டிரினா நதிப் பாலம்

போஸ்னியாவில் துருக்கிய முஸ்லீம்களும் செர்பியக் கிறித்தவர்களும் சேர்ந்து வாழும் விஷகிராத் என்ற சிறிய நகரத்துக்கு அருகே டிரினா என்ற ஆறு வருடம் முழுக்க நீருடன் பாறைகள் நடுவே நுரைத்துச் சுழித்து ஓடிக் கொண்டிருந்தது. 1516 ல் அந்த ஆற்றைக் கடந்து ஒரு துருக்கிய முஸ்லீம் படை இஸ்தான்புல் நோக்கிச் சென்றது. அவர்கள் ஆற்றுக்கு அப்பாலிருந்த ஸக்கோலோவீஷி என்ற சிறு கிராமத்தைத் தாக்கி அங்கிருந்த செர்பியக் குடும்பத்திலிருந்து ஒரு சிறுவனைப் பிடித்து இஸ்தான்புல்லுக்குக் கொண்டு சென்றார்கள்.

அவனைப்போன்று பல சிறுவர்கள் அப்படிச் சிறைப்பட்டுக் கொண்டுசெல்லப்பட்டார்கள். செர்பியப் பையன்களை பிடித்துக் கொண்டுசென்று மதம் மாற்றுவதை துருக்கியர் தங்கள் மதக்கடமையாகச் செய்து கொண்டிருந்த காலகட்டம் அது. சுல்தானுக்கான வரியைக் கொடுக்காத கிராமங்களில் இருந்து சிறுவர்களைப் பிடித்துக் கொண்டுசெல்வார்கள்.

சிறுவர்களின் அன்னையர் கதறியழுதபடி அவர்களுக்குப் பின்னாலேயே வந்தார்கள். அச்சுறுத்தல்கள், அடிகள் , ரத்தகாயங்கள் எதுவுமே அவர்களை நிறுத்தவில்லை. அவர்கள் டிரினாவின் கரைக்கு வந்தபோது நிற்க நேர்ந்தது. அப்போது டிரினா நீரோட்டம் மிகுந்திருந்தது. தெப்பங்கள் வழியாக படை ஆற்றைக் கடக்க ஒரு நாள் முழுக்க தேவைப்பட்டது. அன்னையரால் ஆற்றைக் கடந்து வரமுடியவில்லை.

பெற்றோரிடமிருந்து பிரிக்கப்பட்டு சிறைப்பட்டு அறியாத ஆற்றைக் கடந்து சென்றபோது அச்சிறுவனின் நெஞ்சில் கூரிய ஈட்டி குத்தி ஊடுருவுவது போன்ற வலி ஏற்பட்டது. மறுபக்கம் அவனது அன்னையின் கண்ணீரில் ஊறிய முகம் நிரந்தரமாக நிலைத்துவிட்டது. அவனால் அந்த நீரை பார்க்காமலிருக்க முடியவில்லை. அவனது விதி போல, காலம் போல, அவனை மீறி எதுவோ போல பெருகும் நதி…

அந்தப் பையன் இஸ்தான்புல்லுக்குச் சென்று மதம் மாற்றப்பட்டு முகமது பாஷா ஆக மாறினான். தன் அறிவாலும் நுண்திறனாலும் அறுபதாவது வயதில் கலீ·பாவின் வஸீர் ஆக ஆனார். அத்தனை காலமும் அவன் நெஞ்சுக்குள் அந்த வலி இருந்துகொண்டுதான் இருந்தது. தூக்கத்திலும் கனவிலும் ஈட்டி அவரை ஊடுருவியது. ஆற்றுக்கு அப்பால் ஓர் அழுத முகம், அவரது அன்னையின் முகம். வஸீர் ஆனதுமே அவன் ஒரு முடிவெடுத்தார். டிரினா நதியின் குறுக்காக ஒரு பாலம் கட்டுவதென்று. அப்பாலம் வழியாக மறுபக்கம் சென்று அவர் அடைய எண்ணியது என்ன? அவர் எதை வெல்ல விரும்பினார்?

பாலமா? நடக்கும் காரியமே அல்ல. அத்தனை பெரிய நதி. எப்போதும் நீர் பெருகும் நதி. ஆனால் வஸீர் அகமது பாஷா பின்வாங்கவில்லை. செல்வத்தை அள்ளி இறைத்தார். தோஸ¥ண் இ·பாண்டி என்ற சிற்பியை அவர் விஷகிராதுக்கு அனுப்பினார். நிர்வாகத்துக்காக அபி தாகா என்ற தளபதியை கூடவே அனுப்பினார். சிற்பிக்கு தன் வேலையன்றி வேறெதிலும் ஆர்வமில்லை. சிதல் போல அவன் ஒவ்வொரு கணமும் பாலம்கட்ட ஆரம்பித்தான்.

சிவந்த முகமும் கூடிய மீசையும் குறுந்தாடியும் கொண்ட அபி தாகா சொன்னான், ”என் குரூரத்துக்கு அளவே இல்லை. என் மரங்களுக்கு கீழே நிழலும் இல்லை”.செர்பியர்கள் கிராமம் கிராமமாகச் சென்று அழைத்துவரப்பட்டார்கள். அவர்கள் உடலில் அடிமை முத்திரை குத்தப்பட்டது. கட்டாய அடிமை உழைப்புக்கு அவர்கள் மந்தை மந்தையாக ஓட்டிச்செல்லப்பட்டார்கள். அவர்கள் உடலில் இருந்து கண்ணீரும் வியர்வையும் ரத்தமும் ஒழுகின. அவர்களின் குழந்தைகள் பசித்து இறந்தன. நீர் பெருகும் டிரினாவில் மூழ்கி பலர் இறந்தார்கள். ஆனால் உழைப்பு ஓயவேயில்லை.

யூனிஷா என்ற கிராமத்திலிருந்து வந்த ராடிஸா ஒரு செர்பியன். நாவன்மையும் சுயமரியாதையும் உள்ளவன்.அவன் தன் இனத்தவரிடம் சொன்னான், ‘ரத்தம் ஒரு வீண்பொருள் அல்ல’ என்று. ஆனால் செர்பியர்கள் ரத்தம் சிந்திக் கொண்டிருந்தாலும் அவனை நம்பவில்லை. முட்டாள்தனமாகச் சாவதைவிட முட்டாள்தனமாக வாழ்வது மேல் என்று அவர்களுக்கு தெரியும்

செர்பியர்களின் தேவதைகள் ராடிஸாவுடன் சேர்ந்துகொண்டன. பாலம் கட்டும் வேலையில் பல சிக்கல்கள் உருவாகின. பகலில் கட்டிய பாலப்பகுதிகள் இரவில் இடிந்தன. வேலை கிட்டத்தட்ட நின்றது. இது கடவுளுக்கு எதிரான மனிதனின் அகங்காரம், ஆகவே இவ்வேலையை முடிக்க கடவுள் அனுமதிக்க மாட்டார் என்றனர் செர்பியர். இது சாத்தானின் கனவு என்றனர் துருக்கிய அடிமைகள். வசீரின் ஆணவம் ஒருபோது டிரினாவால் சகித்துக் கொள்ளபப்ட மாட்டாது என நம்பினார்கள்.

வெறிகொண்ட அபி தாகா பாலக்காவலுக்குப் பொறுப்பாக இருந்த ப்லவஜா கிராமத்துத் தலைவனைக் கூப்பிட்டு எச்சரித்தான். செர்பியர்களின் தேவதைகளை உடனே கண்டுபிடித்தாகவேண்டும். இல்லாவிட்டால் தினம் ஒரு ப்லவஜா கிராமத்தான் கழுவிலேற்றிக் கொல்லப்படுவான். அபி தாகா ஒருபோதும் வீண்சொல் சொல்வதில்லை.

