நான் சாதாரணமாக இணையத்தில் வாசிக்கும் சிந்தனைகளைக் குப்பை, பெருங்குப்பை என இரண்டாகப்பிரித்துக்கொள்வதுண்டு. மிக அபூர்வமாகவே அதற்கும் மேலே செல்லும் ஆக்கங்களைக் காண்கிறேன். அவற்றை வைரமுத்துவைத் துணைக்கழைத்துக்கொண்டு ‘ராஜகுப்பை’ என வகுத்துக்கொண்டிருக்கிறேன். அவ்வாறு வாசித்த ஒரு அரிய இணையப்பக்கம்
வாசித்துச்செல்லும்போதுதான் எவ்வளவு ஆழமான தரினசங்கள். ‘கி.மு. 2.5 பில்லியன்
நிலத்தில் பாறைகள் தோன்றிய காலம். முதன் முதலில் தமிழ் நாட்டில் மனித இனம் தோன்றியது. தென் குமரிக்குத் தெற்கே இலெமூரியா கண்டத்தில் முதலில் மனித இனம் தோன்றியது’ என்று வாசிக்கும்போது என் தமிழ்மயிர் தனியாகவே சிலிர்த்துக்கொண்டது.
காய்கினவழுதி என்பவரையோ அவர் கம்பிளிப்போர்வை போர்த்திப் பனிக்குகையில் இருந்து அரசாண்டதையோ நான் இதுவரை கேள்விப்பட்டதில்லை. காய்சினவழுதியாக இருக்கலாம். அவரை காய்ச்சினவழுதி என்று சில நூல்களில் அச்சிட்டிருக்கிறார்கள். ஏதோ கள்ளச்சாராயம் காய்ச்சியிருப்பார் என நினைக்கக்கூடாது எனப் பிற்கால அறிஞர்கள் பெயரை மாற்றியிருக்கிறார்களோ? தெரியவில்லை
மொத்தக்குறிப்புகளையும் வாசிக்கையும் பரவசத்தில் என்ன செய்வதென்றே தெரியவில்லை. ‘சிந்து சமவெளித் தமிழர்களின் “கலியாண்டு” ஆண்டு தொடக்கம், சிந்து சமவெளியில் தமிழர்களின் நாகரிகம் ’தழைத் தொடங்கியது’ சரி. ஆடுமாடு மேய்த்திருப்பார்கள். தழை தேவைப்பட்டிருக்கும்.
ஆனால் ‘சேர இளவரசர்கள் ஈழத்தில் ஆண்டகாலம். கங்கைவெளி – சிபி மரபினர் ஆட்சி. சிந்து வெளி – சம்பரன் ஆட்சி’ அது என்ன புரியவில்லை.
கடைசியில்தான் விஷயம் தெளிவாகியது. இந்தக் கட்டுரை இன்றைய நூலை ஆதாரமாகக் கொண்டதல்ல. ‘கி-மு. 20000 – 10000-ஒளியர் கிளைமொழிகள் தமிழிலிருந்து பிரிந்தகால’த்தில் பெயர் தெரியாத யாரோ அறிஞரால் எழுதப்பட்டது. யார் எழுதினார்கள் என இன்னும் ஆராய்ச்சி நடந்துகொண்டிருக்கிறது. ஆசிரியரே கடைசியில் அதைச் சுட்டி கொடுத்து சொல்லியிருக்கிறார் – ‘நன்றி:HTTP://WWW.TAMILKALANJIYAM.COM.இதனைத் தொகுத்த ஆசிரியர் பெயர் தெரியவில்லை’- என்று