விருது [சிறுகதை]

டெல்லிக்கு அப்பாவுடன் சென்றிருக்கவே கூடாது என்று அவன் நினைத்துக் கொண்டான். ரயிலில் இருவர் மட்டும் அமரக்கூடிய சிறிய அறைக்குள் அவர் வெளியே பார்த்துக் கொண்டு இறுகிய முகத்துடன் அமர்ந்திருந்தார். அவருக்குப் பதில் அங்கே அவரது ஆளுயர போஸ்டர் படம்தான் ஒட்டப்பட்டிருக்கிறது என்று அவன் நினைத்துக் கொண்டான். அவரைவிட அவரது போஸ்டர்களைத்தான் அவன் அதிகமும் பார்த்திருக்கிறான். அவன் சின்னக்குழந்தையாக இருக்கும்போதுதான் அப்பாவின் படம் போஸ்டர்களில் வர ஆரம்பித்தது. மருதங்குழி முக்கில் அச்சுதன் மாமனின் டீக்கடை வாசலில் வைக்கப்பட்ட தட்டியில் ஒட்டப்பட்டிருந்த மூன்று வண்ண போஸ்டரில் நசீரும் ஜெயபாரதியும் முகத்தோடு முகம் பார்த்துக் கொண்டிருக்கும் படத்திற்குக் கீழே வரிசையாகத் தெரிந்த முகங்களில் வலதுபக்கத்திலிருந்து நான்காவதாக அப்பாவின் படம் இருப்பதை அவன்தான் முதலில் கண்டுபிடித்தான். உடனே கால்சட்டையை இடுப்புக்கு ஏற்றிக்கொண்டு ஒரே பாய்ச்சலாக வெளியே குதித்து இடைவழி வழியாக ஓடிப் படிகளை மிதிக்காமலேயே வீட்டுக்குள் பாய்ந்துசென்று அம்மாவிடம் சொன்னான்.

அம்மா உடனே சேலையை மாற்றிக்கொண்டு ஒரு பையைக் கையில் எடுத்தபடி தெரு முக்குக்குச் சென்றாள். அவளால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவன் கூடவே சென்று சுட்டிக்காட்டினான். ‘சும்மா இருடா…யாராவது பார்த்துவிடுவார்கள்’ என்றாள் அம்மா கோபத்துடன் . அசட்டையாக முகத்தை வைத்துக்கொண்டு அச்சுதன்மாமனிடம் தோட்டத்தை வெட்டிக்கொடுக்கும் ராமன் அங்கே வந்தானா என்று விசாரித்தாள். அவன் மெல்ல ‘அம்மா இங்கே….இங்கபார்’ என்றான். அவள் அவனைப்பார்க்காமல் கைநீட்டி அவன் கையைப்பிடித்துக் கிள்ளி இறுக்கினாள்.

அதன்பின் ஒரே வருடத்தில் எங்கும் அப்பாவின் படம் தென்பட ஆரம்பித்தது. பள்ளிக்கூடம் செல்லும்போதெல்லாம் அப்பாவின் போஸ்டரைப் பிள்ளைகளுக்குக் காட்டுவான். அதன்பின் அவர்கள் அவனுக்குக் காட்டினார்கள். ஒருகட்டத்தில் நகரில் எங்கு சென்றாலும் வெவ்வேறு போஸ்டர்களில் அப்பா தெரிந்தார், ’கொன்றை பூத்ததுபோல’ என்று அவன் அம்மாவிடம் சொன்னான். நகரமெங்கும் கொன்றைப்பூதான் அந்தக் காலகட்டத்தில். ஆனால் கடைசிவரை போஸ்டர்களில் அப்பாவைத் தேடிப்பார்க்கும் தேடல் அவன் கண்களில் இருந்துகொண்டுதான் இருந்தது. போஸ்டரில் இருக்கும் அப்பா அவனைப்பார்ப்பதில்லை. அவர் அவனிடமிருந்து வெகுதொலைவிலிருந்தார். அவன் சிலசமடம் பெரிய போஸ்டர்களின் முன்னால் தனியாக நின்றுகொண்டு அந்தரங்கமாக ‘அப்பா’ என்று கூப்பிடுவான். அப்பா கோயிலுக்குள் நிற்கும் தெய்வம்போல வெகுதொலைவுக்கு அப்பால் எதையோ நோக்கி நிலைத்த கண்களுடன் அவனுக்குச் சம்பந்தமில்லாத ஏதேதோ உணர்ச்சிகளுடன் இருப்பார்

அப்பா அவன் பார்த்திருக்கவே மாறிப்போனார். சாலையில் நடந்துபோகும் ஒருவரின் பிம்பம் உடைந்த கண்ணாடியில் பிரதிபலித்து இரண்டாக உடைவதுபோல. வெளியே படங்களில் தெரியும் அப்பா, எப்போதாவது திரையரங்குக்குச் சென்று பார்க்கும் படங்களில் வேறு எவரோ ஆக வாழும் அப்பா ஒருவர். இரவுநன்றாக தாழ்ந்தபிறகு வந்து நிற்கும் ஏதோ ஒரு காரில் இருந்து களைத்துப்போய் வியர்வை நாற்றத்துடன் இறங்கி வந்து சோம்பல்முறித்து அவன் பார்வையை அனிச்சையாகச் சந்தித்து ‘என்னடா?’ என்று கேட்கும் அப்பா இன்னொருவர். குளித்துவிட்டு ஈரத்துண்டுடன் தன் அறைக்குச்செல்லும்போது அவரது முன்வழுக்கைத்தலைக்குப்பின்னால் சுருண்ட கரிய கூந்தலிழைகள் ஈரமாகத் தோளில் விழுந்து புரளும். உள்ளே அவர் பீரோவைத்திறந்து துணிகளுக்கு நடுவே இருந்து கண்ணாடியாலான வாத்து போனற கழுத்து நீண்ட செந்நிற புட்டியை எடுத்து அதனுள்ளிருந்து தேங்காயெண்ணை போன்ற திரவத்தைக் கண்ணாடிக்கோப்பையில் விட்டுத் தண்ணீர் சேர்த்துக் கையில் ஏந்தியபடி நிலைக்கண்ணாடிமுன் நிற்பார். கண்ணாடிக்குள் அவரை நோக்கி நிற்கும் பிம்பத்தை நோக்கி புட்டியை நீட்டியபின் குடிப்பார். ஏதோ முனகியபடி வாய்க்குள் பாடியபடி குடித்துமுடித்தபின் வெளியே வருகையில் வாயை சப்புக்கொட்டுவார். தாடையை இறுக்கி இறுக்கி இலகுவாக்குவார். அவனிடம் ‘சாப்பிட்டியாடா?’ என்பார். அவன் தலையசைத்ததும் ‘போய்ப்படு’ என்று சொல்லிவிட்டு சென்று சாப்பாட்டுமேஜையில் அமர்வார்

அவன் கதை புரிந்து சினிமாப்பார்க்க ஆரம்பித்த பின்னர் வீட்டுக்குள் வரும் அப்பா கரைந்து இல்லாமலானார். அந்தக் கண்ணாடி அவரைப் பலநூறு பிம்பங்களாக உடைத்துப் பரப்பிவிட்டது. பிறவிக்கிரிமினலான தபலிஸ்ட் மணிகண்டன், உருளிபோகுமிடத்தில் சாப்பாடு கிடைக்கும் என்பதற்கு அப்பால் வாழ்க்கையைப்பற்றி ஒன்றும்தெரியாத மாதவன்குட்டி, ரைஸ்மில்லைப் பெண்களைக் கவரும் யந்திரமாக மாற்ற முடிந்த லோனப்பன்,மனிதர்கள் எளிதாக வித்தை காட்டும் மிருகங்கள் மட்டுமே என்று கண்டுகொண்ட சர்க்கஸ் மானேஜரான உண்ணித்தான்…அவர்களுக்கும் அப்பாவுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. அவர் ஒரு வாசல்போல். அவர்கள் அதற்கு அப்பாலிருந்த எங்கிருந்தோ அவர் வழியாக வந்துகொண்டே இருந்தார்கள். ஒரு கட்டத்தில் அப்பா மெல்லிய பிராந்திவாசனையுடன் வீட்டுக்கு வரும்போது முற்றிலும் அன்னியமான எவரோ வீட்டுக்கு வந்துவிட்டதுபோன்ற சஞ்சலம் ஏற்பட்டது. அவருக்குள் இருந்து அப்போது வெளிப்பட்டுக்கொண்டிருப்பவர் யார்? எந்த மதத்தை எந்த சாதியை எந்த உணர்வுகளைத் தன் அடையாளம் கொண்டவர்?

