அன்புள்ள ஜெயமோகன்,
வணக்கம். என் பெயர் கிருஷ்ணன். நான் தங்களது வலைப்பூவை தொடர்ந்து படித்து வருகிறேன். ஓரே ஒரு முறை இதற்க்கு முன்பு நான் தங்களுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளேன். இது வரை தங்களது எந்த கட்டுரைக்கும் எதிர் வினை ஆற்றியது இல்லை, ஆனால் தாங்கள் ஐயா திரு பாலகுமாரன் அவர்கள் குறித்து எழுதியுள்ள கட்டுரைக்கு, நான் திரு பாலகுமாரன் அவர்கள் எழுத்துக்களை சுமார் பத்து வருட காலமாக படித்து வருபவன் என்ற முறையில் சில கருத்துக்களை தெரிவிக்க வேண்டுமென எண்ணியதால் இந்த கடிதத்தை எழுதுகிறேன்.
திரு பாலகுமாரன் அவர்களது எழுத்துக்கு எடுத்துக்காட்டாக தாங்கள் சொல்லும் ஒரிரு நாவல்கள் அவர் சுமார் 20 வருடங்களுக்கு முன்பு எழுதியவை. ஆனால் யோகி ராம்சுரத்குமார் என்ற ஞானியால் தொட்டு திசை திருப்பபட்ட பிறகு அவர் எழுத்துக்கு வந்த மாற்ற்த்தை குறித்து தாங்கள் கவனித்ததாக தெரியவில்லை. அவரது நடை பெரிய அளவில் மாறவில்லை என்பது உண்மை தான். ஆனால் அவர் எழுதும் கதைகளிலும் சொல்லும் கருத்துக்களிலும் உள்ள மாற்றம் பிரமிப்பூட்டூம் வகையில் உள்ளது. கடும் உழைப்பின் அவசியத்தை குறித்தும், தியானம், யோகா ஆகியவற்றின் மேன்மை குறித்தும் அவர் கட்டுரை தொடர்களாகவும், கதைகளாகவும் மீண்டும் மீண்டும் எழுதி வருகிறார். கடந்த 10 வருடங்களாக அவர் எழுதி வரும் கதைகளை படித்தால் தெரியும் : அவரது கதையின் நாயகன் முன்னேற துடிப்பவன். அயராது உழைப்பவன். வாழ்க்கையில் தவறு செய்து கீழ்மை அடைந்தாலும் அதனின்று போராடி மேலெழுபவன். அவரது கதை நாயகனை அல்லது நாயகியை போல நாமும் முன்னேற வேண்டும்..ஒழுக்கத்தை கை கொள்ள வேண்டும் என்ற வேட்க்கையை தூண்டுபவன அவரது கதைகள். அவரது நாயகன் மாமியாரை குறித்து பகல் கனவு காண்பவனோ, அல்லது தன் கல்லூரி ஆசிரியையோடு கள்ளத்தொடர்பு கொள்பவனோ கிடையாது. இவ்வாறு எங்கேயோ நடக்கும் ஆயிரத்தில் ஒன்றிரண்டு மனவக்கிரங்களையெல்லாம் உள் மன ஊடு பாவு என்ற பெயரில் அவர் எழுதுவதில்லை. ராமயண மகாபாரதக்கதைகளையும், சாக்தம், மந்திர ஜபம், வாமாச்சாரம் போன்ற கடினமான கருத்துக்களையும் எல்லோருக்கும் புரியும் வண்ணம் எளிதாகவும், அதே சமயம் உண்மையாகவும் அவரை போன்று எழுதுபவர்கள், தமிழில் மட்டுமல்ல வேறு எந்த இந்திய மொழியிலாவது இருப்பார்களா என்பது சந்தேகமே. இந்து மத கருத்துக்களை அவர் ஆழமாக எழுதினாலும் பிற மதக்கடவுளர்களையோ, சடங்குகளையோ அவர் மறந்தும் பகடி செய்வது இல்லை. இவ்வாறெல்லாம் அடுத்த தலைமுறையை குறித்து அவர் பெரும் அக்கறையுடன் எழுதுவது வணிக எழுத்து என்றால் ஆம் அவர் வணிக எழுத்தாளர் தான். ஆனால் அவரது எழுத்துக்கள் வெறும் பகற்கனவுகளோ அல்லது பாலுணர்ச்சியை மட்டுமே தூண்டி அதற்கு விருந்து வைப்பனவோ அல்ல.
