மொழியாக்கங்கள்

 

அன்புள்ள ஜெயமோகன் சார்,

முதலில் இந்த நீளமான கடிதத்தை வாசிக்க நேரம் ஒதுக்கியதற்கு நன்றி.

என்னைப் பற்றி ஒரு சிறிய அறிமுகம். பெயர் சிவக்குமார், வயது 29. மனைவி பெயர் மாலதி.பிறந்து வளர்ந்தது மதுரை நகர். பணி பொருட்டு சென்னையில் வசித்து வருகிறேன். பெருங்குடி-தரமணியில் உள்ள சோலார்விண்ட்ஸ் என்கிற மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறேன். அப்பா பெயர் பாலச்சந்திரன், முன்பு மதுரை கோட்ஸ் பஞ்சாலையில் வேலைபார்த்துத் தற்போது கோச்சடையில் சார்பதிவாளார் அலுவலகத்தில் பத்திரப்பதிவராக இருக்கிறார். அம்மா மணிமொழி .இல்லத்தரசி. ஒரு தம்பி முத்துக்குமார்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு, ஒரு சிறிய கடிதம் நான் உங்களுக்கு அனுப்பியிருக்கிறேன். உங்களுக்கு ஞாபகம் இருக்க கூடும். பதட்டமான மொழியில் மீள்வாசிப்பு கூட செய்யாமல் அவசரமாக அனுப்பப்பட்ட கடிதம் அது. அன்றிருந்த மனநிலையில் உங்களிடம் பகிர நினைத்தவற்றை சுருக்கமாகப் பகிர்ந்திருந்தேன். அனுப்பிக் கிட்டத்தட்ட 10 நாட்கள் வரை, காதலியிடம் காதலைத் தெரிவித்துவிட்டு, அதற்கான பதிலை எதிர்பார்த்திருந்த காதலனைப் போலக் காத்திருந்தேன். நீங்கள் அதற்கு செய்த சிறிய எதிர்வினை , கடந்த இரண்டு வருடங்களாக என்னுடய முயற்சிகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் இருந்தது. உங்கள் தளத்தில் அவ்வப்போது அந்த என்னுடைய கடிதத்தையும், அதற்கான உங்கள் எதிர்வினையையும் அடிக்கடி வாசிப்பேன்.

வாசிப்பை ஒரு பழக்கமாகக் கொண்டு வந்தது எனது 25வது வயதில்தான். வாசிப்பில் ஈடுபாடு வருமளவிற்குத் தகுந்த தருணங்கள் அதுவரை அமையவில்லை அல்லது நான் முயற்சி எதுவும் எடுக்கவில்லை. வாசிப்பில் ஆர்வம் வருவதற்கு ஏற்ற இயல்பான இளவயதுமல்ல, தாமதமான முடிவுமல்ல. என்னுடைய பணிசார்ந்து கிடைத்த மிகுதியான ஓய்வு நேரத்தில் சினிமா, கிரிக்கெட், சில வருடங்கள் மதுப்பழக்கம், என எல்லாவற்றையும் தொட்டு, சோர்வடைந்து, கடந்து நான் புத்தகங்களை கடைசியாகத் தேர்ந்தெடுத்தேன். மற்ற பொதுவான கல்லூரி நண்பர்கள், பணி நண்பர்கள் போல, ஆங்கில மொழியில் வாசிக்க முதலில் நாட்டமில்லை. எனக்கு ஆங்கிலம் என்பது பள்ளியில் பகீரதப் பிரயத்தனம் செய்து படித்து, கல்லூரியில் வேறு வழியில்லாமல் திணித்ததால் படித்த மொழி. அதில் அடிப்படைப் பயிற்சி மட்டுமே இருந்தது. பொன்னியின் செல்வனில் ஆரம்பித்த தமிழ்ப் புதினங்களின் வாசிப்புப் பழக்கம், கிழக்குப் பதிப்பகத்தின் சில வரலாற்று, எளிய மொழிபெயர்ப்பு நூல்கள், பின் இந்திரா பார்த்தசாரதி அவர்களின் பெரும்பாலான நாவல்கள் என அடுத்தடுத்த புத்தகங்கள் வழியாக இயல்பாகவே உங்கள் எழுத்திற்கு வந்து சேர்ந்தேன்.. அந்த நேரத்தில் என் வாழ்க்கையில் நிகழ்ந்த ஒரு மாபெரும் துயர சம்பவமும், அன்றைய நாட்களில் இணையம் வழியாக மட்டுமே நான் விடாது கவனித்து வந்த, ஈழப் போரின் கடைசி கட்ட நிகழ்ச்சிகளும், பகிர யாவரும் இல்லாமல், என் மனதில் எழுந்த பெருஞ்சோர்வும், என்னை வாசிப்பை நோக்கி மேலும் தள்ளியது. ஒரு கட்டத்தில் வேலை, வாசிப்பு தவிர வேறு நினைப்பில்லை.