ப்லவஜாக்காரர்கள் இரவுபகலில்லாமல் தேடினார்கள். ஒவ்வொருவரும் மானசீகமாக நூறுமுறை கழுவிலேறினார்கள். கடைசியில் ராடிஸா கண்டுபிடிக்கப்பட்டான். தேவதைகள் அவனில் உறைகின்றன என்று தெரிந்தது. அவனை அபி தாகா முன் கொண்டு வந்து நிறுத்தினார்கள். அபி தாகா அவனை விசாரித்தான். உன் தோழர்களைச் சொல் என்று கேட்டான். நானேதான் என்றான் ராடிஸா. அபி தாகாவின் சித்திரவதை முறைகள் தொடங்கின. சுட்டுபழுத்த சங்கிலிகள் ராடிஸாவில் உடலில் சுற்றப்பட்டன. எரியும் தீக்கனல் மீது அவன் படுக்க வைக்கபப்ட்டான். அவன் நகங்கள் குறடுகளால் பிடுங்கப்பட்டன. உன்னை இப்படிச் செய்யச்சொன்னது யார் என்றார்கள் காவலர்கள். பிராசு என்று அவன் சொன்னான்.

பின்னர் அவன் கழுவேற்ற நிபுணனாகிய மெர்ஜான் என்ற ஜிப்ஸியிடம் ஒப்படைக்கப்பட்டான். ராடிஸா பாலமருகே சதுக்கத்துக்கு கொண்டுவரப்பட்டான்.மெர்ஜோன் ராடிஸாவின் இரு கால்களிலும் கயிற்றை கண்ணி போட்டு இழுத்து அகற்றி இரு முளைகளிலாக கட்டினான். ராடிஸாவின் கால்சட்டையில் குதமருகே வட்டமாக ஓட்டை போட்டான். கத்தியால் அவனது குதத்தை சற்று கிழித்து பெரிதாக்கினான். கூரிய இரும்பு முனை பதிக்கப்பட்ட வழுவழுப்பான மரத்தடி தயாராக இருந்தது. அதை மெல்ல மெல்ல ராடிஸாவின் குதம் வழியாக ஏற்றினான் மெர்ஜான். ஒவ்வொருமுறை கழு உள்ளே ஏறும்போது ராடிஸா ஒருமுறை குலுங்கினான்.ஆனால் ஒலி ஏதும் எழுப்பவில்லை.

சுற்றும் கூடியிருந்த பாலம் கட்டும் தொழிலாளர்கள் அதைப்பார்க்க எம்பி எம்பி முயன்றார்கள். அனைவருக்கும் தெரியவில்லை. ஆகவே சண்டை ஏற்பட்டது. ராடிசாவின் தரப்பைச் சேர்ந்தவர்களே அந்த அபூர்வக் காட்சிக்காக முண்டியடித்தார்கள். ஏதாவது ஒன்று விசித்திரமாக நிகழ வேண்டுமென ஆசைப்பட்டார்கள். ஒன்றும் நிகழவில்லை. சற்று நேரமானபோது ராடிஸாவின் வலப்பக்கத் தோளில் ஒரு வீக்கம்போல வந்தது. மெர்ஜான் அந்த இடத்தை கத்தியால் வெட்டி உள்ளிருந்து கழுநுனியை வெளியே எடுத்தான். பின்னர் இரு ஜிப்ஸிகள் கழுமரத்தை மெல்லமெல்ல தூக்கினார்கள். தசைநார்கள் இழுபட்ட ராடிஸாவின் முகம் ஒரு முகமூடி போல இருந்தது. கழுவை தூக்கி அதை அறைந்து நிறுத்தியபோது ராடிஸா உயரத்தில் ஒரு சிலைபோல தெரிந்தான். அவனுக்குள் ஒரு மரத்தடி இருப்பதாகவே தென்படவில்லை.

ஆனால் திடீரென்று ஒரு குரல் எழுந்தது ‘துருக்கியர்களே நீங்கள் நாய்களைப்போல சாவீர்கள்’ அது ராடிஸா சொன்னது என்று எல்லாருக்கும் தெரிந்தது ஆனால் நம்பவும் முடியவில்லை. அன்று மாலைக்குள் செய்தி செர்பிய கிராமங்கள் தோறும் பரவியது. ராடிசாவை பிடித்துக் கொடுத்த ப்லவஜாக்காரர்களின் தலைவன் ஓடிப்போய் நடந்தவற்றை அபி தாகாவிடம் சொன்னான். அபி தாகா தன்னைக் கொல்வாரென எதிர்பார்த்தான்.ஆனால் நிலைகுலைந்த அபி தாகா குதிரையை சாட்டையால் விளாசி விரைந்து அகன்றான். நான் சாகவில்லையா? விடுதலையா? அக்கணமே தலைவனுக்கு மனம் பேதலித்தது. அவன் சிரித்து நடனமிட ஆரம்பித்தான். ப்லவஜாக்காரர்கள் அவனை தங்கள் கிராமம் நோக்கி ஒரு வண்டியில் கைகால்கள் கட்டி கொண்டுசென்றார்கள்.

அபி தாகாவின் ஆட்சி முடிவுக்கு வந்தது. அவன் வசீர் பாஷா பாலம் கட்டுவதற்காக ஒப்படைத்த பணத்தில் பெரும்பகுதியை கொள்ளையடித்துவிட்டு செர்பியர்களை அடிமைகளாக வேலைவாங்கிய செய்தி அவருக்கு தெரிந்தது. செர்பியர்களின்பால் வஸீருக்கு ஆழத்தில் பிரியம் இருந்தது. அபி தாகா இஸ்தான்புல்லுக்கு அழைக்கப்பட்டான். ஏன் என்று தெரியாமல் கிளம்பிய அவன் ‘என் கண்கள் இங்கே ஒவ்வொரு ஆணிமுனையிலும் உண்டு’ என்று அனைவரையும் எச்சரிக்கை செய்துவிட்டு பயணமானான். வஸீர் அவனை சிறையில் அடைத்தார். அவன் சுரண்டிய பணத்தை முழுக்க திருப்பியளிக்க வேண்டுமென்று ஆணையிட்டார். அனடோலியாவில் உள்ள ஒரு சிற்றூருக்கு அவனை முத்திரைகுத்தி நாடுகடத்தினார்

பிறகு வந்த கருணையுள்ளவனாகிய ஆரீ·ப் பேக் பாலக் கட்டுமானப்பணியை தொடர்ந்து நடத்தினான். ஆனால் வேலையின் மிகக் கஷ்டமான பகுதி என்பது டிரினாவில் அஸ்திவாரமிடுவதுதான், அதை அபி தாகா ரத்தத்தாலும் மாமிசத்தாலும் செய்து முடித்துவிட்டிருந்தான். ஆகவே ஆரீ·ப் பேக் மென்மையாக நடக்க முடிந்தது. செர்பியர் அவரை வழுக்கைமாமா என்ற பொருளில் மிசிரிபாபா என்று அழைத்தார்கள்.

ஐந்துவருடங்களில் பாலம் கட்டி முடிக்கப்பட்டது. ஆனால் அதன் மரக்காப்புகளை முற்றாக எடுப்பதுவரை மக்கள் அவ்வேலை முடிவடையும் என்றே எண்ணவில்லை. கடைசியில் பதினொரு வளைவுகள் கொண்ட பாலம் அவர்களின் கண்முன் நிற்கக் கண்டார்கள். கடவுளால் ஏவபப்ட்ட டிரினாவை மனிதன் வென்றுவிட்டான்! ஆனால் செர்பியர்கள் அது கடவுளின் ஆசி என்று எண்ன ஆரம்பித்தார்கள். ஆரீப் பேகின் கருணையின் விளைவு என்றார்கள். ஆனால் அகமதேக ஷேதா என்ற கோதுமைவணிகன் மட்டும் அது அபி தாகாவின் ஈடிணையற்ற கொடுமையின் வெற்றி என்றும், கடைசியில் பிசாசே வெல்லும் என்றும் வாதிட்டான்.

வசீர் பாஷா வந்து பாலத்தைப் பார்த்தார். பாலம் வழியாக மெல்ல நடுங்கும் கால்களுடன் நடந்து மறுபக்கம் சென்று பார்த்தார். அவரது நெஞ்சுவலி மறைந்தது. ஆனால் அவரால் அதிக காலம் வாழ முடியவில்லை. வெள்ளிகிழமை ஜும்மா மசூதிக்குச் செல்லும்போது அவர் பிச்சைக்காரர்களுக்கு பிச்சையளிக்க சற்றே நின்றார். ஒரு பிச்சைக்காரன் உடைக்குள் இருந்து கத்தியை உருவி அவரை குத்திக் கொன்றான். டிரினா நதிப்பாலத்தைக் கட்டுவதற்காக உருக்குலைந்த குடும்பங்களில் ஒன்றைச் சேர்ந்தவனாக இருக்கலாம் அவன். பிச்சைக்காரனை காவலர் உடனடியாகக் கொன்றார்கள். வஸீர் பாஷாவின் உடலை தழுவியபடி அவனது நைந்த உடல் மசூதியின் மாபெரும் கும்மட்டங்களின் நிழலில் கிடந்தது.

