அன்புள்ள ஜெயமோகனுக்கு,
தாங்கள் நலமா. அமேரிக்கா எப்படி இருக்கிறது? நீண்ட நாள்களுக்கு பின் உங்களுக்கு கடிதம் எழுதுகிறேன். என்னை நினைவில் இருக்கும் என நினைக்கிறேன். இந்த சனி விடுமுறையில் தங்கள் கிளி சொன்ன கதையை படித்தேன். இரண்டு நாட்களுக்கு முன்பே தாங்கள் அதை பதிவேற்றம் செய்ய தொடங்கி விட்டாலும், அப்போது அதற்கு நேரம் இல்லை. கதை தலைப்பை பார்த்தவுடன் தாங்கள் எழுதிய குறுநாவலான “கிளி காலம்” போல இதுவும் தங்கள் பால்யத்தில் முளை விட்டிருக்கும் என்று நினைத்தேன். “போனதொரு கிளிக்காலம் பின் ஒரு சிறகுதிர் காலம்” என்று ஆரம்பிக்கும் அந்த வரிகள் இன்னும் நினைவில் இருக்கிறது. தங்களின் தெய்வ மிருகமும், துவார பாலகனும், டார்த்தினியத்தால் இறந்து போன கருப்பனும் மிருகங்களும் உலாவும் கதை களம். ஒரு முறை மழை காலம் பற்றி எழுதிய கட்டுரையின் காலமான அந்த பஞ்சம் பரவிய கிழ்ங்கு தோண்டி தின்னும் காலம். கதையை பற்றி என்ன சொல்வதென்றே தெரியவில்லை. படித்த வேகத்தில் எழுதுவதால் நிறைய எண்ணங்கள் அலைமோதுகின்றன. பண்டைய பண்பாடும் பழைமை ஞானமும் தங்களின் எழுத்து மூலம் தான் 19 வயதான என்னை போன்றவர்களுக்கு தெரியவருகின்றன. பலா மர சட்டத்துக்கு சொல்லும் காரணமும், பசுமாட்டின் ரயோஜனமா பற்றிய குறிப்புகளும் வியப்பில் ஆழ்த்துகின்றன. அனந்தன் என்ற protagonist மூலமாக தாங்கள் செய்த சிந்தனையும் அவ்வாறே. கதை முழுதும் தாங்கள் சொல்லியிருக்கும் தத்துவமும் அவ்வாறே. அதிலும் அந்த வக்கீல் சொல்லும் ஒரு வரி என்னை பத்து நிமிடம் நினைவில் ஆழ்த்திவிட்டது ( பெண்ணுக்குள்ள ஒரு வெஷமுண்டு தங்கப்பா, அதை ஒருதுள்ளி குடிச்சவன் பின்ன ஒரு பெண்ணையும் நம்பமாட்டான். நான் குறெ கண்டிட்டுண்டுடே மக்கா).
தாய் மறு வீடு செல்ல ஆயுத்தமோடு கதையை முடித்திருந்தீர்கள். அதன் பின் என்னாயிற்றோ என்று மனம் பதறியது. சீதை பற்றிய ஒரு கவிதை வரியை உங்கள் அம்மா படிப்பது போலவும்,அதற்கு ஒரு பாட்டி விளக்கம் கேட்டு யோசனையில் ஆழ்வது போலவும் ஒரு கட்டுரையில் எழுதியிருந்தீர்கள். மீண்டும் ராமாயணம் பற்றிய ஒரு புதிய கண்ணோட்டம் வெளிபடித்தியிருக்கிறீர்கள். அது புதியதில்ல்லை என்று பின்பு தோன்றுகிறது. காடு நாவலில் தேவ சகாயம் நாடார் மூலமும் இதையே சொல்லி இருந்தீர்கள். மனித துக்கத்தை பாடி தீர்த்து விடவே முடியாது. சீதையில் காவலும் அவள் கட்டி கொண்ட கற்பின் காவலும் உண்மைதான். அனால் சொல்லால் அமையபெறும் சிறை பற்றிய தங்கள் கருத்து என்ன. தாங்கள் கொற்றவையில் சொன்னீர்களே ” எது சொல்லால் சிறை அமைக்கிறதோ அம்மரபு . சிறையை விட மேலான சிறை என் நிறையை வகுத்த மரபு” (வரிகள் செரியா என தெரியவில்லை) அதன் நேரடி அர்த்தம் என்ன?