ஆனால் அவன் அப்பாவிடமிருந்து ஒருகணம்கூட விலகியதில்லை. இரவில் தூக்கம் வந்து இமைகள் கனத்துச்சரிகையில் எப்போதும் கடைசி எண்ணமாக இருப்பவர் அவர்தான். அப்பாவின் பெயரைச்சொல்லி அவனை அறிமுகம்செய்வதைப்போல அவன் உவகை கொள்ளும் தருணம் வேறில்லை. அவன் பார்ப்பதற்கு அப்பாவின் சாயலில் இருக்கிறான் என்று சொல்லிக்கேட்கையில் உடம்பு மெல்ல அதிரும். ஃபாதர் ஈப்பன் ‘…அப்டீன்னா நீதான் சாலமோன் ராஜா வேஷம் செய்யணும்…மீன்குஞ்சுக்கு நீந்தத்தெரியுமான்னு பாப்போமே’ என்றார். அவன் ‘இல்லை…நான்..’ என்றபோது ‘நீதான்….’ என்று சொல்லிவிட்டார். …நீ நடிக்கலைன்னா அப்பாவுக்கு அவமானம்.’ அவன் தலையசைத்தான். பயிற்சிகளில் அவன் மனம் படபடத்துக்கொண்டே இருந்தது. வசனங்கள் மறந்தன. அசைவுகள் தவறின. ‘நீ உங்க அப்பா பேரை நாறடிச்சிருவே போல இருக்கே’ என்றார் ஃபாதர். அவன் நெஞ்சுக்குள் கனமாக நிறைந்த குளிர்ந்த காற்றை அழுத்தி வெளியே விட்டான்

ஃபாதர் ஈப்பன் அப்பாவைப் பள்ளிக் கலைவிழாவுக்குக் கூட்டிக்கொண்டு வரமுடியுமா என்று கேட்டபோது அவன் நெஞ்சைக்கவ்வும் திகிலுடன் பேசாமல் நின்றான். இரண்டுநாள் தயங்கி அம்மாவிடம் சொன்னான். ‘…அப்பா எங்கே வரப்போகிறார்? ஜானு அக்காவின் மகள் கல்யாணத்துக்கு வரவேண்டுமென்று நான் காலில் விழுந்து கெஞ்சினேன். போடி என்று சொல்லிவிட்டு எர்ணாகுளம் போய்விட்டார்….’ என்றவள் ‘நீ வேண்டுமென்றால் கேள்…நான் மாட்டேன்’ என்று சொல்லிவிட்டாள். கெஞ்சிக்கெஞ்சிப்பார்த்தும் ‘போடா பேசாமல்’ என்றுதான் சொன்னாள்.

அப்பா வீட்டுக்கு வந்தபோது அவன் அவர் அருகே சென்று பேசாமல் நின்றான். ’ம்ம்?’ என்றார் அப்பா.

‘ஸ்கூலிலே வரச்சொன்னாங்க’ என்றான்.

‘என்ன பண்ணினே நீ? ஒழுங்குமரியாதையாப் படிக்க மாட்டியா?’ என்று கோபத்துடன் திரும்பினார்.

‘ஸ்கூல் ஆனிவர்சரி…அதுக்கு கெஸ்டா கூப்பிட்டாங்க’ என்று அவசரமாகச் சொன்னான்.

அப்பா யோசித்து ’எத்தனாம் தேதி?’ என்றார்.

அவன் மனம் மலர்ந்து ‘மார்ச் ஏழு’ என்றான்.

அப்படியே எழுந்து சென்று போனை எடுத்து எவரிடமோ பேசித் தேதிகளை மாற்றிவைக்கச் சொல்லிவிட்டு ‘சரி வருகிறேன்…போய் ஃபாதரிடம் சொல்லு’ என்றார்.

அவனால் நம்பவே முடியவில்லை. அப்பா அப்போது நடித்த அந்த கதாபாத்திரத்தை அதற்கு முன்னால் பார்த்தே இராததுபோலிருந்தது.

அப்பா பள்ளிக்கூடத்துக்கு நேராகக் காயங்குளத்திலிருந்தே வந்தார். அவரது கார் வந்ததும் யாரோ உள்ளே ஓடிவந்து சொல்ல கூடத்திலிருந்த எல்லாரும் முட்டிமோதி வெளியே சென்றார்கள்.ஃபாதர் ஈப்பன் கையில் ஒரு பெரிய பூச்செண்டுடன் சென்று அதை அப்பாவிடம் நீட்டி ‘வாங்க..வாங்க ’என்றார். எல்லா ஆசிரியர்களும் கூட்டமாக அப்பாவைச்சூழ்ந்துகொண்டார்கள். அப்பா மிகுந்த கூச்சத்துடன் எல்லாரிடமும் ஓரிரு சொற்கள் சொன்னார். தேய்ந்த முன்பல் கொண்ட அந்தச்சிரிப்பை எத்தனையோ கதாபாத்திரங்களின் முகத்தில் அவன் கண்டிருக்கிறான். தன்னம்பிக்கையுடன், கொடூரத்துடன் ,காமத்துடன், அறியாமையுடன், அன்புடன்,நெகிழ்வுடன்…. ஆனால் அப்போதுபோல அது மங்கலாக எப்போதுமே இருந்ததில்லை. ‘சாரி அப்பா….சாரி…’ என்று அவன் மனதுக்குள் சொல்லிக்கொண்டே இருந்தான்

அரங்கின் முன்வரிசையில் அப்பா அமரச்செய்யப்பட்டார். ஃபாதர் ஈப்பன் ஓடிவந்து ‘நாடகம் தொடங்கட்டும்…சீக்கிரம் ‘ என்றபின் அவனிடம் ‘..முன்வரிசையில் அப்பா உட்கார்ந்திருக்கிறார். அப்பா என்றால் அது ஒரு மனுஷன் இல்லை. கைனிக்கர குமாரபிள்ளையும் கலாமண்டலம் கிருஷ்ணன்நாயரும் டி.கெ.சோமன்நாயரும் எல்லாம் வந்து உட்கார்ந்திருக்கிற மாதிரி….எங்க மானத்தைக் காப்பாத்துணும்டா நீ’ என்றார்.

ஆனால் ஆச்சரியமாக அப்போது அவனுக்கு எந்தப்பதற்றமும் தோன்றவில்லை. அவன் முழு ஒப்பனையுடன் படுதாவுக்கு அப்பால் தெரிந்த இருண்ட மேடைச்செவ்வகத்தை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தான். அதுவன்றி அங்கே எதுவுமே இல்லை. எவருமே இல்லை. விசில் ஒலித்துத் திரை மேலெழுந்ததும் செங்கோலும் செம்பழுப்பாடையும் வைரமணிமுடியுமாக அவன் வெளிச்சத்தை நோக்கிச் சென்றான். அக்கணமே அவன் இரண்டாகப்பிரிந்தான். மேடையில் ஞானத்தின் மகத்தான துயரத்துடன் நின்ற சாலமோன்மகாராஜாவை அவன் பிரமிப்புடன் பார்த்துக்கொண்டிருந்தான்.

