விருது கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் சார்,

பரத் கோபி, முரளி கோபி மற்றும் சதனம் ராமன்குட்டி நாயர் ஆகியோரை சுற்றி அமைந்த விருது கதை படித்தேன். பின் தொடரும் நிழலின் குரலில் வரும் ஒரு கிளைக்கதையில் விக்டோரியா க்ராஸ் விருதை உதற முடியாத போர் வீரனைப் போல கோபி பத்மஸ்ரீயைப் பிடித்துக் கொள்கிறார். ஆர்கோ என்ற ஆங்கிலப் படத்தில் வரும் ஒரு தயாரிப்பாளர் கதாபாத்திரம் “சினிமா என்பது நிலக்கரிச் சுரங்கத்தில் வேலை செய்வது போல, வீட்டிற்கு வந்தாலும் அந்தக் கரியைக் கழுவிவிட முடியாது” என்று சொல்லும். அதிலும் கோபி போன்ற ஒரு மகத்தான கலைஞனுக்கு அது சாத்தியமே இல்லை போலும்..

நன்றி
கிருஷ்ணன் ரவிக்குமார்.

அன்புள்ள கிருஷ்ணன்

பொதுவாக எல்லாக் கலைகளும் மோகினிகள். பிடித்தால் விடாதவை. சினிமா இன்னும் உக்கிரமான மோகினி. ஏனென்றால் அது கூட்டுக்கலை. பலர்சேர்ந்து ஒரு கலையை உருவாக்கும் மாபெரும் போதை அதில் உள்ளது. நான் பல நடிகர்களைக் கண்டிருக்கிறேன். சாதாரண நடிகர்கள். அவர்களை இயக்குவது புகழ் அல்ல. ஒரு கட்டத்தில் அதற்குப் பழகிவிட்டிருப்பார்கள். எப்போதாவது மக்களை சந்திக்கையிலேயே தங்கள் புகழை அவர்கள் அறிகிறார்கள். மிச்சநேரமெல்லாம் சினிமா என்ற கூட்டுக்கலையின் கொண்டாட்டமே அவர்களை ஆழ்த்தி வைத்திருக்கிறது

ஜெ

அன்புள்ள ஜெ

விருது நீங்கள் எழுதிய கதைகளில் மிகவும் subtle ஆன கதை. அற்புதமான குறியீட்டுத்தருணங்கள் அதில் உள்ளன. ஆனால் அவை அழுத்திச் சொல்லப்படுவதில்லை. நானே கதையை வாசித்து ஒருநாள் கழித்து யோசிக்கையில்தான் அப்பாவுக்கான விருதை மகன் வாங்குவதாக நடிக்கும் காட்சியின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டேன். அந்தக் காட்சி இல்லாமல் மகன் அப்பாவுக்கு விருது வழங்கும் முடிவை நம்மால் சரியாகப் புரிந்துகொள்ள முடியாது.

மகத்தான பல வரிகள் உள்ளன. அப்பா இரண்டாகவும் நான்காகவும் உடைந்துகொண்டே செல்லும் அனுபவம் எனக்கும் உண்டு. என் அப்பா ஆசிரியராக இருந்தார். அவரைப் பள்ளியில் பார்க்க வேறு ஒருவராக இருப்பார். ஒரேஒருமுறை பழனிக்கு அவருடன் பாதயாத்திரை போனேன். அப்போது இன்னொரு அப்பா தெரியவந்தார். எல்லாருக்கும் உள்ள அனுபவம்தான்

அப்பா மகன் உறவு பற்றி எவ்வளவு சொன்னாலும் தீரவில்லை. நீங்களே எழுதியிருக்கிறீர்கள். ‘தந்தைக்கும் மகனுக்குமான உறவு என்பது வானத்துக்கும் பூமிக்குமான உறவைப்போல. அவ்வளவு பக்கம், அவ்வளவு தூரம்’ [விரித்த கரங்களில்]

சண்முகம்

அன்புள்ள சண்முகம்

நலம்தானே?

விருது ஒரு கணம்தான். ஒரு திடுக்கிடலுடன் நாம் நம்மைவிடப் பெரிய ஒன்றை நம்மிடம், நம் அருகே காணும் தருணம்

ஜெ

முந்தைய கட்டுரைசித்திரப்பாவை
அடுத்த கட்டுரைஇரு திருத்தங்கள்