தங்கள் பயணம் இனிதே அமைந்திருக்க வேண்டி கொள்கிறேன். உங்கள் எழுத்தை விடாமல் படித்து விடுகிறேன். கல்லூரிக்கு போகும்போதும் மாலை நேரமும் அந்த கருத்துக்கள் மனதில் அசை போடுகின்றன. ஒரு கண்ணில் தெரியாத நண்பன் உடன் இருப்பது போல உணர்கிறேன். தங்களை என் நண்பர் என்று சொன்னால் கோபித்து கொள்ள மாட்டீர்கள் தாமே. தங்கள் ems மற்றும் பல தீவிர கட்டுரைகளின் மீது விவாதம் நடத்த ஆசை உள்ளது. ஆனாலும் பொறியியல் படிப்பு பாரம் தடுக்கிறது. ஆங்கிலத்தில் மின்னஞ்சல் அனுப்பலாம் தான். அனால் தங்களுக்கு மொழி பெயர்க்கும் சிரமத்தை கொடுக்க விரும்பவில்லை. அவ்வளவே.
நன்றி
பன்னீர் செல்வம்.
அன்புள்ள பன்னீர்
நலம்தானே?
எப்போதும் பேரிலக்கியங்கள் பெண்களின் கதையைச் சொல்கின்றன. ஏன் என்று யோசிக்கும்போது தோன்றுவது பிள்ளைப்பேறு என்ற இயற்கையைன் கடமையே அதற்கான அடிபப்டைக்காரணம் என்றுதான். பிள்ளைகளை பெறுவதனால் பெண் சமூகத்தை உருவாக்குபவளாக இருக்கிறாள். ஆகவே சமூக விழுமியங்களை உருவாக்குபவளாகவும் அவள் இருந்தாகவேண்டும் என சமூகம் எதிர்பார்க்கிறது. பின்னர் அந்த எதிர்பார்ப்பே சுரண்டலாக ஆகிறது. வன்முறையாக ஆகிறது.
அதை இன்னும் பல்லாயிரம் பக்கங்கள் எழுதலாம்.
ஜெ
அன்புள்ள திரு ஜெயமோகன்,
கிளி சொன்ன கதை – சிறுவனின் மனப்போக்கை நன்றாகவே படம் பிடித்திருந்தது!! விவரிப்புகளும், வர்ணணைகளும் மிகவும் நுனுக்கமாக அமைக்கப்பட்டிருந்தது !
மகள்வழிச் சொத்துரிமை இருந்த போதும், பெண்களின் நிலை ஆண்களால் கட்டுண்டே இருந்திருக்கிறது !! ஈரேழ் உலகமும் கற்பினால் சுட்டெரிக்கும் வல்லமை இருந்த போதும் ராமனுக்காக காத்திருந்த சீதை சரி !! விசாலத்தின் (கண்ணீருடன் கதை கேட்கும் மற்ற பெண்களும்தான் !!) பொறுமையின் காரணம் என்ன ? துன்பப்படுவதாலையே தன்னை சீதையாக எண்ணிக்கொள்கிறார்களா ?
PS : இந்த கதையின் தொடர்சியாக உங்களின் ஒரு கட்டுரை ஞாபகம் வந்தது – அம்மாவும் அப்பாவும் பிரிந்திருந்து, உங்களின் உடல் நல பாதிப்பின் பின் சேர்ந்தது பற்றியது !! – இந்த கதையும் ஒரு விதத்தில் கட்டுரைதானே !!
வெ கண்ணன்
பெங்களூர்
அன்புள்ள கண்ணன்
கிளி சொன்ன கதையில் வரும் காலகட்டம் மக்கள் வழிச் சொத்துரிமை அதன் இறுதியை எட்டி அழிந்துவந்த காலத்தை சேர்ந்தது. கதையில் அப்பாவின் இலக்கே பெண்ணின் சொத்தை ஆணுக்கு எடுத்துக்கொள்வதுதான்.
பெண் ஏன் பொறுத்துக்கொண்டாள் என்றால் குழந்தைகளுக்காகவே. குழந்தைகளை அவளால் உதறமுடியாதென்பதனாலேயே
ஜெ
அன்புள்ள ஜெ,
அனந்தனின் சிறு தோளில் அமர்ந்து கிளி சொன்ன சீதாயணத்தை கண்டு கேட்டு படித்தேன்.
நிறைய நினைவுகளையும் கேள்விகளையும் எழுப்பியது. நாஞ்சில் நாடன் அவர்களின்
பாணியில் விசாலம்மை சமைத்த சத்யயை விவரித்த விதம் எச்சில் ஊறி பசியை
கிளப்பிவிட்டது ( கேரளத்தில் உண்ட எத்தனையோ திருமண சத்யைகளை நினைவுறுத்தியது).
மீன்கறிகளை வைக்கும் லாவகம், செய்முறை விளக்கம்….பசியை மேலும் தூண்டியது.