வசீரின் மரணம் மெல்லத்தான் விஷகிராதை அடைந்தது. மரணம் போல குளிர்ந்த செய்தியாக இருந்தது அது. விசாரணைகளுக்காக செர்பியர்கள் கொண்டுசெல்லப்பட்டபடியே இருந்தார்கள். சென்ற எவருமே மீளவில்லை. உயிர்வாழ்வதற்கான ஓயா போராட்டத்தில் அவர்களை அவர்கள் உற்றாரும் மறந்தார்கள். ஆனால் பதினொரு வளைவுகள் கோண்ட மாபெரும் பாலத்தைப் பார்க்கும்போதெல்லாம் அவர்கள் துயர நினைவுகள் கடும்குளிர்காற்று போல தங்களை தழுவுவதை உணர்வார்கள்.

டிரினா ஓயாமல் குமிழியிட்டு ஓடியது. பாறைகளில் நுரைத்துச் சிரித்துச் சென்றது. பெருவெள்ளங்கள் வந்துசென்றன. மெல்ல மெல்ல அப்பாலம் மக்களின் வாழ்க்கையின் இன்றியமையாத பகுதியாக ஆகியது. பாலம் ஏறி மறுபக்கம் சென்றுதான் அவர்களில் பலரும் வணிகம் செய்ய வேண்டும். அவர்களின் கால்கள் பாலத்துக்குப் பழகின. பின்னர் மெல்ல அது அவர்களின் மனதுக்குள் குடியேறியது. அதிலேறி நடந்த இளைஞர்கள் முதியவர்கள் ஆனபோது அது இனிய நினைவுகளின் அடையாளமாக மாறியது. அடுத்த தலைமுறையினருக்கு அவர்கள் இனிய நினைவுகளைச் சொல்லிச் சென்றார்கள். ஆகவே பாலம் அந்நகரின் முகமாக, ஆத்மா தெரியும் வாசலாக மாறியது.

இருநூற்றி ஐம்பது அடி நீளமுள்ளது அந்தப்பாலம். பத்து அடி அகலம். பாலத்துக்கு நடுவே இருபது அடி அகலமுள்ள சிறு பகுதி உண்டு. அதை காப்பியா என்றார்கள். அது ஒரு அரங்கம் போலிருக்கும். பாலத்திற்கு இருபக்கமும் அரைமதில்கள். காப்பியாவில் பக்கச்சுவர் மிக உயரமானது. சுவரோடு சேர்ந்து ஆட்கள் அமர்வதற்கான கல்பெஞ்சுகள் போடபப்ட்டிருந்தன. நேர் எதிபக்கம் சுற்றுசுவர் இன்னும் உயரமானது. அங்கே பெஞ்சுகள் இல்லை. அங்கே ஒரு கல்பலகையில் அதைக் கட்டிய வசீர் முகமது பாஷா அதைக் கட்டிய தகவலும் வருடமும் துருக்கி மொழியில் பொறிக்கப்பட்டிருந்தன.

”ஆம், அதைக்கட்டியது அவர்தான். மாமனிதனாகிய வசீர் அகமது பாஷா என்பவர்” கிழவர்கள் சொன்னார்கள். ”நல்லவர் என்றுதான் சொல்கிறார்கள். அவரை பிசாசின் ஆணைப்படி பேய்பிடித்த ஒருவன் கொன்றான்”. பாலத்தைப் பற்றி ஏராளமான கதைகள். அக்கதைகளில் ஒன்றுதான் வசீரின் கதையும். ஊரில் உள்ள செர்புகளுக்கும் போஸ்னியருக்கும் பாலமே குழந்தைப்பருவத்தில் விளையாட்டுமைதானம். வளைவுகளில் ஏறி கீழே ஓடும் டிரினாவின் நீலநீரைப்பார்த்தபடி புறாக்களைப் பிடிப்பது மனம் பதறவைக்கும் வீர விளையாட்டு. பாலத்தில் நின்று தூண்டிலிட்டு மீனும் பிடிக்கலாம். அது கிழவர்கள் செய்வது, தாத்தாக்களுடன் வரும் சின்னப்பையன்களின் விளையாட்டு அது.

ராதி என்ற தேவசிற்பி கட்டிய பாலம் அது என்பார்கள் தாத்தாக்கள். பாலம் கட்டிமுடிக்கும்வரை அவனுக்கு ஆயுள் அளிக்கப்பட்டிருந்ததனால் அவன் ஆயிரம் வருடம் உயிர்வாழ்ந்தான். பாலத்தை அழிக்க தெப்பக்காரர்களின் தெய்வம் பலவகையான தடைகளை உருவாக்கியது. ராதி தன் ஞானதிருஷ்டியால் அதைக்கண்டான். இரட்டைக்குழந்தைகளை கொண்டுவந்து அந்த தேவதைக்குப் பலிகொடுத்தாலன்றி பாலம் நிற்காது என்றான். வசீர் பாஷாவின் வீரர்கள் ஊர்களெல்லாம் தேடி கடைசியில் குழந்தைகளைக் கண்டடைந்தார்கள். அவர்களை அன்னையின் மடியிலிருந்து பிடுங்கிக் கொண்டுவந்து ராதியிடம் கொடுத்தார்கள்.

ஆனால் அந்த அன்னை எத்தனை சொல்லியும் கேட்காமல் கதறியபடியே பாலம் வரை வந்தாள். ராதியிடம் காலில் விழுந்து கெஞ்சி மன்றாடினாள். ராதி குழந்தைகளை பாலத்தின் கனத்த தூண்களுக்குள் போட்டு கற்களை அடுக்கி பாலத்தைக் கட்டினான். ஆனால் அந்த தாய்க்கு அவன் ஒரு சலுகையை அளித்தான். அந்ததூணில் இரு சிறு ஓட்டைகளைப் போட்டு வைத்தான். அந்த அன்னை அந்தத் துளைகள் வழியாக தன் முலைக் காம்புகளை உள்ளே விட்டு அந்த குழந்தைகளுக்கு பாலூட்டுவாள். பின்னர் அவளைக் காணவில்லை. ஆனால் அந்த தூண்களுக்கு உள்ளிருந்து வெள்ளைநிறமான பால் அவ்வப்போது ஒழுகுவதுண்டு. அது உலர்ந்ததும் சுரண்டி எடுத்து குழந்தைபெற்ற தாய்மாருக்குக் கொடுப்பார்கள். அது முலைப்பால் ஊறவைக்கும் அருமருந்து.

பாலத்தின் நடுவே உள்ள தூணில் ஓர் அரபியை போட்டு கட்டிவிட்டார்கள். கல்லின் இடுக்குகள் வழியாக நீண்டநேரம் கூர்ந்து பார்த்தால் அவனை இருளுக்குள் நிழலாகக் காண முடியும். பல குழந்தைகளும் அவனைக் கண்டார்கள். இரவில் எழுந்து சிறுநீர் பெய்து கதறி அழுதார்கள். கல்லில் சிறைப்பட்ட அந்த அரபி அவர்களின் கனவிலும் அவர்கள் வளர்ந்த பின்னும் சிறையிலிருந்தான்.

பாலத்துக்கு அருகே நதிப்பாறைகளில் வட்டமான சிறிய குழிகள் உண்டு. மார்க்கோ என்ற புராண வீரனின் சரகா என்ற வீரப்புரவியின் குளம்பு பதிந்த தடங்கள் அவை என்று செர்பிய குழந்தைகள் சொல்லின. அவனை மலைக்குமேல் ஒரு கோட்டையில் சிறை வைத்திருந்தார்கள். அவன் தன் மாயக்குதிரையில் ஏறி கோட்டையை ஒரே தாவலாகத் தாண்டி தப்பினான். அவனது குதிரை ஊரில் ஒரே இடத்தில்தான் கால்பதித்தது. அந்தக்குழிதான் அது. ஆனால் போஸ்னியக் குழந்தைகள் அதை ஏற்கவில்லை. அவை உடனே மணனி அள்ளி வீசி திட்டி சண்டைக்கு வரும். அது அலிஜா என்ற இஸ்லாமிய வீரனின் சிறகுள்ள குதிரையின் காலடிகள் அல்லவா?

