கன்னிநிலம் – நாவல் : 5

காலை எட்டரைக்கு மழைவிட்டு ஒளி வந்தது. என் காயங்களை கட்டுபோட்டு டெட்டனஸ் ஊசி போட்டு ஆண்டி பயாட்டிக் சாப்பிட்டிருந்தேன். ஒரு பெக் ரம்மும். பிரமைகள் வழியாக அலைந்தபடி அரைத்தூக்கத்தில் இருந்தேன்.

மாணிக்கம் என் முன் குனிந்து பார்த்து ”மழைவிட்டுவிட்டது”என்றான்

”அண்டனா எப்படி இருக்கிறது ?’என்றபடி எழுந்தேன்.

“சரிசெய்ய மதியம் ஆகும். கீழிருந்தும் சிக்னல் ஏதும் கிடைக்கவில்லை.”

”சரி ”என்றபடி நான் எழுந்தேன்.

“நீங்கள் வேண்டுமென்றால் ஓய்வெடுக்கலாம்…”

“பரவாயில்லை” என்றபடி அவசரமாக யூனி·பாமை அணிந்துகொண்டேன்.

வெளியே களேபரமாகக் கிடந்தது. எங்கும் சருகுகள், உடைந்த பச்சை மரக்கிளைகள். காட்டிலிருந்து அவ்வளவுதூரம் அவை பறந்துவந்திருக்கின்றன. செத்த பறவைகள் இறகு விரித்து கிடந்தன.

மூன்று கூடாரங்கள் சரிந்திருந்தன .அவற்றை கட்டிக் கொண்டிருந்தார்கள்.எனக்கு காலைவணக்கம் செய்தார்கள்.

என்னால் நடக்க முடியவில்லை. என் விலாக்காயம் நன்றாகவே வலித்தது. வலியைக் காட்டிக் கொள்ளமலிருக்க சிரமப்பட்டேன். அண்டனாவை கயிறு கட்டி மீண்டும் ஏற்றிக் கொண்டிருந்தார்கள். நான் சட்டென்று விலாவில் கடுமையான வலியை உணர்ந்தேன். உடனே தீவிரமான சினம் எழுந்தது

அவள் இருந்த அறைக்குள் சென்றேன். என் வேகம் எனக்கே வியப்பாக இருந்தது

அவள் என்னைக் கண்டதும் சீறி எழுந்து கத்தியை நீட்டியபடி நின்றாள்.

”யூ பிளடி பிச்”என்று சீறினேன். சரசரவென அவளை நெருங்கினேன்.அவள் கத்தியை வீச அதை ஒருகையால் மணிக்கட்டைப்பற்றி எளிதாக தடுத்து அவளை பற்றி தூணோடு சேர்த்து அழுத்தி அவள் உதடுகளில் அழுத்தமாக முத்தமிட்டேன். அவளது கத்தி விழுந்தது

பிறகு பின்னால் நகர்ந்து குனிந்து அந்தக் கத்தியை எடுத்துக் கொண்டேன்.

” இது என்ன சப் மெஷின் கன்னா? வெறும் பொம்மை… ” என்றேன் ”நீயும் வெறும் பொம்மைதான். பொம்மையை உடைக்க நாங்கள் விரும்புவதில்லை. அதைவைத்து விளையாடுவோம் ,அவ்வளவுதான்.”

அவள் நடுநடுங்கிக் கொண்டிருந்தாள் ”நீ நேற்று என்னை ஏன் தாக்கினாய் என்று பிறகுதான் தெரிந்தது. உன்னிடம் பதில்கள் இல்லை. நான் கேட்ட கேள்விகளில் இருந்த உண்மை உன்னை கோபம்கொள்ளச் செய்கிறது”

“கோ டு ஹெல்! யூ பாஸ்டர்ட்!”

“நல்லது. நீ நான் சொன்னதை ஒப்புக் கொள்கிறாய். இனி உனக்கு தூக்கம் வராது. நீ யோசிப்பாய். குட் டே”

அவளைத் திரும்பிப் பார்க்காமல் நடந்து வெளியே சென்றேன்.

இளவெயில் விரிந்த முற்றத்தில் ஆட்களின் வேலை நடந்து கொண்டிருந்தது. என் அறைக்குத் திரும்பி கட்டிலில் படுத்துக் கொண்டேன். வலித்தது. எழுந்து இன்னொரு ரம் விட்டு குடித்தேன்.