அப்பா பேசும்போது ’சாலமோன் மன்னனாகத் தோன்றியவர் சிறப்பாக நடித்திருந்தார்’ என்று ஒரு வரி மட்டும் சொன்னார். அப்போது அரங்கு ஒட்டுமொத்தமாகப் பேரொலி எழுப்பியது. அவன் மனம் உணர்ச்சியற்றிருந்தது. எங்கோ ஏதோ நடந்துகொண்டிருப்பதை வேறெங்கோ இருந்து பார்த்துக்கொண்டிருப்பதைப்போல. அப்பா மிகச்சுருக்கமாகத்தான் பேசினார். அவருக்குள் அதிகச் சொற்கள் இருக்கவில்லை. உண்டியலுக்குள் கைவிட்டுக் காசு தேடுவது போல முகம் அதிலேயே கவனம் கொண்டிருந்தது.

அப்பா கிளம்பும்போது அவனும் தன் தோல்பையுடன் அந்தக்காரில் ஏறச்சென்றான். ஃபாதர் ஈப்பன் ‘எங்களுக்கு நம்பிக்கை இருந்தது, புலிக்குப் புலிக்குட்டிதான் பிறக்கும் என்று’ என்று சொல்லி அவன் தலைமேல் கையை வைத்தார். சூழ நின்றிருந்த ஆசிரியர்கள் அவனைப்பற்றிப் பேசிக்கொண்டே இருந்தார்கள். அவன் அங்கிருந்து உடனே விலகிவிடவேண்டுமென்று விரும்பினான்.

கார் கிளம்பியதும் அவன் விரும்பியது ஒன்றே ஒன்றுதான், அப்பா அதைப்பற்றி எதுவுமே பேசக்கூடாது. அதை அப்பா நிறைவேற்றினார். அமைதியாக வெளியே பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தார். விஜெடி ஹால் அருகே வண்டி சென்றதும் டிரைவரிடம் ‘நிறுத்து…’ என்றார். வண்டி நின்றது. அவனைப்பார்க்காமல் ‘…இது விக்டோரியா ஜூபிலி ஹால்…தெரியுமே?’ என்றார். அவன் ’ஆமாம்’ என்றான். ‘…இங்கேதான் அந்தக்காலத்தில் சி.வி.ராமன்பிள்ளையின் நாடகங்களெல்லாம் போட்டிருக்கிறார்கள்…சிவியே நடித்திருக்கிறார்…’ என்றார். அவன் பேசாமல் பார்த்துக்கொண்டிருந்தான். ‘மனசில் தியானிச்சுக்கோ…’ என்றபின் வண்டியை எடு என்று டிரைவரின் தோளில் தட்டினார்.

பறக்கும் சன்னலின் ஒளி அவர் முகத்தின்மீது மாறி மாறி அலையடித்துக்கொண்டே இருந்தது. அவன் அவரையே பார்த்துக்கொண்டு அமர்ந்திருப்பதை அவர் உணர்ந்ததாகவே தெரியவில்லை. ஐந்து வருடங்களுக்கு முன்னால் அவருக்குப்பக்கவாதம் வந்து இரண்டு வருடங்கள் படுத்த படுக்கையாக இருந்து அதிதீவிர சிகிழ்ச்சைக்குப்பின் மெல்ல மீண்டுவந்தாலும் அவரது பழைய முகம் இல்லாமலாகிவிட்டது. இடது கண்ணும் வாயின் இடது ஓரமும் லேசாகக் கீழிறங்கி இருக்கும். அது அவருக்கு எதன் மீதோ ஆழ்ந்த அவநம்பிக்கை இருப்பதைப்போன்ற பாவனையை அளித்தது. அவரது எல்லா சொற்களிலும் அந்த பாவனை வந்து கலந்துகொண்டது. அவரது தனிமையில் அது அவர் மீது கனமாகப் போர்த்தி மூடியிருந்தது. அடுத்தக்கணம் அவர் பெருமூச்சுவிடுவார் என்ற எண்ணத்தை உருவாக்கியது.

அவருக்குப் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டிருப்பதை சினிமாவின் செய்தித்தொடர்பாளர் வேணுதான் கூப்பிட்டுச் சொன்னார். அப்பா அப்போது தூங்கிவிட்டிருந்தார். அவர் ஒன்பதுமணிக்கே தூங்கிவிடவேண்டும் என்பது டாக்டரின் கறாரான உத்தரவு. அவர் மெல்லமெல்ல அவரது உடல் சொல்வதற்கு செவிகொடுக்க ஆரம்பித்திருந்தார். உடல் ஒரு புதைசேறு போல அவரை உள்ளே இழுக்க பதைபதைக்கும் முகத்துடன் அவர் அதில் மூழ்கிக்கொண்டிருப்பதுபோல ஒரு மனப்பிம்பம் அவனில் இருந்தது. வேணு சொன்னது அவனுக்கு முதலில் சரியாக ஏறவில்லை. ‘’…முன்னாடியே சொல்லியிருந்தாங்க. ரெகெமெண்டேஷன் போயிருந்தது… இப்ப அறிவிப்பு வந்திருக்கு…முறையான அறிவிப்பு வந்தபிறகுதான் சொல்லணும்னு இருந்தேன்…’

என்ன சொல்வதென்று தெரியாமல் ‘…அப்படியா?’ என்றான்.

‘அனேகமா நாளைக்கு டிவியிலயும் சொல்லிடுவான்னு நினைக்கிறேன்’ என்றார் வேணு.

’அப்பா தூங்கிட்டிருக்கார்…இனிமே எழுப்ப முடியாது…நான் நாளைக்கு எந்திரிச்சதும் சொல்லிடறேன்’

வேணு ’சரி’ என்றார்.

அதன்பின் தொடர்ந்து தொலைபேசி அழைப்புகள் வந்துகொண்டே இருந்தன. அம்மாதான் பெரும்பாலும் பேசினாள். வாழ்த்துக்கள் சொன்னவர்கள் எல்லாம் மறுநாள் மீண்டும் கூப்பிடுவதாகச் சொன்னார்கள். அம்மா இரவு பன்னிரண்டுமணிக்குமேல்தான் தூங்கினாள். அவனுக்கு எந்த விதமான மனக்கிளர்ச்சியும் ஏற்படவில்லை. அப்பா அவரது இரண்டாவது படத்துக்கே தேசிய விருது பெற்றார். மாநில அரசு விருதுகளும், சர்வதேச விருதுகளும் பெற்றிருந்தார். அவர் மலையாளத்தின் மிகச்சிறந்த நடிகர் என்பதில் மேற்கொண்டு எந்த நிரூபணமும் எவருக்கும் தேவையிருக்கவில்லை. அவருக்குத் தன் முதல்படத்தில் நடிப்பதற்கு முன்பே அந்த உறுதி இருந்திருக்கவேண்டும். வழக்கம்போல அன்றும் அவன் அவரை நினைத்துக்கொண்டுதான் தூக்கத்தில் மூழ்கினான். தூக்கத்தில் விழுவதென்பது அப்பாவுக்குள் மூழ்குவதுதான். அப்பா அடியற்ற ஆழமுள்ள குளிர்ந்த ஒரு மலைச்சுனைபோல.

