கம்பனும் அம்பிகாபதியும்

அன்புள்ள ஜெ

வணக்கம்

உங்களின் கம்பன் நிகழாத களங்கள் படித்தேன்.ஆனால் எனக்கு அந்தக் கட்டுரையில் சந்தேகம் கேள்வி இல்லை.என்னுடைய சந்தேகம் கம்பன் அவர்களின் குடும்பம் பற்றியது.தமிழ் சினிமா கம்பனுக்கு மகன் இருந்ததாகவும் அவன் அரசனின் மகளைக் காதலித்ததாகவும் சொல்லியிருக்கிறார்கள் ஆனால் இது உண்மையா,?? ஒரு வேளை இது புனைவு வகை சார்ந்ததா??

அவர்களின் குடும்பம், மனைவி, மகன் இவர்களைப் பற்றிக் கொஞ்சம் சொல்லவும்.இதைப் பற்றி எங்காவது கம்பனின் பாடலில் எழுதி இருக்கிறாரா ??

பதிலுக்காக காத்து இருக்கிறேன்

நன்றி

நரேன்

அன்புள்ள நரேன்

கம்பன் என்ற கவிஞனைப்பற்றி நமக்கு அனேகமாக ஒன்றுமே தெரியாது என்பதே உண்மை. சிலவற்றை ஓரளவு ஊகிக்கலாம்.

கம்பன் சடையப்பவள்ளல் என்ற நிலக்கிழாரைப்பற்றிக் கம்பராமாயணத்தில் பாடியிருக்கிறார். சடையப்பனின் இயற்பெயர் விக்கிரம சோழன் உலாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழகத்தில்
மூவலூர், திருக்கோடிக்காவலூர் ஆகிய ஊர்களில் உள்ள கல்வெட்டுக்களில் காணப்படும் கங்க வமிசத்து சேதிரையன் என்ற சிற்றரசன்தான் இவர் என்று சொல்லப்படுகிறது.

கம்பன் சோழமன்னனை தியாகமாவிநோதன் என்று குறிப்பிடுகிறார் என்றும் அது மூன்றாம் குலோத்துங்கனின் பட்டப்பெயர்களில் ஒன்று .

இவற்றிலிருந்து கம்பன் கிபி 1166 வாக்கில் ஆட்சிக்கு வந்த மூன்றாம்குலோத்துங்கனின் ஆட்சிக்காலத்தில் வாழ்ந்திருக்கலாம் என்று ஊகிக்கிறார்கள். கம்பர் என்பது ஒரு சாதிப்பட்டம். குமரிமாவட்டத்தில் கம்பர் சாதியினர் இன்றும் உள்ளனர்.ஆகவே அவர் காளிபூசை செய்யும் உவச்சர் குலத்தவர் என்று சொல்லலாம். இவ்வளவுதான் கம்பனைப்பற்றிப் புறவயமாக ஊகித்துச் சொல்லப்படக்கூடிய தகவல்கள்.

மற்றபடி கம்பனைப்பற்றிக் கிடைக்கும் எல்லாத் தகவல்களும் பதினைந்தாம் நூற்றாண்டில் உருவான தொன்மங்கள்தான். கம்பனுக்கும் ஒட்டக்கூத்தருக்கும் நிகழ்ந்த மோதல்கள், கம்பனுக்கும் ஔவையாருக்கும் நிகழ்ந்த மோதல்கள் போன்ற கதைகளில் உள்ள பாடல்களின் மொழி கம்பராமாயாணத்தில் உள்ளதை விட மிகமிகப்பிற்காலத்தையது.

கம்பனின் கதைகளுடன் காளிதாசனின் கதைகளுக்குள்ள ஒற்றுமையும் கவனிக்கத்தக்கது. பதினாறாம் நூற்றாண்டுவாக்கில் காளிதாசனைப்பற்றிய பல தொன்மங்கள் உருவாயின. காளிதாசன் தாசியருடன் கொண்டிருந்த உறவும், விக்ரமாதித்யமன்னரிடம் அவருக்கிருந்த பூசலும் விதவிதமாக உதிரிச்செய்யுள்களாகப் புனையப்பட்டன. அந்தக் கதைகள் சற்று மாற்றத்துடன் அப்படியே கம்பனைப்பற்றியும் சொல்லப்பட்டன. கம்பனும் காளிபூசைசெய்யும் சாதியினன்தான் என்பது அதற்குக் காரணமாக இருக்கலாம்.

கம்பனுக்கு அம்பிகாபதி என்ற மகன் இருந்தான் என்ற கதை எப்படி உருவாகி வந்தது என்பதும் சிக்கலானதே. அம்பிகாபதி எழுதியதாகச் சொல்லப்படும் அம்பிகாபதிக்கோவை ஏறத்தாழ கம்பராமாயணத்தின் மொழிநடை கொண்டது. பன்னிரண்டு, பதிமூன்றாம் நூற்றாண்டுகளில் எழுதப்பட்டிருக்கலாம். ஆனால் அம்பிகாபதியின் கதையுடன் இணைத்துச் சொல்லப்படும் பாடல்கள் பதினாறாம்நூற்றாண்டுக்குப்பிந்தைய நடையில் உள்ளன.

