அஞ்சலி
இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு நான் என் அலைச்சல் நாட்களில் ஒருமுறை திருவனந்தபுரம் போத்தன்கோடு கருணாகர சுவாமிகளைப் பார்க்கும்பொருட்டு சென்றுவிட்டு சந்திப்பு சற்றே கசப்பாக முடிய மனச்சோர்வுடன் திரும்பும்போது தற்செயலாக அறிவிப்பை பார்த்துவிட்டு சி.என்ஸ்ரீகண்டன் நாயர் எழுதிய புகழ்பெற்ற நாடகமான ‘லங்காலட்சுமி’யை பார்க்க ஓர் அரங்குக்குள் நுழைந்தேன்.
சி.என்.ஸ்ரீகண்டன் நாயரைப்பற்றி பி.கெ.பாலகிருஷ்னன் எழுதியிருக்கிறார், என்னிடமும் சொல்லியிருக்கிறார். ஆற்றூர் ரவிவர்மாவும் அவரது நண்பரான எம்.கங்காதரனும் சொல்லியிருக்கிறார்கள். அதெல்லாம் மேலும் பலவருடம் கழித்து. மலையாள நாடக ஆசிரியர்களில் இருவர்தான் முக்கியமானவர்கள். ஒருவர் சி.என்.ஸ்ரீகண்டன் நாயர். இன்னொருவர் சி.ஜெ.தாமஸ். சிஜெ தான் சுந்தர ராமசாமியின் ஜே ஜே சிலகுறிப்புகளின் ஜே.ஜேக்கு முன்னுதாரணவடிவம்.
சி.என் ஸ்ரீகண்டன்நாயரைப்பற்றி நான் அப்போது பெரிதாக எதுவுமே கெள்விப்பட்டதில்லை. அவர் எழுதிய சில கதைகளை கேரளகௌமுதி வார இதழில் வாசித்திருக்கிறேன், அவ்வளவுதான். நான் அந்த அரங்கில் நுழைய தற்செயல்மட்டுமே காரணம்.
தன் கர்வத்தால் அல்லது சுயமரியாதையால் படிப்படியாக சரிவைச் சந்திக்கும் ராவணனின் கதைதான் லங்காலட்சுமி. அவனது மரணத்துக்கு முந்தைய சில நாட்கள். நாடகத்தில் அவனை விட்டு நீங்கும் லங்கா லட்சுமி — இலங்கையின் செல்வம்– அவனுடைய அறவுணர்ச்சியே என்று தொனிக்கும். உணர்ச்சிகரமான நாடகம் அது.
அந் நாடகம் எனக்கு அன்று அபூர்வமான மன எழுச்சியை அளித்தது. கண்ணெதிரே நான் பத்து அகங்காரம் கொண்ட ராவணனைபார்த்தேன். அவனது இறுமாப்பின் படிப்படியான சரிவைக்கண்டேன். என் கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டிருப்பதை நாடகம் முடிந்தபின் உணர்ந்தேன். கதார்சிஸ் என்று சாக்ரடீஸ் சொல்லும் அந்த நிலை, துயரம் மூலம் அந்தரங்கத்தை தூய்மைப்படுத்திக்கொள்ளும் கலையனுபவம், எனக்கு வாய்த்தது
பலவருடங்கள் கழித்து நான் காசர்கோட்டில் இருக்கும்போது லோகித தாஸ் எழுதி சிபி மலையில் இயக்கிய எழுதாப்புறங்கள் என்ற படத்தைப் பார்த்தேன். அதில் ஒரு சிறிய பாத்திரத்தை நடித்த நடிகரின் முகம் என்னை மெல்ல அதிரச் செய்தது. அது முரளி. அன்று லங்காலட்சுமியில் ராவணனாக நடித்தவர் அவர்.
அதன்பின் முரளி நடித்த பல படங்களை நான் பார்த்தேன். இறுக்கமான முகம் மெல்ல சிரிப்பில் கனிவதையும் கோபத்தில் சிவப்பதையும் வெட்கத்தில் கன்றுவதையும் மிகச்சுருக்கமான பாவனைகள் மூலம் அவர் கதாபாத்திரங்களுக்கு உயிர் தருவதையும் கண்டு அவரது ரசிகன் ஆனேன்
பின்பு என்னுடைய ‘வடக்குமுகம்’ நாடகத்தொகுதி வெளிவந்தபோது அதில் முன்னுரையில் நான் நாடகத்தை எப்படி காண்கிறேன் என்பதை விளக்க முரளி நடித்த லங்காலட்சுமி நாடகத்தைப் பற்றிச் சொல்லியிருந்தேன். நாடகம் என்பது நடிப்பின் கலை. நடிகன் ஒரு கதாபாத்திரமாக மாறுவதே அதன் உச்சநிலை. அங்கே கதாபாத்திரம் நேரில் வந்து ரசிகன் முன் நிற்கிறது.