துல்லியமாக சொன்னால் சென்னை கந்தன்சாவடி பஸ் நிறுத்தத்தில் உள்ள ஒரு பெட்டிக்கடை நாளிதழ் விளம்பரத்தில் கொட்டை எழுத்துக்களில் “எம்.ஜி.ஆர், சிவாஜியை அவமானப்படுத்தினாரா ஜெயமோகன்?” என்ற செய்தி மூலம்தான் நீங்கள் எனக்கு முதலில் அறிமுகமானீர்கள். நான் வாசித்த உங்களின் முதல் கதை ‘கிளிக்காலம்’, சில முறை மீண்டும் மீண்டும் வாசித்தேன். முன்பு நான் 6வது படிக்கும் போது, எனது வீட்டிற்கு அருகிலிருந்த ஒரு பள்ளியில் மாலைநேர வகுப்பில் சேர்ந்து சில காலம் ஹிந்தி படித்தேன். அப்போது என்னுடன் படித்த, எங்கோ என் நினைவின் அடியில் புதைந்திருந்த பத்மப்பிரியா அக்காவின் மிருதுவான மஞ்சள் நிறக் கைகளை அந்தக் கதை மீண்டும் நினைவூட்டியது. அதுவே முதல் தாக்கம். எனக்கு உங்கள் எழுத்துகள் அறிமுகமான நாட்கள், முதற்காதலின் தருணங்கள் போல தீவிரமானவை.. முதற்பார்வையிலேயே விழுவது போல, முதல்சில வரிகளிலேயே, புரிந்துவிட்டது இதில்தான் எதிர்காலம் என்று. அவளின் ஒவ்வொரு ஜாடையும் உங்களை ஆட்கொள்ளும், மெல்லிய அசைவுகள் அடக்கமுடியாத கிளர்ச்சியூட்டும், சுயத்தை இழப்பது அறிந்து மீளநினைக்கும் மறுநொடியில் முன்னைவிட பலமான விசை ஒன்று அவளை நோக்கி இழுக்கும், அவளது ஆகமொத்த ஆகிருதி உங்களை மண்ணில் புதைக்கும் அளவிற்கு அழுத்தும். என்னைக் குலைத்து பூகம்பத்தை உருவாக்கி உங்கள் எழுத்துக்கள் என்னை ஆட்கொண்டன. வெளியில் நான் நானாக எல்லோருக்கும் தெரிந்தாலும், உள்ளே நான் முற்றிலும் வேறொருவனாக மாறிக்கொண்டிருந்தேன். மொழியுடனான அறுபடாத நெருக்கமான ஆழமான உறவில்தான் எனக்கான மீட்பு இருக்கிறது என உறுதி செய்த நாட்கள் அவை.