படுத்தபடி அந்தக் கத்தியை திருப்பி திருப்பிப் பார்த்தேன். கூர்மையான கத்திதான். துருவே இல்லை. அதை தூணை நோக்கி வீசினேன். குத்தி நின்று அதிர்ந்தது. அதன் அதிர்வையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

ஜவான் உள்ளே வந்தான். ”சர்”

எழுந்தேன்

“அவர்களின் ஆள் வருகிறான்”

நான் எழுந்து பெல்ட்டை இறுக்கியபடி வெளியே சென்றேன்.

டவர் மீது நின்ற ஜவான் ”ஒற்றை ஆள்”என்றான்.

”பின்புலங்களை தொடர்ந்து கவனி” என்றேன். ”ஒரு ஆள் அதிகமாகத்தெரிந்தாலும் சுடு”

மணல்மூட்டைகளுக்கு இப்பால் குந்தி அமர்ந்து பார்த்தேன். ஒரே ஒரு வயதான மணிப்பூரிக் கிழவன் கோவேறு கழுதைமீது வந்து கொண்டிருந்தான். கையில் ஒரு வெள்ளைக்கொடி வைத்திருந்தான்.

அவன் அணுகியதும் என்னிடம் அழைத்துவரச்சொல்லிவிட்டு அலுவலக அறைக்குச் சென்றேன். அவள் கட்டிலில் தலை குனிந்து அமர்ந்திருந்தாள். கண்களிலிருந்து கண்ணீர் கொட்டிக் கொண்டிருந்தது

”உன்னைத்தேடி ஆள் வந்தாகிவிட்டது”என்றேன்.

அவள் நிமிரவில்லை

‘நீ  முக்கியமானவள் என்று எனக்குத்தெரியும். உன்னைவைத்து பேரம் பேசுவேன்” என்றேன். ”அதற்கு நீ ஒத்துழைக்காவிட்டால் உனக்கு மோசமான நாட்கள் வரப்போகின்றன….”

நான் அலுவலக அறைக்குப்போய் என் அதிகாரபூர்வ மேஜையில் அமர்ந்து கொண்டேன். வெளியே ஓசை கேட்டது. அவனை இரு ஜவான்கள் இழுத்துவந்தனர். முன்னால் வந்த நாயர் என் மேஜை மீது அவன் கொண்டுவந்த சிறிய பொட்டலத்தை வைத்தான். சௌகான் மற்றும் மூன்று ஜவான்களின் தோள் பட்டைகள். மூன்று நட்சத்திரப்பட்டை ஒன்று. என்சிஓ பட்டைகள் மூன்று.

அவனை அமரும்படிச் சொன்னேன். அவன் அமராமல் ”நான் அவளைப்பார்க்கவேண்டும்” என்றான்.

கையசைவால் அவளைக் கூட்டிவரச்சொன்னேன்.

”நீ என்ன குழு?”

” ஏ.எல்.எ·ப்” என்றான்

”எல்லா இங்க்லீஷ் எழுத்துக்களிலும் இங்கே குழுக்கள் உள்ளன.”என்றேன் நக்கலாக ”என்ன இனக்குழு?”

“அங்கமி”

“முழுப்பெயர் நான் சொல்லவா? அங்கமி லிபரேஷன் ·ப்ராண்ட். அங்கமிகளுக்கு தனி நாடு வேண்டும். பாதி நாடு பர்மாவில் மீதி மணிப்பூரில்…”

அவன் என்னை உதாசீனம் செய்தபடி ”அவளை நான் பார்க்கவேண்டும்” என்றான்

நான் நாயரை நோக்கி தலையசைத்தேன்.

நாயரின் பின்னால் அவள் நிமிர்ந்த தலையுடன் வந்தாள். அவளைக் கண்டதும் கிழவனின் கண்களில் ஒருகணம் பணிவு வந்து மறைவதைக் கண்டேன்.

”ம் ”என்றேன் கொண்டுசெல்லும்படி.

நாயர் அவளிடம் ” கம்” என்றான். அவள் திரும்பிச்சென்றாள்.