நினைத்ததுபோலவே அப்பா மறுநாள் செய்தியை வாங்கிக்கொள்கையில் எந்த சலனத்தையும் காட்டவில்லை. நிறைவின்மையாக மாறிவிட்டிருந்த முகம் மேலும் சற்று கோணலாகியது. அப்படியே உறைந்து கல்லாக ஆனவர் போலிருந்தார். கார்களில் நண்பர்கள் வந்துகொண்டே இருந்தார்கள். நடிகர்கள், இயக்குநர்கள், இதழாளர்கள். பிரபலநடிகர்கள் வந்தபோது சாலையில் மக்கள் கூடி நின்று கூச்சலிட்டார்கள். இரு இளம்நடிகர்கள் அப்பாவின் கால்களைத் தொட்டு ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டார்கள். அப்பாவின் முகத்தின் இடதுபக்கம் மேலும் மேலும் கீழிறங்கியபடியே செல்கிறது என்று அவனுக்குப்பட்டது. மதியம் அவரை சற்று ஓய்வெடுக்க விட்டிருக்கலாமென நினைத்தாலும் முடியவில்லை.

இரவு ஒன்பதரை மணிக்குத்தூங்கச்செல்லும்போது அவர் தள்ளாடிக்கொண்டிருந்தார். படுத்ததுமே தூங்கிவிடுவார் என்று நினைத்தான். ஆனால் அவர் பீரோவைத் துழாவியபின் அம்மாவிடம் சத்தம் போட்டர். ’இங்கே வச்சிருந்ததை யார்டி எடுத்தது?’.

அம்மா ’டாக்டர் சொல்லியிருக்காரு…’ என்றாள்.

‘போடீ’ என்றபின் அவர் ‘டேய்’ என்றார்.

அவன் சென்று நின்றான். ‘போய் ஒரு பாட்டில் பிளாக்லேபில் வாங்கிட்டு வாடா’.

அந்த இரவில் அவன் மொபெட்டில் நகரத்துக்குச் சென்று மது வாங்கிவந்தான். அப்பாவின் நரம்புப்பிரச்சினைக்குக் குடிபோல ஆபத்தானது ஏதுமில்லை என்று டாக்டர் எச்சரித்திருந்தார். ஆனால் அந்த இரவில் அவருக்கு ஏன் அது தேவைப்படுகிறது என்று அவனுக்குப் புரிந்தது. அவனால் புரிந்துகொள்ளமுடியாத எதுவும் அப்பாவிடமில்லை என்றும் பட்டது. அப்பாவுக்குள் ஏறி அவன் நடிக்கமுடியும்.

அப்பா பிளாக் லேபிலை எரிச்சலுடன் பிடுங்கிக்கொண்டார். குடிப்பவர்களுக்கு அந்த புட்டி அளிக்கும் எந்த உற்சாகத்தையும் அவர் அடைவதில்லை. எரிச்சலுடன் மட்டுமே அவர் குடிக்க அமர்வார். தீயில் நீர் விட்டு அணைப்பதுபோலத்தான் குடிப்பார். அதனாலேயே அவரால் அளவைக் கட்டுப்படுத்த முடியாது. சட்டென்று போதையேறி நிலைதடுமாறிவிடுவார். நாற்காலியில் இருந்து சாதாரணமாக எழப்போனவர் தடுமாறிப் பக்கவாட்டில் படீரென உடல் நிலத்தை அறைய விழுந்திருக்கிறார். ஒட்டுமொத்தமாக டீபாய் மேலேயே வாந்தி எடுத்திருக்கிறார். விழிகள் கோணலாகத் தொய்ந்து அப்படியே நாற்காலியில் தூங்கியிருக்கிறார். அவருக்கு முதல் பக்கவாதத் தாக்குதல் வந்ததுகூட அப்படிப்பட்ட கட்டற்ற குடிக்குப்பின்னர்தான். விடுதியறையில் மறுநாள் அவரால் எழமுடியவில்லை. எழமுயன்றவர் பக்கவாட்டில் சரிந்து சரிந்து விழுந்தபின்னர்தான் தன் இடதுகாலும் கையும் செயலிழந்திருப்பதை உணர்ந்தார். பார்வை இரட்டைப்பிம்பங்களாகச் சிதறியிருந்தது. முப்பரிமாண சினிமாவை அதற்கான லென்ஸ் இல்லாமல் பார்ப்பதுபோல. வாயை அசைத்தபோது உதடுகள் கோணியபடி செல்வதை, எச்சில் வழிவதை உணரமுடிந்தது. ஒற்றைக்கையால் தொலைபேசியை எடுத்து வரவேற்பைக் கூப்பிட்டார். அவள் அவரது குழறலை மட்டும்தான் கேட்கமுடிந்தது

பத்மஸ்ரீ வாங்க டெல்லிக்குக் கிளம்பவேண்டுமா என்று அப்பா கடைசிவரை தயங்கினார். உடம்புக்கு முடியவில்லை என்றார். ’இல்லை இது பெரிய கௌரவம், உங்களுக்கு மட்டும் அல்ல, மலையாள சினிமாவுக்கே கௌரவம். நீங்கள் அதை உதாசீனம் செய்யக்கூடாது’ என்று லால் கூப்பிட்டுச் சொன்னார். எல்லாரும் சொன்னபோது அவரால் விலகமுடியவில்லை. ஆனால் பயணம் நெருங்க நெருங்க தேவையில்லாமல் பதற்றம் கொள்ள ஆரம்பித்தார். சின்னச்சின்ன விஷயங்களை எல்லாம் கேட்டுக்கொண்டிருந்தார். ஆனால் அவை அவரது பிரக்ஞையில் நிற்கின்றனவா என்றும் சந்தேகமாக இருந்தது. ஒருமுறை சொன்னதையே மீண்டும் மீண்டும் சொல்லவேண்டியிருந்தது. ஒருகட்டத்தில் அவர் எதற்கெடுத்தாலும் எரிந்துவிழ ஆரம்பித்தார். அவருடன் டெல்லி செல்வதுபற்றி அவனுக்குக் கொஞ்சம் உற்சாகம் ஆரம்பத்தில் இருந்தது அதெல்லாம் வடிந்து எப்படியாவது கொண்டுபோய்விட்டுத் திரும்பிவந்தால்போதும் என்று ஆயிற்று.

ரயிலில் செல்லும்போது கூடவே இரண்டுபேர் இருந்தார்கள். இருவரும் டெல்லி செல்லும் பத்திரிகையாளர்கள். ஆகவே அப்பா கொஞ்சம் எளிதாக இருந்தார். அவர்கள் அவரது பழையபடங்களைப்பற்றிப் பேசிக்கொண்டே வந்தார்கள். டெல்லியில் கேரளா ஹவுஸில் தன் அறைக்குச் சென்றதும் அப்பா கனத்தபோர்வைபோல ஒரு மௌனத்தை இழுத்துப்போர்த்திக்கொண்டார். அவன் அவருடன்தான் இருந்தான். ஆனால் அவர் அவனுடன் இல்லை என்று தோன்றியது. டெல்லி மலையாளி சமாஜத்திலும் மாத்ருபூமியிலும் இரு வரவேற்புநிகழ்ச்சிகளுக்கு அவரை அழைக்க வந்தார்கள். அவரது நெடுநாள் நண்பரான இதழாளர் மாதவன்குட்டிதான் வந்தார். அப்பா திட்டவட்டமாக மறுத்துவிட்டார். ’என்னால் முடியவில்லை…என்னால் முடியவில்லை…என்னை விட்டுவிட்டு மாதவா’ என்று திரும்பத்திரும்பச் சொன்னார். ஒருகட்டத்தில் அவர்களும் விட்டுவிட்டார்கள். அப்பா பகல் முழுக்க எங்குமே செல்லவில்லை. அவரைப்பார்க்க வந்தவர்களுடன் கேரளாஹவுசின் வரவேற்புக் கூடத்திலேயே அமர்ந்திருந்தார். வந்தவர்கள் அவரிடம் கேட்டவற்றுக்கு மட்டும் ஒருசில சொற்களில் பதில் சொன்னார். சிலசமயம் அப்படியே ஆழ்ந்த மௌனத்திற்குள் சென்று அமர்ந்திருந்தார்.