தொடர்ச்சியாக தமிழில் ஜெயமோகன், புதுமைப்பித்தன் , ஆங்கிலத்தில் தல்ஸ்தோய், மாப்பசான் எழுத்துக்கள் மட்டும் சில காலம் படித்தேன். என் பணிச்சூழலால் நான் சிரத்தை எடுக்காமலே, கற்க நேர்ந்த ஆங்கிலத்தில் 2011 ஆரம்பத்தில் மொழியாக்கம் செய்யலாம் என ஆர்வம் வந்தது, நான் முன்னரே கூறியபடி உங்களின் அந்த மாபெரும் வெள்ளம் என்ற தலைப்பிலான கட்டுரையே அதற்கான தூண்டல். ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்ய, தனியாக மொழிக்கென்று பயிற்சிகள் எதுவும் எடுக்கத் தோன்றவில்லை. தேர்ந்தெடுத்த படைப்புடனான காதல், அதுவரையிலான வாசிப்பின் பயிற்சி, என்னுடைய ஆர்வம் (கோளாறு?) மீதான நம்பிக்கையை வைத்து ஆரம்பித்தேன். மொழியாக்கம் செய்ய நான் தேர்வு செய்த உங்கள் படைப்புகளுக்கு, ஒரே ஒரு எளிய விதிதான். அன்றைய மனநிலை மற்றும் ரசனையில் 100 முறை படித்தால் கூட வரிக்கு வரி எனக்கு படைப்பூக்கமும், பரவசமும் தர வேண்டும்..

முதலில் நான் மொழியாக்கம் செய்ய தேர்ந்தெடுத்த உங்கள் படைப்பு,”உங்கள் செல்ல மகளின் – ஒர் எளிய அறிமுகம்”. ஒரு அப்பா தனது குட்டி மகளுடனான உறவை இந்த அளவிற்கு அனுபவித்து மொழிவழியாகப் பதிவு செய்ய முடியுமா எனப் பேராச்சரியம் எனக்கு. அபாரமான முதல்வரிகளுடன் ஆரம்பித்த அந்தப் படைப்பில், அட இவரா அந்தக் கீழைத்தத்துவ ஞானி என தெரியவரும்போது வரும் திருப்பம். குறிப்பாக, கருவிலேயே திருவுடையவர், உலக பலசாலிகளில் ஒருவரான அஜிதன் கற்பனையின் படிக்கட்டில் தாவி ஏறி உங்களுக்கு சொன்ன பதில், முன்பிருந்த உலகத்தில் இருந்து அவர் அள்ளி எடுத்து வந்த வெறுமை, அவ்வப்போது எளிய மானுடரால் அறியமுடியாத ஒன்றைக் கண்டு மகிழ்ந்து கண்களில் ஒளி தெறிக்க செக்கச் செவேலென்று சிரிப்பவர், போன்ற வரிகளை மீண்டும் மீண்டும் வாசித்து மொழியாக்கம் செய்தேன். ஒரு சிறுகதைக்கான வடிவத்துடன், மனதினைப் பொங்கச் செய்யும் அதன் உச்சகட்ட வரிகள் எனக்குள்ளே விடாது ஓடியது. அந்த படைப்பை மொழிபெயர்த்து முடித்த பின்தான் அந்த வரிகள் என்னை நிரப்பிய பின் தணிந்தது. அந்த உச்சகட்டக் காட்சியை எனக்குள்ளே பலமுறை மீட்டிப் பார்த்திருப்பேன், நெருப்பு வண்ணத்தில் சுடர்விட்ட குழந்தையின் முகம் என் மாபெரும் குலத்தின் அன்னை தெய்வங்களான மீனாட்சியாகவும், சிவகாமியாகவும், சரஸ்வதியாகவும், காளியாகவும் மகிஷாசுரமர்த்தினியாகவும் என் கண்முன்னேயும் விரிந்து விண்ணில் வியாப்பித்து என் மனதையும் பொங்கச் செய்தது. பேரனுபவம் தந்ததற்கு நன்றி.

http://rendering-endeavors.blogspot.in/2011/03/j-chaithanya-simple-introduction-1.html