“அவளை நாங்கள் இருபத்திநான்குமணிநேரத்தில் கொல்வோம்” என்றேன். ”அதற்குள் எங்கள் காப்டனும் மூன்று ஜவான்களும் இங்கே வந்துசேர்ந்தால் அவளை நீங்கள் மீட்கலாம்”

“அவள் ஒரு சாதாரணமான தூதுப்பெண்…. எங்களிடம் இருப்பது ஒரு காப்டன் ”என்றான் கிழவன்

“அவள் யாரென்று எனக்குத்தெரியும்…அவளிடம் கேட்டு தெரிந்துகொண்டோம்….”அவன் கண்களையே பார்த்தேன். ” அவள் யார் என்று தெரியும்”

“அவள் ஒரு விவசாயப்பெண்…” அவன் கண்கள் பழுத்த இலைபோலிருந்தன.

“அதை எங்கள் ராணுவ உளவுத்துறை முடிவுசெய்யட்டும்…”

அவன் எழுந்தான் ”நீங்கள் சிறிய படை. உங்கள் சிக்னல் சிஸ்டம் வேலைசெய்யவில்லை. அண்டனா உடைந்து கிடக்கிறது. நாங்கள் உங்களைச் சூழ்ந்திருக்கிறோம்…”என்றான்

“எங்களிடம் இவள் இருக்கிறாள்…”

“இவளை நீங்கள் கொன்றால் எவரும் தப்ப முடியாது”

“பரவாயில்லை. பார்ப்போம்”

அவன் பெருமூச்சு விட்டான்.”நான் போய் பேசிப்பார்க்கிறேன். முடிவை இரண்டுநாட்களுக்குள் தெரிவிக்கிறோம்”

“இரண்டுநாள் அவகாசம் தரமுடியாது… உங்களிடமுள்ள எங்கள் காப்டன் காயம்பட்டிருக்கிறார். மதியம் தகவல் தெரிந்தாக வேண்டும். இரவே காப்டன் இங்கே வந்தாகவேண்டும்”

“நான் பேசிவிட்டுவர ஒருநாளாவது ஆகும்”

“இதோபார் எங்கள் சிக்னல் சிஸ்டம் சரியாவதற்குள் நீ வந்துவிடுவாய். நான் செய்திசொல்லி ஆட்களை வராழைப்பதை நீங்கள் விரும்பமாட்டீர்கள்.  பிறகு எதற்கு இந்த வித்தை எல்லாம்?”

அவன் ஒருகணம் பேசாமல் நின்றான் .பிறகு ”சரி…”என்றான்

அவன் போவதை நானே பின் தொடர்ந்து சென்று நோக்கி நின்றேன்.

பிறகு என் அறைக்குச் சென்றேன். நாயரை அங்கு வரவழைத்தேன்.

“நாயர் அவர்கள் நம்மைச் சூழ்ந்திருப்பார்களா என்ன?”

“கண்டிப்பாக இல்லை. அவர்கள் அதிகம்பேர் இல்லை. எங்கிருந்தோ ஆட்கள் வந்துசேரக் காத்திருக்கிறார்கள்.அவன் இரண்டு நாள் அவகாசம் கேட்டது அதற்காகத்தான்.”

நானும் அதை ஊகித்திருந்தேன்.

”இன்று மதியம் அவன் என்ன சேதி கொண்டுவருவான்?”

“அனேகமாக இன்று அவன் நம்மை அலைக்கழித்து நேரம் சம்பாதிக்க முயல்வான். நாளை விடிகாலையில் நம்மைச் சூழ்ந்துகொள்வார்கள். அதன்பின்னர்தான் உண்மையான பேரம் ஆரம்பமாகும்.”

“ஆமாம்”என்றேன். ”அதற்குள் இன்றிரவே நீயும் நான்குபேரும் காட்டுக்குள் போய் முடிந்தவரை கண்ணிவெடிகளை புதைத்து வந்தால் நல்லது”

“போரிடப் போகிறோமா?”

“தெரியவில்லை. எந்த தொடர்பும் இல்லை. ஏதாவது செய்திவரும்வரை தாக்குப்பிடிக்கவேண்டுமே”

நாயர் பெருமூச்செறிந்தான். ”இந்தப்பெண் ஒரு தூண்டிலில் வைக்கப்பட்ட இரையாகக் கூட இருக்கலாம்.யார் கண்டது?”

மதியம் அண்டனா சரிசெய்யப்பட்டது. மாணிக்கம் அலைவரிசைகளை மாற்றி மாற்றி துழாவினான். அதற்கேற்ப அண்டனாவை மாற்றி மாற்றி வைத்தார்கள். திரை அலையடித்தது. இரைச்சல் மட்டுமே எஞ்சியது.

