வெண்கடல்-கடிதம்

முன்பொருமுறை ஒரு உரையாடலில் சொன்னீர்கள் , மனித இனத்திற்கு சாத்தியமான அதிக பட்ச இன்பத்தை ஒரு குரு தனது சீடனுக்கு அளிக்க முடியும் என்று . அப்போது நான் மறுத்து எதுவும் பேசவில்லை . இப்போது அதை மறுக்கிறேன் , ஒரு எழுத்தாளன் வாசகனுக்கு அளிப்பதே தலையாயது , அதற்குப் பிறகே மற்றவைகள்.

மேலும் இன்னொன்றையும் நீங்கள் சொன்னீர்கள் , ஒரு தத்துவ ஞானிக்கு ஒரு படி கீழே தான் கலைஞன் என்பவன், தனது காலத்தில் தோன்றும் அசல் சிந்தனைகளை ஒரு ஞானியே உருவாக்குகிறான், கலைஞன் அதை விளம்புகிறான் என்று . இப்போது அதையும் மறுக்கிறேன். ஒரு கலைஞனால் ஒரு ஞானியைத் தாண்டிவிடமுடியும். அவன் பித்துப் பிடித்ததது போல அல்லது சன்னதம் வந்தது போல் படைக்கும் பட்சத்தில் அவன் நிச்சயம் ஞானியைத் தாண்டிச் சென்று விடுவான். அக்கணத்தைத் தக்கவைப்பதில் மட்டுமே ஞானிக்கும் கலைஞனுக்கும் பொருட்படுத்தத்தக்க வேறுபாடு உள்ளது. மற்றபடி எழும்பிக் குதித்த உயரம் என்று பார்த்தால் அபூர்வமாக அது நிகழும். ஆனாலும் உயரத்தைத் தொட்டவன் ஒரு கலைஞனாகவே இருப்பான்.

“வெண் கடல்” ஆண்டுகளாக நகாசு செய்து செய்து உறுதிப் பட்ட ஒரு எழுத்தாளனுக்குள் அமைந்திருக்கும் ஒரு படைப்புச் சட்டகத்திற்குள் வெடித்த ஒரு படைப்பு. ஒரு கட்டுப் படுத்தப் பட்ட வெடிப்பு. இலக்கியம் இன்னொரு வாழ்வை வாழக் கொடுக்கிறது. நாம் காணாத மறைவுப் பிரதேசங்களை எல்லாம் வெளிச்சம் பாய்ச்சி ஒரு தாளில் பரிசளிக்கிறது, நாம் கண்ட காட்சிகளை எல்லாம் இன்னும் துலக்கமாக்குகிறது. அலங்கரித்துப் பொருள் சேர்க்கிறது. இக்கதை தனியாக இதைச் செய்கிறது.

ஊட்டப்படாத பாலும் பகிரப்படாத ஞானமும் ஒன்றே. தாய்மையின் தரிசனம் போலத் தோன்றும் ஒரு பெண்மையின் தரிசனம். தாய்மையும் பெண்மையின் ஒரு கடைக்கண் பார்வையே . இக்கதை துவங்குவதே நமது அனைத்துப் புலன்களின் வழியே தான், காயத்திருமேனி காய்ச்சப்படும் அந்த வெப்பமும், நிறமும், வாசனையும், பதமும் சம்பந்தமில்லாமல் இறுதியில் கதைக்குள் சொல்லப் படாத தாய்பாலின் வாசனையை நுகரச் செய்து விடுகிறது . வாசகனின் நாசி முன்பே தயாராகி விட்டது போலும். சொல்லப்படும் கதைகளை விடக் காட்டப்படும் கதைகள் உயர்ந்தது. கதையில் காணப்படும் காட்சிகளை விட, கேட்கப்படும் ஒலிகளை விட, நுகரப்படும் வாசனை மேலானது அடைவதற்கு அபூர்வமானது. இக்கதையில் நமது நாசி அதை உணர்கிறது. தாய்மை அரூபம் என்றல் நாம் குளக்கரையில் காணும் இரு தெய்வங்கள் ரூபம் , குழந்தையைக் கடித்துக் கொண்டிருக்கும் தெய்வமும் தாயே. கலையையும், கல்வியையும் ஏந்தியிருக்கும் சரஸ்வதியும் தாயே , வரமும் வழங்குவதும் தாய்மையே. சாபம் வழங்குவது அதே.

