நம்மில் வாழ்தல்

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு..

ஸ்பாமுக்குள் சென்றுவிட்ட எனது மின் அஞ்சலுக்கு நீங்கள் அனுப்பிய மறுமொழி பெரும் மகிழ்ச்சியைத் தந்தது.. உங்கள் எழுத்துகளில் இருக்கும் ஒரு வகையான ஈர்ப்பு Yes, it is life-affirming words…! எனக்கென்று எழுதும்போது கூடுதல் மகிழ்ச்சியைத் தருகிறது..

தேடியவர்களிடம் எஞ்சுவது” மிகவும் பிடித்திருந்தது.. இது வெறும் சம்பிரதாயமான வார்த்தைகள் அல்ல தோழர்.. மிக மோசமான மன உளைச்சலில் இருக்கிறேன்.. மனப்பிறழ்வு ஏற்பட்டுவிடுமோ என்று கூட பயந்தபடியே இருக்கும் சமயத்தில்… உங்களது வார்த்தைகள் பெரும் உத்வேகத்தைத் தருகின்றன.. என் கதை பரிதாபமானது.. தொடர் உதாசீனத்தால் நிலை குலைந்து இருக்கிறேன்.. என்னை எப்படியாவது ‘தோற்றுப்போய் விட்டாய்’ என்று சொல்ல வைக்க எனது பெற்றோர்களே முயல்கிறார்கள்.. கடந்த இருபது வருடங்களாக இதுதான் நடக்கிறது.. நானும் ஒவ்வொரு முறையும் அவர்கள் முகத்தில் கரியைப் பூசியபடிதான் இருக்கிறேன்.. நான் அறிவியலும் தொழில் நுட்பமும் படிக்காமல் தத்துவமும், அரசியலும் மானுடவியலும் படித்ததை அவர்களால் இன்று வரை ஏற்க முடியவில்லை.. இதனால் பெரும் வருமானம் இல்லையாம்.. ! நான் தமிழ் நாட்டில் முக்கியமான சமூக அறிவியல் ஆய்வாளனாக வருவேன் என்று சொன்னால் சிரிக்கிறார்கள்.. வீட்டை விட்டு விரட்டுகிறார்கள்.. என்ன செய்ய..! மீண்டு வருவேன் தோழர்..

கடந்த ஆண்டு இருமுறை நாகர் கோவில் வந்தேன்.. உங்கள் தனிமையில் குறுக்கிடக்கூடாது என்ற அசட்டு எண்ணத்தில் இரு முறையுமே பார்வதிபுரத்தை ஒரு சுற்று சுற்றிவிட்டு சென்னை திரும்பினேன்.. விரைவில் சந்திப்போம் என்று நம்புகிறேன்..
பிரியமுடன்

வி

அன்புள்ள வி,

இரு தேர்வுகள் உள்ளன. இந்த வாழ்க்கையை உங்களுக்காக வாழப்போகிறீர்களா பிறருக்காகவா என்பதுதான் அது.

உங்களுக்குக் குடும்பக்கடமைகள் இருந்தால் நீங்கள் பிறருக்காகவும் வாழவேண்டும். இந்தியாவில் வேறு வழி இல்லை. நாம் சகோதரர்களை பெற்றோரை காப்பாற்றவேண்டிய நிலையிலேயே நம்முடைய சமூக அமைப்பு இருக்கிறது

அப்படி இல்லையேல் நீங்கள் உங்களுக்கான வாழ்க்கையை அமைத்துக்கொள்ளலாம். உங்களுக்கு எது பிடிக்கிறதோ, எது உங்களால் ஆற்றப்படவேண்டிய பணி என நினைக்கிறீர்களோ அதைத் தேர்வுசெய்யலாம்

அப்படித் தேர்வுசெய்தபின் நீங்கள் பிறர் என்ன சொல்கிறார்கள் என்று கவனிக்க ஆரம்பித்தால் அது மிகப்பெரிய பிழை. உங்கள் பணியை நீங்கள் முழுமையாக ஆற்றமுடியாமல் போகும். பிறர் மெச்சும் வாழ்க்கையையும் அடையமாட்டீர்கள். இரண்டுக்கும் நடுவே அல்லாடுவீர்கள் பலர் செய்வது அதையே

இந்தப்பிறர் என்பவர் யார்? அவர்கள் உண்மையிலேயே உங்களை கவனிக்கிறார்களா? உங்கள் பெற்றோருக்கு உங்களைப்பற்றி ஒரு மெல்லிய பதற்றம் இருக்கும். மற்ற எவரும் உங்களை ஒருபொருட்டாக நினைப்பதில்லை என உணருங்கள். அவர்கள் அவர்களின் வாழ்க்கையில் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். அதைத்தவிர எதுவும் அவர்களுக்குப் பொருட்டல்ல