என் அம்மா தினமும் மாலையில் தீபம் தெளிவிச்சவுடன் (தூஞ்சத்து எழுத்தச்சன்
எழுதிய) ராமாயணம் ஒரு மணி நேரமாவது குறைந்தது படிப்பாள். பக்கத்தை
நிறுத்துவதற்கு கூட இந்த எழுத்தில் முடியும் சொல்லில்தான் நிறுத்த
வேண்டும் என்று பார்த்து
பார்த்து படிப்பாள். தாத்தாவிடமிருந்து தொற்றிக்கொண்ட பழக்கம். படித்து
முடிக்கும் வரை இரவு உணவு கிடைக்காது. அவள் மடியில் தூக்க கலக்கத்தில் கிடந்து
கேட்டு வளர்ந்தேன். ராமாயணம் வாசிக்கையில் அவள் முன்னால் உட்கார விட மாட்டாள்,
அது அனுமன் வந்தமரும் இடமாம் – ராமயணம் வாசிக்கும் வீடுகளில் எல்லாம் அவர்
வந்து கேட்டு போவாராம். எனக்கு சிரிப்பாக இருக்கும். வளரிளம்பருவத்தில்
கேள்விகள் கேட்டு இம்சித்திருக்கிறேன். ஒரு கட்டத்தில் பதில் சொல்வதை
தர்க்கிப்பதை நிறுத்தி விட்டாள். இன்றும் வாசிக்கிறாள்.
ராமயணம் கேட்கும்போதெல்லாம் சீதாவின் மேல் பரிதாபம், கோபம், வெறுப்பு என
விவரித்து கூற முடியாத எண்ண கலவைகள் தோன்றும். என்னைப் பொறுத்தவரை அக்னியில்
இறங்க சொன்ன போதே அவள் அவனை விட்டு இறங்கியிருக்க வேண்டும்.
ராமனின் நல்ல குணங்களென எத்தனை பட்டியலிட்டாலும் மனைவியை அவன் நடத்திய விதம்,
சோதனை செய்தது, கர்ப்பிணியாக காட்டில் அனாதரவாய் விட்டது எல்லாம் மோலோங்கி (
என்ன தான் நாட்டுக்காக நாட்டு மக்களுக்காக என்று சப்பை கட்டு கட்டினாலும்)
மதிப்பை குறைத்து விடுகிறது(பாலில் பல துளி விடம்). மனைவியை மதியாதவன், சக
மனுஷியாக நடத்தாதவன், ஸ்னேகிதியாக வாழ்க்கையை பகிராதவன் அவதாரமானாலும்
மனிதப்பற்று இல்லாத ஈனப்பிறவியே!.
தங்கப்பன் கலங்களை தட்டி உடைத்ததும் படர்ந்த வெறுமை, கோபம், ஆற்றாமை, கதை இறுதி
வரை இருந்தது. விசாலம்மையின், அனந்தனின், அண்ணனின் பசியை எரிச்சலை கோபத்தை
உணர்ந்தேன். எதுவுமே நடக்காததை போல மீண்டும் சோறு சமைத்து கணவனை கெஞ்சி
கூத்தாடி உபசரித்து உணவளிக்கும் அனந்தனின் அம்மாவின் மேல் கோபம் கோபமாக வந்தது.
எத்தனை அடி உதை வாங்கினாலும் கணவனே கண் கண்ட தெய்வம், புல்லானாலும் புருசன்
என (உதடு கிழிந்து, கர்ப்பம் கலங்கி, பிரசவ தையல் பிரிந்து) வாழும் எத்தனையோ
கலியுக சீதைகளை கண்டிருக்கிறேன் ( என் உறவு கூட்டத்திலேயே). அவர்களின்
கண்ணீருடன் முடிந்த கதை நீண்ட நெடு நேரம் மனசை கனக்கச் செய்தது.
(என் பார்வையில்) இந்த தலைமுறையில் அ”சோக”வன சீதைகளின் எண்ணிக்கை குறைந்து
வருவதாகத்தான் தோன்றுகிறது ( அதற்கு மனிதப்பற்றுள்ள இக்கால ராமன்களும் ஒரு காரணம்).
சுவையான இளைமையான நெகிழ்ச்சியான கனமான நிகழ்வுகளை பதிந்தமைக்கு பகிர்ந்தமைக்கு
மிக்க நன்றி!
– ரா.சு.
அன்புள்ள ராசு,
வேணாட்டு மண்ணில் இப்போதும் கிளி சீதாயணம் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறது.
பலசமயம் நான் சிந்திப்பதுண்டு, உயர்ந்த விழுமியங்கள் பலவீனமாக ஆகும் தருணங்கள் உண்டா என. அன்பும் பாசமும் கருணையும் தியாகமும் மூர்க்கமாக சுரண்டப்படும் தருணங்களில் அவை பொருளிழந்துபோய்விடுகின்றனவா என்று
ஆனால் உள்ளே ஒரு குரல் சொல்லிக்கொண்டே இருக்கிறது, இல்லை அவை வெல்லும் என. தோல்வியிலும் அவை காணும் வெற்றி ஒன்று உண்டு என
கிளி அவற்றை மட்டுமே வரவு வைக்கும் என
ஜெ