வாசலில் நின்றுகொண்டு…

அன்புள்ளஜெ,

நான் சோ. இளமுகில். கற்றலையும் கற்பித்தலையும் வாழ்வாகக் கொண்ட அப்பாவுக்கும், ஆசைகளும் அன்பும் நிறைந்த அம்மாவுக்கும் பிறந்தவன். இப்போது குடிசார் பொறியியல் இளநிலை பட்டம் பெற்று முதுநிலைக் கல்வி பயிலக் காத்திருக்கிறேன். அம்மாவுக்கு உங்கள் எழுத்துக்கள் மிகவும் பிடித்தமானவை.

உங்களது “இன்றைய காந்தி” என்னை சில தினங்களாக தூங்கவிடாமல் கற்பனைக்கு உள்ளாக்கியுள்ளது. எனக்குப் பொதுவாழ்வில் ஈடுபடவேண்டும் என்பதே நிம்மதியளிக்கும் ஒன்று. இது என் அப்பா எனக்கு ஊட்டியது. இயல்பாகவே பிறரின் மகிழ்ச்சியில் என் மகிழ்ச்சியைக் காண்கிறேன். எனக்கு சமூகப் பொறுப்பு உள்ளதாக உணர்கிறேன். கிராமங்களின் வளர்ச்சியே இந்தியாவின் வளர்ச்சி என்று கருதுகிறேன். மக்களைப் படிக்க வைப்பதே உயர்ந்த கல்வி என்று நினைக்கிறன். என்னால் முடிந்த பங்களிப்பை நம் சமூகத்திற்கு செய்யவேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

தன்னிறைவு பெற்ற கிராமங்களை உருவாக்கவேண்டும் என்ற காந்தியின் விருப்பத்தில் அதீத நம்பிக்கை கொண்டுள்ளேன். அது இன்றைய சூழ்நிலையில் சாத்தியமா? சாத்தியம் என்றால் அதை நோக்கி என்னை எப்படி நகர்த்துவது? நான் என்னவெல்லாம் கற்கவேண்டும்? உங்களது வழிகாட்டல் தேவைப்படுகிறது. என்னை எப்படி தகுதிப் படுத்திக்கொள்ளவேண்டும்.

என் அப்பா, காலம் உன்னை வளர்க்கும் என்கிறார். அம்மாவோ உன் வயது(22) அப்படி என்கிறார். ஆனால் நான் அப்படி உணரவில்லை. கிராமங்களின் தன்னிறைவுக்கு முயற்சிக்காமல் இருப்பதை விட முயன்று தோற்கவும் தயாராக உள்ளேன். இதற்காக எதையும் இழக்கவும் தயாராக உள்ளேன். சூழ்நிலை அதற்கு உகந்தது இல்லை என்றாலும் சூழ்நிலையை உருவாக்க வழி செய்ய முயற்சிப்பேன். நான் பக்குவப்படவேண்டும் என்று நீங்கள் எண்ணினாலும் பக்குவப்படவும் தயாராக உள்ளேன். “சே போல் காந்தி போல் நாடெங்கும் பயணம் செய்ய வேண்டுமா?” செய்யவும் தயார். தோல்வியும் கற்றலே என்பதை உங்கள் எழுத்துக்கள் கற்றுக்கொடுத்துள்ளது. “நான் அடுத்து என்ன செய்யவேண்டும்?” இதுவே எனது 3 மாதகால வினாவாக உள்ளது. உதவுங்கள்

உறுதியுடன்,
சோ. இளமுகில்.

அன்புள்ள இளமுகில்,

உங்கள் கடிதம் கண்டேன். இளமையில் இவ்வாறு உருவாகும் மன எழுச்சி எப்போதுமே சற்று அதிகப்படியானது. ஆனால் அந்த அளவுக்கு அதிகப்படியான மன எழுச்சி இருந்தால் மட்டுமே சற்றேனும் ஆக்கபூர்வமாக நாம் பணியாற்றமுடியும். ஆகவே அந்த வகையான எல்லா மன எழுச்சிகளையும் நான் ஆதரிக்கவே செய்வேன்.

இந்த மன எழுச்சி நுரைபோல. நுழை அழகானது பிரம்மாண்டமானது. ஆனால் அதன் உள்ளடக்கம் அதன் அளவை விட மிகவும் குறைவே. அதைப்பற்றி நீங்கள் தெளிவாகப்புரிந்துகொள்ளவேண்டும். அந்த உள்ளடக்கம்தான் முக்கியம். நுரை அல்ல, அதை உருவாக்கும் அலையே முக்கியமானது.

ஆகவே உங்கள் சொந்த மனநிலையை நீங்களே கூர்ந்து கவனியுங்கள். உங்கள் நோக்கம் என்ன? உங்களைப் பெரிய ஆளுமையாகக் காட்டிக்கொள்வதா:? புகழ்பெறுவதா? உண்மையான சேவையின் நிறைவா?

