருணத்திலும்? எப்பேர்ப்பட்ட கடினமான சூழ்நிலையிலும் ஆண்கள் மட்டும் தன் பொறுப்புகளைத் தானே சுமக்கிறார்களா? அவர்களுக்கெல்லாம் யாரும் உதவி செய்வதில்லையா? ஆணோ பெண்ணோ அப்படியான நேரத்தில் பிறருடன் சுமைப் பகிர்வு நிகழ்த்துவதில் என்ன தவறு? ஏன் பெண் மட்டும் சொந்தக் காலில் கட்டை விரலின் நகத்தையூன்றி பாரந்தாங்கி நிற்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?
//அங்கே தாங்கள் பெண்கள் என்பதனால் ஒரு சலுகையை எதிர்பார்ப்பார்கள். அதில் சிக்கல் ஏற்பட்டால் உடனே பெண் என்னும் அனுதாபம் மூலம் அதிலிருந்து தப்ப முயல்வார்கள். அழுவாரகள், அபலையாக பாவனைசெய்வார்கள். //
சிலர் இப்படி இருக்கிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் பொதுப்படுத்தினால் இது தவறான கருத்து. Personalities differ, even among females :) அன்றாட அலுவலக வேலைகளில், நான் காண நேர்ந்தவர்கள் பலரும் ஆண்களுக்கு இணையாகவே வேலை செய்தார்கள், செய்கிறார்கள். கணிசமான அளவு பெண்கள் எமக்கு மேலே இருக்குமிடத்தில் பெண் என்று கோரி சலுகை எதிர்பார்த்தால் உதைதான் கிடைக்கும்.
மேலும் அப்படி சலுகை எதிர்பார்ப்பவர்களது குடும்பத்தில் அவர்களுக்கு எந்தளவு குடும்பப் பொறுப்புகளுக்கான ஆதரவு கிடைக்கிறது என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டி இருக்கிறது.
பொறுப்பற்று சரிவர வேலைக்கு வராது அல்லது வேலைக்கென்று போதுமான திறன் இல்லாது இருந்த ஆண்களையும் கண்டதுண்டு. என்ன, அவர்கள் அழ மாட்டார்கள், அவ்வளவே வித்தியாசம் :)
தைரியமான பொறுப்பான பெண்களும் அன்றைய மனநிலை பொறுத்து சக்கையான விஷயமொன்றுக்கு சட்டென்று உடைந்து விடக்கூடும். ஓரிரண்டு நாட்களில் சரியாகி பழைய நிலைக்குத் திரும்பி விடுவார்கள்.
//ஆண்களின் அகங்காரத்தைத் தங்கள் நுணுக்கமான பாவனைகள் மூலம் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வார்கள். ஆண்களில் புரவலர்களையும், வழிகாட்டிகளையும், ஏவலர்களையும் உருவாக்கிக்கொண்டு மேலே சென்றுகொண்டே இருப்பார்கள்.//
முன்னேற்றம் மேலதிகாரிகள் போடும் மார்க்கிலே இருக்கிறது என்றால் ஆணோ பெண்ணோ அங்கே பணிவும் மரியாதையும் குறைந்தபட்ச அவசியமாகின்றன. திறமையையும் பொறுப்புணர்வையும் மட்டுமே வைத்து ஒருவரை மதிப்பிடும் ஆட்கள் குறைவு. மற்றவர்கள் தமக்கு அணுக்கமானவர்களையே தேர்வு செய்கிறார்கள். அவ்விடத்து, ‘பிழைக்கத் தெரிந்தவர்கள்’, அது ஆணோ பெண்ணோ, மற்றவர்களைக் காட்டிலும் ஒரு படி மேலே நிற்கிறார்கள்.
அல்லது எதிர்பாலின ஈர்ப்பை பயன்படுத்தி முன்னேறுவதைக் குறித்துச் சொல்கிறீர்களோ? எனது சீனியர் ஒருவர் (ஆண்), சில பெண்களைக் கிருமி என்றும் தன்னை எதிர்ப்பு சக்தி குறைந்தவர் என்றும் கூறுவார், அவர்கள் வந்து நைச்சியமாகப் பேசினால் தன்னால் தட்ட முடிவதில்லை என. மீண்டும்.. இப்படிச் சிலர் இருக்கிறார்கள் தான், ஆனால் அனைவரும் இப்படியில்லை. மேலும், பெண்கள் அதிகளவில் இருக்கும் துறைகளில் ஆண்களுக்கும் இவ்வாறான சலுகைகள் கிடைப்பதை நாங்களே கண்கூடாகக் கண்டிருக்கிறோம்.
