நாவல்- கடிதங்கள்

அன்புள்ள ஜெ,

நான் தங்களது சமீபத்திய வாசகன். உங்களது “காடு” நாவலை படித்துவிட்டுக் கிறங்கிப் போய் உள்ளேன். சற்றும் யோசிக்காமல் நான் இதுவரை படித்த புதினங்களில் சிறந்தது என்று உங்கள் “காடு” புதினத்தைச் சொல்வேன்.

சமீபத்தில் நடந்த புத்தகக் கண்காட்சியில் உங்களின் பெரும்பான்மையான புதினங்களை வாங்கிவிட்டேன். இதில் “பின் தொடரும் நிழலின் குரல்” மட்டும் எங்கும் கிடைக்கவில்லை. இணையம் மூலம் வாங்கலாம் என்று பார்த்தால், அதிலும் கிடைக்கவில்லை.

தங்களது இந்தப் புதினம் எங்கு கிடைக்கும் என்று தெரிவித்தால் நன்று.

ஒரு சிறு ஐயம், விக்கிபீடியாவில் தாங்கள் இப்போது “அசோகவனம்” என்ற புதினத்தை எழுதிக் கொண்டிருப்பதாக ஒரு தகவல் உள்ளது. இதுதான் தங்களது அடுத்த புதினமா?

http://en.wikipedia.org/wiki/Jeyamohan

– கிருஷ்ணா.

அன்புள்ள கிருஷ்ணா

நலம்தானே?

பின் தொடரும் நிழலின் குரல் தமிழினி போட்ட நூல். இப்போது பிரதிகள் தீர்ந்திருக்குமென நினைக்கிறேன். மறுபதிப்பு விரைவில் வரலாம்.

அசோகவனம் என் அடுத்த பெரியநாவல். இன்னும் கால்வாசி எழுதிமுடிக்கவேண்டும்

ஜெ

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு ..

நலம் அறிய ஆவல். திருச்சி சந்திப்பில் கேட்க என்று வேண்டும் என்று நினைத்த கேள்வி
ஒரு படைப்புக்கு மீள்வாசிப்பு கோரலை எந்தத் தன்மை கொடுக்கிறது .

வாசகனின் மன இயல்பா ..?உதாரணத்திற்கு உங்கள் படைப்புகளில் உலோகம் ,அனல்காற்று போன்ற நாவல்களை ஒரு முறைக்கு மேல் எப்போதும் படிக்க முடியாத (தூண்டாத ) ஒன்றாகவே கருதுகிறேன்.

ஆனால் காடு , விஷ்ணுபுரம் , பின் தொடரும் நிழலின் குரல், இன்னும் பெரிய பட்டியல் கொண்ட சிறு கதைகள் மற்றும் குறு நாவல்கள் வாழ்நாள் முழுக்க மீள் வாசிப்பின் வழி மேலும் நுட்பம், கற்பனை , மன விரிவை அளித்தபடி போகும் அற்புதங்களில் ஒன்றாகக் கருதுகிறேன்.

எந்த தன்மை..? என்ன காரணம் ..?

தினேஷ் நல்லசிவம்

அன்புள்ள தினேஷ்,

நீங்கள் அங்கேயே கேட்டிருக்கலாமே.

பொதுவாக நாவல்களை நாம் இரண்டு காரணங்களுக்காக மீண்டும் வாசிக்கிறோம்- என் அனுபவம்.

கதைச்சுவாரசியத்தால் நம்மை இழுத்துக்கொண்டுசென்ற நூல்களில் பல பகுதிகள் நம்மை வந்தடைந்திருக்காது. கதைச்சுவாரசியம் என்பதே கதையின் ஒரு அம்சத்தில் அதிக கவனம் குவிதல்தான். அதை கவனித்து பிறவற்றை விட்டிருப்போம். ஆகவே மீண்டும் வாசிக்கிறோம்.

தர்க்கம், தரிசனம் கவித்துவம் ஆகியவை செறிந்த நூல்களை நாம் பலமுறை வாசிக்கிறோம். ஏனென்றால் அவை முதல்வாசிப்பில் முழுமையாக நம்மை வந்தடைவதில்லை. இன்னொரு முறை வாசிக்கையில் முதலில் நமக்கிருந்த பல தடைகள் அகன்றிருப்பதை நாம் காண்கிறோம்.

பொதுவாக நாவல்களில் கதையை நாம் நன்றாகப் புரிந்துகொண்டபின்னர் வாசிக்கையில்தான் அதன் நுட்பங்கள் திறக்க ஆரம்பிக்கும்.

ஜெ

முந்தைய கட்டுரைவெண்கடல்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைவாழைப்பழ தேசம்-கடிதங்கள்