மத்தகம்-கடிதம்

அன்புள்ள ஜெயமோகன்,

வணக்கம்

மத்தகம் நான் இதுவரை படித்த உங்களின் படைப்புகளில் குருரமான படைப்பு என்று சொல்வேன் .யானையை விட மனிதனின் குருரம்தான் நான் கண்டது.
ஆனால் அதன் முடிவை என்னால் முழுவதுமாக உள்வாங்க முடியவில்லை.

அதிகாரம் என்ற ஒரு சொல்லை யானையின் மத்தகத்தின் மீது பொருத்திப் பார்த்தால் இந்த நாவல் தெளிவடைகிறது ,ஆனால் பரமனிடம் கேசவன் சரணடையும் பொழுது இந்த அதிகாரம் கொலை செய்பவருக்கும் , திருடனுக்கும் மட்டும்தானா என்ற எண்ணம் வலுவடைகிறது .
ஒரு துப்பாக்கி யானையின் சிந்தனையை ஒரு நிமிடத்தில் மாற்றுமென்றால் , மரணத்தின் மீது அது கொண்ட பயமா ?.

ஆனால் தம்புரானின் இழப்பும் ,இளைய தம்புரானின் துப்பாக்கி ஏந்திய கரமும் கேசவனை மாற்றிவிட்டதா ?. அப்படி இருந்தாலும் கேசவன் சுழற்றி அடித்த துப்பாக்கியை மீண்டும் எடுத்து எறிந்து தன்னுடைய காலால் மிதிக்கும் செயல் ,தன் அதிகாரம் இழந்ததின் வெறுப்பா ?.
அப்படியென்றால் தம்புரானுடன் தன் அதிகாரம் முடிவடையும் என்று கேசவனுக்குத் தெரியுமா?.

ஏன் கேசவன் பரமனைத் தன்னுடைய மத்தகத்தின் மீது அனுமதிக்கிறான் , கேசவன் சுபுகண்ணுவை தன்னுடைய மத்தகத்தின் மீது அனுமதிப்பானா?.ஏன் என்றால் பரமன் எப்பொழுதும் கேசவனின் பின்னால் மட்டுமே வருபவன் .பரமன் நீண்டநாள் கேசவனிடம் பழகியவன் ஆனால் நெருங்கியவனா ?

குதிரை வண்டி நாயர் ஆசானை சாட்டையால் அடிக்கும் பொழுது ,கேசவன் நடந்து கொள்ளும் போக்கு ஒரு அடியாளின் அதிகாரம் போலத்தான் தெரிகிறது ,ஆனால் பெருமழை நாளில் கேசவன் தம்புரானைக் காணச் செல்வது விசுவாசம் மட்டும் தானா ?.நாராயணனைக் கேசவன் தாக்குவது ,பிறகு நாராயணனின் பார்வைக்கு (அல்லது முக கவசம்) கண்டு அடிபணிவது,கொச்சு கொம்பனைத் தன்னுடைய இருப்பினால் அடக்குவது என்று எங்கும் அதிகார தோரணை .

அருணாச்சலத்தைப் பின் தொடருந்து செல்லும் பரமனும், அதன் பின் ராமலக்ச்மி வீட்டில் நடக்கும் நிகழ்வும் குருரத்தின் உச்சம்.அந்த இடத்தில பரமன் காட்டும் முகம் , யானைக்கு மதம் பிடித்த போது ஏற்படும் முகத்தை காட்டிலும் பல மடங்கு அதிகம்.

இந்த நாவலில் பல இடங்கள் அழியாத காட்சி பிம்பங்களாக உள்ளன ,இருளில் யானை எவளவு நேரம் வேண்டுமென்றாலும் நிற்கும் ஏன் என்றால் மகா இரவில் யானை ஓர் கை குழந்தை போல என்பதும். இருளில் யானையின் அசைவு ,ஒரு பெரும் ஆற்றின் நீரலை போல நகர்ந்து செல்லும் அதைப் பார்க்கும் தருணம் என்னில் தூக்கம் பெருகும் என்பது ஒரு மெல்லிய இசை, காட்சியாக மாறும் தருணம்.தம்புரான் யானை வந்த பாதை மனிதன் வந்தால் மரணம் தானே ?.என்பது யானையின் கட்டுப்பாடில்லா வீரத்தையும் ,அது ஒரு இயற்கை அங்கம் என்பது புலப்படும்.தெரு முழுவதும் ஈரம் ,நேற்று மழையும் பொழியவில்லை ,கூரையும் நனையவில்லை எப்படி எனும்பொழுது ,காலையில் குளித்துச் சென்ற மக்களின் மேல் இருந்து விழுந்த துளிகள் என்பது அற்புதம் .

நன்றி

முரளி

அன்புள்ள முரளிசித்தன்

மத்தகம் கதைபற்றி என் தளத்திலேயே விரிவான விவாதங்கள் நிகழ்ந்துள்ளன. கதையில் சில வினாக்கள் உள்ளன. கேசவனின் நடத்தை அதில் முக்கியமானது. அந்தக் கதை அளிக்கும் சூழலைக்கொண்டு, உண்மையான வாழ்க்கையை ஆராய்வதைப்போலவே, அதை ஆராயவேண்டியதுதான்

அடிப்படையில் அது கேசவனின் பெரும் சரிவு. ஆன்மீகமாக மரணம்

ஜெ

முந்தைய கட்டுரைஇந்திய ஆங்கில இலக்கியம்
அடுத்த கட்டுரைதன்னறத்தின் எல்லைகள்