ஒரு உறுப்பில் மட்டும் அழகான குழந்தையை நாம் காண்பதில்லை. அதன் உடல் முழுவதும், மழலையும், நடத்தையும் குழந்தைத் தன்மைக்கு இணையாகவே அழகானது. ஒரு உறுப்பு மட்டும் வலிய யானை இல்லை, அதன் தந்தமும், துதிக்கையும், தோலும் வலியது. இக்கதையும் அவ்வாறே. இத் தரிசனம் ஒரு உன்னதம் என்றால் , காயத்திருமேனித் தைலத்தில் இருந்து, அந்த எருமைகள், குளம் ,அதில் ஆடும் நிழல்கள், இரு தெய்வங்கள், அப்பெண்ணின் முகம், உரையாடல், என அனைத்து விவரிப்பும் அதே உன்னதம், நுணுக்கம்.

சந்தேகமில்லாமல் இக்கதையே நீங்கள் எழுதிய எல்லாவற்றிலும் உயர்ந்தது , நான் படித்த எல்லாவற்றிலும் உயர்ந்தது , மொழிக் கம்பூன்றிக் குதித்த உயரங்களில் எல்லாம் சேர்த்து நீங்கள் தொட்ட / எழுத்துலகம் தொட்ட உயரம் இது எனத் தாளமாட்டாமல் சபிக்கிறேன் .

கிருஷ்ணன்

ஆசிரியருக்கு ,

எனது முதல் “வெண் கடல் ” கடிதம் உணர்ச்சி முதல்வர எழுதியது. பின்பு யோசித்துப் பார்க்கையில் அது சரியானதாகவும் பட்டது என்றாலும் என்னை நான் தெளிவாக்கிக் கொள்ள அன்று இரவு யோசித்தேன். ஏன் இதை நான் படித்ததில் சிறந்த கதை என்கிறேன்.

வாசிப்பு கூடும் தோறும், நாம் ஆச்சர்யங்களை இழக்கத் துவங்குகிறோம் , அதுவும் ஒரு படைப்பாளியிடம் நேரடி உறவு வைத்திருக்கும் வாசகனுக்கு என்றால், அப்படைப்பாளியின் யுக்தி, படைப்பாளுமை,சாத்தியம் எல்லாம் தெரியும். ஆகவே அந்த வாசகனை வியப்பில் வாயடைக்க வைப்பது என்பது அரிதிலும் அரிதாகிறது, எதோ ஒரு வகையில் உன்னதங்களுக்கும் , வியப்புகளுக்கும், விநோதங்களுக்கும் அந்த வாசகன் பழகிப் போகிறான் , பின்னர் எல்லாப் படைப்பும் வழக்கமானது போலத் தோன்றுகிறது. நமது குழந்தமையைத் தக்கவைப்பது அடையப்பெறாத துரத்தல். “வெண் கடல் ” எனது எதார்த்த மனத்தை ஏமாற்றி அல்ல ஒப்புதல் பெற்று தனக்குள் அழைத்தது , உள் சென்றதும் அசாதாரணமான ஆச்சர்யம் வரவேற்றது .வாசித்து முடிக்கும் வரை நான் இல்லை. வாசகனை இல்லாமல் ஆக்கும் வலிமை வெகு சில வரிகளுக்கே உண்டு. ஆனால் அது இக்கதை முழுவதும் ஒவ்வொரு வரிகளிலும் கொண்டிருந்தது.