புலவர்களுக்குத் தன் மகளைக்கொண்டு உணவுபரிமாறச்சொன்னான் சோழன். சோழ அரசகுமாரி உணவு பரிமாறுவதைக் கண்டு

இட்ட அடி நோக எடுத்த அடி கொப்பளிக்க
வட்டில் சுமந்து மருங்கசைய-

என்ற வரியை அம்பிகாபதி பாடினான். அரசகுமாரியிடம் அவனுக்கு ஏற்கனவே காதலுறவு இருந்தது.அதை அரசன் கேட்டுவிட்டதை அறிந்து கம்பன் அவசரமாக

கொட்டிக்கிழங்கோ கிழங்கென்று கூறுவாள் நாவில்
வழங்கோதை வையம் பெறும்’

என்று முடித்தான்.

ஆனாலும் அரசனுக்கு சந்தேகம் வந்து அம்பிகாபதி மார்பில் சந்தனம் பூசவைத்து அரசகுமாரியிடம் சென்று முத்துச்சுண்ணம் பெற்றுவரச்சொன்னான். அம்பிகாபதி திரும்பிவந்தபோது மார்பில் அரசகுமாரி தழுவிய அடையாளமிருப்பதைக் கண்டான்

அரசன் அம்பிகாபதியை தண்டிக்கப் போகும்போது கம்பன் காலில் விழுந்து மன்றாடவே அரசன் சிற்றின்பம் தவிர்த்து நூறுபாடல்களைப் பாடினால் விடுதலை செய்கிறேன் என்றான். அம்பிகாபதி நூறு பாடல்களைப் பாடினான். அனால் காப்புப்பாடல் நூறுக்குள் வராது. அதையும் சேர்த்து எண்ணியமையால் நூறுபாடல் ஆகிவிட்டது என்று நினைத்து நூறாவதுபாடலை சோழ இளவரசி அமராவதி மீதுபாடிவிட்டான். ஆகவே அவனைக்கொல்ல சோழமன்னன் ஆணையிட்டான்.

இந்தக்கதைக்கு ஆதாரமான நூல் பதினாறாம்நூற்றாண்டில் உருவான தமிழ்நாவலர்சரிதை. [அவ்வை துரைசாமிப்பிள்ளைபதிப்பு] மேலே சொல்லப்பட்ட பாடலின் நடையைப்பார்த்தாலே தெரியும் இது பதினாறாம்நூற்றாண்டின் தமிழ் என்று.

ஆனால் அம்பிகாபதிக்கோவையில் உள்ள பாடல்களில் உள்ள தமிழ் இன்னும் சில நூற்றாண்டுப்பழைமை கொண்டது. உதாரணமாக

முளைக்கும் பிறையை முனியும் திருநுதல் முத்து அரும்ப
விளைக்கும் பசலை விழி இணை காட்ட விடாத வண்டர்
கிளைக்கும் தெரிவரும் கேதகை நீழலின் கீழிருந்து
வளைக்கும் சுழிக்கும் அழிக்கும் ஒண் கூடல் வளைக்கை கொண்டே

[அம்பிகாபதிக்கோவை]

அம்பிகாபதிக்கோவை என்ற தமிழ்நூலைப் பிற்காலத்தில் கம்பனுடனும் சோழனுடனும் இணைத்துக் கதைகள் புனைந்துகொண்டார்கள் என்று ஊகிப்பதே சரியாக இருக்கும்

இன்னும் கொஞ்சம் அதிகமாகச் சென்று சிந்தித்தால் ஒன்று தோன்றுகிறது. அம்பிகாபதி-அமராவதி கதைக்குத் தமிழில் வேர்களே இல்லை. சமூக எல்லைகளைத் தாண்டிய காதல், அதற்கு எதிர்ப்பு, காதலர் உயிர்த் தியாகம் என்பது நம் மரபில் பேசப்பட்டதே இல்லை. காதல் எப்போதுமே குல எல்லைக்குள்தான் நிகழ்ந்தது

அம்பிகாபதியின் கதை 11 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த காஷ்மீரி கவிஞனான பில்ஹணரின் கதையுடன் பலவகையில் ஒத்திருப்பதைக் காணலாம். அதற்கான பின்புலத்தை நாம் இந்தியாவின் வரலாற்றைக்கொண்டு ஆராயலாம்.

பொதுவாக பத்தாம்நூற்றாண்டுக்குப்பின்னர்தான் குலக்கலப்புக் காதல் சம்பந்தமான கதைகள் இந்தியாவெங்கும் பரவலாக எழுந்தன. பிவ எட்டாம்நூற்றாண்டுக்குப்பின் இந்தியா முழுக்க பரவி எழுந்த பக்தி இயக்கம் சூத்திர சாதிகளின் எழுச்சியை உருவாக்கியது. அதன் விளைவாகவே இத்தகைய புனைகதைகளுக்கான சமூகச் சாத்தியக்கூறுகள் உருவாயின

இத்தகைய கதைகள் பிற்காலத்தில் இந்தியா முழுக்கப் பயணித்துப் பல்வேறு வகையில் புதிய புனைவுகளை உருவாக்கியிருக்கலாம், அம்பிகாபதியின் கதை அதன் தமிழ் வடிவமாக இருக்கலாம்.

ஜெ


அம்பிகாபதிக்கோவை- நாஞ்சில்நாடன் கட்டுரை

முந்தைய கட்டுரைஆடும் ஊஞ்சலும் அந்தரத்தில் நிற்கும் கணங்களும் – ஏ.வி.மணிகண்டன்
அடுத்த கட்டுரைஇசையும், பிராமணர்களும்