அப்பாவை அவர்களால் புரிந்துகொள்ளமுடியவில்லை. அதை அவர்கள் அவரது உடல்நலச்சிக்கல் என்றே விளக்கிக்கொண்டார்கள். திரும்பத்திரும்ப அவரது சிகிழ்ச்சை விஷயங்களைக் கேட்டார்கள். அவருக்குக் கடந்த இரண்டாண்டுகளாக எந்தப்பிரச்சினையுமில்லை என்று அவன் சொன்னான். அவரது உடல்நிலை எவ்வளவு முடியுமோ அவ்வளவு சரியாகிவிட்டது. மேற்கொண்டு எந்த சிகிழ்ச்சையும் அதற்குத் தேவை இல்லை. ஆனால் அப்பா திரும்பி வர மனமில்லாதவராக இருந்தார். பின்பக்கம் கதவுகளை மூடியபடி அவர் சென்றுகொண்டே இருந்தார்.

விழாவுக்கு முந்தையநாள் ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்து கூப்பிட்டார்கள். பரிசுவாங்குபவர்கள் வந்து ஒரு போலி நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவேண்டும். பரிசு வழங்கும் நிகழ்ச்சியை அபப்டியே நடிப்பார்கள். அப்பா ‘என்னால் முடியாது…நான் காமிரா இல்லாமல் நடிப்பதில்லை…போய்ச்சொல்’ என்று சொல்லிவிட்டார்.’இல்லை இது கட்டாயம்’ என்றார் ஷர்மா என்ற சீனியர் பாதுகாப்பு அதிகாரி. அவன் மாதவன்குட்டி வழியாக அப்பாவின் உடல்நிலைபற்றிச் சொல்லிப்பார்த்தான். ‘அப்படியென்றால் அவரது மகன் வந்து நடிக்கட்டும். அதை அவருக்கு நன்றாகச் சொல்லிக்கொடுத்து அவர் கூட்டிவந்தால்போதும் ‘ என்றார் ஷர்மா.

விருதை ஷர்மாதான் வழங்கினார். ஆறடிக்குமேல் உயரமான ஐபிஎஸ் ஆபிசர். அவரது உதவியாளர்கள் ஜனாதிபதியின் அதிகாரிகளாக நடித்தனர். விருதுபெற்றவர்களில் கவிஞர்களும் பரதநாட்டியக்கலைஞர்களும் பாடகர்களும் சமூகசேவையாளர்களும் பத்திரிகையாளர்களும் இருந்தார்கள். அவர்களில் பலர் விருதுவாங்கும்போது அணியவேண்டிய அதே உடையுடன் உற்சாகமாக வந்திருந்தனர். அந்தப் போலி நிகழ்ச்சியில் இருந்த சின்ன சங்கடத்தை வெல்ல அதை அவர்கள் உற்சாகமான ஒரு வேடிக்கையாக மாற்றிக்கொண்டார்கள். ஒருகவிஞர் சின்னச்சின்ன நகைச்சுவைகளாக உதிர்த்துக்கொண்டே இருந்ந்தார். ‘இந்நிகழ்ச்சியை வெள்ளைக்காரர்களைக்கொண்டு நடத்தவேண்டும். அதைத்தானே நம் ஜனாதிபதியும் பிரதமரும் நகல்செய்யவேண்டும்’ என்றார். ஒரியமொழி நடிகை எதற்கெடுத்தாலும் கூந்தலை உதறித் தலையைப்பின்னால் சரித்து உரக்கச்சிரித்தாள். விருது பெற முன்னால் சென்றபின் ஒரடி தூரத்தில் நின்று ஜனாதிபதியை வணங்கவேண்டும். கைகுலுக்கக் கூடாது. முதுகைக்காட்டித் திரும்பக்கூடாது. இரண்டடி தூரம் பின்னால் நகர்ந்து பக்கவாட்டில் விலகிவிடவேண்டும். இரு அதிகாரிககள் அதை நடித்துக்காட்டினார்கள்

அவன் முறைவந்தது. அப்பாவின் பெயர் அழைக்கப்பட்டபோது அவன் பிரமித்து நின்றான். வங்காளிக் கவிஞர் அவனை உசுப்பி அவன்தான் என்றதும் திடுக்கிட்டு எழுந்து நடந்தான். சட்டென்று அவனுக்குத் தன்னுடைய உடல் இடப்பக்கமாக இழுப்பது போலிருந்தது. இடப்பக்கம் வலுவில்லாமல் துடுப்பு போடப்பட்ட படகுபோல உடல் அப்பக்கமாக அவனை மீறி வளைந்தது. விழுந்துவிடுவோம் என அஞ்சினான். நடந்துசென்று ஷர்மா முன் நின்றான். ஷர்மா தீவிரமான முகத்துடன் ஒரு புத்தகத்தை அவனுக்கு நீட்டினார். அவன் அதை வாங்கியபோது இடது கை பலவீனமாக இருந்தது. அவன் தன்முகமும் ஆழ்ந்த அவநம்பிக்கையைக் காட்டுவதாக ஆகிவிட்டிருக்குமோ என்று எண்ணிக்கொண்டான்.

அப்பாவிடம் அவன் அந்நிகழ்ச்சியை சுருக்கமாகச் சொன்னான். அப்பா அதைக் கவனித்ததாகவே காட்டிக்கொள்ளவில்லை. தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருந்த ஏதோ அபத்தமான நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டிருந்தார். அவரது கண்களுக்குள் வண்ணங்கள் சுருண்டுசுருண்டு குவிந்துகொண்டிருந்தன. ஆனால் மறுநாள் நிகழ்ச்சியில் அப்பாதான் அந்த சடங்கை எந்தவிதமான பிசிறும் இல்லாமல் செய்தார். வங்காளக்கவிஞர் ஜனாதிபதியின் கைகளைப்பற்றிக் குலுக்கிவிட்டார். ஒரியநடனக்கலைஞர் ஜனாதிபதிக்கு சமானமாக நின்று கொண்டார்.அவரைப் பாதுகாவலர்கள் மெல்லத்தொட்டு விலக்கினர். கன்னட எழுத்தாளரின் கையிலிருந்த கைத்தடி மேடையில் ஓசையுடன் விழுந்தது. அப்பா நிதானமாகப் பரிசை வாங்கிக்கொண்டு வந்து அமர்ந்துகொண்டார். அவரது முகம் அதே பாவனையுடன் இருந்தது

ஜனாதிபதி தன் உரையை எழுத்தெழுத்தாக வாசித்தார். வயதான தமிழ்பிராமணர். ஒருகாலத்தில் பொருளாதார மேதையாக அறியப்பட்டவர். முதுமை அவரது கவனத்தை முழுமையாகவே சிதறடித்திருந்தது. எங்கே என்ன செய்துகொண்டிருக்கிறோம் என்று அவருக்குத் தெரியுமா என்றே அவனுக்குச் சந்தேகமாக இருந்தது. அதன்பின் நான்கு அமைச்சர்கள் பேசினார்கள். எல்லாமே எழுதித் தயாரிக்கப்பட்ட உரைகள். எழுதி வைக்கப்பட்ட சில்லறை சொல்வேடிக்கைகள். அதற்கு முன்னதாகப் பயிற்சி எடுத்துக்கொண்டவர்கள் போல சபையினர் கைதட்டிச் சிரித்தார்கள். பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏதோ சொன்னபோது முன்வரிசையில் அமர்ந்திருந்த வெள்ளைவெளேரென்ற சருமமும் சிவப்புச்சாயமிட்ட தலைமுடியும் கொண்ட மாது மிகையுணர்ச்சியுடன் கைநீட்டி ஏதோ சொல்லி உருகினாள். கலாச்சாரச்செயலர் உரையில் அமைச்சர்களைப்புகழ்ந்து சொன்ன ஏதோ வரிக்கு மொத்த அரங்கும் கைதட்டியபோது ‘இல்லை இல்லை’ என்று அவர் கைவீசிக்காட்டினார்.