நம்மை வீழ்த்தும் தாக்கத்தை உருவாக்கும் ஒரு படைப்பு, நம்பத் தகுந்த அசாதாரண அம்சத்தைத்  தன்னகத்தே கொண்டிருக்கும். அது இயல்பாகவும் அமைந்திருக்கும். ஒரு சிறந்த கதை -ஒன்று அசாதாரண பாத்திரத்தைக் கொண்டிருக்கும் அல்லது ஒரு அசாதாரண சம்பவத்தை. ஆனாலும் அவைகள் ஏற்கப் பட்ட எல்லைக்குள்ளேயே ஆட வேண்டியுள்ளது. சற்று மிகையானாலும் அதில் ஒரு வினோதத்தன்மை குடிகொண்டு விடும். பின் அதில் ஒன்றாத நமது எதார்த்த மனம் அதை அன்னியப் பொருள் எனப் புறந்தள்ளி விடும்.

ஆனால் ஒரு அதி சிறந்த கதை சாதாரணப் பாத்திரங்களும் சாதாரணப் பின்னணியையும் ஒரு கனத்த சம்பவமும் உரசும் இடத்தே அந்த அசாதாரண கணத்தில் பிறக்கும். “வெண் கடல் ” அத்தகையது. பிரசவத்தில் குழந்தை இறப்பதும், பால் கட்டுவதும், சிகிட்சையும் நடைமுறையில் நிகழும், அந்த அட்டை வைத்தியம் அறியப்படாத இடம். இவைகள் உரசும் இடத்தில் இக்கதையின் தரிசன மையம். இதில் இரண்டு தரிசன மையங்கள் உள்ளன, இரண்டும் இயல்பாகப் பொருந்துகிறது. ஒன்று உட்கூறுகளுடன் உள்ள தாய்மை, இன்னொன்று நமக்கு எது பிரதானம் என்பது. எனக்கு இந்த இரண்டாவதே தலையாயதாகப் படுகிறது. என்னைப் போன்ற வாசகர்களுக்கு அன்றாட வாழ்வு நேர்பார்வையிலும், கலை, பயணம், இலக்கியம் போன்றவை கடைக் கண் பார்வையிலும் உள்ளது ஆசாரியின் மனைவி போல. உங்களைப் போன்றோருக்குத் தேடலும் கலையும் நேர் பார்வை பிற அனைத்தும் ஓரப்பார்வையில் உள்ளது ஆசாரி போல. இன்னும் உள்ளிறங்கிப் பார்த்தால் நாம் தேடும் உண்மையில் சிலவற்றின் மீது நேர்பார்வையையும், சிலவற்றின் மீது ஓரப் பார்வையையும் வைத்திருப்போம், அனுபவம் கூடக் கூடக் கோணத்தை மாற்றிக் கொள்வோம். அபூர்வமாக சிலர் ஒரே கோணத்தில் ஒன்றை மட்டுமே நம்பிப் பின்தொடர்வார்கள், அது பிழை என்றாலும் அதை அவர்கள் அறிவதில்லை, ஒரு வகையில் அது அவரது உண்மை, அவர்கள் கொண்டுள்ளது அதிருஷ்ட மனம். இப்படி இந்த ஒரு உரையாடல் பற்பல சிந்தனைகளுக்குச் செல்கிறது.

பெறும்போதும் அதை இழந்தபோதும்தாய் கொண்ட வலி, ஒரு உயிரினமாக தாயானதாலேயே அட்டைகளைக் கொல்வதைத் தடுக்கும் கருணைத் தாய் , கலைத் தாயான சரஸ்வதி, குழந்தையைக் கடித்து உண்ணும் தண்டிக்கும் பெண் தெய்வம். வணங்குவதைத் தவிர வேறேதும் மார்க்கமும் இல்லை நமக்கு. இறுதியில் ஜெயனை நோக்கிய அந்தத் தாயின் கடைக் கண் பார்வை இரண்டு தரிசனங்களையும் ஒரு உன்னதமான சிகரத்தில் இணைக்கிறது-