நதியின் இடக்கரையில் இருந்தது ஒரு மண்மேடு. அதை சவமேடு என்றார்கள். அங்கே ராடிஸா என்ற செர்பியக் கிறித்தவ வீரன் கொல்லப்பட்டான் என்றார்கள். அவன் பாலம்கட்டிய துருக்கியர்களின் கொடுமைக்கு எதிராகப் போரிட்டான். அவனுக்கு மந்திரம் தெரியுமென்பதனால் அவனை துருக்கியர் ஒன்றும் செய்ய முடியவில்லை. அவனை அவர்கள் தூங்கும்போது பட்டுச்சால்வையால் மூடி அப்படியே பிடித்தார்கள். செர்பிய மந்திரம் சீனத்துப்பட்டு முன் தோற்றுவிடும். அவனை அவர்கள் கொண்டுபோய் அபப்டியே டிரினாவில் முக்கி கொன்றார்கள். அவனது ஆவி புறாவாக எழுந்து சொற்கம் சென்றது.

ஆனால் துருக்கியக் குழந்தைகள் கேட்ட கதையே வேறு. பாலத்தைக் கடந்து துருக்கியை ஆக்ரமித்து க·லிபாவின் புனித மண்ணை அழிக்க வந்த கா·பிர்களை எதிர்த்து தன்னந்தனியாக நின்று போரிட்டு இறந்த ஹேக் துர்ஹானிஜா என்ற மாவீரனின் மரணம் நிகழ்ந்த இடம் அது. அங்கே நின்று பிரார்த்தனை செய்தால் அல்லா அந்த பிரார்த்தனையைக் கேட்பார்!

விஷகிராதுக்கு வரும் பயணிகள் அந்தப் பாலத்தைப் பற்றி வியந்து எழுதுவார்கள். அது அந்நகரின் இதயம். அங்கேதான் இளம் ஜோடிகள் தங்கள் துணைகளை கண்டுபிடிக்கின்றன. குடும்பங்கள் தங்கள் இனிய நாட்களை செலவிடுகின்றன. நிலா நாட்களில் பாலத்திலும் அதைச் சுற்றியும் நல்ல கூட்டமிருக்கும். சிற்றுண்டி வியாபாரிகளும், ருமேனியக் கழைக்கூத்தாடிகளும், அரபுப் பாடகர்களும், சாயம்தேய்த்துக் கொண்டு நடனமிடும் ஜிப்ஸிகளும், பிச்சைக்காரர்களும் அங்கே நிறைந்திருப்பார்கள். அங்கேதான் நகரத்துக்கான அறிவிப்புப் பலகையும் இருந்தது. அந்தப்பாலம் மீது அமர்ந்திருந்தே பழகியதனால் அவர்களுக்கு தங்களைத்தாண்டி ஓடிச்செல்லும் எதைப்பற்றியும் கவலையில்லாமலிருக்கும் பயிற்சி கிடைத்தது.

டிரினாவில் ஏராளமான நீர் ஓடிச்சென்றபிறகு மெல்லமெல்ல துருக்கிய சாம்ராஜ்யத்தின் அதிகாரம் சரிய ஆரம்பித்தது. செர்பியாவிலும் போஸ்னியாவிலும் கலவரங்கள் ஆரம்பித்தன. செர்புக்கள் விடுதலை உணர்வு கொண்டார்கள். சந்தையில் முழங்கிய விடுதலைப்பாடல்கள் வழியாக அந்த உணர்வு ஊட்டப்பட்டது. கலவரக்காரர்கள் துருக்கிக்குள் புகுவதற்கான வாசலாக பாலம் விளங்கியமையால் அதில் துருக்கியப்படை காவலுக்கு வந்தது.காப்பியாவில் ஒரு ராணுவ பாடிவீடு கட்டப்பட்டது. அதில் எந்நேரமும் வீரர்கள் அமர்ந்து எல்லாரையும் அதட்டினார்கள்.

ஒருநாள் தானியம் அரைக்கும் தொழிலாளியான ஓர் இளைஞன் அவ்வழியாகச் சென்றான். சந்தையில் கேட்ட ஒரு பாடல் அவன் வாயில் இயல்பாக எழுந்தது. செர்பியப் புரட்சிப்பாடலைக் கேட்ட வீரர்கள் அவனைப்பிடித்து தலையை வெட்டினார்கள். மறுநாள் முகாம் வாசலில் வெட்டப்பட்ட மூன்று தலைகள் விழித்த கண்களுடன் ஏதோ சொல்ல முனைபவை போல வாய்திறந்து அமர்ந்திருந்தன

அதன் பின் எப்போதும் பாலத்து முகப்பில் தலைகள் இருந்தன. தலைவெட்டும் தொழிலாளியான ஹைருத்தீன் எப்போதும் தலைவெட்டும் வாளுடன்தான் இருப்பான். தலைகளுக்கு அருகேயே படுத்து தூங்குவான். அல்லது சுருக்கம் விழுந்த கண்களால் பாதசாரிகளைப் பார்த்தபடி எதிர்பார்ப்புடன் உட்கார்ந்திருப்பான். ஒரு தேர்ந்த பார்பரின் திறமையுடன் அவன் தலைகளை வெட்டினான்.

ஆனால் தினமும் தலைகளைப் பார்ப்பது என்பது பழகிப்போய்விடுகிறது. தலைகளை யாருமே கவனிப்பதில்லை. ஏன் ஹைருத்தீனிடம் தலைகளைப் பற்றி சிலர் வேடிக்கைகளைச் சொல்வதுமிண்டு. அவனுக்கு ஒன்றும் புரியாமல் உறுத்துப் பார்ப்பான்.செர்பியர் துருக்கிக்கு எதிராக பெரிதாக ஒன்றும் செய்யவில்லை. முட்டாள்தனமாகச் சாவதைவிட முட்டாள்தனமாக வாழ்வது மேல் என்று அவர்களுக்கு தெரியும்

கலவரம் அடங்கியபின்னரும் அந்த கொட்டகை அங்கேயே இருந்தது. ஒரு காவலன் மட்டும் இருந்தான். அவனும் போனபின் ஒருநாள் கொட்டகை தீப்பிடித்து எரிந்தது. எல்லாரும் கூடி நின்று வேடிக்கை பார்த்தார்கள். மழையில் கரியெல்லாம் போனபின் பாலம் மீண்டும் முன்புபோல ஆயிற்று. அங்கே என்ன நடந்தது என்பதற்கு தடையமே இல்லை.

அங்கே மீண்டும் சிறுவர்கள் விளையாடினார்கள். காதலர்கள் சல்லாபம்செய்தார்கள். கிழவர்கள் நினைவுகளை மீண்டும் சொல்லிக் கொண்டார்கள். யாருக்கும் எதுவும் நினைவில்லை, கிழவிகள் மட்டும் யாரையாவது வசைபாடுவதற்கு ”உன் தலையை ஹைருதீனுக்கு கொடுக்க..நாசமாப்போ..” என்று சொல்வதுண்டு. அந்த சொலவடையின் பொருள் யாருக்கும் தெரியாது.

டிரினாவில் எத்தனையோ கதைகள். அதில் ஓடுவது நீரல்ல கதைகள் என்றே கிழவிகள் சொல்வதுண்டு. உதாரணம் ·பாதா. பெருவணிகனான அவ்தாஹாவின் மகள். வெல்ஜலங் கிராமத்தின் ஓஸ்மானாஜிக் குடும்பத்தைச் சேர்ந்த அவ்தாஹா மிகமிக மென்மையாகப்பேசுபவன்.ஆனால் முடிவிலா தந்திரமும் வைரம் போன்ற உறுதியும் உடையவன். அவனது கர்வம் புகழ்பெற்றது. அவனது மகள் ·பாதா. அவள் பேரழகி. கர்வத்தில் தந்தைக்கு இருமடங்கு அவள்.