ஆனால் அவர்கள் தாங்கள் வெற்றியடைந்திருக்கிறோம் என்பதை உறுதிசெய்துகொள்ளவேண்டியிருக்கிறது. அதற்காக அவர்கள் நோக்கில் ’தோல்வி’யடைந்தவர்களை நோக்கி ஒப்பிட்டுக்கொள்ளவேண்டியிருக்கிறது. தாங்கள் எதை அடையவேண்டும் எனக் கணக்கிட வேண்டியிருக்கிறது. அதற்காகத் தங்களை விட ’வெற்றி’ அடைந்தவர்களை ஒப்பிடவேண்டியிருக்கிறது. இரண்டுமே அவர்களின் பாவனைகள். நம்முடைய பிரச்சினைகள் அல்ல அவை

அவர்களை முழுமையாகவே உதாசீனம் செய்வதன்றி வேறு எந்த வழியும் இல்லை. நான் அப்படித்தான் செய்தேன். எவரையும் திரும்பிப்பார்த்ததில்லை. என் உறவினர் ‘இன்னுமா நாடோடியாக இருக்கிறாய்?’ என்று உச் உச் கொட்டியிருக்கிறார்கள். என்னுடன் படித்தவர்கள் ‘என்ன இன்னும் தற்காலிக ஊழியராகவா இருக்கிறாய்?’ என்று பார்த்திருக்கிறார்கள். ‘இன்னுமா பிரமோஷனுக்கு எழுதலை” என ஒருகாலத்தில் என்னைப் பார்ப்பவர்கள் எல்லாரும் கேட்பார்கள். என் சக ஊழியர்கள் வந்து என் மேலதிகாரிகளாக இருந்திருக்கிறார்கள். ஒரே ஹாஸ்டலில் என்னுடன் தங்கி என்னுடன் மூன்றுவருடம் காசர்கோட்டில் பணியாற்றிய ஒருவர் என் மேலதிகாரியாக வந்து என்னை ‘அடையாளம் காணாமலேயே’ மூன்றுவருடம் பணியாற்றிச்சென்றிருக்கிறார்.

நான் எனக்குள் சொல்லிக்கொள்வேன், நான் சந்தோஷமாக இருக்கிறேன், நிறைவாக வாழ்கிறேன் என்று. காரணம் நான் எனக்கான வாழ்க்கையைத் தேர்வுசெய்துகொண்டேன். அதில் ஒரு கணநேரத்தையும் வீணாக்காமல் ஈடுபட்டேன். அது அளிக்கும் ஆனந்தத்தில் என் வாழ்க்கையை செலவிட்டேன்.அதை மதிப்பிடப் பிறரது அங்கீகாரம் எனக்குத் தேவை இல்லை. எனக்கே தெரியும் அது வெற்றியா தோல்வியா என. என்னைப்போல மகிழ்ச்சியாகப் பிறர் இல்லை என்பதை ஒவ்வொருநாளும் கண்டுகொண்டிருந்தேன்

[அதிருஷ்டவசமாக என் ஒரே உறவாகிய அண்ணா என்னை மிக நன்றாகப் புரிந்துகொள்ளக்கூடியவர். ‘அவன் எழுத்தாளன். சரஸ்வதி கடாட்சம் உள்ளவன். சரஸ்வதி கூட இருக்கும்போது அவனுக்கு என்ன குறை?’ என்று சொல்வார். என் வாழ்க்கை நிறைவானது என்பதில் அவருக்கு எப்போதும் சந்தேகமிருந்ததில்லை]

உலகியல்வாழ்க்கையில் வெற்றி தோல்வியை உலகம் உருவாக்கிக்கொண்டிருக்கும் அளவுகோல்களைக்கொண்டு மதிப்பிடக்கூடாது. நாம் உருவாக்கிக் கொண்டிருக்கும் மதிப்பீடுகளைக் கொண்டே அளவிடவேண்டும். நீங்கள் ‘பெரிய ஆளாக’ ஆக முடியாமல்போனால்கூட உங்கள் ஒவ்வொரு நாளையும் உங்களுக்கு நிறைவூட்டும்படி வாழ்ந்தால் அது முழுமையான வாழ்க்கைதான். அதை நீங்கள் எவருக்கும் நிரூபிக்கவேண்டியதில்லை. எவர் முன்பும் சென்று நின்று ‘பார்த்தாயா?’ என்று கேட்கவேண்டியதில்லை.

நீங்கள் செய்யவேண்டியதை முழுமையாகச் செய்யுங்கள். பிசிறில்லாமல் அதை அடைய முயலுங்கள். ஆம், கடமையைச்செய்யுங்கள் பயன் பின்னால் வரும்

ஜெ

முந்தைய கட்டுரைகாடு-கடிதம்
அடுத்த கட்டுரைபறவைச்சரணாலயங்கள்