“பெரிய கண்களின் நுனியே என்னைப் பார்க்கப் போதுமானதாக இருந்தது. பாளையரிவாளின் கூர்மையின் ஒளி அதற்கு இருந்தது”
நீங்களே ஒரு தெய்வத்தைப் படைத்து தெய்வமாகத் தோன்றி உங்களுக்கே கொடுத்துக் கொண்ட வரம் அது. அது ஒரு தெய்வ வாக்கு. ஆனால் அப்போதும்-“அய்யோ…வேண்டாம் அய்யனே….கொல்லவேண்டாம் அய்யனே’ என்றாள். சட்டென்று குரல் தழைய ‘எனக்க பாலுகுடிச்ச சீவனாக்கும் அதெல்லாம்”- என்கிற போதும் நமது ஓரக்கண்ணில் “இளையம்மை பிள்ளைய வாயில கடிச்சுத் தின்னிட்டிருப்பா” நிழலாடுவதைத் தவிர்க்க முடிவதில்லை.

இக்கதையின் அவதானிப்புகளும் நுணுக்க விவரணைகளும் இக்கதைக்கு இன்னொரு உயிர். அனைத்துப் புலன்களுக்குள்ளும் இக்கதை புகுகிறது. காயத்திருமேனியின் வாசனையில் துவங்கி,
“தூளிபாசி படிந்த குட்டைத்தண்ணீர் போலத்தெரிந்த தைலம் கொப்பளித்து உடைந்து தெறித்தது. கனத்த மழைத்துளிகள் விழும் குளத்தின் பரப்பு போல” தொடங்கி இக்கதை நகரும் ஒவ்வொரு அடியிலும், ஒவ்வொரு அசைவிலும் ஒரு நுண் விவரணை –

“தோளில் கிடந்த துண்டில் ஈரம் பட்டு நீலம் தெரிந்தது”
“பிள்ளையை ரத்தம் கசியக் கடித்துப் பிடித்திருக்கும் சிலையை அவன் குனிந்து பார்த்தான். அதன்மேல் காய்ச்சில்கொடி படர்ந்திருந்தது”
என ஒரு துண்டைக் காட்டினாலும் ஒரு கடவுளைக் காட்டினாலும் அதற்குள்ளும் ஒரு நுணுக்கமான உள் விவரணை .
வர்ணிப்புகளும்,உவமைகளும் –
“நிழல் விழுந்ததும் ,குளம் ஒருமுறை கண்சிமிட்டுவது போலிருக்கும், ஒரே கணத்தில் மீன்கள் எல்லாம் மறையும்”.
“அவளுடைய பெரிய உடல் நீர் நலுங்காமல் காற்றில் அலைவருவதுபோல வந்தது. கரையில் ஏறிப் பெருமூச்சுடன் கைக்குழந்தை கைநீட்டி வாங்குவதுபோல கனத்த நாக்கை நீட்டித் தழையை வாங்கிச் சுருட்டி வாய்க்குள்ளே கொண்டு சென்றாள்”
“பாறைக்குழியில் தேங்கிய மழைநீர் போல இருந்தன அவள் கண்கள்” – என அசாத்தியமானதை எளிதில் அடைகிறது.

இக்கதைக்குள் உரையாடல்கள் – ஆசாரியையும் அவர் மனைவியையும் கடைக்கண் பார்வையையும், .
” சமையுறதுண்ணா என்னலே? அதுகளுக்குள்ள முலைப்பாலு வந்து நெறையுததாக்கும் கேட்டுக்க” போன்ற சம்பாஷனைகளும் இக்கதையை இன்னும் கச்சிதமாக்குகிறது .

ஒரு பஞ்சகல்யாணிக் குதிரை அதன் அனைத்து அம்சங்களிலும் பூரணம் பெற்றிருக்கும், இது ஒரு பஞ்சகல்யாணி அல்லது ஒரு ராஜ நாகம் உமிழ்ந்த நாக மாணிக்கம். அதன் ஒளி, விஷம் மற்றும் ஈரத்துடன்.

கிருஷ்ணன் .

முந்தைய கட்டுரைதத்துவம் மேற்கும் கிழக்கும்
அடுத்த கட்டுரைகவிதையெனும் தவளை