நிகழ்ச்சிக்குப்பின் விருந்து ஆரம்பித்தது. அந்த வெள்ளைவெளேர் பெண்மணி சாயம்பூசிய கூந்தலுடன் ரத்தச்சிவப்பு உதடுகளுடன் ஒவ்வொருவரையாகக் கட்டிப்பிடித்துப் பேசிக்கொண்டிருந்தார். அவரது முகத்தசைகள் தளர்ந்துவிட்டிருப்பதனால் அந்த மிகையுணர்ச்சி தோன்றுகிறதா இல்லை அந்தமாதிரி மிகையுணர்ச்சிகளால் மெல்லமெல்ல அவை அப்படி ஆகிவிட்டனவா என்று அவன் யோசித்தான். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் செயற்கையாகப்பேசிக்கொண்டிருந்தார்கள். எவரும் எவர் முகத்தையும் கவனிக்கவில்லை என்று தோன்றியது. சுற்றிவந்தவர்கள் மீண்டும் சந்தித்துக்கொண்டபோது மீண்டும் அறிமுகம் செய்துகொண்டார்கள். குல்லாய் வைத்த வெயிட்டர்கள் சத்தமில்லாமல் பானங்களுடன் நடந்துகொண்டிருந்தார்கள். ஷெர்வானிகள் கோட்டுகள் கதர்ச்சட்டைகள் தொப்பிகள் மெல்லிய மூக்குக் கண்ணாடிகள்….’நீங்கள் கண்டிப்பாக மிஸ்டர் கேயைச் சந்திக்கவேண்டும்…அவர் ஒரு ஜீனியஸ்’ ’கலம்ஹாரியிலே புதிசாக ஏதோ செய்கிறார்…மார்வலஸ்’ , ‘ஈரானிய நாடகங்களில் இப்போது ஃப்ராய்டிய-லக்கானியத் த்தாக்கம் நிறையவே இருக்கிறதென்றாலும்…’

அப்பா ‘களைப்பாக இருக்கிறது…அறைக்குப்போகலாம்’ என்றார். போகலாமா என்று அவன் மாதவன்குட்டியிடம் கேட்டான். அவர் ‘ஒன்றுமில்லை…ஆனால் சிலர் எங்கே என்றுகேட்பார்கள்…’ என்றார்.

அவன் அப்பாவைக் காரில் ஏற்றிக்கொண்டு கேரளா ஹவுஸுக்கு வந்தான். அப்பா வந்ததுமே பேரரைக்கூப்பிட்டு பிளாக் லேபிலுக்கு ஆணையிட்டார். அன்று அவரை அவன் நாற்காலியில் இருந்து தூக்கிக் கட்டிலில் படுக்க வைக்கவேண்டியிருந்தது. அவர் தூக்கம் கலைந்து அசைந்து ‘யார்டா அது?’ என்றார். பின்னர் வாய் கோணலாக இழுபட ’நாயின் பிள்ளைகளே’ என்று குழறிவிட்டுத் திரும்பிப்படுத்தார். ’நாயின் மகன்’ என்று மெல்ல முனகிக்கொண்டதுமே குறட்டை அவர் உதடுகளைத் துடிக்கச்செய்தது

அப்பா அப்படியே தூங்கிவிட்டிருப்பதைக் கண்டான். அவரது நீண்டபிடரிமயிர் தோளில் சரிந்து கிடக்க தலையைச்சரித்தவராக ரயிலின் ஆட்டத்தைத் தானும் ஆடிக்கொண்டிருந்தார். அவன் எழுந்து கழிப்பறைக்குச்சென்றுவிட்டு வந்தான். ஒருவர் சிரித்துக்கொண்டு ‘நீ அவரது மகன்தானே?’ என்றார். ரயில்வே சீருடை அணிந்திருந்தார்.

’ஆமாம்…’ என்றான்.

‘எந்த கிளாஸில் படிக்கிறாய்?’

‘பத்தாம் வகுப்பு’ அவர் சிரித்து ‘

‘அப்பாவுடன் டெல்லிபோனாயா?’ என்றார்.

‘ஆமாம்’

‘அப்பா இப்போது என்ன செய்கிறார்?’.

அவன் தயங்கிவிட்டு ‘தூங்கிக்கொண்டிருக்கிறார்’ என்றான்.

‘நான் அப்பாவின் பெரிய ரசிகன்…அவரது எல்லாப் படங்களையும் பலதடவை பார்த்திருக்கிறேன்..’

அவன் தலையசைத்தான்.

‘அப்பாவிடம் என்னைக் கூட்டிக்கொண்டு போகிறாயா? நான் அவரைத் தொந்தரவு செய்யமாட்டேன். சும்மா கும்பிட்டுவிட்டு உடனே திரும்பிவிடுவேன்…என் பெயர் ஷண்முகன்’ என்றார்.

அவன் சரி எனத் தலையசைத்தான்.

’நான் அரைமணி நேரம் கழித்து வந்து கதவைத்தட்டுகிறேன்’

திரும்ப வந்து அமர்ந்தபோது கதவு திறந்து மூடிய ஒலி கேட்டு அப்பா கண்விழித்தார். அவனைக் கூர்ந்து பார்த்துக்கொண்டே இருந்தார், அவரது மனதில் அவன் யாரென்பது இன்னும் பதிவாகவில்லை என்பது போலத் தோன்றியது. பின்பு வாயைத்துடைத்துக்கொண்டு நிமிர்ந்து அமர்ந்தார். ’நீ கடைசியாக எந்த நாடகத்தில் நடித்தாய்?’ என்றார்’’’

‘நாற்றங்கால், பணிக்கர்சார் எழுதியது..’ என்று சொன்னான்.

அப்பா அதை அர்த்தமில்லாத பார்வையுடன் கேட்டு அர்த்தப்படுத்திக்கொள்ளாதவர் போல வேறெங்கோ திரும்பினார். பின்பு திரும்பி அவனிடம் ‘டேய், இங்கே பேரர் எவனாவது இருப்பான். கூட்டிக்கொண்டுவா’ என்றார்.

‘எதற்கு?’ என்று கேட்டதுமே அது புரிந்துவிட்டது. எழுந்து வெளியே வந்து இடுங்கிய வழியினூடாகச் சென்றான். இன்னொரு பெட்டியில் ஷண்முகன் சென்று கொண்டிருந்தார். ‘அப்பா கூப்பிடுகிறார்’ என்றான்.

‘என்னையா?’

‘ஆமாம்’

ஷண்முகன் கிட்டத்தட்ட ஓடி வந்தார். கதவைத்திறந்ததும் கைகளைக் கட்டிக்கொண்டு ‘பார்க்கவேண்டும் என்று நிறையநாளாக நினைத்துக்கொண்டிருந்தேன்’ என்றார்.

’உன் பெயர் என்ன?’ .

ஷண்முகன் ‘ஷண்முகன்’ என்றபின் ‘பையனுக்கு உங்கள் பெயரைத்தான் வைத்தேன்.ஆறாம்கிளாஸ் படிக்கிறான்’ என்றார்.

அப்பா மெல்லத் தலையசைத்தார். ‘நன்றாகப்படிக்கவை…’சட்டைப்பையைத் துழாவி ஒரு நூறுரூபாய் எடுத்து நீட்டி ‘நான் கொடுத்தேன் என்று அவனுக்கு எதையாவது வாங்கிக்கொடு’ என்றார்.