மாணிக்கம் பின்னால் சரிந்தபடி ”அங்கே இன்னும் சரியாகவில்லை. ஷிட். நாடா இது? காடு, மலை, கடல் ….இருப்பது இதேபோன்ற துருப்பிடித்த பாடாவதி கருவிகள்…ஷிட்”ஆங்கிலப் படங்களைப் பார்த்துக் கற்றுக்கொண்ட அந்தச் சொல் அவன் வாயில் உதிர்ந்துகொண்டே இருக்கிறது. அவ்வாறான உதிரி ஆங்கிலம் மூலம் தங்களை புரஃபஷனல்களாக எண்ணிக்கொள்வது தரைபப்டையில் ஒரு இனிய பிரமை.

நான் ”முயற்சி செய்….மனம் தளராமல் முயற்சிசெய்” என்றேன்.

அப்போது மீண்டும் செய்திவந்தது.அதே கிழவன். அவனைக் கூட்டிவந்து என் முன் நிறுத்தினார்கள்

“சொல்லு” என்றேன்

“அவளை நீங்கள் தாரளமாகக் கொல்லலாம்.”என்றான். ”காப்டனை விட முடியாது. வேண்டுமென்றால் மூன்று ஜவான்களை மட்டும் விடுவார்கள்”

“இதுதான் செய்தியா?”

“இப்படித்தான் எனக்குச் சொல்லப்பட்டது”

” சரி ,காப்டனை விடவேண்டுமென்றால் என்ன செய்யவேண்டும்?”

“ஆயுதங்கள்தான் அவருக்கு பிணை. நீங்கள் உங்கள் ஆயுதங்களையும் வெடிப்பொருட்களையும் அப்படியே விட்டுவிட்டு பின்னகர்ந்து கீழிறங்கி படகுத்துறையை அடைய அனுமதிப்போம். காப்டனையும் திருப்பி அளிப்போம்”

“ஆயுதங்களை நாங்கள் விடமுடியாது”

“காப்டனை நாங்கள் கொல்லவேண்டியிருக்கும். உங்களையும் தாக்குவோம். பாதிப்பேர் கண்டிப்பாக சாவீர்கள். உங்களுக்கு வேறுவழி இல்லை”

” இல்லை ,அது முடியாது. காப்டனுக்குப் பதில் இந்தப்பெண். அவ்வளவுதான். போய்ச் சொல்லு ”

“சரி” என்றான் கிழவன்

“நாங்கள் நாளை மதியம் வரை காப்போம். மதியம் ஒருமணிக்கு இவளைக் கொல்வோம். இவள் முக்கியமானவள் என்று எங்களுக்கு உறுதியாகவே தெரியும். உங்கள் தலைவர்கள் இவளை இழக்க விரும்ப மாட்டார்கள்” நான் திடமாகச் சொன்னேன்”இதுதான் செய்தி”

”சரி.நான் பேசிப்பார்க்கிறேன்”என்றான் கிழவன்

அவனை அனுப்பிவைத்தபின் நான் ஆயுதங்களை சரி பார்த்தேன். மணல் மூட்டைகளுக்குப் பின் இயந்திரத்துப்பாக்கிகளை அமைத்தேன்.

இரவு நெருங்கியது. காட்டின் ஓலம் மாறுபட்டது. செர்ச் விளக்குகள் எரியத் தொடங்கின. முகாம் விழிப்புடன் இருந்தது.

நாயர் சீருடையில் எட்டு ஜவான்களுடன் வந்தான். அவர்கள் அனைவரும் கண்ணிவெடிகளை சுமந்திருந்தார்கள். வாக்கிடாக்கி வைத்திருந்தார்கள். நான் அவர்களை பரிசோதித்தேன்.

”செர்ச் லைட் அரைமணிநேரம் வடக்குப்பக்கமாக  அடிக்காமல் இருக்கச் சொல்லியிருக்கிறோம். இருட்டிலேயே போய்விடுங்கள். காட்டில் வழி தெரியும் இடத்தில் கண்ணிவெடிகளை வைக்க வேண்டாம். முதல் குண்டு வெடித்தபிறகு அவர்கள் வழிகளில் நடக்க மாட்டார்கள். புதர்களை ஒட்டி ஒரு கைதூரத்தில் புதையுங்கள். புதர்களைப் பிடிக்காமல் இருட்டில் நடக்க முடியாது”என்றேன்

” எஸ் சார்”என்றான் நாயர்

அவர்கள் கிளம்பிய பின் நான் மீண்டும் ஒரு ரம் ஊற்றி குடித்தேன். களைப்புடன் நாற்காலியில் அமர்ந்தே கண்மூடினேன்.

