இந்தி- கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன்,

நலம் விழைகிறேன்.

“இந்தியின் தேவை” மற்றும் “இந்தி,சம்ஸ்கிருதம்,தமிழ்” வாசித்தேன்.

இராஜீவ் கூறுவது சரிதான். அவரது வட மாநிலங்கள் அளவுக்குத் தேவை இல்லையெனினும் பெங்களூருவில் வசிக்கும் எனக்கும் கூட இதே எண்ணம் இருக்கிறது.

அறிவார்ந்த விவாதத்துக்காக இல்லையெனினும் தொடர்பு கொள்ளவேனும் இந்தி தேவையாகிறது. அந்தத் தொடர்பு கொள்ளும் தேவை இப்போது பெருகியிருக்கிறது என்று எண்ணுகிறேன்.

பல மாநிலத்தவர் உடன் பணிபுரியும் சூழல் இப்போது கட்டயாமாகப் போய்விட்ட நிலையில், வடக்கு – தெற்கு என்றெல்லாம் பேதமில்லாமல் போகச் செய்யும் விஷயமாக இந்தி இருப்பதைக் கண்கூடாகக் காண்கிறேன். அதை மாற்றும் திராணி இங்கு இந்தியை வைத்து அரசியல் செய்பவர்களுக்கு இல்லை. எனவே அவர்கள் விலகிக் கொள்வதே நல்லது.

ஏழு பேர் கொண்ட எங்கள் அணியில் இந்தி தெரியாத ஒரே ஆள் நான் மட்டுமே. ஏழில் நான்கு பேர் தென் மாநிலத்தவரே.(கேரளம், ஆந்திரம் மற்றும் கர்நாடகம்). என் ஒருவனுக்காக எந்த ஒரு சிறிய நகைச்சுவைத் துணுக்கையும் கூட ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க வேண்டியிருந்தது.

எல்லோருக்கும் தெரிந்த மொழியான ஆங்கிலத்தில் பேச நிர்பந்திக்கும் சிறு கூட்டத்தவராக நாம் மாறிப் போகிறோம். அதனால் இயல்பாகவே, ஒரு நட்பு மறுக்கப்படுகிறது. மூன்று வருடம் கல்லூரியில் உடன் படித்தவன் நண்பனாக, நெருக்கமாக இருக்கிறான், பத்து வருடங்களுக்குப் பின்னும். ஏழு வருடம் உடன் பணியாற்றுபவர்கள் நண்பர்களாக இல்லையே.

பெரும்பாலும், (எப்போதுமல்ல) நம் மாற்று ஒரு “தமிழ்ச்சங்கம்” ஆரம்பிப்பதாகவே இருக்கிறது. அதற்குத் தேவை இரண்டாவது தமிழன். அவ்வளவே. ஒரு நல்ல அறிவார்ந்த தோழமையை (Intellectual company) விடுத்து அஞ்சலி காணாமல் போனதைப் பற்றி பேசி மகிழலாம். (பெரும்பாலும்)

தமிழகத்தில் வாய்ப்பு மறுக்கப்பட்டதாலேயே இந்த நிலைமை என்றே கருதுகிறேன். ஆங்கிலத்தைப் போலவே ஒரு மொழிப் பாடமாக இந்தி இருக்கும் சூழலில் இந்த நிலைமை இருக்காது என்றே எண்ணுகிறேன். வாய்ப்பு என்று நான் கூறுவது கிராமப்புற, ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பத்தினர் பயிலும் அரசு மற்றும் அரசு உதவி பெரும் கல்வி நிறுவனங்களையே.

இந்தி எதிர்ப்பு தமிழகத்தில் இருந்தபோதான அரசியல் மற்றும் வாழ்வியல் முறைகள் இன்று காலவதியாகிவிட்டது. அன்று “தனித் தமிழ்நாடு” கொள்கையை முன்னிறுத்தியவர்கள் இன்று அதை மறந்து போன அல்லது மாற்றிக் கொண்ட நிலையில், இந்தி குறித்தான நம் கொள்கைகளையும் மறுபரிசீலனை செய்தாக வேண்டும். குறைந்தபட்சம் நம் அடுத்த தலைமுறைக்காகவேனும்.

உங்கள் கருத்தை அறிய ஆவல்.