ஷண்முகன் பணிவுடன் குனிந்து அதை வாங்கிக்கொண்டு கண்களில் ஒற்றிக்கொண்டார்.

’நான் ஆசீர்வாதம்செய்து கொடுத்தேன் என்று சொல்லணும்’ என்றார் அப்பா.

‘கண்டிப்பாக…’ என்றார் ஷண்முகன், நெகிழ்ந்தவராக.

‘ஷண்முகன், எனக்கொரு உதவி செய்யவேண்டுமே’ என்றார் அப்பா.

‘சொல்லுங்கள்’

‘எனக்கு அவசியமாகக் குடிக்க ஏதாவது வேண்டும்…விஸ்கி பிராந்தி ரம்…எதுவானாலும்’

‘அய்யோ இங்கே எப்படி? ஒன்றும் கிடைக்காதே…’.

‘கேட்டுப்பார்…எப்படியாவது கொண்டுவா…நான் வைத்திருந்த எல்லாவற்றையும் குடித்துவிட்டேன்’

ஷண்முகன் ‘இங்கே கிடைக்காது..ஹைதராபாத் தாண்டினால்தான்…’ என இழுத்தார்

’ எனக்கு இப்போதே வேண்டும்… ’

ஷண்முகன் ’நான் கேட்டுப்பார்க்கிறேன்’ என்று சொல்லிவிட்டு வெளியே சென்றார்

அப்பா சலிப்புடன் மீண்டும் கண்களை மூடிக்கொண்டார். அவரது தலை வண்டியின் ஆட்டத்திற்கு ஏற்ப ஆடியது. அவர் அதிகம் குடிக்கக்கூடியவரல்ல. அதிலும் கடந்த பல வருடங்களாக அனேகமாகக் குடியே இல்லை. என்ன ஆயிற்று என்று நினைத்துக்கொண்டான். ஷண்முகன் வருகிறானா என அப்பா அடிக்கடி கண்களைத் திறந்து பார்த்தார். ;டேய் நீ போய் அந்த ஷண்முகன் எங்கே நிற்கிறான் என்று பார்’

அவன் வெளியே சென்று நாலைந்து பெட்டிகள் வரை சென்று பார்த்தான். ஷண்முகன் இல்லை. திரும்பிவந்து காணவில்லை என்று சொன்னபோது அப்பா அதிருப்தியுடன் முகம்சுளித்தார்.

அரைமணிநேரத்துக்குள் ஷண்முகன் வந்துவிட்டார். கையில் ஒரு ஸ்காட்ச் புட்டி இருந்தது. அப்பா அதைக்கண்டதும் வேறு எதையுமே நினைக்காமல் அப்படியே பாய்ந்தெழுந்து வாங்கி விழுவதுபோல இருக்கையில் அமர்ந்து புட்டியைத்திறந்து நேரடியாக வாய்க்குள் விட்டுக்கொண்டு குடித்தார்.

ஷண்முகன் ‘நான் மிக்ஸ் செய்து தருகிறேன் சார்’ என்றார்.

அப்பா வேண்டாம் என்று கைகாட்டினார். மீண்டும் குடித்தார். அரைக்குப்பி வரை குடித்தபின் இருமுறை உடம்பை உலுக்கியபடி அமைதியானார். முன்வழுக்கைத்தலையில் மெலிதாக வியர்வை படர்ந்தது. குப்பியை மூடி அவனிடம் கொடுத்தார்

ஷண்முகன் ‘பட்டாளத்துக்காரங்க கிட்ட ரம் இருக்கும்…அதைத்தேடித்தான் போனேன்…ஆனால் இது கிடைத்தது…’

அப்பா அப்போதுதான் அது ஸ்காட்ச் என்பதை உணர்ந்தார். ’எங்கே கிடைத்தது?’

‘ஒரு பார்ட்டி எச் ஃபோரில் இருக்கிறது சார்… அவர்கள் குடிப்பதை அப்போதே பார்த்துவிட்டேன். உங்களுக்கு என்று சொன்னேன். கொடுத்துவிட்டார்கள். அவர்களில் ஒருவர் வயதானவர். கதகளி ஆடக்கூடியவர்

அப்பாவின் கண்கள் சுருங்கின. ‘கதகளி ஆடக்கூடியவரா?’

‘ஆமாம்…’

‘பெயர் என்ன சொன்னார்?’

‘தெரியவில்லை’

‘போய்ப்பார்த்துவிட்டு வா’

ஷண்முகன் தயங்கிவிட்டு சென்றார். உடனே வந்து ‘சதனம் ராமன் நாயர் என்று போட்டிருக்கிறது’

அதை கேட்பதற்குள் அப்பா எழுந்துவிட்டார். அதற்குள் அவருக்கு போதை ஏற ஆரம்பித்திருந்தது. அவரால் நிற்கமுடியவில்லை. மேல் பெர்த்தைப்பிடித்துக்கொண்டு தள்ளாடியபின் அமர்ந்துகொண்டார். வாந்திஎடுப்பவர் போல இருமுறை குமட்டினார். தலையை இல்லை இல்லை என்று அசைத்தார். பின்பு நிமிர்ந்தபோது உடம்புமுழுக்க வியர்வையால் நனைந்திருந்தது. வழுக்கையில் வியர்வைத்துளிகள் வழிந்தன

’சதனம் ராமன் நாயரா?’ என்று அப்பா மீண்டும் கேட்டார்.

‘ஆமாம்’

அப்பா கும்பிடுவதுபோலக் கையை மார்பின் மீது வைத்தார். தலை முன்னால் சரிந்தது. ‘குருசான்னித்தியம்’ என்றார். மெல்லிய கேவல்போல ஓர் ஒலி அவரிடமிருந்து வந்தது.

’டேய் பிடிடா’ என்றார் அப்பா.

அவன் பிடிப்பதற்குள் ஷண்முகன் அவரைத் தாங்கிக்கொண்டான்.

நீளமான இடைநாழி கிலோமீட்டர்கணக்கில் சென்றுகொண்டே இருப்பதுபோலத் தோன்றியது. அப்பா இரும்புச்சுவரையும் கம்பிகளையும் பிடித்துக்கொண்டு ஆங்காங்கே நின்று ஆடிக்கொண்டே வேட்டியைத் திரும்பக்கட்டினார். தலை நன்றாகவே துவண்டது. ஒரு இடத்தில் கால்கள் தளர்ந்து அமரப்போனார்.

அவனுக்கு பயம் வந்தது. அப்பா என்ன செய்யப்போகிறார் என்று அவனால் ஊகிக்க முடியவில்லை. சதனம் ராமன் நாயர் மிக ஆசாரமானவர் என்று கேள்விப்பட்டிருக்கிறான். அவரது பல கதகளி நிகழ்ச்சிகளுக்கு அப்பாவுடன் அவனும் போனதுண்டு. ஆட்டத்துக்குப்பின் அப்பா அணியறைக்குச் சென்று வேடம் கலைத்துக்கொண்டிருக்கும் சதனம் ராமன் நாயருக்கு சற்றுத்தள்ளி சுவர் ஓரமாகக் கைகளைக் கட்டிக்கொண்டு நிற்பார்.

