அன்புள்ள ஜெ.,
விரிவான பதிலுக்கு நன்றி. ஆனால், என் கேள்வியின் சாராம்சம் வேறு:
“ஒரு தனிமனிதனின் ஆன்மீக நாட்டத்தை உருவாக்குவதும் உறுதிப்படுத்துவதுமான எவையும் உயர்ந்ததே-” – இந்த என் கருத்து சரியா?
நீங்கள் ஒப்புநோக்கி (relative) ஒரு இலக்கிய வரைமுறையை முன்வைக்கிறீர்கள்…. நான், தனிப்பட்ட முறையில் ஒரு முழுமையான், சார்பிலாத (absolute) வரைமுறையை அளிக்க விழைகிறேன்…. இது நோக்கித் தங்கள் கருத்தை அறிய ஆவல்.
நன்றி
ரத்தன்
அன்புள்ள ரத்தன்,
நீங்கள் கேட்கும் கேள்வி இதுதான் என்றால் முந்தைய கடிதத்தில் மிகப்பிழையாக அதை முன்வைத்திருந்தீர்கள். இலக்கியம் என எதையும் சொல்லமுடியாது, ஆகவே நான் எனக்குப்பிடித்த ஓஷோ மாதிரி இருந்தால் இலக்கியம் என்று சொல்லிக்கொள்வேன் – என்பதே அக்கடிதத்தில் நீங்கள் சொன்னது.
தனிப்பட்டமுறையில் பார்த்தால் நல்ல இலக்கியம் என்பது முழுமையை நோக்கிக் கொண்டுசெல்வது என்ற ஒற்றைவரியில் வரையறைசெய்யத்தக்கது.
ஆன்மீகம் என்பதை நான் ‘சாராம்சமான, முழுமையான’ என்ற பொருளில்தான் எப்போதுமே பயன்படுத்துகிறேன். ஆகவே என்னுடைய நோக்கில் இலக்கியம் கடைசியில் ஆன்மீகத்தால் மட்டுமே நிறைவடைகிறது
நாம் ஆளுமை முழுமையற்றது. நமக்குக் கிடைக்கும் வாழ்க்கைத்தருணங்கள் எல்லைக்குட்பட்டவை. நம்முடைய உணர்ச்சிகள் சமநிலை அற்றவை . நம் சிந்தனைகள் நம் சொந்த அனுபவங்களை மட்டுமே சார்ந்தவையாதலால் ஒற்றைப்படையானவை.
இலக்கியம் இந்தக் குறைவை நிறைவுசெய்துகொண்டே இருக்கிறது.நம் ஆளுமையை அது வளர்க்கிறது. நாம் கற்பனையில் மேலும் மேலும் வாழ வழிசெய்கிறது. நம் உணர்ச்சிகளை நாமே கவனிக்கச்செய்கிறது. நம் சிந்தனைகளை வாழ்க்கையின் அனைத்துத் தளங்களையும் கருத்தில்கொண்டு முன்வைக்கத் தூண்டுகிறது
அதுவே நல்ல இலக்கியத்தின் பயனாகும். சில சமயம் சில இலக்கியங்கள் நம்மை ஒற்றைப்படையான வேகம் நோக்கிக் கொண்டுசெல்லக்கூடும். உதாரணமாக ஒருவன் காப்காவின் உருமாற்றம் அல்லது காம்யூவின் அன்னியனைப் படித்தால் வாழ்க்கை பற்றிய மிக ஒற்றைப்படையான பார்வையையே அடைவான். ஆனால் அவன் தொடர்வாசகனாக இருந்தால் அவன் அவற்றைச் சமன்செய்யும் படைப்புகளை உடனடியாக வாசிப்பான்.
செவ்வியல் படைப்புகள் தங்களுக்குள்ளேயே சமன்செய்யப்பட்டிருக்கும். போரும் அமைதியும் அல்லது கரமசோவ் சகோதரர்களை வாசிக்கும் ஒருவன் அவற்றுக்குள்ளேயே முற்றிலும் சமநிலைகொண்ட உணர்ச்சிகளையும் சிந்தனைகளையும் கண்டடைவான்
இலக்கியம் அளிக்கும் ‘பயன்’ இந்த விடுதலைதான்.
ஜெ