கிளி சொன்ன கதை :கடிதங்கள்

அன்புள்ள ஜெ,

இது கிளி சொன்ன கதை இல்லை. ஒவ்வொரு தாயும், மனைவியும் வழி வழியாக சொல்லி வந்த கதை.  தாயின் முந்தானையை பிடித்து கொண்டு பின்னாலயே அலைந்து திரிந்தவன் நான். இக்கதையை படிக்கும் பொழுது என்னுடைய சிறு வயது நினைவுகள் வந்து போயின.
எனக்கு பிடித்த வரி,  “செத்து தெக்கோட்டு எடுத்தாலும் பாவிகள் நாலு கலமும் சட்டியும் கொண்டுவந்து சேத்து குழியில வைப்பாக. மேல போயி  அங்க உள்ள தேவன்மாருக்கும் கெந்தர்வன்மாருக்கும் அரிவச்சு வெளம்புண்ணு…”… உண்மை. யட்சிகள் வேறு எங்கும் இல்லை, நம் குடும்பங்களிலும் உண்டு. உங்களுடைய மொழி ஆளுமை நன்றாக இருந்தது, கேலியும் நிறைந்த பொருளுடனும் இருந்தது. வாழ்த்துக்கள் .

இளங்கோ.k

அன்புள்ள இளங்கோ

கிளி எப்போதும் கூண்டின் கதையைத்தான் சொல்லும்

கூண்டுக்கிளியின்
காதலில் பிறந்த
குஞ்சுக்கிளிக்கு
எதற்குவந்தன
எப்படி வந்தன
சிறகுகள்?

கல்யாண்ஜி

சிறகுகள் இல்லாவிட்டால் எப்படி அது கனவுகாணும் என்று கல்யாண்ஜியிடம் கேட்கவேண்டும் என எண்ணியதுண்டு
ஜெ

 

அன்புள்ள ஜெ,
கிளி சொன்ன கதை நன்றாக இருந்தது. குறிப்பாக வாசகனையும் கதையோட்டத்தில் உள்ளிழுத்து அவனை
கதையின் இடைவெளியை யோசித்து நிரப்பவைத்தது. இந்தக் கதை ஒரு புது அனுபவம். ஜன்னல் வலைக்கம்பிகள்
வழியாக உலகத்தைப் பார்ப்பதுபோல் (கொஞ்சம் தெரியும் மிச்சம் தெரியாது). ஒவ்வொரு பத்தியிலும்  செய்தியும், உண்மையும், உவமையும்,  நகைச்சுவையும் புரையோடிக்கிடக்கின்றது. அனந்தன் என்பது நம் ஒவ்வொருவரின் பால்யப் பருவமே,
ஒருசில மாற்றங்களுடன். மீன்குறித்து அனந்தனுக்கு அதிகமாகத் தெரிந்திருக்கின்றது. அதேபோல், ஒரு மாணவர் ஆராய்ச்சி
செய்யுமளவிற்கு உவமைகள் குவிந்து கிடக்கின்றது. ஒன்றே ஒன்றுதான் என்மனதிற்கு ஒப்பவில்லை – ஒரு சிறுவனுக்கு ( ஒன்பது வயது நிரம்பிய பிற சிறுவர்களுடன் சேராத அதுவும் ஒரு 40 வருடங்களுக்கு முன்னர் )  மார்பை முலைஎன்று பிரித்தறியும் ரசனை இருந்ததா?
அன்புடன்,
கிறிஸ்

அன்புள்ள கிறிச்டோபர்

நான் என் நினைவுகளில் கூட இதைப்பற்றி எழுதியிருக்கிறேன், ஆண் என்ற பிரக்ஞை – காமம்- ஆரம்பிக்கும் வயதும் நினைப்பறியும் வயதும் ஒன்றுதான். ஆணின் பார்வை பெண் உடலை அறிவதென்பதை நம் நினைவுகளில் முன்னால்சென்று பார்த்தால் அதன் ஊற்றை நம் மிகச்சிறுவயதிலேயே கண்டுகொள்ள முடியும். பெண் குறித்த நம் ரசனைகளும் அந்த பிராயத்திலேயே வடிவம் கொண்டு விடுகின்றன

ஜெ

அன்புள்ள ஜெயமோகன் சார்,

நலந்தானே?

நீண்ட இடைவெளிக்கு பின் தங்கள் குறுநாவல்.

குலசேகரத்திலும், கடயல் மூட்டிலும் நண்பர்கள் இருந்ததினால் கதைக்களத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இடங்கள், வர்ணனைகள் பரிச்சயமானதாக இருந்தன. எனவே கதைக்குள் செல்வது எளிதாக இருந்தது. ஆத்மார்த்தமான கதை.

அனந்தன் வழியே கதை சொல்லப்பட்டிருந்தாலும், அனந்தனின் குழந்தைத்தனத்தையும் மீறி, தங்களின் முதிர்ச்சி மிக அழகாக வெளிப்பட்டிருக்கிறது. கண்டிப்பான அப்பா, மனக்குமுறலுடன் அம்மா, தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்கும் அன்பான அண்ணா மற்றும் இதர கதாபாத்திரங்கள் அனந்தன் பார்வயில் சொல்லப்பட்டிருந்தாலும், அதையும் மீறி, தங்களின் தற்போதைய எண்ண ஓட்டங்கள் சுவாரசியமாக வெளிப்பட்டிருக்கிறது.

