நம் வழிகள்…

அன்பின் ஜெவிற்கு,

இப்போது தான் உங்கள் உரையைக் கேட்டு முடித்தேன். கல்வி என்பது என்ன என்று ஆற்றப்பட்ட உரை. “தல கூட சீவாம,மாசக்கணக்குல கண்ணாடி கூடப் பாக்காம ஒரு பயிற்சிக் கால கட்டம் இருக்கு” என்று ஒரு இடத்தில் கூறுவீர்கள் அது மிகப்பெரும் மனவீச்சை கொடுத்தது. அப்படிப்பட்ட ஒரு கல்வியை, ஒரு தெரிதலை அறிந்து கொள்ள விரும்புகிறேன். மனது இலகுவானது போல இருக்கிறது.இத்தனை நாட்களும் மன ‌அழுத்தம் இருந்து கொண்டே இருந்தது, இன்று தான் தெரிந்து கொண்டேன் ஏதோ ஒன்றை வெறித்தனமாக, எல்லாமே எனக்கானதாக, என்னைப் புரட்டிபோடக்கூடிய ஒரு கற்றலுக்காக ஏங்குகிறேன்என்று. நிச்சயம் அந்தக் கற்றல் எனக்கு எல்லாமுமாய் இருக்கும் என்று நம்புகிறேன் ஆனால் அது எந்த அறிவுத்துறை சார்ந்து இருக்கும் என்று தெரியவில்லை. 27 வயதில் ஆட்டு மந்தையைப் போல ஒரு ஐ.டிநிறுவனத்தில் வேலை செய்வதை சிரமமாக உணர்கிறேன். ஆனால் பொருளாதாரத் தேவைகளை இதன் மூலம் தான் தீர்த்துக்கொள்கிறேன். எனக்கான தளம் எது என்று தெரியாமல் இருப்பதன் அவமானத்தை உணர்கிறேன். இனி நிகழப்போகும் ஒரு மிகப்பெரிய கற்றலுக்காகக் காத்திருக்கப்போகிறேன்.

அப்படி ஒரு கற்றல் நிகழும் போது அதன் தொடக்கப்புள்ளியாக நீங்கள் தான் இருந்தீர்கள் என்று உரக்கச்சொல்லுவேன். தமிழின் அறிவுசார் சிந்தனையை உங்கள் வழி கண்டடைகிறேன். என்மிகப்பெரும் ஆதர்சம் நீங்கள். பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

தீராத அன்புடன்

நிலன்

அன்புள்ள நிலன்,

என் இணையதளத்தில் இந்த வகையான கடிதங்கள் தொடர்ந்து வந்துகொண்டிருப்பதை, நான் மீளமீள அவற்றுக்குப்பதில் சொல்லிக்கொண்டிருப்பதை நீங்கள் காணலாம். ஏனென்றால் இது ஒரு முக்கியமான சமகாலப்பிரச்சினை

ஓர் இளைஞனைப்பொறுத்தவரை அவன் யார் என அவனே தேடிக்கண்டுகொள்கிற வயது அவனது பதின்பருவம். அங்கே குழப்பங்கள் தள்ளாட்டங்கள் அசட்டுப்பாய்ச்சல்கள் எல்லாம் நிகழ்ந்து மெல்ல அவன் தன் ஆற்றலையும் அவ்வாற்றல் வெளிப்படவேண்டிய துறையையும் கண்டுகொள்கிறான்

மேலும் பதின்பருவத்தில் ஆற்றல் மிக அதிகம். கவனச் சிதைவில்லாமல் செயலாற்ற முடியும். கொஞ்சம் வயது தாண்டுகையில் வாழ்க்கை பற்றிய அச்சமும் எதிர்காலக்கணிப்புகளும் வந்துவிடுகின்றன. அதன்பின் ஒருவன் ஏதாவது ஒருதுறையில் இறங்கித் தேடுவதென்பது மிக கடினமானது

நம் குடும்ப- சமூகச்சூழலில் பதின்பருவத்தினரை பெற்றோர் அவர்கள் விரும்பும் தொழில்சார் கல்விகளில் ஈடுபடுத்திவிடுகிறார்கள். பதின்பருவம் அப்படிக் கழிந்தபின்னர்தான் நம் இளைஞர்கள் வாழ்க்கையில் தன் இடம் பற்றி யோசிக்கிறார்கள். அது கொஞ்சம் பிந்திய வயது.