அடுத்ததாக நான் தேர்ந்தெடுத்த கதை “நச்சரவம்”. என் வாசிப்பின் வரையில் அது உங்களுடைய ஆகச்சிறந்த கதைவரிசைகளில் ஒன்றல்ல. பிறகு ஏன் அதை தேர்ந்தேடுத்தேன் என உங்களுக்கு வியப்பைத் தரலாம், எனக்கும் அது வியப்பைத் தருகிறது. சிவன் என்கிற குறியீடு, படிமம் அல்லது தெய்வம் மீது எனக்கிருக்கிற அலாதியான ஈர்ப்புதான் காரணம். விஷ்ணு என்கிற படிமத்தினை வைத்து மாபெரும் நாவலை எழுதிய ஜெயமோகன், சிவனை வைத்து ஒரு சிறுகதையாவது எழுதியிருப்பார் என்பது என்னுடைய திடமான நம்பிக்கை. அந்த எதிர்பார்ப்பில் உங்கள் சிறுகதைத் தொகுதியினைப் புரட்டிப்பார்க்கையில் கடைசிக் கதையாக இந்தக் கதை அமைந்தது. உடனே அது எந்தக் கதையானாலும் மொழியாக்கம் செய்து விட வேண்டும் என தீர்மானித்து விட்டேன். அந்தக் கதையினை முழுவதாகப் படிக்காமல், உள்வாங்கிக் கொள்ளாமல் எடுத்த அவசர முடிவு. அத்தோடு ஆங்கிலத்தில் உரையாடல்களை மொழியாக்கம் செய்ய பயிற்சி அப்போது போதவில்லை. இந்த மொழியாக்கம் நான் எதிர்பார்த்த அளவிற்கு அமையவில்லை. இருப்பினும் அந்தக் கதையில் , வரலாற்றை அணுகி சிக்கலாக்குபவர்களை நீங்கள் செய்யும் பகடி, இயற்கைக் காட்சிகளின் வருணனை, முந்தைய தலைமுறை மலைசாதிகள் பற்றிய தகவல்கள், அவர்ண சாதிகளுக்கு அளிக்கப்பட்ட தண்டனை, காட்டுக்குள் வழிதவறிய கதைசொல்லியின் படபடப்பு, ஆதிமனிதர்கள் கற்களை அடுக்கி சிவலிங்கத்தைக் கண்டடைந்திருக்கலாம் என நீங்கள் கொடுத்த விளக்கம், தாந்தரீக மதம் பற்றிய உங்களுடைய பார்வை, போன்றவைகள் என்னைக் கவர்ந்தன. குறிப்பாக மலைத்தொடர்களை மலைஉச்சியில் பார்க்கும் அந்தக் கதைசொல்லி, திரைகள் போல அந்த மலைகளை ஒன்றன்பின் ஒன்றாக விலக்கிப் பார்த்தால் இறுதியாக என்ன இருக்கும் எனக் கற்பனை செய்வது, அந்தச் சிறுகதையின் மையப்புள்ளியான வரலாற்றினை அணுகும் முறையில் இருக்கும் சிக்கலை, தெளிவாக அணுக வேண்டிய அவசியத்தையும் இந்த ஒரே உவமை மூலம் காட்டியிருக்கிறீர்கள் என நினைக்கிறேன். இவையெல்லாம் சேர்ந்து எனக்கு அந்தக் கதை பரவசத்தையே தந்தது. அந்தக் கதைசொல்லியின் தேடல்கள் நச்சரவம் தரையில் ஊர்ந்து செல்வது போல, அங்கும் இங்கும் முட்டி மோதி முன்நகர்ந்து சென்று உச்சகட்ட முடிச்சில் கதையில் உள்ளபடியும், உருவகத்திலும் பாம்பு சீறிக் கொத்துவது போல முடிந்தது.