பக்கத்திலிருந்த செசூக் கிராமத்தில் ஹம்சிச் குடும்பத்தில் முஸ்தாஜ் பெக். அவரது மகன் நெயில் பெக். அவன் பேரழகன், வீரன். அவன் ஒருநாள் நிலவில் ·பாதாவைக் கண்டான். விளையாட்டுபோலச் சொன்னான், ‘உன்னை என் பீபியாகக் கொள்ள அல்லா அருள்வானாக’. அந்த நேரடியான கூற்று கேட்டு அவளது அகங்காரம் சீறியது. ஏளனமாகச் சிரித்து ”அதற்கு நீ உன் கிராமத்தையே விற்க வேண்டும்.போ” என்று சொல்லிவிட்டு மீண்டாள். அப்போது அவள் உடலில் ஓர் அசைவு வெளிபப்ட்டது. பேழகுக்கு மட்டுமே வரும் பேரகங்காரம் அது. அதைக் கண்டவனால் பின்னர் அமைதியடைய முடியாது. சக்ரவர்த்திக¨ளை பித்துபிடிக்கவைக்கும் அசைவு அது.

நெயில்பெக் அவளையே நினைத்தான். அவளை மணம்புரிய எல்லாவற்றையும் செய்தான். கடைசியில் அவன் அவளது சகோதரர்களின் நட்பைப் பெற்று அவள் தந்தையின் அனுமதியையும் வாங்கிவிட்டான். அவள் அனுமதியைக் கோரும் வழக்கம் இல்லை. அவள மனம் குமுறினாள். ·பாதாவின் அகங்காரம் அடிபட்டதில் பெண்களுக்கு உள்ளூர உவகை. நகைகள் தயாராயின. உடைகள் தைக்கபப்ட்டன.

திருமணத்துக்க்காக மணமகன் வீட்டார் கோவேறுகழுதைகளில் வந்தார்கள். மஹர் கொடுத்து பெண்ணைப் பெற்று கூட்டிச்சென்றார்கள். அவர்கள் வழியில் டிரினா பாலத்தைத் தாண்டிச் சென்றார்கள். தனது பல்லக்கை அரைமதிலருகே கொண்டுசெல்லும்படி சொன்னாள் ·பதா. யாரும் எதிர்பாராத கணத்தில் அபப்டியே எம்பி அவள் மறுபக்கம் ஆற்றுக்குள் குதித்துவிட்டாள். இரவெல்லாம் மழைபெய்து டிரினாவில் நீர் பெருகியது. மறுநாள் ஆற்றுக்குள் ஒரு பாறையில் அவளது திருமணச் சல்லா தான் கிடைத்தது. அவளை மீனவர் கண்டெடுத்தபோது நிர்வாணமாக இருந்தாள், அழகான ஒரு தங்கமீன்போல.

மீண்டும் செர்புகள் கலகம் செய்தனர். இம்முறை துருக்கி பலமிழந்திருந்தது. செர்பியர்களுக்கு ஐரோப்பிய ஆதரவு இருந்தது. ஆகவே போர் தீவிரமாகவே நடந்தது. மீண்டும் பாலத்தில் ராணுவம் வந்து அமர்ந்தது. மீண்டும் பாலம் மீது தலைகள் தென்பட்டன. ஆனால் துருக்கி அப்போது அழிவின் விளிம்பில் இருந்தது. கலீபா போஸ்னியாவையும் செர்பியாவையும் அப்படியே ஆஸ்திரிய சக்ரவர்த்திக்கு அன்பளிப்பாகக் கொடுத்துவிட்டார்.

விஷகிராத் ஆஸ்திரியாவுக்குக் கைமாறப்படும் தகவல் அங்குள்ள துருக்கியர்களை குழப்பியது. என்ன செய்வதென்று தெரியாமல் உணர்ச்சிவசப்பட்டு ஆளுக்காள் பேசி கூச்சலிட்டார்கள். ஆனால் பொதுவாக விஷகிராத் மக்கள் உள்ளூர புத்திசாலிகள், முட்டாள்தனமாகச் சாவதைவிட முட்டாள்தனமாக வாழ்வது மேல் என்று அவர்களுக்கும் தெரியும். உள்ளூர் துருக்கிய் இளைஞர்களில் சிலர்தான் அதீத கோபத்தில் கொதித்தார்கள். அவர்களின் தலைவன் ஊஸ்மான் ஒல்லியான களைத்துப்போன இளைஞன். நாம் கலகம் செய்யவேண்டும், போராடவேண்டும் என்றான் அவன்

ஆனால் அதிகமும் வணிகர்களான உள்ளூர் துருக்கியரின் பிரதிநிதியாக இருந்தவர் அலி ஹோஜா. ”துருக்கிய சக்ரவர்த்தி தோற்ற போரில் விஷகிராதின் கலகப்படை என்ன செய்யபோகிறது?”– அவர் காப்பியாவில் கூடிய விஷகிராத் துருக்கிய மக்களின் ‘சபை’ யில் சுடச்சுட கேட்டார். ஜிகாத் நெருங்குகிறது என்றும் அதில் சாவதே அனைத்தையும் விட உசிதமானது என்றும் ஊஸ்மான் சொன்னான். அலி ஹோஜாவுக்கு பைத்தியக்காரத்தனமாக தோன்றியது. சாவதில் என்ன மகத்துவம் இருக்கிறது?

ஒருநாள் ஆஸ்திரிய படை கரிய வெள்ளம் பெருகிவருவதுபோல வந்து பாலத்தைக் கடந்தது. அதற்குள் ஊஸ்மானும் தோழர்களும் இஸ்தான்புல்லுக்கு தப்பி ஓடிவிட்டிருந்தார்கள்– போவதற்கு முன்பு அலி ஹோஜாவை பிடித்து அவர் அல்லாவுக்குச் செய்த துரோகத்துக்கு தண்டனையாக அவரது காதில் ஓர் ஆணியை அடித்து பாலத்தின் பக்கவாட்டுச் சுவரில் அறைந்துவிட்டுப்போனார்கள். பாலம் கடந்து வந்த ஆஸ்திரியபப்டை கண்டது தேம்பி அழுதபடி தலை ஒசித்து நின்று அவர்களை வரவேற்ற அலி ஹோஜாவை. அவர்கள் ஆணியை பிடுங்கி அவரை விடுவித்தார்கள். விடுவித்தவனின் தோளில் செஞ்சிலுவைக் குறி¨யை கண்டார் அலி ஹோஜா. துருக்கியப் பொற்காலம் முடிந்துவிட்டது என்று அப்போதுதான் அவருக்கு முழுக்க தெரிந்தது. வழியெங்கும் அழுதபடியே இல்லம் திரும்பினார்.

அலி ஹோஜாவுக்கு ஆஸ்திரியர்களைப் புரிந்துகொள்ள முடியவில்லை. அவர்களும் துருக்கியர்கள் போலவெ குரூரர்களாக இருந்தார்கள். ஆனால் எலலவற்றையும் ஒழுங்கோடும் சட்டபூர்வமாகவும் செய்தார்கள். குற்றவாளிகளை விரிவான விசாரணைக்குப்பின்னரே முறைப்படி தூக்கிலிட்டார்கள். சட்டதிட்டங்களை மரியாதையுடனும் அன்புடனும் வெளியிட்டார்கள். ஆகவே மெல்ல துருக்கியர் உட்பட உள்ள மக்கள் அவர்களை ஏற்றுக் கொண்டார்கள். எப்போதுமே ஆஸ்திரியர்கள்தான் விஷகிராதை ஆண்டார்கள் என்ற எண்ணம் பொதுவாக உருவாகியது.

