விருது-கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன்,

விருது கதை வாசித்தேன். கதையின் மையக் கேள்வி அந்த நடிகருக்கு ஏன் விருதும் பாராட்டும் புகழும் கசப்பை மட்டுமே தருகிறது என்பதுதான். அதற்கான காரணங்களாக என் வாசிப்பில் நான் புரிந்து கொண்டவை:

1. நடிகர் நாடகத் துறையிலிருந்து வருவதால் அத்துறையில் நடிப்பின் உச்சபட்சசாத்தியங்களைக் கண்டும் உணர்ந்தும் இருக்கிறார். மேடையில் இடைவெளியின்றித் தொடர்ந்து நேரடியாக நிகழ்த்துவதால் அடையும் பூரணம் சினிமாவில் சாத்தியப்படாது எனினும் “புகழ்பெற்ற” கலையென்பதால் கிடைக்கும் அங்கீகாரம். அதுவும் கூடப் பலசமயம் தங்களுடைய சுய லாபத்திற்காகப் போலி மனிதர்களிடமிருந்து வருபவை என்பதால் எழும் கசப்பு.

அவருக்கு மேடை நிகழ்த்துகலையின் மேலிருக்கும் பக்தியும் அர்ப்பணிப்பும் கதையில் இரு தருணங்களில் வெளிப்படுகிறது. தன் மகன் முதன் முதலாக நாடகத்தில் நடிப்பதைக் காண அழைக்கும்போது உடனே வருகிறார். நாடகம் முடிந்ததும் வரும் வழியில் விஜெடி ஹாலைக் கடக்கையில் மகனிடம் ‘…இங்கேதான் அந்தக்காலத்தில் சி.வி.ராமன்பிள்ளையின் நாடகங்களெல்லாம் போட்டிருக்கிறார்கள்…சிவியே நடித்திருக்கிறார்… மனசில் தியானிச்சுக்கோ…” என்கிறார்.

அடுத்ததாகக் கதையின் இறுதியில் ரயிலில் கதகளிக் கலைஞரான கலாமண்டலம் கிருஷ்ணன் நாயரும் இருக்கிறார் என்றதும் அவர் கொள்ளும் பதற்றம். இளவயதில் அவர்மேல் கொண்டுள்ள குருபக்தியும் இப்போது புகழ்பெற்ற பின் அவரை சந்திக்கும் போது கொள்ளும் குற்றவுணர்ச்சியால் கேட்கும் மன்னிப்பும் நடிகரின் மனநிலையைத் தெளிவாகக் காட்டுகிறது. உண்மையில் அந்த மன்னிப்பு சினிமாத் துறை நாடகத் துறையிடம் கேட்கும் மன்னிப்பாகவே படுகிறது.

2. சிறந்த கலைஞன் ரசிகர்களிடமிருந்து பெறும் பாராட்டுக்களின்போது கொள்ளும் இயல்பான எதிர்மறை உணர்ச்சி. இது அந்நடிகரின் மகன் முதல் மேடையேற்றத்திற்குப் பின் கொள்ளும் மனநிலையின் வாயிலாக சிறப்பாக வெளிப்பட்டிருக்கிறது. நடித்தது தானல்லாத யாரோ போலவும் பாராட்டு தனக்குக் கிடைப்பதாக உணரும் தருணமது. இதுவே நடிகரிடமும் காண நேர்கிறது. அதுவும் அந்தப் பாராட்டைத் தன்னை விட சிறந்த கலைஞன், தான் குருவாக நினைப்பவர் காண நேர்ந்தால்..? அதுவே கதையின் இறுதியில் நேர்கிறது. அதனால் தான் கிருஷ்ணன் நாயரிடம் மீண்டும் மீண்டும் மன்னிப்புக் கோருகிறார்.

இக்கதையில் எனக்கு ஏற்பட்ட உச்ச அனுபவம் என்பது அந்த இளைஞன் முதல் முறையாக மேடையேறும் தருணம் தான். அப்போது நீங்கள் கூறிச் செல்லும் வரிகளெல்லாம் அபாரம். தான் யாரென அவன் உணரப் போகும் தருணம். “விசில் ஒலித்துத் திரை மேலெழுந்ததும் செங்கோலும் செம்பழுப்பாடையும் வைரமணிமுடியுமாக அவன் வெளிச்சத்தை நோக்கிச் சென்றான்.” உண்மையில் அந்த ஒளி என்பது தன்னை யாரெனக் காட்டப் போகும் ஒளி. அறியாமையின் இருளை அகற்ற வரும் மாசற்ற தூய ஒளி.

அக்கணம் ஒவ்வொருவரும் தன் வாழ்கையில் அறிய வேண்டிய கணம். வாழ்கையின் சாரமென நிற்கப் போகும் பெருங்கணம்.