http://rendering-endeavors.blogspot.in/2011/03/cobra.html

அடுத்ததாக என்னை இழுத்தது “முடிவின்மையின் விளிம்பில்”என்ற கதை. திடமாக சொல்லிவிடலாம் உங்களுடைய சாதனை சிறுகதை என்று. நான் அதிகமுறை வாசித்த கதை இதுவாகத்தான் இருக்கும். முதலில் படிக்கும் எந்த ஒரு வாசகனுக்கும் அதிர்ச்சி கொடுக்கும் கதை. குறிப்பாக ஆண் பெண் உறவின் சிக்கல்களை மட்டும் வைத்து கிளர்ச்சியூட்டும் வணிக எழுத்துகளுக்குப் பழக்கப்பட்ட வாசகர்கள் இந்தக் கதையை ஆர்வமாக உள்வாங்கிப் படிக்க நேர்ந்தால் ஒன்று குழம்பி இதுவரை படித்த எழுத்துக்களை நிராகரித்துத் தெளிவார்கள் அல்லது விட்டு விலகி ஓடுவார்கள் என்பது என் எண்ணம். ஆனால் இதில் என்னைப் பெரிதும் கவர்ந்தது மூன்று அடுக்கான கதைகளை நீங்கள் அநாயாசமாகப் பின்னிய அந்த மேதைமை, பிரட்டியிடம் ஜெயமோகனின் நாவல் இலக்கியம் பற்றிய அபாரமான உரையாடல் வரிகள். கிளாரிண்டாவின் கதை வரும் பகுதி மட்டும் நிகழ்காலமாக இருக்குமாறு அப்போது நான் மொழிபெயர்த்திருந்தது அந்தப் பாத்திரத்தில் என்னுடைய கடந்த காலத்தின் சாயல் படிந்திருப்பதால் கூட இருக்கலாம். இந்தக் கதைக்காகவே நான் ஆங்கிலத்தில் ஏராளமான சொற்களைப் படித்து, சரியான சொற்களைப் பொருத்தி மொழியாக்கம் செய்திருந்தேன். இதில் ஒவ்வொரு வரியையும் சொல்லிக்கொண்டே போகலாம். இந்தக் கதையை மொழியாக்கம் செய்து நாளாகி விட்டதால், மீண்டும் ஒருமுறை படித்து நான் என்னுடைய அனுபவத்தைப் பகிர்கிறேன்.

http://rendering-endeavors.blogspot.in/2012/04/at-brink-of-infinity.html

அதற்கு பிறகு நான் மொழியாக்கம் செய்த, அவதாரம் , விரல் சிறுகதைளின் வாசக மொழியாக்க அனுபவங்களை வேறொரு கடிதத்தில் விரிவாகப் பகிர்கிறேன்.

http://rendering-endeavors.blogspot.in/2012/03/avatharam.html

http://rendering-endeavors.blogspot.in/2012/02/finger.html

இது தவிர, இதுவரை நான் படித்த மாப்பசான் சிறுகதைகளில் என்னைக் கவர்ந்த இரண்டு கதைகளைத் தமிழில் மொழியாக்கம் செய்துள்ளேன்.