அந்த முன்னுரையை எவரோ முரளியிடம் சொல்ல அவர் என்னை ·போனில் அழைத்தார். அவ்வாறுதான் அவருடன் எனக்கு தொடர்பு ஏற்பட்டது. நான் அந்த அனுபவத்தைப் பற்றிச் சொன்னேன். அவர் பரவசத்துடன் தன் நாடகநாட்களைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தார். ஒரு நடிகனாக தன்னைக் கண்டுகொண்ட நாட்களின் குதூகலங்களை. தீராத விவாதங்கள், கனவுகள், டீக்கடைகள், ஒத்திகைகள், மேடைகள், பயணங்கள்…
ஆனால் நான் முரளியை நேரில் சந்திப்பது மேலும் இருவருடங்கள் கழித்து லோகிததாஸின் பண்ணை வீட்டில். லோகி முரளியின் நண்பர். லோகிதான் முரளியை ஆளாக்கியவர் என்றால் மிகையல்ல. முரளியின் கலைவாழ்க்கையின் மறக்கமுடியாத கதாபாத்திரங்களை அவருக்கு அளித்தவர் லோகி. அதன் உச்சம் வெங்கலம் படத்தின் அந்த மூத்த மூசாரி கதாபாத்திரம்தான். அவர்களுக்குள் நல்ல உறவு இருந்தது
பாலக்காடு லக்கிடி பண்ணைவீட்டின் முற்றத்தில் அமர்ந்து இருவரும் மது அருந்தினார்கள். வழக்கம்போல நாடகநினைவுகள் சினிமாப்பாட்டு. முரளியும் லோகியைப்போலவே நன்றாகப் பாடுவார். லோகி எப்போதுமே கைவசம் அவர் எடுக்கவேண்டிய பல படங்களின் கதைச் சுருக்கங்களை வைத்திருப்பார். அவற்றை முரளியிடம் சொல்ல முரளி ஆவேசமாக ”எடுக்கணும்…எடுத்தே ஆகணும்…ஜீவிதம் இப்படியே ஓடிபோய்விடும்..நேரமில்லை” என்றார். அவரது கண்கள் அரைவெளிச்சத்தில் மின்னின.
நேரமில்லை என்ற எண்ணம் எப்போதும் முரளிக்கு இருந்தது. முடிவிலா நேரம் இருப்பதுபோன்றது லோகியின் பாவனை. முரளி லோகியைப்போன்றவரல்ல. எப்போதும் ஒரு படபடப்பு. ஒருவகை நிலைகொள்ளாமை. எதில் இறங்கினாலும் ஆவேசமாக இறங்கும் தன்மை. ஆகவே எப்போதுமே கோபதாபங்கள் சண்டைகள் பூசல்கள்.
மலையாள திரையுலகில் பெரும்பாலானவர்களிடம் முரளி பூசலிட்டார் என்றார் லோகி. ஆகவே அவருக்கு படங்கள் குறைந்தன. அக்காலத்தில் அவர் தமிழுக்கு வந்தார். என் நண்பர் அழகம்பெருமாள் இயக்கிய டும்டும்டும் அவருக்கு நல்லபெயர் வாங்கித்தந்த படம். தொடர்ந்து பல படங்கள். அவை அவரை பொருளாதார ரீதியாக நிலை நிறுத்தின
ஆனால் இக்காலத்தில் குடி அவரை கையில் எடுத்துக்கொண்டது. இரவுபகலாகக் குடித்தார். நடிப்பில் கவனம் நிற்கவில்லை. ஆகவே படங்கள் பெரும்பாலும் இல்லாமல் ஆகின. குடி தன்னை விழுங்குவதை முரளி நன்றாகவே அறிந்திருந்தார். ஆனால் அவரால் தன்னுடைய உணர்ச்சிகளை நாக்கை சிந்தனைகளை எதையுமே கட்டுப்படுத்திக்கொள்ள முடியாது.