சில நுணுக்கமான விவரங்கள் (ரூலர் தடி, பிளாட்டிங் பேப்பர், பெருமாள் செட்டி பென்சில்) அந்த காலத்திற்கே எங்களை அழைத்துச்சென்று விட்டது.

எல்லா பாத்திரங்களையும் கடந்து மனதில் நிற்பது என்னவோ அப்பாதான்.

அன்புடன்
இளம்பரிதி

அன்புள்ள இளம்பரிதி

அந்த வட்டார மொழி கதைக்கு ஒரு சுமையை கொடுக்கிறதென்றாலும் அதுதான் கதையின் ‘மணத்தை’ உருவாக்குகிறது. அதை விட்டால் பல விஷயங்கள் இல்லாமலாகும் இல்லையா?

அனந்தனின் அப்பாவுக்கு அனந்தன் மேல் உள்ள பிரியம்  அவன் அறிந்தது அல்ல. ஆனால் அவனைச்சுற்றி உள்ள அனைவருமே அதை அறிந்திருக்கிறார்கள்

ஜெ

அன்புள்ள ஜெயமோகன்,
கிளி சொன்ன கதை வாசித்துக்கொண்டிருக்கிறேன்.. கண்டிப்பாக அது உங்கள் கதைதான். அனந்தன் நீங்கள்தான்.
இதெல்லாம் நடக்கும் போது உங்களுக்கு பத்து வயது இருந்திருக்குமா ? எல்லாவற்றையும்  நுட்பமாக கவனித்து வந்திருக்கிறீர்கள். குறிப்பாக அந்த வக்கீல் சொல்லும் சட்ட நியமங்கள் அந்த வயதிலேயே அதைப் பற்றி தெரிந்து கொண்டீர்களா,,? இல்லை வளர்ந்ததும் அறிந்து கொண்டீர்களா..?  அனைத்தும் உண்மையாகவே நடந்த சம்பவங்கள் போல இருக்கிறது .. சற்று புனைவும் உண்டா..?
கதை முழுக்க மிக எளிய ஆனால் சிறப்பான உவமைகளைத் தூவி எழுதியிருக்கிறீர்கள்.. நல்ல சூடான அரிசிக் கஞ்சியில் தூவப்பட்ட தேங்காய்த் துருவல்கள் போல… நல்ல சுவை.. வாசிப்பதற்கு.!
கொச்சனுக்க ஜாதகம் பார்த்தேன் .. சரஸ்வதி கடாட்சம் உண்டு  என்று  வைத்தியர் சொன்னதை தெய்வ மிருகத்தில் வாசித்திருக்கிறேன் . அதனால் பொட்டன்  என்று அனந்தனை விளிக்கும் போது  சின்ன நகைப்புதான் வருகிறது.அப்புறம் நீங்கள் அவியல், பருப்பு, சாம்பார், பப்படம் என்று விவரிக்கும் போது அடிவயிற்றில் ஒரு பசி உடனே எழுகிறது. உடனே அடுத்த பஸ்ஸைப் பிடித்து நாகர்கோவில் வந்து விட வேண்டும்.(தற்போது வேலை பாண்டிச்சேரியில் .. இந்தப் பக்கம் வந்தால் தொடர்பு கொள்ளுங்கள்..) வடசேரி சந்தை போய் நல்ல ஏத்தன் வாழைக்காய்   வாங்கி விட்டு வீட்டுக்குப் போக வேண்டும் என்று தோன்றுகிறது.
நானும் பார்வதிபுரம் தான். நீங்கள் சானல் கரை தாண்டி . நான் சானலுக்கு முன்னாலே. கிரேஸ் காம்ப்ளெக்ஸ் அருகில். 2006 இல் நடிகர் ராஜ் குமார். இறந்த சமயம். கலவரம் காரணமாக நான் பெங்களூரிலிருந்து நாகர்கோவில் வந்திருந்தேன்.வடசேரி பஸ் ஸ்டாண்டில் ஆசாரிபள்ளம் செல்லும் மினி பஸ்ஸில் உங்கள் அருகில் அமர்ந்திருந்தேன். முதலில் அவ்வளவு கவனிக்கவில்லை. எங்கேயோ பார்த்து போல உள்ளதே என்று நினைத்தவாறே உற்று நோக்கினால் நீங்கள். அப்போது சங்க சித்திரங்கள் மட்டுமே உங்கள் படைப்பில் வாசித்திருந்தேன். நீங்கள் ஜெயமோகன் தானே  என்று கேட்க வேண்டுமென்று நினைத்திருந்தேன் . நீங்கள் மொபைலில் ஏதோ ஒரு படத்தைப் பற்றி மலையாளத்தில் பேசிக்கொண்டிருந்தீர்கள்(கஸ்தூரி மான் ..?). எப்படியாவது உங்களிடம் பேச ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று காத்திருந்தேன். அதற்குள் EB ஆபிஸ் வந்துவிடவே இறங்கி விட்டேன். கண்டிப்பாக ஒரு சமயம் உங்களை சந்திக்க விரும்புகிறேன்.
கெட்டவார்த்தைகள்  குறித்து கடிதம் எழுதியது நான்தான். இது என் இரண்டாவது கடிதம்.

அன்புடன்
K. ராஜேஷ்குமார் .

முந்தைய கட்டுரைகன்னிநிலம் – நாவல் : 4
அடுத்த கட்டுரைஸ்டான்போர்ட் வானொலியில் என் நேர்காணல்