அதை நீங்கள் உண்மையாகவே செய்துபார்த்து தெரிந்துகொள்வதே உதவியானதாகும். செய்ய ஆரம்பிக்கும்போதுதான் ‘நான் நினைத்தது இது அல்ல’ ‘என் எதிர்பார்ப்பே வேறு’ ‘நான் விரும்புவது இதிலுள்ள இந்த அம்சத்தை மட்டுமே’ என்றெல்லாம் தெளிவுகள் கிடைக்கும். அந்தத் தெளிவின் அடிப்படையில் எடுக்கப்படும் முடிவுகளுக்கே மதிப்பு.

காந்தியை கவனியுங்கள். காந்தி எக்காலத்திலும் எதையும் அவசரப்பட்டு ஆவேசப்பட்டு பொங்கிஎழுந்து செய்ததில்லை. அவர் தான் செய்யவேண்டிய செயலை முதலில் கூர்ந்து கவனிக்கிறார். அதன்பின் அதில் சிறிய அளவில் ஈடுபட்டுச் செய்துபார்க்கிறார். அதிலுள்ள வெற்றிதோல்விகள் சிக்கல்கள் சாத்தியங்கள் எல்லாவற்றையும் அறிகிறார். அதன்பின் இன்னும் கொஞ்சம் பெரியதாகச் செய்து பார்க்கிறார். செயலை விரிவாக்கிக்கொண்டே செல்கிறார்.

அதுவே உண்மையான சமூகப்போராளியின் வழி. பாய்ந்து ஒன்றில் இறங்கி, அதிலுள்ள நடைமுறைச்சிக்கல்களைக் கண்டதுமே மனம் சோர்ந்து அதே வேகத்தில் திரும்பிவிடுவதே இளமையில் பெரும்பாலானவரகள் செய்வதாக இருக்கிறது. ’செஞ்சுபார்த்தேன் சார், ஒண்ணும் முடியலை’ என்று பிறகு காலம் முழுக்க சொல்லிக்கொண்டிருப்பார்கள். அதில் பொருளே இல்லை.

அவ்வாறு செய்ய ஆரம்பிக்கும் முன் நம்மை நாம் தகுதிப்படுத்திக்கொள்ளவேண்டும். நம்மிடம் சமூகத்திற்குக் கொடுக்க நிறைய இருக்கவேண்டும். கல்வி, அனுபவம், ஞானம். காந்தி முதல்தர பாரிஸ்டராக ஆனபின்னரே சமூகத்திற்கு முன் இறங்கி வந்தார். ஆகவே உங்கள் கல்வியை முழுமைசெய்யுங்கள். உங்கள் தகுதி ஐயத்திற்கிடமற்றதாக இருக்கவேண்டும்.அதற்கான கல்விகள் இன்று நம்மிடம் நிறையவே உள்ளன. அதை வெற்றி கொள்ளுங்கள்

கூடவே நீங்கள் நம்பும் தளத்தில் சிறிய அளவில் பணியாற்றிப்பாருங்கள். உங்கள் இயல்புக்கு அது ஒத்துப்போகிறதா, உங்களால் முடிகிறதா என கவனியுங்கள். முடியவில்லை என்றால் ஏன் என்று புரிந்துகொள்ளுங்கள். உங்களால் எங்கே எதை மிகச்சிறப்பாகச் செய்ய முடிகிறது என்று உணருங்கள்

எந்தத் தளத்திலும் ஆரம்பம் என்பது மனச்சோர்வூட்டக்கூடியதாக, கடுமையானதாகவே இருக்கும். அந்த சோதனையை உங்களால் தாண்ட முடிகிறதா என்று பாருங்கள். தாண்டினால் உங்களுடைய இடத்தை நீங்கள் கண்டுகொள்வீர்கள்.

ஒருவன் அன்றாடம் செய்யும் பணி முழுக்க அவனுக்கு மனநிறைவூட்டக்கூடியதாக இருக்கும் என்றால், அதுவே அவனுடைய கல்வியும் சாதனையும் கேளிக்கையும் வழிபாடும் ஆகும் என்றால் அவன் வாழ்க்கைதான் ஆசீர்வதிக்கபப்ட்டது. அத்தகைய வாழ்க்கையை வாழ எல்லாராலும் முடிவதில்லை. அதற்கான துணிச்சல் சிலரிடமே உள்ளது.

சேவை என்பதன் உண்மையான லாபம் அதுதான். அதில் என்ன விளைகிறது என்பதைவிட அதில் முழுமையாக ஈடுபட முடிகிறதா என்பதே முக்கியமானது. அதுவே விடுதலை அளிப்பது

உங்களுக்கு வழிகாட்டக்கூடிய என் நண்பர் ஒருவரின் முகவரியை இணைத்திருக்கிறேன்

ஜெ

அ க

முந்தைய கட்டுரைபுலிக்கலைஞன்
அடுத்த கட்டுரைதமிழ் அகராதி