ஆடர்லி சாப்பாடு கொண்டுவந்தான். சப்பாத்தி உலர்ந்த இறைச்சிக்கறி.

சாப்பிடும் முன் அவனிடம்” அந்தப்பெண் சாப்பிட்டாளா?”என்றேன்

” காலை முதல் ஒன்றும் சாப்பிடவில்லை”

”ஏன்?”

“அழுகிறாள்”

நான் பேசாமல் இருந்தேன். சப்ராசி போனபின் சப்பாத்தியை கிழித்து வாயில் வைத்தேன். சாப்பிட முடியவில்லை.

பின்பு எழுந்து அவள் அறைக்குச்சென்றேன். அவள் அப்படியே கட்டிலில் அமர்ந்திருந்தாள். என்னைக்கண்டதும் ஒருமுறை ஏறிட்டு நோக்கிவிட்டு தலைகுனிந்தாள். அழுது வீங்கிய முகம். உப்பிய கன்னங்கள்.

“ஏன் சாப்பிடவில்லை?” என் குரல் தணிந்திருந்தது.

அவள் பதிலிறுக்கவில்லை.

”விளையாடுகிறாயா? பட்டினி கிடந்து சாக நினைப்பா? நீ செத்தால் எங்களுக்கு ஒன்றுமில்லை…இது போர். போரில் யார் செத்தாலும் ஒன்றுதான்… ”சாப்பட்டை எடுத்து அவள் முன் வைத்து ”சாப்பிடு”என்றேன்

அவள் அசையவில்லை

“எப்படியும் உன்னை நாளை மதியம் கொல்லத்தான் போகிறோம்… சாப்பிட்டுவிட்டு செத்துப்போ…”

அவள் இமைகூட அசையவில்லை

“சாப்பிடு.கிறாய இல்லையா? ..யூ” நான் கையை ஓங்கினேன். அவள் என்னை ஏறிட்டுப்பார்த்தாள்.என் கை அந்தரத்தில் நின்றது. நான் மெல்ல தணிந்தேன் .”என்ன பிரச்சினை உனக்கு ?”

அவள் உதடுகளை கடித்துக் கொண்டாள்.

“உன் கத்தி வேண்டுமா?”

அதை அவளருகே வைத்தேன். ”இதோ…. நீ கோபத்தில் அபத்தமாக ஏதாவது செய்துகொள்வாய் என்றுதான்…”

அவள் உதடுகளை அழுத்திக் கொண்டாள். ஒரு துளி கண்ணீர் கன்னங்களில் வழிந்தது

நான் இளகினேன்” ஸாரி…நான் செய்தது அசிங்கம். உண்மையாகவே வருத்தமாக இருக்கிற்து. மன்னித்துவிடு…”

அவள் என்னை ஏறிட்டு பார்த்தாள்

“ஸாரி… ரொம்ப வலித்தது…  அதுதான்… ” என்னால் அவளை ஏறிட்டுப்பார்க்க முடியவில்லை. ” ஸாரி…. ஆண் என்கிற திமிரில் அடிவிழுந்தபோதுதான் இன்னும் வலித்த்து… ப்ளீஸ்…அது ஒரு கீழ்த்தரமான செயல்தான். ஸாரி”

“நீ ஒரு மிருகம். இந்திய நாய்…. நக்குகிற நாய் ” அவள் சட்டென்று கிரீச்சிட்ட குரலில் சீறி ஓங்கித் துப்பினாள்.

நான் தலைகுனிந்து திரும்பினேன். வெளியே வந்ததும் பூட்ஸ¤களால் தரையை உதைத்தேன். என் அறைக்குப் போய் சாப்பாடு முன் அமர்ந்தேன். சட்டென்று தலையை கையால் அறைந்து கொண்டேன்.சாப்பிடாமல் எழுந்து போய் கட்டிலில் படுத்துக் கொண்டேன்.

[மேலும்]

முந்தைய கட்டுரைமுரளி
அடுத்த கட்டுரைவிஐ: கடிதங்கள்