உறுதியான மார்க்சிய நம்பிக்கை கொண்டவர் முரளி. பொதுவாக கலைஞர்கள் அரசியலற்றவர்கள். அல்லது எடுப்பார் கைப்பிள்ளைகள். அரசியல் இருந்தாலும் வெளியே சொல்லாதவர்களும் உண்டு. முரளி எப்போதுமே திட்டவட்டமான மார்க்ஸிய கம்ப்யூனிஸ்டுக் கட்சி உறுப்பினர். எல்லா தேர்தல்களுக்கும் பிரச்சாரத்துக்குச் செல்வார். காங்கிரஸ்காரர் எடுத்த படத்தில் நடிக்கும்போதும்கூட நாட்களை கேட்டுப்பெற்று கட்சிப்பிரச்சாரத்துக்குச் செல்வார். கட்சி சார்பில் தேர்தல்களில் போட்டியிட்டிருக்கிறார்
ஒருகட்டத்தில் கட்சி முரளி வாழ்க்கையில் தலையிட்டது. அவர்களே முன்கை எடுத்து அவரை குடிநிறுத்த வைத்தியத்துக்கு கொண்டுசென்றார்கள். கேரள சங்கீத நாடக அக்காடமி தலைவர் பொறுப்பையும் அளித்தார்கள். அது ஒரு புதிய தொடக்கமாக அமைந்தது
நான் சென்ற வருடம் அக்டோபரில் முரளியை லோகியுடன் சென்று பார்த்தேன். சங்கீத நாடக அக்காதடமி வளாகத்தில் தலைவருக்கான தனி கட்டிடத்தில் வசித்தார். குடியை முற்றாக நிறுத்திவிட்டிருந்தார். புதிய பொறுப்பை மிக உற்சாகமாக எடுத்துக்கொண்டு ஆவேசமாகச் செயல்பட்டுக்கொண்டிருந்தார். கொஞ்சகாலம் செயலற்றிருந்த அக்காடமி புதுவேகம் கொண்டு எழுந்துவிட்டிருந்தது.
அன்று முரளி அதிகமாகப் பேசியது அக்காடமியில் அவரது எதிர்காலத்திட்டங்களைப்பற்றியும் அவரது உடல்நிலையைப்பற்றியும்தான். அவருக்கு சிகிழ்ச்சை அளித்த ஆயுர்வேத வைத்தியர் வந்திருந்தார். குடியை நிறுத்தி சீரான உடற்பயிர்சி செய்ய ஆரம்பித்தபின் தன் உடல்நிலை மிக ஆரோக்கியமாக இருந்ப்பதாக முரளி சொன்னார். லோகியும் அவரும் தங்கள் உடல்நலம்பேணல்களைப் பற்றி விரிவாகப் பேசிக்கொண்டார்கள்.
முரளி கிட்டத்தட்ட சினிமாவையே மறந்துவிட்டிருந்தார். தமிழ் சினிமாவைப்பற்றி அவருக்கு எந்த மதிப்பும் இருந்ததே இல்லை. மலையாளத்தில் அவர் சம்பந்தப்பட்டிருந்த அந்த பொற்காலம் பின்வாங்கிவிட்டிருந்ததை அவர் உனர்ந்திருந்தார். மிமிக்ரி சினிமா என்று சமகால மலையாள சினிமாவை ஒதுக்கினார். நாடகத்தில் செய்வதற்கு நிறைய இருப்பதாகச் சொன்னார்
ஆசிய நாடக விழா ஒன்றை அவர் அப்போது ஒருங்கிணைத்துக்கொண்டிருந்தார். அதன் சின்னத்தை வெளியிடும் விழாவுக்கு என்னையும் லோகியையும் அழைத்தார். அந்தச்சின்னத்தை நான் வெளியிட்டேன். அதன்பின் டிசம்பரில் நடந்த ஆசிய நாடகவிழாவுக்கு நான் சென்று லோகியுடன் தங்கி நாடகங்களைப் பார்த்தேன். அரசு நிதிக்கு வெளியே முரளி அவரது தனிப்பட்ட முயற்சியால் நிதி திரட்டி நடத்திய ஒரு மாபெரும் நிகழ்ச்சி அது. அதற்கான ஏற்பாடுகளும் அதில் இருந்த கலையுணர்ச்சியும் மகத்தானவை.