டிரினா நதியில் வெள்ளங்கள் வந்து வடிந்தன. ஆஸ்திரியர்கள் ஒருபோதும் ஓய்வெடுக்காதவர்கள் என்று அலி ஹோஜா கண்டார். மிதப்பான ஓய்வே மேலான வாழ்க்கை என்று எண்ணிய துருக்கிய காலகட்டம் கனவாக மறைந்தது. வெறிபிடித்தது போல வேலைசெய்த ஆஸ்திரியர்கள் நகரில் கட்டிடங்களைக் கட்டினர். தேவாலயங்கள் நீதி மன்றங்கள் வணிக நிறுவனங்கள் எழுந்தன. நகரமே வேகமாக மாறியது. செர்பியர்களில் திடீரென்று செல்வந்தர்கள் உருவாகி வந்தார்கள். புதுப்பணக்காரர்கள் புதிய வீடுகளைக் கட்டிக் கொண்டார்கள். ஆனால் துருக்கியர்கள் அவமதிக்கப்படவோ இரண்டாம் குடிகளாக நடத்தப்படவோ இல்லை. அவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை, அவ்வளவுதான்.

பத்தொன்பதாம் நூற்றாண்டு முடிந்தது. அதன் அடையாளமாக ரயில்வே வந்தது. அதை எல்லாரும் கொண்டாடினார்கள். குதிரைவண்டிகளில் உடல் அலுக்க மெல்லமெல்ல சென்ற காலம் முடிந்தது. பாலைநிலங்கள் இருபக்கமும் பறக்க்க ஜின்னுகளைப்போல காற்றில் பீரிட முடிந்தது. ஆனால் அலி ஹோஜா அதிலும் தீய சகுனங்களையே கண்டார். இஸ்தான்புல் இனி மீண்டு வரப்போவதில்லை என்பதற்கான ஆதாரங்கள் ஒவ்வொன்றும்!

செர்பியர்கள் இப்போது மெல்ல ஆஸ்திரியாவுக்கு எதிரான உணர்வுகளை அடைய ஆரம்பித்தார்கள். போஸ்னியா செர்பியா இரு பகுதிகளையும் இணைத்து ஒரு தனிநாடு அமையவேண்டுமென்ற கோரிக்கை முளைத்து வலுப்பெற்றது. இத்தகைய எண்ணங்களுக்கு எதிராக ‘சமாதானத்தை நிலைநாட்டுபொருட்டு’ அரசு வன்முறையை ஏவிவிடுவது உலகவழக்கம். ஆஸ்திரியப் படை வந்து பாலத்தருகே நிலைகொண்டது. காப்பியாமீது மீண்டும் ராணுவ பூட்ஸ¤கள் ஒலியெழுப்பின. பாலம் மிக முக்கியமான ஒரு ராணுவ குறியிடம் என உணரப்பட்டது. போஸ்னியர் செர்பியர்களுடன் இணைவதென்றால் அப்பாலமே அதற்கான தொடர்பு மையமாக இருக்கும்.

இரவுகளில் பாலத்தருகே கூடாரத்துக்குள் வேலைநடப்பதை அலி ஹோஜா கவனித்தார். உள்ளே ரகசியமாக ஆழமாக குழிவெட்டுகிறார்கள். அது எதற்கென்றும் புரிந்தது, வெடிகுண்டுகளைப் புதைக்கிறார்கள். வேலை முடிந்தது. வெடிமருந்தை வயிற்றில் அடக்கிய பாலம் அமைதியாக நின்றது. அதன்மீது வண்டிகள் புகை உமிழ்ந்தபடி சென்றன. மக்கள் நடமாடினார்கள். அனைவருக்கும் தெரிந்திருந்தது. அச்சம் கொஞ்சநாள் இருந்தது. பின்னர் அவர்கள் எப்போதுமே வெடிகுண்டு புதைக்கப்பட்ட பாலத்தில்தான் நடமாடியிருந்தார்கள் என்று எண்ணும்படி சமஜமாக செல்ல ஆரம்பித்தார்கள்.

இருபது வருடங்களில் மூன்று திருமணம் செய்த அலி ஹோஜா அப்போது கிழவனாகிவிட்டிருந்தார். அவருக்கு பதிநான்கு குழந்தைகள். குழந்தைகள் அனைவரையும் அலி ஹோஜாவால் அடையாளம் காண முடியாது என்றும் கடைத்தெருவில் ஒருமுறை தன்னைநோக்கி புன்னகைசெய்த ஒரு மகனிடம் அவன் யாரென்று கேட்டார் என்றும் வதந்தி உண்டு. இரவுபகலில்லாமல் வணிகம் செய்து அலி ஹோஜா ஒரு சிடுசிடுப்புக் காரராக மாறிவிட்டிருந்தார். தன் பொருள் இல்லா வாழ்க்கை எதற்காகவோ காத்திருப்பதாக அவருக்குத் தோன்றிக் கொண்டிருந்தது.

அது 1914. ஆஸ்திரியாவின் மணிமுடிக்கு வாரிசான இளவரசர் ·பிரான்ஸிஸ் ·பெர்டினன்ட் போஸ்னியாவில் உள்ள ஸெரஜாவோ என்ற நகரத்துக்கு விஜயம் செய்தார். நகரத்தெருக்களில் காரில்சென்றுகொண்டிருக்கும்போது கூட்டத்திலிருந்து காவ்ரிலா பிரின்சிப் என்ற செர்பிய இளைஞன் அவரை துப்பாக்கியால் சுட்டான். போஸ்னியாவை செர்பியாவுடன் சேர்க்கும்பொருட்டு போராடிக் கோண்டிருந்த குழுவைச் சேர்ந்தவன் அவன். டிரினா நதிப்பாலம் வழியாகத்தான் அவன் போஸ்னியாவுக்குச் சென்றிருந்தான். ஆஸ்திரியா சினமடைந்து செர்பியாவை தாக்க ஆரம்பித்தது. உலகப்போர் ஆரம்பித்தது. உலகப்போரை தொடங்கி வைத்த அந்த சாதாரண செர்பிய இளைஞன் தன் பிறவிப்பணியை செய்து முடிந்தான்.

ஸெரஜாவோ நகருக்கு அருகில்தான் விஷகிராத் இருந்தது. அங்கே அலி ஹோஜா தன் பிறவிநோக்கம் ஒன்று இருக்குமோ என்ற ஐயத்துடன் தன் கடையில், அவர் ‘சவப்பெட்டி’ என்றுஅழைத்த சிறு இடுக்கில் அமர்ந்து தெருவில் நிகழும் ராணுவநடைகளை நரைத்த கண்களால் நோக்கிக் கொண்டிருந்தார். பாலத்தில் ஆஸ்திரிய ராணுவம் வந்து முகாமிட்டது. நகர் நடுவே தூக்குமரம் நிறுவபப்ட்டது. செர்பிய புரட்சியாளர்களுக்கு விளக்கால் சைகை செய்த மூன்று கிராமவாசிகள் அதில் தொங்கவிடபப்ட்டனர். தாங்கள் மீன்பிடிக்கவே விளக்கு கொளுத்தியதாகவும் சைகை என்றால் என்னவென்றே தெரியாதென்றும் அவர்கள் கதறினர். ஆனால் சமாதானத்துக்காக சிலரை கொன்றாகவேண்டிய தேவை இருந்தது.

போர் தொடங்கிய ஐந்தாம் நாள் நகரத்தார் ஒரு விசில் ஒலியைக் கேட்டார்கள். அது என்ன என்று பார்க்கும்போதே ஒரு பீரங்கிக் குண்டுவந்து பாலமருகே விழுந்து வெடித்தது. பாலத்தில் இருந்தவர்கள் அலறியடித்து ஓடிப்போய் அங்குமிங்கும் ஒளிந்தார்கள். அதைத்தொடர்ந்து பாலத்தை இலக்காக்கி குண்டுகள் வந்தபடியே இருந்தன. ஆனால் பாலத்தை அவை ஒன்றும் செய்யமுடியவில்லை. பத்துநாள் குண்டுவீச்சுக்குபின் விஷகிராதைப் பார்ப்பவர்கள் அங்கே எந்தக் காலத்திலாவது சமாதான வாழ்க்கை, வியாபாரம், கேளிக்கை எதாவது இருந்திருக்குமா என்றே ஐயப்படுவார்கள்.