மிக்க அன்புடன்,
பாலாஜி
கோவை

அன்புள்ள பாலாஜி

கலைஞனின் மனம் பற்றி இலக்கியத்தில் அதிகமாக எழுதப்பட்டுள்ளது. அதற்கான காரணம் அவன் மனம் ஒரு அளவுகோல். சூழலின் வெப்பம் பாதரசத்தால் அளவிடப்படுவதுபோல.

ஆகவே இது கலையின் பிரச்சினை மட்டுமல்ல, எல்லாவற்றிலும் உள்ள பிரச்சினைமட்டுமே. கலை அதன் தீவிரத்தருணங்களைக் கொண்டுள்ளது

ஜெ

ஆசிரியருக்கு ,

“விருது” ஒரு பாரத நாட்டியம் . கதைக்கும் அப்பால் இது பல தளங்களுக்குச் செல்கிறது . ஒரு கலைச் சுவையறிந்த மனிதன் தனது அன்றாட லௌகீக பணிச் சூழலில் சலிப்புற்றே இருக்கிறான் , அவனைச் சுற்றியுள்ள பொருள் ஈட்டுதலை மட்டுமே நோக்கமாகக் கொண்ட தொழில் புரிவோர் அதற்கு மேல் செல்வதில்லை , கடமை தவறாத சிலர் இருக்கலாம் , பொறுப்பானவர்கள் சிலர் இருக்கலாம் , தொழில் நுணுக்கத்துடன் சிலரும் நேர்த்தியுடன் சிலரும் இருக்கலாம் , ஆனால் அந்தக் கூறுகளை எல்லாம் அவர்களே பெரிதாக மதிப்பதில்லை , அவ்வாறு இருப்பது அவர்களுக்குப் பொருளீட்டுவதற்கு சிறந்த வழி அவ்வளவே , எனவே அவர்கள் சலிக்கிறார்கள் அபூர்வமாக சிலர் சுய நிறைவுக்காகவும் தொழில் புரியலாம், ஆனால் ஒரு கலைஞன் போலத் தனது தொழிலை மேம்படுத்தும் சிந்தையுடனேயே அனுதினமும் இருக்கும் தீவிரம் , அடுத்தமுறை இன்னும் மேலே-மேலே என்று இருக்கும் அடங்காமை , தன்னிடம் உள்ளதில் சிறந்ததை வெளிப்படுத்தும் தணியாத விழைவு போன்றவை இவர்களிடம் காணக் கிடைப்பதில்லை . எனவே இவர்களும் சலிக்கிறார்கள். ஆகவே நாம் கலைஞர்களுடைய வாழ்க்கையை ஏக்கத்துடனேயே பார்க்கிறோம் .

மறுபுறம் அசல் கலைஞர்களுடைய வாழ்க்கை ஒரு நிறைவின்மையுடனேயே இருக்கிறது , தனக்குத் தானே விதித்துக் கொண்ட அளவைத் தொட ஒரு போதும் அவனால் முடிவதில்லை , எப்பொழுதும் ஒரு வெற்றிடம் , அடுத்த முறை-அடுத்த முறை என எப்போதும் ஒரு வேட்டை . அவன் வேண்டுவது ஒரு உயர்ந்த பட்ச மனதின் அங்கீகாரம், அவ்வரிசையில் முதலில் அவன் பெயரே . ஒரு அசல் கலைஞன் தான் விதித்த அளவைத் தொட்டதாகத் தன்னை அங்கீகரிப்பதே இல்லை. எவ்வளவு செய்தாலும் இன்னும் செய்திருக்கலாம் என்ற திருப்தியின்மை. கலைச் சுவையறிந்த சராசரி மனிதனுக்கு இந்த சலிப்பான சூழல் ஒரு நஷ்டம் என்றால் , ஒரு கலைஞனுக்கு இந்த நிறைவின்மை ஒரு சாபம்.

“விருது” சிறுகதையின் அந்த நடிகன், எல்லாப் பாத்திரமும் ஆகித் தனது பாத்திரத்தை இழந்தவன். தன்னிறைவுடன் ஒரு படைப்பை வழங்கியதில்லை. நடிகர்கள் இரு வகை , தனது திறந்த வாசல் வழியே அனைத்தையும் அனுமதித்து அது தன்னை ஆக்கிரமித்துப் பிறிது தானாக ஆக அனுமதிப்பவர்கள் , இன்னொரு வகை தனது அகங்காரத்தை ஒரு சூக்கும வடிவாக்கி அனைத்திற்குள்ளும் புகுந்து தான் பிறிதாக உருவெடுப்பவர்கள் . கதையின் நடிகன் முதல் வகை , அவரின் குரு இரண்டாம் வகை. எண்ண இயலாப் பாத்திரங்களாக உருவெடுக்கலாம் அல்லது வாழ்வில் ஒரு பாத்திரத்தை மட்டும் தேர்வு செய்து அதை உன்னதப்படுத்திக்கொண்டே செல்லலாம் – – இவை அனைத்தும் இக்கதையில் நேரடியாக இல்லை என்றாலும் இக்கதை ஒரு வாசகனை இவ்வாறு சிந்திக்க வைக்கிறது.

