நாய்களும் பூனைகளும்

அன்புள்ள ஜெயமோகன்,

வணக்கம்

ஏன் நாய்களையும் ,பூனைகளையும் எளிதில் நமக்குப் பிடித்து விடுகிறது ?

சமீபத்தில் வைக்கம் முகமது பஷீர் பற்றிப் படிக்கும் பொழுது ஒரு வாசகம் படித்தேன் அது பூனையைப் பற்றியது “பூனையின் கண்கள் ஞானி கண்கள் போன்றது” என்பார். அதைக் கடந்த நான்கு மாதமாக என் வீட்டில் வளரும் பூனையிடம் காண்கிறேன்.ஆனால் ஒரு ஞானி குழந்தை வடிவம் கொண்டு என் முன் விளையாடுகிறான் ,அவனின் பார்வை தெளிவானது ,மனிதர்கள் மீது அலட்சியமானது ,ஆனால் பல்லி ,காக்கை ,மற்றொரு பூனையின் மீது மிகுந்த அக்கறை கொண்டது,அறையின் நடுவில் தனது இரண்டு கால்களையும் அகல விரித்து மின்விசிறி காற்றில் தூங்குவது ,சோபாவில் ஓய்வு ,புத்தக அலமாரியில் தியானம் ..வரம் பெற்ற ஞானி.

பூனைகள் நன்றி மறப்பவை ,எனவே இந்தப் பூனையும் ஒரு நாள் நம் வீட்டை விட்டு ஓடிவிடும் என்பார் என் அப்பா ,ஆனால் என் அம்மா ஒரு நாளில் பூனைக்கு உணவு வைக்கும் பொழுது எல்லாம் கேட்பாள் “இந்தப் பூனை நம்மை விட்டுப் போய்டாதுன்னு நினைக்கிறேன் ” என்பார்.அடுத்த வாசகம் என் அம்மாவிடம் இருந்து வருவது ” போனா போகட்டும் இருக்கற வரைக்கும் சோறு போடலாம் ” தன்னைத் தானே தேற்றியும் கொள்வார்.பூனை வீட்டை விட்டுப் போவது எனக்கும் பிடிக்கவில்லை என்றாலும் அடிக்கடி என் அம்மாவிடம் அதை நினைவு படுத்திக் கொண்டே இருப்பேன்..ஆனால் அது ஒரு பொருளில்லா வரிகளே அப்பொழுது அவருக்கு .

பூனைகளும் ,நாய்களும் மனிதர்களைக் கவர எந்தத் தந்திரமும் செய்வதில்லை அவைகளின் உலகில் அவை சுதந்திரமாகத் திரிவதை மனிதனின் மனம் ரசிக்கிறது ,மதில் மேல் திரிவதும் ,வாழை மரத்தின் உச்சியில் ஏறுவதும் ,கருப்புத் துணிக்குப் பின்புறம் இருந்து காக்கையைப் பிடிக்கத் திட்டம் போடுவதும் அவைகளால் மட்டுமே முடியும், ஒரு சாகசக்காரன் ,சர்க்கஸ் கோமாளி ,ஒரு மரமேறி …..ஏதோ ஒரு சுதந்திர உணர்ச்சி அவைகளை முழுமையானவைகளாக வைத்திருக்கின்றன ,மேலும் அவை நம்மிடம் உரிமைகளைக் கேட்பதில்லை, எடுத்துக்கொள்கின்றன ,ஒரு வகையில் அது பாதிக்காத வரையில் நாம் அதை ரசிக்கிறோம் .

பூனை கண்ணை மூடினால் உலகம் இருண்டுவிடும் என்று சொல்வார்கள் ,மானுடர்க்கு இது ஒரு எதிர்மறை வாசகம் என்றாலும் பூனையைப் பொறுத்தவரை அது கொடுத்து வைத்த ஜீவன் ,ஏன் என்றால் அது தியானம் போலத்தான் அதற்கு எந்த உலக சிந்தனையும் கிடையாது ,இதை என் வீட்டில் வளரும் பூனையின் முகத்தில் அது உறங்கும் பொழுது கண்டிருக்கிறேன்.உண்மையில் விலங்குகள் கனவு காண்கின்றனவா ?….எதற்குக் காண வேண்டும் அதன் உலகமே கனவில்தானே .

பல நேரங்களில் தெரு நாய்களைப் பார்த்துப் பொறமை கொண்டிருக்கிறேன் ,நடு நிசியில் முழு நிலவு நேரங்களில் ,தென்னை மரக் காற்றில் யாருமில்லா சாலையில் நடந்து போகையில் ஒரு அலட்சியப் பார்வையோடு ” அட இந்த சொகத்த விட்டுட்டு ,வெந்து புழுங்கும் வீட்டுக்குள்ள போயி அடையரையே மூடா ” என்று என்னைப் பார்த்துக் கேட்பது போல உணர்வேன்.முழு நிலவும் ,தென்னை மரக் காற்றை விட நமக்கு “கண்ணீர் வடிக்கும் நாடகமும்,ஒன்பது மணி தூக்கமும் தான் முக்கியம் “, சரி தான் நாம் என்ன வீடில்லா மனிதரா ?.வீடுள்ள அதுவும் தொலைக்காட்சிப் பெட்டி கொண்ட நவநாகரிக மனிதர் அல்லவா ?. நான் வீடு கொண்ட நாகரிக மனிதன் என்றால் ” அது தான் உங்க நாகரிகத்த தெருவல பார்க்கிறேனே ” என்கிறது அந்த நாய்கள் கூட்டம் .நடுநிசியில் எனக்கு இருக்கும் சுதந்திரம் கூட உனக்கு இல்லையே …அப்புறம் என்ன பேச்சு என்கின்றன அந்த சுதந்திர வாதிகள் …

பூனைகளும் ,நாய்களும் என்னை எப்பொழுதும் கவர்ந்தவை ,என்னுடைய பார்வையில் அவைகள்
எப்பொழுதும் என் அகந்தையுடன் பேசக்கூடிய வல்லமை கொண்டவை .
நான் இவைகளை எழுதக் காரணம் …நாய்களும் பூனைகளும் இல்லாத உலகம் முழுமையானதாக இருக்குமா ?. எனக்கு அவைகளிடம் பிடித்த ஒன்று “அவைகளின் பார்வை” ,அந்தப் பார்வையில் பதற்றம் இல்லை,ஒருவித பரிகாசம் மட்டுமே நான் காண்கிறேன் ,அது தான் என்னவோ அவைகளை நமக்கு எளிதில் பிடித்து விடுகின்றதா என்ன ?.

நன்றி

முரளி .

அன்புள்ள முரளி

மிருகங்களிடம் நாம் காண்பவை எல்லாம் நாம் அவற்றின்மேல் ஏற்றிக்கொள்பவையாக இருக்கலாம். நாம் நம் குழந்தைகளிடம் நம்முடைய நல்லவிஷயங்களை எல்லாம் ஏற்றிவிடுவதுபோல

மிருகம் என்பது ஒரு தூயவெண்திரை

ஜெ

முந்தைய கட்டுரைபண்பாட்டு உடை
அடுத்த கட்டுரைமொழியாக்கங்கள்