ஒருமாதம் கழிந்தபோது குண்டுகள் நெருங்கிவருவதை அலி ஹோஜா உணர்ந்தார். நகரத்திலிருந்த பணக்காரர்கள் முதலில் வெளியேறினார்கள். பின்னர் வெளியேற முடிந்தவர்கள் அனைவரும் போனார்கள். கடைசியில் ஆஸ்திரிய ராணுவமும் பாலம் வழியாக ஏறி மறுபக்கம்சென்றது. அலி ஹோஜா வழக்கம்போல தன் கடையை திறந்து வைத்து சவப்பெட்டிக்குள் அமர்ந்திருந்தார். வியாபாரத்துக்கு வாய்ப்பே இல்லை என்று அவருக்கு தெரியும்.ஆனால் சவப்பெட்டியில்தான் அவரால் நிம்மதியாக இருக்க முடியும்! ராணுவ வீரன் அவரை ஊரைவிட்டு ஓடுமாறு எச்சரித்தான். அலி ஹோஜா முகத்தை திருப்பிக் கொண்டார்.

அன்று அலி ஹோஜா வழக்கம்போல சற்றே தூங்கிவிட்டார். அவரது உடல் அதிர்ந்து தூக்கி வீசபப்ட்டது அவரது கட்டிடமே குலுங்கி மேலிருந்து சுண்ணாம்புப்பாளங்கள் அவர் மேல் கொட்டின. அவரது காதில் ஒலியே இல்லை. வாயை மட்டும் திறந்தபடி அலி ஹோஜா நியாயத்தீர்ப்பு நாள் வந்தேவிட்டதா என்று பிரமித்தார். அவரது கடையின் கதவுகள் பிய்ந்து தெறித்திருந்தன! அவரது கடைக்குள் எப்போதும் உள்ள இருட்டை காணவில்லை. வெளிச்சத்தில் கண்கூசியபடி அலி ஹோஜா மேலே நோக்கினார். கூரையில் ஆள் நுழையும் ஓட்டை. உள்ளே நன்றாக செதுக்கபப்ட்ட ஒரு கல் வந்து விழுந்து கிடந்தது. அலி ஹோஜா ”பாலம்!” என்று கூவினார்.

அலி ஹோஜாவுக்கு கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அவர் கடைக்கு வெளியே வந்தார். தூசியை தட்டிக் கோண்டு பார்த்தபோது வேறு ராணுவம் நகரில் பரவியிருந்தது. ”டேய் கிழவா வீட்டுக்குப் போடா” என்று ஒருவன் ஆணையிட்டான். தள்ளாடியபடி வெளியே அவ்ந்த அலி ஹோஜா பாலமிருந்த இடத்தைப் பார்த்தார். பாலம் அப்படியே இருந்தது. அவரால் நம்பமுடியவில்லை. பரவசத்துடன் கண்கள்மேல் கையை வைத்து பார்த்தார். பாலம் இருந்தது ஆனால் ஆறாவது வளைவுக்கும் எட்டாவது வளைவுக்கும் நடுவே மட்டும் பாலம் இல்லை. டிரினா நீலநிறத்தில் சுழித்தோடிக் கொண்டிருந்தது அங்கே.

அலி ஹோஜா தள்ளாடியபடி நன் வீடை நோக்கிச் சென்றார். தன் வாழ்க்கை நோக்கம் அவருக்கு தெரிந்தது. இந்நகரை கடவுள் கைவிட்டுவிட்டார். ஆனால் உலகை அப்படி கைவிட்டுவிடுவாரா என்ன? பிறருக்காக பாலம் கட்டும் மனிதர்களை இனிமேல் அனுப்பாமல் விட்டுவிடுவாரா அவர்? அலி ஹோஜா ஒரு மேட்டில் ஏறினார். தளர்ந்து அப்படியே விழுந்து இறந்தார்.

***

யூகோஸ்லாவிய எழுத்தாளர் இவோ ஆன்ட்ரிச் எழுதிய ‘டிரினா நதிப் பாலம்’ என்ற நாவலின் கதையை சீராக்கிச் சுருக்கி இப்படி சொல்லலாம். 1961 ல் நோபல் பரிசு பெற்ற ஆக்கம் இது.

யூகோஸ்லாவியாவில் டிராவ்னிக் நகருக்கு அருகே டொலாக் என்ற கிராமத்தில் 1892ல் பிறந்தவர் இவோ ஆண்டிரிச். 1923 ல் தத்துவத்தில் முனைவர் பட்டம் பெற்றார். ஒன்றாம் உலகப்போர் நடந்தபோது யூகோஸ்லாவியாவின் விடுதலைக்காக போராடினார் என்று
ஆஸ்திரிய அரசு அவரை சிறையிலடைத்தது. யூகோஸ்லாவியா விடுதலைபெற்ற பின் இவோ ஆன்ட்ரிச் அதன் ராஜதந்திரிகளில் ஒருவராக ஆனார். 1939ல் ஹிட்லர் யூகோஸ்லாவியவாவை கைப்பற்றியபோது தப்பி ஓடிய ஆன்ட்ரிச் பெல்கிரேடுக்குப் போய் தலைமறைவாக வாழ்ந்தார்.

அடிப்படையில் ஒரு கட்டுரையாளர் ஆன்ட்ரிச் . அவரது தொடக்ககால எழுத்துக்கள் எல்லாமே அரசியல் , தத்துவக் கட்டுரைகளே. இலக்கிய விமரிசனங்களும் ஏராளமாக எழுதியிருக்கிறார். 1920ல் அவர் எழுதிய ‘தி டிரிப் ஆ·ப் அலிஜாட்ஜர் ஸெலஸ்’ என்ற குறுநாவல் அவரது முதல் ஆக்கம். தொடர்ந்து சிறுகதைகள் எழுதி வெளியிட்டார். அவை பல தொகுதிகளாக வெளிவந்தன. 1945ல் வெளிவந்த மூன்றுநாவல்கள் அவரை உலக இலக்கியத்தில் இடம்பெறச்செய்தன. ‘பிரிட்ஜ் ஆன் ரிவர் டிரினா’ ‘போஸ்னியன் ஸ்டோரி’, ‘த வுமன் ·ப்ரம் ஸரஜோவா’ ஆகிய மூன்றுநாவல்களும் காவியநாவல் வடிவுக்கு மிகவும் சிறந்த உதாரணங்கள் என்று சொல்லப்படுகின்றன.

இச்சுருக்கத்தை வாசிப்பவர்களில் பெரும்பாலானவர்கள் சுந்தர ராமசாமியின் ‘ஒரு புளியமரத்தின் கதை’ என்ற நாவலை நினைவுகூரலாம். சிலர் திருமதி குர்ரதுர் ஐன் ஹைதர் எழுதிய ‘அக்னிநதி’ என்ற உருது நாவலை நினைவுகூரலாம். மிகயீல் சோலக்கோவின் ‘டான் அமைதியாக ஓடுகிறது’ நாவலையும் நினைவுகூரலாம்

புறவயமான பொருட்களை அவற்றின்மேல் அர்த்தங்களை ஏற்றீ கவியுருவகங்கள் [மெட·பர்] ஆக மாற்றுவது பொதுவாக செவ்வியல் படைப்புகளின் இயல்பு. புளியமரமும் சரி சிங்காடேவாலி துறையும் சரி பெரும் கவியுருவகங்களே. டிரினாவின் பாலமும் அத்தகைய உருவகமே. அது உண்மையில் செர்பியர்களையும் போஸ்னியர்களையும் பிணைக்கிறது. கிறித்தவர்களையும் முஸ்லீம்களையும் இணைக்கிறது. செர்பிய ரத்தம் கொண்ட முஸ்லீமால் கட்டப்பட்ட பாலம். அதை இருபதாம் நூற்றாண்டு நிரந்தரமாக தகர்த்துவிடுகிறது. இன்றுவரை செர்பிய-போஸ்னிய நிலப்பரப்பில் ஓடும் உதிரநதியை புரிந்துகொள்ள நாம் இங்கிருந்து தொடங்க வேண்டும்.

இந்நாவல்களைப்போல புறவயமான ஒரு பொருள் மீது காலமும் வரலாறும் பெருகிச்செல்வதாச் சொல்லும் பல நாவல்கள் உலக இலக்கியத்தில் உள்ளன. இது ஓர் அடிப்படை மன எழுச்சியைச் சார்ந்தது என்பதே இதற்குக் காரணம். மனிதர்கள் பிறந்து இறந்தபடியே இருக்கிறார்கள். மலைகள் நதிகள் பாறைகள் சரித்திரச் சின்னங்கள் அப்படியே அனைத்துக்கும் நித்ய சாட்சியாக இருந்துகொண்டிருக்கின்றன.