என்றென்றும் அன்புடன்,

மூர்த்தி ஜி

பெங்களூரு

அன்புள்ள மூர்த்தி

இந்தவகையான வினாக்களுக்குப் பலமுறை பதிலை எழுதிவிட்டேன் என நினைக்கிறேன். இந்தி என்றல்ல இன்றைய சூழலில் மொழிகள் எல்லாமே உதவியானவைதான். ஆனால் தமிழகத்தில் இன்று வடமாநிலங்களுக்குச் சென்று இந்தியில் பேசி வாழக்கூடியவர்கள் மொத்தம் எத்தனை சதவீதம்? ஒரு சதவீதம்பேர் இருப்பார்களா? இருந்தால் ஆச்சரியம். அவர்களுக்காக மொத்தபேருக்கும் இந்தியைக் கட்டாயமாக்குவது என்பது நடைமுறைச் சாத்தியமான விஷயமா என்ன?

இன்றைய சூழலில் தமிழர்கள் உலகை எதிர்கொள்ள ஆங்கிலம் அவசியமானது. தாய்மொழியாகத் தமிழைக் கற்பதும் அவசியமானது. நாம் உண்மையிலேயே பயனுள்ள தொழிற்கல்வியையும் சிந்திக்கும் பயிற்சியை அளிக்கும் கலைக்கல்வியையும் எப்படி மாணவர்களுக்கு அளிப்பது என்பதைப்பற்றித்தான் இன்று யோசிக்கவேண்டும். அத்தகைய கல்வி இன்று எங்கும் அளிக்கப்படுவதில்லை

ஒரு புதுச்சூழலுக்குச் சென்று அந்த மொழியைக் கற்பது என்பது மூன்றுமாத கவனம் மட்டுமே தேவைப்படக்கூடிய விஷயம். அந்தக்கவனத்தை அளிக்கமுடியாத ஒருவருக்கு வருடக்கணக்காகப் பள்ளியில் சொல்லிக்கொடுத்தால் மட்டும் அந்த மொழி வந்துவிடுமா என்ன?

நம் பிரச்சினை ஒன்று, உதாசீனம். எந்தச்சூழலுக்குச் சென்றாலும் அதைப் புரிந்துகொள்ள முயலாமல் அதற்காக உழைக்காமல் வெறுமே நம்முடைய கோழிமுட்டைக்குள்ளேயே சுருண்டுகொள்வது. இருபதுவருடம் ஐரோப்பாவில் பணியாற்றும் ஒரு தமிழரிடம் ஐரோப்பாவைப்பற்றி ஒரு எளிய அறிமுகத்தைக்கூட நாம் பெற முடியாமலிருப்பது அதனால்தான். அவர்கள் புனைகதை எழுதினால் இங்கே அவர்களிருந்த காலத்தில் சாப்பிட்ட தயிர்சாதம் பற்றித்தான் எழுதுவார்கள். இதுதான் நம்முடைய பிரச்சினை.

சூழலை அறிந்து வெல்லும் ஆர்வமும் முயற்சியும் இருந்தால் மொழி ஒரு சிக்கலே அல்ல. என் நண்பர் ஷாஜி தெலுங்கு தமிழ் இந்தி பங்காளி என எல்லா மொழிகளிலும் பேசுவார். தமிழில் எழுதுவார். அவரது மொழி மலையாளம். தமிழ்த்திரையுலகின் அடிப்படை ஊழியர்கள் பெரும்பாலும் தெலுங்கும் இந்தியும் சரளமாகப்பேசுவார்கள், ’ ஒரு சினிமாவுக்கு வேலைபார்த்தா போரும்சார்’ என்பார்கள்.

நமக்குத்தேவை அந்தக் கவனம். அக்கவனம் நம்மிடம் இல்லை என்றால் அது ஏன் என்று நாம் யோசிக்கவேண்டும்

ஜெ

அன்புள்ள ஜெ…

வணக்கம்… நலம் தானே…..

“தற்போதைய காலகட்டத்தில் படிக்கும் அனைவருக்கும் அவர்களது சொந்த மாநிலத்திலேயே வேலை கிடைக்கும் என்பது கானல் நீர்தான்.முக்கியமாக தமிழகத்தில் பொறியியல் படித்தவருக்கு வேலை வாய்ப்பு மிகவும் குறைவு.”