அந்தவிழாநாட்களில் அனேகமாக தினமும் நான் முரளியைச் சந்தித்துக்கொண்டிருந்தேன். எல்லா நாடகங்களைப்பற்றியும் கறாரான அபிப்பிராயங்களை அவர் சொன்னார். அதிலும் நாடகத்துடன் சம்பந்தப்பட்டவர்களிடமே அதை அவர் சொல்லும்போது எனக்கே கஷ்டமாக இருக்கும். ஆனால் அது அவரது குணம்.
முரளி கனத்த குரல் கொண்டவர். நாடகத்துக்கென பட்டை தீட்டிய உச்சரிப்பு. பெரிய மீசை. வழுக்கைத்தலை. அழுத்தமாகவும் நிதானமாகவும் உரையாடுவார். சம்ஸ்கிருத, கிரேக்க செவ்வியல் நாடக மரபைப்பற்றி அவருக்கு விரிவான வாசிப்பு இருந்தது. பேராசிரியர்களுக்குரிய தோரணையில் அவற்றைப்பற்றி என்னிடம் அவர் பேசியிருக்கிறார். மலையாளத்தில் நான் எழுதிய எல்லாவற்றையும் அவர் வாசித்திருந்தார். ”ஜெயமோகன் மலையாளத்தில் கதை எழுதணும்…மலையாளத்தில் எழுதினால்தான் பிரயோசனம் உண்டு…தமிழில் எழுதி என்ன லாபம்?” என்று பலமுறை சொல்லியிருக்கிறார்.
1954ல் கொல்லம் அருகே குடவற்றூரில் பிறந்தவர் முரளி. அப்பா கிருஷ்ண பிள்ளை. அம்மா தேவகி. சட்டம் படித்தவர். கேரள அரசு ஊழியராக கொஞ்ச காலம் பணியாற்றினார். அப்போது தீவிர இடதுசாரி தொழிற்சங்கவாதியாக இருந்தார். மலையாள சினிமாவில் வில்லனாக புகழ்பெற்றவர் மறைந்த பேராசிரியர் நரேந்திர பிரசாத். அவர் ஒரு முக்கியமான நாடக ஆசிரியர், இலக்கிய விமரிசகர். அவரது நாட்டியகிருகம் என்ற குழுவில்தான் முரளி நாடக நடிகராக பரிணாம் பெற்றார். பின்பு காவாலம் நாராயண பணிக்கரின் நாடகக் குழுவில் நடித்தார். உடன் நடித்த பரத் கோபியின் நாடகக் குழுவில் சேர்ந்து பின்பு நடித்தார். கோபி இயக்கி வெளிவராத படமான ஞாற்றடி தான் முரளியின் முதல் படம். பின்னர் அவரை அரவிந்தன் தன் சிதம்பரம் படத்தில் நடிக்க வைத்தார். கரிகரன் இயக்கிய பஞ்சாக்னி என்ற படத்தில் வில்லனாக வந்த முரளி அனைவராலும் கவனிக்கப்பட்டார்.
முரளி இரண்டு நூல்கள் எழுதியிருக்கிறார். குமாரன் ஆசானைப்பற்றி ‘ அபிநயமும் ஆசான்றே கவிதையும்’ நாடக நடிப்பைப்பற்றி ‘அபிநயத்தின்றே ரசதந்திரம்’ அவருக்கு அந்நூலுக்காக சங்கீத நாடக அக்காடமி விருது கிடைத்தது. நெய்த்துகாரன் சினிமாவுக்காக கிடைத்த சிறந்த நடிகருக்கான தேசிய விருது[பரத்] தவிர ஏராளமான விருதுகளை அவர் பெற்றிருக்கிறார். 6௮௨009 அன்று மாரடைப்பால் காலமானார்
நாடகவிழாவில் முரளி நிறைவுரையில் அடுத்தவருடம் அவர் ஒருங்கிணைக்கவிருக்கும் உலகநாடகவிழாவைப்பற்றிச் சொன்னார். அன்றுமாலை லோகியிடம் ”செய்வதற்கு நிறைய இருக்கிரது. ஒரு நல்ல நாடக நூலகம். ஒரு நல்ல நாடகக் களரி…நாடக அரங்கு கட்டும்வேலையை பூர்த்தி செய்யவேண்டும். வந்தாயிற்று, எதையாவது செய்யாமல் போகக்கூடாது. நேரமில்லை…”
நேரமில்லை என்ற உணர்ச்சி முரளிக்கு எப்போதுமே இருந்தது. இறப்பது வரை இருந்திருக்கக் கூடும்.