நான் மேலே எழுதியதெல்லாம் இந்தியப் பெண்களை வைத்துதான். மேற்குலகில் பெண்கள் தமது தனிப்பட்ட வாழ்விலும் சுயமாக வாழ்கிறார்கள். அது சிரமம் என்றாலும் இப்படி வாழ்பவர்களைக் காண முடிகிறது. விவாகரத்தாகிக் குழந்தைகளுக்கான பொறுப்பையும் ஏற்றுக்கொண்டு பணி புரியும் பெண்மணி ஒருவர் நான் அருகிலிருந்து காணும் ஓர் உதாரணம். ஆனால் இங்கும் நிர்வாகப் பொறுப்புகளில் பெண்களின் சதவிகிதம் கணிசமாகக் குறைவு என்ற போக்கே நிலவுகிறது.
இறுதியாக நான் கண்ட மட்டில் நான் கூற விரும்புவது, பொறுப்பும் பொறுப்பின்மையும் தனிமனிதர்களைப் பொறுத்தவை, அவர்களது பாலை அல்ல. நீங்கள் கூறியிருப்பது போல, சுயமாக நிற்பதற்குப் பெண் பிள்ளைகளை சிறுவயதிலிருந்தே பழக்கப்படுத்தினால் இந்நிலை தொடரவும் பெருகவும் செய்யும்.
நன்றி
தென்றல்
அன்புள்ள தென்றல்,
நீங்கள் சொல்வதை நான் சரியாகவே புரிந்துகொள்கிறேன். ஆனால் நான் சொன்னது என்னுடைய அனுபவத்தை முன்வைத்து. இம்மாதிரி விஷயங்களில் தேசியசராசரியை எடுப்பதெல்லாம் சாத்தியப்படாது. ஒருவர் தன் அவதானிப்பைச் சொல்வதே உசிதமானது. நான் என் அவதானிப்பை எழுத்தாளனாக, பலவருடம் ஓர் அரசுத்துறையை முழுமையாக கவனித்தவனாக முன்வைக்கிறேன். தவறாகவும் இருக்கலாம்.
இதைப்பற்றிய ஒரு விவாதம் இங்கே அவரவர் அனுபவத்தளத்தை முன்வைத்து நேர்மையாக நிகழ்த்தப்படவேண்டும் என்பதே என் நோக்கம். அது நமக்கு மிக முக்கியமான தெளிவுகளை அளிக்கக்கூடும். எதையும் நாம் பொத்தாம்பொதுவான முற்போக்குக் கருத்துக்களைச்சொல்லி மிகையாக உணர்ச்சிவசப்பட்டு ஆடிக் கடந்துசெல்கிறோம். நமது சிக்கல்கள் அப்படியே நீடிக்கின்றன. நான் எழுதுவதன் விளைவாக நான் எதிர்பார்ப்பது ஒரு நேர்மையான விவாதத்தை மட்டுமே
மீண்டும் யோசிக்கிறேன். நான் அறிந்த குறைந்தது இருநூறு பெண் அதிகாரிகளில் சொந்தமாக முடிவெடுக்கும், அம்முடிவின் விளைவுகளைச் சந்திக்கும் ஒருவர் கூட இல்லை. தன்னந்தனியாக நிற்பதைப்பற்றி நான் சொல்லவில்லை. நான் சொல்வதே வேறு.
அலுவலகம் வந்தால் அளிக்கப்பட்ட வேலையைத் திறமையாக முழுமூச்சாகச் செய்துமுடிப்பவர்கள் உண்டு. குடும்பச்சிக்கல்கள் காரணமாகத் தங்களை வேலையடிமைகளாக ஆக்கிக்கொண்டவர்களும் உண்டு. நான் சொல்வது அதையல்ல.
சுயமாக முடிவெடுக்கமுடியாத பெண்களில் ஒருசாரார் தங்களை மிக கடுகடுப்பானவர்களாக ஆக்கிக்கொள்வதைக் கண்டிருக்கிறேன். அது ஒரு பாதுகாப்புக்கவசம் மட்டுமே. சுயத்தன்மை என்பது நிதானமாகவே வெளிப்படும்.
ஆனால் ஒன்றுண்டு, அரசுத்துறைகளைப்பொறுத்தவரை ஊழலில் பெண்கள் ஆண்களுக்குச் சற்றும் சளைத்தவர்கள் அல்ல. ஒருபடி மேல் என்றுகூடச் சொல்வேன். நான் கண்ட மிகமிக மோசமான ஊழல் அதிகாரிகளில் பலர் பெண்கள்.
ஜெ