காதலை குறித்தும், குடும்ப அமைப்பின் அவசியம் குறித்தும் அவர் சொல்லும் கருத்துக்கள் செறிவானவை. நடைமுறையானவை. அவரை பொருத்தவரை காதல் என்பது திருமணத்தின் ஒத்திகை. யோசித்துப்பார்த்தால் இன்றைய இளைஞனுக்கும், யுவதிக்கும் பொருத்தமான விளக்கம் அது தான். பகலுக்கும், மாலைக்கும், இரவுக்கும் வித்தியாசம் தெரிந்தால் அது காதல் இல்லை என்றெல்லாம் கால்த்திற்க்கு ஒவ்வாத பகல் கனவு சங்க கால விளக்கத்தை அவர் அளிப்பதில்லை
இவை எல்லவற்றிர்க்கும் மேலாக உடையார் என்ற ப்ரம்மாண்டமான, செறிவான சோழர்கால சரித்திரக்கதையை ஆறு பகுதிகளாக, இந்த முதிய வயதிலும், மிகுந்த உழைப்புடன் அவர் எழுதியுள்ளார். அதை குறித்தெல்லாம் சொல்லாமால், அவரது மிகபழமையான நாவல்களை வைத்து அவரது எழுத்தை இன்று வரை நீட்சி செய்து, நீங்கள் ஒரு அரைகுறை சித்திரத்தை அளித்திருப்பது வேதனையாக உள்ளது.
“எனது விஷ்ணூபுரத்தைக் குறித்தோ அல்லது கொற்ற்வை குறித்தோ அவர் எதுவும் சொல்லவில்லயே, நான் ஏன் உடையார் குறித்து கூறவேண்டும்?” என்று நீங்கள் கேட்டால் என்னிடம் பதில் இல்லை…ஆனால் ஒருவரது எழுத்தின் சித்திரத்தை அளிக்கும் போது அவரது எல்லா வகை எழுத்தையும் கணக்கில் கொண்டே கருத்து கூற வேண்டும் என்பதே எனது வாதம். யாரேனும் ஜெய்மோகன் எழுத்து குறித்து உங்கள் பார்வை என்ன என்று பாலாவிடம் கேட்டிருந்தால், அவர் தங்களது எழுத்தின் எல்லா பரிமாணங்களையும் கருத்தில் கொண்டே பதில் உரைத்திருப்பார்…அல்லது தெரியாது என்று அமைதியாக விலகியிருப்பார்.
மேலும் நீங்கள் சீரீய இலக்கியம் என்பது வாசகனோடு சமரசம் செய்து கொள்ளாது என்று கூறியுள்ளீர்கள். வாசகனுக்கு அல்லாமல் பிறகு எதற்க்காக எழுதுவது என்று புரியவில்லை. வேறு ஒரு பதிலில், யாரும் படித்தாலும், இல்லையென்றாலும் கடினமான தத்துவக்க்ட்டுரைகளை எழுதப்போவதாக சொல்லியுள்ளீர்கள்..மீண்டும் எனக்கு அதே கேள்வி தான் எழுகிறது…அத்ற்க்காக நீங்கள் எல்லோருக்கும் பிடிக்கும் வண்ணம் சினிமா நடிகைகளை ப்ற்றி எழுத வேண்டுமென நான் கூறவில்லை. தாங்களே ஒரு கட்டுரையில், புரட்சியாளன் என்பவன் பல கோடி மக்கள் கனவுகளையும், ஆசைகளையும் கருத்தில் கொள்ளாமல் ஆட்டுமந்தைகளை போல அவர்களை எண்ணுபவன் அதனாலேயே வீழ்ச்சி அடைகிறான் என்று கூறியுள்ளீர்கள்…ஆனால் பொதுவான மக்க்ளுக்காக எழுதுபவனை, அவர்களால் விரும்பபடுகிறவனை சராசரி என்று புறங்கையால் தள்ளிவிடுகிறீர்கள்..
சுஜாதா ஒரு மேற்கோள் சொல்லுவார் “சிறந்த எழுத்தாளன் என்பவன் அறிஞனை போல சிந்தித்து பாமரனை போல வெளியிடுபவன்” என்று. அவ்வாறு செய்யும் வெகு சிலரில் ஒருவர் தான் எங்கள் ஐயா பாலா..
நன்றி,
கிருஷ்ணன்.
அன்புள்ள கிருஷ்ணன்
உங்களுக்கு பாலகுமாரன் மேல் உள்ள பிரியம் புரிகிறது. எந்த ஒரு எழுத்தாளன் மீதும் வாசகனுக்கு உள்ள ஈடுபாடு மதிக்கத்தக்கதே. அது அவனை மேலே கொன்டுசெல்லும். அவன் நல்ல வாசகனாக இருந்தால் அடுத்தடுத்த கட்டங்களுக்கு.
நான் பாலகுமாரனின் இரண்டாம் கட்ட ஆன்மீக நாவல்களையும் சில வாசித்திருக்கிறேன். நான் ஆன்மீகம் என்றும் கருதுவது, நான் யோகியை புரிந்துகொண்டவிதம் கொஞ்சம் வேறுபட்டது. அதை நீங்கள் என் எழுத்துக்களை வாசிக்கும்போது அறிந்துகொள்ளலாம்
அவரது எல்லா ஆக்கங்களையும் வாசித்து நான் கருத்துக்கள் சொல்லவில்லை– அதை இலக்கியமேதைகளுக்க்காகவே நாம் நேரம் ஒதுக்கிச் செய்யமுடியும் இல்லையா? என் கருத்து நான் வாசித்த வரை என்ற எல்லைக்கு உட்பட்ட கருத்துக்கள் அவ்வளவே
ஜெ