“அவர் ஒரு வாசல்போல். அவர்கள் அதற்கு அப்பாலிருந்த எங்கிருந்தோ அவர் வழியாக வந்துகொண்டே இருந்தார்கள்”- எல்லாமாக ஆகும் அந்த நடிகன் , வாதத்தால் தனது ஒரு பாதி எதுவுமே ஆக முடியாமல் ஆகிறான் . ஒரு நடிகனுக்கு மட்டுமே சாத்தியமான பெரும் சோகம் இது , ஓவியன் கண் இழப்பது போல .

இக்கதையில் அசலும் பாவனையும் போலியும் சரி விகிதத்தில் கலந்துள்ளது, நமது வாழ்க்கையைப் போலவே.

“அவனால் நம்பவே முடியவில்லை. அப்பா அப்போது நடித்த அந்தக் கதாபாத்திரத்தை அதற்கு முன்னால் பார்த்தே இராததுபோலிருந்தது” ஒரு நடிகனின் அசல் ,
“அக்கணமே அவன் இரண்டாகப்பிரிந்தான். மேடையில் ஞானத்தின் மகத்தான துயரத்துடன் நின்ற சாலமோன்மகாராஜாவை அவன் பிரமிப்புடன் பார்த்துக்கொண்டிருந்தான்”-ஒரு நடிகனின் பாவனை,
அந்த விருது வழங்கும் விழாப் பயிற்சியும் விருது பெற்றோரின் நடத்தையும் மிகக் கூர்மையான சம்பவ அமைப்பு, ஒரு மனிதனின் போலி,.
இறுதியாக அவைகளின் கூட்டான விளைவாக இக்கதை ஒரு படி மேலே போய் முற்றிலும் எதிர்பாரா வகையில் – “சட்டென்று அவனுக்குத் தன்னுடைய உடல் இடப்பக்கமாக இழுப்பது போலிருந்தது. இடப்பக்கம் வலுவில்லாமல் துடுப்பு போடப்பட்ட படகுபோல உடல் அப்பக்கமாக அவனை மீறி வளைந்தது”- இந்த நிகழ்வு ஒரு பாவனை அசலாகிறது , இங்குதான் இச்சிறுகதையின் கலை உச்சம் நிகழ்கிறது .

இக்கதையின் விவரிப்புகள் ஒரு தனி அனுபவம் . இக்கதையின் தனிச் சிறப்பு என்றால் அது இதில் வடிவெடுத்திருக்கும் ஒருமை (unity ) தான் .

“அது அவருக்கு எதன் மீதோ ஆழ்ந்த அவநம்பிக்கை இருப்பதைப்போன்ற பாவனையை அளித்தது. அவரது எல்லாச் சொற்களிலும் அந்த பாவனை வந்து கலந்துகொண்டது. அவரது தனிமையில் அது அவர் மீது கனமாகப் போர்த்தி மூடியிருந்தது”

“பார்வை இரட்டைப்பிம்பங்களாகச் சிதறியிருந்தது. முப்பரிமாண சினிமாவை அதற்கான லென்ஸ் இல்லாமல் பார்ப்பதுபோல”

“பின்பக்கம் கதவுகளை மூடியபடி அவர் சென்றுகொண்டே இருந்தார்”

போன்ற அனைத்து வாக்கியங்களும் அதன் மையத்தை நோக்கியே செல்கிறது அல்லது அதே நிறத்தில் காணப் படுகிறது. அது தான் பிறிதாவதற்கும், பிறது தானாவதற்கும் இடையேயான களம்.

“விருது “- கண்ணாடியில் தெரியும் நிழல்.

கிருஷ்ணன் .

அன்புள்ள கிருஷ்ணன்

கலைஞன் தன்னை அழித்துக் கலையை உருவாக்குகிறான். அவனுக்கு அளிக்கப்படும் மிகச்சிறந்த விருது எதுவாக இருக்கமுடியும்?

கதை அதைப்பற்றியதுதான்

ஜெ

முந்தைய கட்டுரைதிருச்சியில் நாளை
அடுத்த கட்டுரைநித்யாகுருகுலம் பற்றி…