அன்பின் ஜெ ,
இன்று காடு முடித்துவிட்டு எழுதுகிறேன்.ஒரு படைப்பை முடித்ததும் அதைத் தொகுத்துக் கொள்வதும்,எழுதுவதும் இது முதல் முறை.வாசிப்பின் படிநிலைகள், எதுவுமின்றி நான் வாசித்த முதல் நூல் விஷ்ணுபுரம், அதனாலேயே என்னவோ எனக்கு அது மிகப்பெரும் சவாலாகவும் மிகுந்த உழைப்பையும் கோரியது.இருப்பினும் என்னால் இன்னும் விஷ்ணுபுரத்தைத் தொகுத்துக் கொள்ள இயலாமல் உதிரியாகவே நிற்கிறது.இப்போது கொஞ்சம் முன்னேற்றம் கண்டிருப்பதாகவே எண்ணுகிறேன்.
விஷ்ணுபுரம் போலன்றி சமகாலக் கதையாகையாலும், தங்களின் படைப்புலகில் ஒரு முழு வருடம் உலவியமையாலும் இது சாத்தியமாயிருகிறது.
பதின்வயது இளைஞனாக அறிமுகமாகி முதிர்ந்த பாட்டனாகக் கதைசொல்லிச் செல்கிறார் கிரிதரன் .முதிர்ந்த வயதில் கல்வெர்டில் பெயர் காணும் வரை அவர் தன் நானை சுமந்து கொண்டுதானிருக்கிறார்.அய்யரும் அதையே சுட்டிக் காட்டுகிறார். குரிசின் தரிசனமே என்னை நீண்ட நேரம் சிந்திக்க வைத்தது. பைபிளில் இயேசுவைத் தேடும் அவர் ஒரு கனவின் மூலம் பீடிக்கப்பட்டுக் காணாமல் போவது. அவரின் பாதிரி பெண்களை சாத்தான் என்று சொன்னதன் விளைவே அந்த சொப்பனம்,காணாமல் போகும் போது பைபிளை விட்டு செல்வதும் பின் மதப் பிரச்சாரகர் ஆவதும்,பின் ரெஜினாளோடு வாழ்வதும்; சிநேகத்தைக் கையில் கொண்டு அவர் கிறிஸ்துவைக் கண்டடைந்து விட்டார்.ரெசாலத்தின் தேவாங்கின் மீதான சிநேகம் நாவலில் திறக்கப்படும் இடம் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது.சதாசிவம் கொலை வாசக இடைவெளியாக அளிக்கப்பட்டு இருக்கிறது.அவரது மனைவிக்கும் சதாசிவதிற்குமான உறவும் கூட.
காமம் இதில் ஊடாக இல்லை வெளிப்படையாக ஒவ்வொருவருள்ளும் பாய்கிறது,கிரியும் அய்யரும் அதை அகத்திலும்,மாமி,சினேகம்மை,மேனன் மனைவி புறத்திலும்.
காடு பற்றிய வர்ணனையில் நீங்கள் கூறிய மரங்கள்,பூக்களை எதுவொன்றும் அடையாளம் காண முடியாது என்னால்.
முற்றிலும் சிறந்த வாசிப்பு அனுவபமாக இருந்தது காடு. தளத்தில் நிறைய காடு வாசிப்பு பற்றி கடிதங்களை எல்லாம் வாசித்துவிட்டு எழுதுகிறேன்.
நன்றிகளுடன்
பிரகாஷ்
அன்புள்ள பிரகாஷ்
காடு ஒரு இலக்கியம். அதற்கு வெளியே உள்ள தகவல்கள் தேவை இல்லை. அதில் மொழிவடிவமாக உள்ளவை மனதில் கற்பனையாக விரிந்தால் போதும். அதிலுள்ள மண், மரம், மிருகம் எதையும் நீங்கள் அடையாளம் காணவேண்டியதில்லை. அந்த அளவிலேயே கற்பனையில் அது முழு அனுபவமாக ஆகிவிடுகிறது
ஜெ