வேடத்துக்குள்ளிருந்து வெளிவரும் சதனம் ராமன் நாயர் பூவுக்குள்ளிருந்து வெளிவரும் வண்டுபோலத் தோன்றுவார். கனவிலிருந்து விழித்தெழுவதுபோன்ற கண்கள். ஒப்பனைக்காரர் தலையிலிருந்து கிரீடத்தை அகற்றியபின் முகத்திலிருந்து சுட்டியை மெல்ல உரித்தெடுக்கையில் அவரது தோல்களையே களைவதுபோலிருக்கும். அதன்பின் பஞ்சினால் சாயத்தைத் தேய்த்துத்தேய்த்தெடுப்பார்கள். அவர் எங்கோ நினைப்புக்கு அப்பாற்பட்ட புராணகாலத்தில் இருந்து நழுவிநழுவி விழுந்து வந்துகொண்டே இருப்பார். பசுவைப்பிளந்து கன்று சலமும்நீருமாக வந்து தொழுவத்தில் கிடப்பதுபோல. ‘ம்’ என்பார். அப்பா ‘பார்த்துவிட்டுப் போகலாமென்று வந்தேன்’ ‘இருந்தாய் இல்லையா?’ ‘ஆமாம்’ அவ்வளவுதான். அதற்குமேல் பேச்சு இல்லை. ஒருமுறைகூட கதகளியைப்பற்றி அல்லது நடிப்பைப்பற்றிப் பேசிக்கேட்டது இல்லை.

கூபேக்குள் சதனம் ராமன் நாயர் இருக்கையில் கம்பிளி விரித்துப் படுத்திருந்தார். ஒரு சீடன் எதையோ வாசிக்க கண்மூடிக் கேட்டுக்கொண்டிருந்தார். அப்பா ஆவேசமாகக் கூபே கதவை முழுக்கத்திறந்து உள்ளே சென்றார். சதனம் ராமன் நாயர் திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தார்.

அப்பா நடுநடுங்கியபடி அங்கேயே நின்றார். தலை ஒருபக்கமாக சரிந்து ஆடியது. பற்களைக் கிட்டிப்பதுபோலக் கடித்தபோது கழுத்து நரம்பு புடைத்துப்புடைத்துவந்தது.

‘ம்ம்?’ என்றபின் சதனம் ராமன் நாயர் எச்சிலை அங்கிருந்த கோளாம்பியில் துப்பி ‘வா’ என்றார்

அப்பா சட்டென்று அப்படியே முன்னால் சரிந்து விழுந்தார். சீடன் திடுக்கிட்டு எழுந்துவிட்டான். அப்பா இரு கைகளையும் நீட்டிக் சதனம் ராமன் நாயர் கால்களைப்பிடித்துக்கொண்டார்

‘என்ன இது?சேச்சே ’ என்றார் சதனம் ராமன் நாயர்

ஷண்முகன் ‘கொஞ்சம் அதிகமாகப்போய்விட்டது’ என்றான்

சதனம் ராமன் நாயர் சட்டென்று நிமிர்ந்து ஷண்முகனைப்பார்த்தார். ஒருகணம் சிவந்த பெரியகண்களில் அசுரபாவம் எரிந்து அணைந்தது.

அப்பா தலையைத் தரையில் முட்டி ‘மன்னிக்கவேண்டும் மன்னிக்கவேண்டும்’ என்று சொல்லிக்கொண்டிருந்தார்

தூக்கு என நாயர் சைகை காட்டினார். சீடனும்,ஷண்முகனும் அப்பாவைப்பிடித்துத் தூக்கினார்கள். சதனம் ராமன் நாயர்அப்பாவின் தலையை மெதுவாகத் தொட்டார்

கொண்டு போகச்சொல்லி நாயர் சைகை காட்டினார். எழுந்தபோது வேட்டி அவிழ்ந்தது. அதைக் கட்டிக்கொண்டு கதவைப்பிடித்துக்கொண்டு நின்றார். முகத்தில் இருந்தது திரைசரியும்நேரத்து மாபெரும் சாந்தம்

அப்பா ‘மன்னிக்கவேண்டும்…மன்னிக்கவேண்டும்’ என்று சொல்லிக்கொண்டே தலையை ஆட்டினார்

அவர்கள் அப்பாவை மெல்ல இழுத்தும் தூக்கியும் கொண்டு சென்றார்கள். அவன் பின்னால் சென்றான். கூபே வாசலுக்குச் சென்றதும் அப்பா சட்டென்று அவர்களை உதறிவிட்டுக் கதவை தடாலெனத் திறந்து உள்ளே சென்றார். அங்குமிங்கும் பார்த்துவிட்டுக் குனிந்து இருக்கைக்கு அடியிலிருந்து பெரியபெட்டியை இழுத்துத் திறந்தார். உள்ளே எதையோ தேடினார்

அவன் அவர்களிடம் நீங்கள் போகலாம் என்று சைகையால் சொன்னான். கூபேயைத் தாண்டிச்சென்ற ஒரு பெண்மணி சந்தேகத்துடன் பார்த்துக்கொண்டு சென்றாள். அவர்கள் உதடு அசைத்து வருகிறேன் என்று சொல்லி திரும்பிச்சென்றார்கள்.

அப்பா கறுப்புப்பெட்டியைத் தள்ளி விட்டு சிவப்புப் பெட்டியைத் திறந்தார். அதற்குள் அவருக்குக் கிடைத்த பத்மஸ்ரீயின் தங்கப்பதக்கம் இருந்தது அதை அவர் உருவி எடுத்தபோது அவரது சந்தனநிற ஜிப்பாவும் கூட வந்தது. அப்பா எழுந்து அந்த ஜிப்பாவை மிதித்தபடி நடந்து அதைத் தூக்கி இடைநாழியில் வீசினார். அவன் நின்றதை அவர் பார்க்கவில்லை என்று தோன்றியது. அப்பா கதவை வலுவாக இழுத்து மூடிக்கொண்டார்

அவன் சில கணங்கள் அசையாமல் நின்றான். பின்பு மெல்ல அந்தப் பதக்கத்தைக் கையில் எடுத்துக்கொண்டான்.கதவருகே சாய்ந்துகொண்டு நின்றான். ரயிலின் சீரான ஓசையை உடலால் கேட்டுக்கொண்டிருந்தான்.

பக்கத்து கூபே திறந்து ஒரு வழுக்கையான வெண்ணிற மனிதர் பைஜாமாவும் குர்த்தாவுமாக வெளிவந்தார். அவனைத் தாண்டிச்சென்றபோது யூடிகொலோன் மணம் வந்தது. பின் திரும்பிச் செல்லும்போது அவன் கையில் இருந்த பதக்கத்தை அவர் பார்த்துக்கொண்டு சென்றார்

அப்பா உள்ளே படுத்துக்கொண்டாரா ? எந்தச் சத்தமும் கேட்கவில்லை. அவன் கதவைத் தட்டுவதற்காக மெல்லத் தொட்டான். கதவு தாழிடப்படவில்லை என்று தெரிந்தது. மெல்லக் கதவைத் தள்ளினான். மிகமெல்லத் தள்ளியபோதும்கூட கிரீச் சத்தம் எழுந்தது.

அவன் உள்ளே சென்றபோது அப்பா ஏறிட்டுப்பார்த்தார். ஒரு புருவம் மட்டும் ‘என்ன?’ என மேலேறியது. அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அவன் தன்னை அறியாமல் அந்தப்பதக்கத்தை முன்னால் நீட்டிக் காட்டினான்

அப்பா சற்றுத் திடுக்கிட்டவர் போலப் பார்த்தார். ஒரு கையை ஊன்றி எழுந்து அதேகையால் மேல் படுக்கையின் விளிம்பைப் பிடித்தபடி நின்றார். நிமிர்ந்து தலையைத் தூக்கி இரண்டடி முன்னால் வந்து இரு கைகளையும் நீட்டி அவனிடமிருந்து அந்தப் பதக்கத்தைப்பெற்றுக்கொண்டார்.

*

முந்தைய கட்டுரைபுண்படுதல்-கடிதங்கள்
அடுத்த கட்டுரைஓழிமுறி மேலும் ஒரு விருது