http://mozhipeyarppu-muyarchigal.blogspot.in/2013/01/blog-post.html

http://mozhipeyarppu-muyarchigal.blogspot.in/2011/07/blog-post.html

இதுவரையிலான மொழியாக்கங்கள் எனக்கு தேசங்களை கடந்து எல்லைகளைத் தாண்டிப் பறந்து கொண்டிருப்பது போன்ற உவகையை தந்து வருகிறது. பருமனான உடலமைப்பைக் கொண்ட ஒருவன், தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்து ஊளைச் சதையினைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்து உடலை இறுக்குவது போல, படிப்படியாக பல நேரத்தை விரயம் செய்யும். பழக்கங்களிலிருந்து விடுபட்டு வாசிப்பு, மொழியாக்கங்களுக்குள் நேரத்தை இறுக்கிக் கொண்டு இருக்கிறேன். அடுத்ததாகத் தமிழில் புனைகதைகள் எழுத ஆசை. கற்பனையில் களனையும், கதாபாத்திரங்களையும் படைத்து அழுத்தமான வருணனை, உரையாடல்கள் கொண்டு கதை எழுத இப்போதைய மனநிலையில் எனக்கு சில கால பயிற்சி தேவை.அத்தோடு மொழியுடனான எனக்கு இருக்கும் அகழி போன்ற இடைவெளியைக் குறைக்க வேண்டும். அதுவரை, எல்லாக் கதவுகளையும் சாத்திவிட்டு , என் சுயத்தை ஆழமாக ஊடுருவி என்னைக் குலைக்கும் படைப்புகளைத் தேர்ந்தெடுத்து, அது எனக்குக் கொடுக்கும் உணர்வினை இன்னொரு மொழியில் சிதைக்காமல் மாற்றும் முயற்சியில் அடுத்தடுத்தடுத்த இலக்குகளை முடிக்க வேண்டும்.

என்னை இப்போதும் ஜெயமோகன், புதுமைப்பித்தன், தல்ஸ்தோய், மாப்பசான் மட்டும் மீண்டும் மீண்டும் ஈர்க்கிறார்கள், இதனை விரிவாக்கி மற்ற எல்லா எழுத்தாளார்களையும் ஆழமாகப் படிக்க வேண்டும்.

அடுத்ததாக என்னுடைய இலக்கு உங்களுடைய சிறுகதைகளான சோற்றுக்கணக்கு, தேவதை, வழி (புவியியல் புரியாமல் பாட்டாவிற்கு நீங்கள் காட்டிய வழி),

குறுநாவல் கதைகளான பரிணாமம், டார்த்தீனியம்

ஆற்றங்கரைப் பிள்ளையார் முடிவில் காணும் கனவு போல எனக்கு சில மகத்தான கனவுகள் மீண்டும் மீண்டும் வந்து தூக்கத்தைக் கலைக்கின்றன. என்னுடைய மனதை விசாலமாக்கி மகத்தான கனவுகளை விதைத்ததற்காக உங்களுக்கு நன்றி. உங்களை நேரில் சந்தித்து நிறைய பேச ஆசை.

உங்கள் வாசகன்,

சிவமணியன்.

அன்புள்ள சிவமணியன்

உங்கள் மொழியாக்கங்கள் சிலவற்றை வாசித்தேன். மொழியாக்கம் செய்வதென்பது ஒருவகையில் படைப்பை ஆழமாக உள்வாங்குவது. அதாவது அது ஒரு நுண்வாசிப்பு. இன்னொருமொழி வழியாக ஒரு படைப்பை அணுகும்போது நாம் அந்தப்படைப்பை எல்லா கோணங்களிலும் திறந்தாக வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகிறோம். படைப்பின் எல்லைகளும் நம் எல்லைகளும் வெளிப்படும் தருணம் அது.

சிறப்பாகச் செய்திருக்கிறீர்கள். தொடர்ந்து செய்யுங்கள். அது நீண்ட வாழ்நாள் பயணமாக அமையட்டும்.

மேலான மொழியாக்கங்கள், எழுதப்படும் மொழியில் உள்ள சமகாலப் புனைவுமொழியின் மிகச்சிறந்த சாத்தியங்களைக் கொண்டிருக்கும். ஆகவே நல்ல மொழியாக்கக்காரர்கள் எந்த மொழியில் எழுதுகிறார்களோ அந்த மொழியில் சமகால இலக்கியங்களை வாசித்துக்கொண்டே இருக்கவேண்டும். அந்த மொழியில் பேசி சிந்தித்து வாழவேண்டும்.

நேரில் சந்திப்போம்

அன்புடன்

ஜெ

முந்தைய கட்டுரைநாய்களும் பூனைகளும்
அடுத்த கட்டுரைகுப்பைச்சமூகம்