திரு மா பா ராஜீவ் அவர்களின் கருத்தை மறுத்துப் பேசவே இந்தக் கடிதம். சொந்த மாநிலத்திலே வேலை கிடைக்க வேண்டும் என்றால் அந்த மாநிலத்தில் என்ன தொழில் சிறப்பாக செய்யப்பட்டு வருகிறதோ அதைக்கற்றுக்கொள்ள வேண்டும். அதை விடுத்து ஆட்டு மந்தை போல நம் படிப்பை ஒருவனும்,,,, வேலையை மற்றொருவனுமாக நிர்ணயிக்க சொல்லி விட்டு… அவர்களுக்குப் பின்னால் வெற்று கூச்சல் போட்டுக் கொண்டு ஓடுபவர்களுக்குத்தான் சொந்த மாநிலத்தில் வேலை கிடைக்காது.
பொறியியல் என்பதும் ஒரு படிப்பு தான்… ஊரில் இருக்கும் அனைவரும் இஞ்சினியர் ஆகி விட்டால்…. மற்ற தொழில் எல்லாம் வேற்று நாட்டினரா நாம் கிரீன் கார்டு அகதிகளாவது போல இங்கே வந்து பார்க்கப் போகிறார்கள்.???

தனக்கு வேறு மாநிலத்தில் வேலை தேவை என நினைத்து .. தன் சொந்த வசதி வாய்ப்புகளைப் பெருக்கிக் கொள்ள சொந்த மாநிலத்தை விட்டு வெளியே சென்று விட்டு… அந்தக் கொடுமைக்காக எல்லோரையும் ஹிந்தி படிக்க சொல்லலாம் என கூறுவது வடிகட்டிய மூடத்தனம்.
ஒரு தனி மனிதனின் பிரச்சனை என்றுமே சமூகப் பிரச்சனையாகாது

ஒரு குறைந்த பட்ச அடிப்படைத் தேவைகள் நிறைவேறிய வாழ்க்கை எனக்குப் போதும் என்ற மனம் கொண்டவர்கள்….அந்த மாநிலங்களை விட்டு வெளியே செல்வதில்லை…..
வேலை என்பது வெறும் பணம் சம்பாதிக்கும் சாதாரண ஒன்று தான்…..

இதற்காக… ஒப்பற்ற மொழி… பண்பாடு……..இன்னும் என்னவெல்லாம் நாம் தொலைக்கப் போகிறோம் என்றுதான் தெரியவில்லை.
ஏற்கனவே பேசும் வார்த்தைகளில் தொண்ணூறு சதவிகிதம் ஆங்கிலம் கலந்து விட்டது.
தமிழ் மட்டுமே தெரிந்தவன் தமிழர்களாலேயே முட்டாள் ஆக்கபடுவது உலகில் நம் நாட்டில் மட்டும் தான் சாத்தியம்.

இறுதியாக ஒன்றே ஒன்று,.. வேறு எந்த மாநிலத்தையோ…. நாட்டையோ சேர்ந்த ஒருவராவது.. எனக்கு என் தாய் மொழி வேண்டாம்….என் தாய் மொழியால்… பணம் சம்பாதிக்க முடியவில்லை…( appraisail…. appraisal./….) வேறு மொழி கற்றுக் கொள்கிறேன் எனக் கூறுகிறார்களா….??????

இது போன்ற கேலிக் கூத்துக்கள் நமக்கு மட்டுமே சொந்தமானது

இப்படி சொல்வதால்….நான்… ஹிந்திக்கோ…. ஆங்கிலத்துக்கோ எதிரி அல்ல…..
புதிய ஒரு மொழியைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருந்தால் மட்டுமே….மொழியைத் தேடுங்கள்… பயிலுங்கள்…. மற்றவரையும் கற்றுக் கொள்ள சொல்லுங்கள்…

வெறும் வேலைக்காகவும்,,,, பணத்துக்காகவும்….நம் தாய் மொழியைக் குறை சொல்லவும் கூடாது…….
புதிய மொழியை நாடவும் கூடாது .,

இப்படி ஓடுபவர்கள்…..எந்த ஒன்றையும் உருப்படியாக செய்ய மாட்டார்கள்…

தாய் மொழி எதுவோ அதை முழுமையாகக் கற்றுக் கொள்ளுங்கள்….அது உங்களை உலகத்தின் அத்துணை உயரத்துக்கு நிச்சயம் கொண்டு செல்லும்.