புளியமரம் வரலாற்றின் இரு காலகட்டங்களுக்குச் சாட்சியாக இருந்து வரலாற்றின் அலையால் அழிகிறது, மொழியில்மட்டும் அதன் தடம் மிச்சமாகிறது. அக்னிநதியில் கங்கையில் உள்ள சிங்காடேவாலீ என்னும் படித்துறைவழியாக மூவாயிரமாண்டுகள் பெருகி ஓடிமறைகின்றன. அது சென்றுகொண்டே இருக்கிறது, டிரினா போல. இவ்விரு நாவல்களையும் ஒப்பிட்டு நாம் ஒன்றை புரிந்துகொள்ளலாம். சுந்தர ராமசாமியின் நாவல் ஒரு நவீனத்துவ ஆக்கம். அவரது எழுத்து அவரது தனிபப்ட்ட அனுபவதளத்தின் வட்டத்திற்குள் தன்னை நிறுத்திக் கொண்டு அதற்குள் நுட்பங்களை அடைய முனைகிறது. அக்னிநதி ஒரு செவ்வியல் படைப்பு. அது ஆழமான ஆய்வுநோக்குடன் மொத்த வரலாற்றையும் அள்ள முனைகிறது.

செவ்வியலின் இயல்புகள் இரண்டே, ‘முழுமை’ மற்றும் ‘சமநிலை’. வாழ்க்கையையும் வரலாற்றையும் முழுக்கச் சொல்லிவிடமுயல்கின்றன அவை. ஆகவே செவ்வியல் படைப்பாளிக்கு வரலாற்றுப்பிரக்ஞை மிக முக்கியம். வரலாற்று பிரக்ஞையையே இரண்டு தளம் கொண்டதாக பகுத்துக் கொள்ளலாம். வரலாறு பற்றிய விரிவான அறிதல். இன்னொன்று வரலாறு குறித்து தனக்கென்றே உரிய ஒரு நோக்கு.

அத்துடன் செவ்வியல் ஆக்கங்கள் முழுமையான சமநிலையையும் கொண்டிருக்கும். எல்லாவகையான உணர்ச்சிகளும் அவற்றில் இணையான முக்கியத்துவத்துடன் பயின்றுவரும். எதற்கும் அதிக முக்கியத்துவம் இருக்காது. அதன் கருத்துநிலைகூட ஒரு விரிவான விவாதமாக முன்வைக்கப்பட்டிருக்குமே ஒழிய அழுத்தப்பட்டிருக்காது. காவியம் என்பது எட்டு மெய்ப்பாடுகளும் சரியாக அமைந்து ஒன்பதாவது மெய்ப்பாடான சாந்தத்தை நிறுவுவதாக இருக்கும் என்பார்கள்.

இந்த முழுமைத்தன்மை காரணமாகவே செவ்வியல் படைப்புகள் மிக விரிவானவையாகவும் கதையோட்டத்தை முக்கியத்துவப்படுத்தாதவையாகவும் பலசமயம் சலிப்பூட்டுவனவாகவும் இருக்கின்றன. போரும் அமைதியும் நாவலைபப்ற்றி ஹென்றி ஜேம்ஸ் சொல்லும்போது ‘அர்த்தமற்ற முழுமையான வாழ்க்கைப்பிண்டம்’ என்று பாராட்டாகவும் நிராகரிப்பாகவும் சொனனர்.

டிரினா நதிப்பாலம் ஒரு முக்கியமான செவ்வியல் நாவல். முழுமையும் சமநிலையும் கைகூடிய அபூர்வமான இலக்கிய சாதனை இது. இநாவல் எழுதபப்ட்ட காலத்தில் யூகோஸ்லாவியா ஒரு கவனிக்கத்தக்க நாடாக இருந்தது. பலவருடங்கள் கழிந்து அங்கே தேசியப்பிரச்சினைகள் வெடித்து பேரழிவுகள் உருவாயின. அந்த அழிவுகளின் சரித்திரப் பின்புலத்தை அறிய எந்த வரலாற்று நூலை விடவும் உபயோகமானது இந்நாவல். வரலாற்றை தகவல்களாகவும் தனிமனித வாழ்க்கைகளாகவும் தொன்மங்களாகவும் ஒரேசமயம் முன்வைக்கும் இந்த ஆழம் புனைகதைகளினாலேயே நிகழ்த்தப்படுவதாகும். இன்றைய உலகப்புகழ்பெற்ற செர்பிய எழுத்தாளர்களான மிலொராட் பாவிச் போன்றவர்களின் எழுத்துக்களை புரிந்துகொள்ள இது ஒரு முக்கியமான நுழைவாயில்.

இவோ ஆன்ட்ரிச் தனக்கென ஒரு வரலாற்றுநோக்கைக் கொண்டிருக்கிறார். அவரது தனிப்பட்ட வாழ்க்கைக்கும் அந்நோக்குக்கும் உள்ள வேறுபாடு வியப்பூட்டுகிறது. விடுதலைவீரராக போராடி சிறைசென்ற இதழாளர், தத்துவவாதி அவர். ஆனால் விடுதலைப்போராட்டங்கள் உள்ளிட்ட எல்லா போர்களும் வெறும் மானுட அலைகளே என்ற பிம்பத்தையே இந்நாவல் அளிக்கிறது. ஆதிக்கம், புரட்சி எதையும் பொருட்படுத்தாமல் அலையலையாகப் பெருகி டிரினா சென்றபடியே இருக்கிறது. அதன் கரையில் எப்போதும் மக்கள் கண்ணீருடன் வியர்வையுடன் வாழ்ந்து மடிகிறார்கள். தூக்குமரம் எப்போதுமே உள்ளது. அதனுடன் முட்டாள்தனமாக மோதுவதை விட அதற்கு முட்டாள்தனமாக அடிபணிவதே மேல் என்ற விஷயம் எளிய மக்களுக்குத் தெரிந்திருக்கிறது.

இநத பெரும் நாவலில் புரட்சிகரம் உள்ளது, மனிதனின் அடங்காத சுதந்திர இச்சையின் ஆவணம் என்றுகூட இதை வாசிக்க முடியும். ஆனால் சுதந்திரம் அடிமைத்தனம் இரண்டுக்கும் அப்பால் அன்றாடவாழ்க்கையே போராட்டமாக உள்ள எளிய மக்களின் வாழ்க்கைச்சித்திரம் என்றும் இதைச் சொல்லிவிட முடியும். காதல்,பிரிவு, மரணம் என இதில் வாழ்க்கை விரிகிறது. ஆனால் வாழ்க்கை என்பதெல்லாம் பெரியதோர் பிரவாகத்தின் சிறுகுமிழிகளே என்றும் காட்டுகிறது இது. பெரும் செவ்வியல் படைப்புகள் ஒரு கட்டத்தில் நுண்மையான அங்கதம் மேலோங்கியவையாக உச்சம் கொள்கின்றன. இந்நாவலிலும் அதைக் காணலாம். பொருளற்ற வரலாற்று ஓட்டத்தை நோக்கி விவேகம் நிரம்பிய கசப்புடன் புன்னகைசெய்கிறது இந்நாவல்.

ஓடும்நதியின் கரையில் வாழும் ஒருவனின் நெஞ்சு மெல்லமெல்ல அந்த நதியோட்டமாகவே ஆகுமா என்ன? அப்படித்தான் படுகிறது. டிரினாவின் ஓட்டம் போல ஒருநாவலை இவோ ஆன்ட்ரிச் எழுதியது அந்த மனவிரிவினால்தான் என்று எண்ணத்தோன்றுகிறது.

[Ivo Andric The Bridge on the Drina ]

இணைப்புகள்

முந்தைய நாவல்கள்

http://jeyamohan.in/?p=351
http://jeyamohan.in/?p=350

அக்னிநதி

http://jeyamohan.in/?p=197

[மறுபிரசுரம்/முதற்பிரசுரம் 2005]

முந்தைய கட்டுரைபனிமனிதன் -ரெங்கசுப்ரமணி
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 53