ஆனால் எதுவுமே ‘மிகமிகப்பிந்திய’ காலம் அல்ல. எந்த காலத்திலும் எதையும் செய்யமுடியும். எதையும் தொடங்க முடியும். முக்கியமாக சில சொல்ல விரும்புகிறேன். இவை சென்ற பத்தாண்டுகளாக நூற்றுக்கணக்கான இளம் வாசகர்களை கவனித்து உருவாக்கிய அவதானிப்புகள்தான்

பதின்பருவம் தாண்டியபின் கூடுமானவரை முழுமையாகத் துண்டித்துக்கொண்டு புதிய எதிலும் குதிப்பதைத் தவிர்க்கவேண்டும். ஏனென்றால் பலசமயம் அப்படி குதிப்பது வெற்று விருப்பக்கற்பனை ஆக இருந்துவிடக்கூடும். குதித்தபின் அது நம் இடமல்ல என்று தெரிந்தால் நம்மால் திரும்பிவரமுடியாமலாகும்.

நாம் இருக்கும் இடம் சார்ந்த பிடியை விடாமலேயே நம் ஆர்வங்களைப் பல திசைகளை நோக்கித் திறக்க முடியும். நம் அகம் எங்கே தன்னை கண்டுகொள்கிறது, எந்த இடம் நோக்கி நம் விருப்பமும் கற்பனையும் ஆற்றலும் பீரிட்டுச்செல்கின்றன என்று நாம் அவதானிக்கவேண்டும். அவற்றில் ஈடுபடவேண்டும்.

இளமையில் நம் ஆற்றலை நமக்குத்தேவையானபடி விரித்துக்கொள்ள முடியும். என்னுடைய சொந்த அனுபவம், ஒரு மனிதன் ஒருநாளில் பதினைந்து மணிநேரம் தீவிரமாக உழைக்கமுடியும் என்பதே. நான் அப்படி உழைப்பவன். நம்முடைய அன்றாட வாழ்க்கைக்கு மேலாக ஏழெட்டுமணிநேரத்தை சாதாரணமாக நாம் நமக்குப்பிடித்தமான துறைகளுக்காக எடுக்கமுடியும்.

அதற்கான வழிகளில் முக்கியமானது, பொதுவாக அனைவரும்செய்யக்கூடிய கேளிக்கைகள், அரட்டைகள் போன்றவற்றைத் தவிர்ப்பதே. நம் இளைஞர்கள் சமூக வலைத்தளங்களில் செலவிடும் நேரத்தை அவர்கள் விரும்பும் எந்த துறையில் செலவிட்டிருந்தாலும் பெரிய வெற்றிகளை ஈட்டியிருப்பார்கள்.

இன்று தமிழில் மொழி,பண்பாடு, வரலாறு என எந்த தளத்திலும் ஆழமான படிப்பும் திறனும் கொண்ட இளைஞர்கள் இல்லை. அதற்குக் காரணம் நம் இளைஞர்கள் அன்றாட உழைப்புக்கு மேலே முழு நேரத்தையும் கேளிக்கைகளில் செலவிடுவதுதான். நான் கேளிக்கைகளில் ஈடுபடும் ஓர் இளைஞைனிடம் பத்து நிமிடங்களுக்கு மேல் பேசக்கூடாது என்ற எண்ணம் கொண்டவன். அவன் தன் வாழ்க்கையை வீணடிக்கிறான் என்றே நினைப்பவன்.

நாம் நமக்கான துறையைக் கண்டடைந்து அதில் முழுமையாக செலுத்திக்கொள்ளவேண்டிய காலகட்டமே இளமை என்பது. அவ்வாறு பல தளங்களில் நாம் நம்மை ஈடுபடுத்திப்பார்க்கையில்தான் உண்மையில் நாம் யார் என நாமே அறியமுடியும். ஒரு தளத்திற்குள் சென்றபின்னரே அது நம்முடையதா இல்லையா என நாம் உணர்கிறோம். நம்முடையதல்ல என்றால் விலகிக்கொள்ளும் சுதந்திரம் நமக்கிருக்கவேண்டும்.

அவ்வாறு நம் இடத்தைக் கண்டுகொண்டபின் அதில் முழுமூச்சாக ஈடுபடுவதே உண்மையான வாழ்க்கையின்பம். செயல் போல நிறைவளிக்கக்கூடிய ஏதுமில்லை. ஏனென்றால் மனிதன் அதற்காகப் படைக்கப்பட்டவன். நமக்குப் பிடித்த தளத்தில் செயலாற்றுவதையே யோகம் என்கிறோம். அது நம்மை நாம் கண்டடையும் வழி. நம்மை முழுமைப்படுத்திக்கொள்ளும் வழி.

ஜெ

முந்தைய கட்டுரைஎழுத்தாளர்களின் தனிவாழ்க்கை
அடுத்த கட்டுரைஏழாம் உலகம்-கடிதம்