இது போன்ற ஒற்றை சிந்தனை சார்ந்தவர்களின் கருத்துக்களைப் பதிப்பிக்காமல்.. இருக்கலாமே…
இவர் போன்றவர்கள்தான் சமூகத்தைத்  தவறான பாதைக்கு வழி நடத்திச் செல்கிறார்கள்

நன்றி…..

பிரசன்னா.

அன்புள்ள பிரசன்னா,

நான் இந்திக் கல்வி பற்றிய என் கருத்தைப் பலமுறை எழுதிவிட்டேன். இது ஒரு நடைமுறையனுபவம் சார்ந்த குரல். ஆகவே அதை வெளியிட்டேன். அதன்மீதான எதிர்வினைகளை எதிர்பார்த்து.

அக்கடிதத்தில் உள்ள பிரச்சினை என்ன? ஒரு வடமாநிலம் சென்று இந்தி கட்டாயமாக உள்ள சூழலில் ஒருவருடம் முடிந்தும் ஒருவரால் இந்தி கற்றுக்கொள்ளமுடியவில்லை. மேலும் கற்கப்போவதில்லை என்றும் அவர் நம்புகிறார். தனக்குக் குழந்தைப்பிராயத்தில் இந்தி கற்பிக்கப்பட்டிருக்கவேண்டுமென நினைக்கிறார். அதுதானே?

அதேசமயம் உங்கள் கருத்திலும் எனக்கு உடன்பாடில்லை. தாய்மொழிக்கல்வி என்ற பேரில் இங்கே பேசப்படுவதெல்லாம் வெறும் உணர்ச்சிக்கொந்தளிப்பு. சொல்லப்போனால் சொந்தப்பிள்ளைகளை ஆங்கிலவழிக் கல்விக்கு அனுப்பிய அரசியல் சீமான்களின் பசப்பு அது. ஏழைப்பிள்ளைகள் தமிழ்படிக்கட்டும் என்பதே அதன் சாரம். தாய்மொழிக்கல்வி மட்டுமே நல்ல கல்வி என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. அதற்கு அறிவியல் அடிப்படை இல்லை. அம்மாதிரி ஒற்றைப்படைக்  கருத்துக்களை நான் ஏற்பதில்லை

முதன்மைக்காரணம், என்னுடைய மொழி என நான் நினைக்கும் தமிழ் என் தாய்மொழி அல்ல. நான் கற்றுக்கொண்ட மொழிதான். நான் சிந்திப்பது இதில்தான். இந்தமொழியில் சென்ற நூறாண்டில் மிக முக்கியமான பங்களிப்புகளில் ஒன்று என்னுடையது.

ஆங்கிலம் இன்று உலக ஞானத்தின் மொழி. அதைக் கற்காமல் இனி வாழ்க்கை இல்லை. அதேசமயம் தமிழ்வாழ்க என்ற வெற்றுக்கோஷம் மட்டுமே இங்கே ஒலிக்கிறதே ஒழிய இன்று தமிழில் உலகசிந்தனையின் துளிகள் கூடக் கிடைப்பதில்லை. இன்று இலக்கியம் தவிர எதுவுமே தமிழின் பொருட்படுத்தும்படி கிடையாது. தமிழ் மட்டுமே தெரியும் ஒருவன் உலகமறியாப் பாமரனாக இருந்துவிட வாய்ப்பதிகம்

என் பிள்ளைகள் தமிழ் படிக்காவிட்டாலும் ஆங்கிலம் படிக்கவேண்டும் என்றே சொன்னேன். இருவருமே தமிழில் மிகச்சிறந்த வாசகர்கள், ஆனால் அவர்களின் தேர்ச்சி ஆங்கிலத்தில்தான். என் மகன் அஜிதனின் ஆங்கிலநடை அவன் வயதில் நான் தமிழில் அடைந்த நடையைவிட மிகமிக நுட்பமும் வீரியமும் கொண்டது. அதில் எனக்குப்பெருமைதான்

ஜெ

முந்தைய கட்டுரைஇந்தியின் தேவை
அடுத்த கட்டுரைதிரைப்படத்தில் நகைச்சுவை