சிவகாமியின் நாவல் பற்றி…

அன்புள்ள ஜெ,

உயிர்மை வெளியிட்ட சிவகாமியின் உண்மைக்கு முன்னும்பின்னும்’ நாவல் வெளியீட்டுவிழாவில் நீங்கள் பேசியதைக் கேட்டேன். அந்த விழாவில் நீங்கள் அந்நூலை வெளியிட்டு மிகவும் ஒருபக்கச்சார்பாக பேசினீர்கள். அந்நூலை மிகவும் புகழ்ந்து மிகமுக்கியமான இலக்கியப்படைப்பு என்று சொன்னீர்கள். அந்த நாவலை நான் வாசித்தேன். நேரடியனுபவங்களை வேறு பெயரில் எழுதியிருக்கக்கூடிய ஒரு சாதாரண நூல் என்றுதான் நான் நினைக்கிறேன். நீங்கள் அதை முக்கியமான நாவல் என்று அன்று பாராட்டியது மிகையானது என்று நினைக்கிறேன். தவறாக இருந்தால் மன்னியுங்கள்

சரவணக்குமார்

அன்புள்ள சரவணக்குமார்,

என்னுடைய உரை முழுமையாகவே என் தளத்தில் பிரசுரமாகியிருக்கிறது. அந்த உரையில் நான் அந்நூலைப் பாராட்டி, எனக்கு அது ஏன் பிடித்திருக்கிறது என்றுதான் பேசினேன். பிடித்திருக்காவிட்டால் பேச வந்திருக்கமாட்டேன்.

இத்தகைய வெளியீட்டுவிழா உரைகளில் என் உரை ஒரு குறிப்பிட்ட வகையில் அமையவேண்டும் என்பதை நான் வகுத்துக்கொண்டிருக்கிறேன்.

ஒன்று, அந்த நூலை நான் வாசித்தமுறையை முன்வைக்கவேண்டும். ஒரு விமர்சகனாக அந்நூலை வாசிப்பதற்கான சிறந்த வழியை அதன் வழியாகக் குறிப்பிட்டுக்காட்டவேண்டும். சிவகாமியின் நாவலை வாசிப்பதற்கான முறையையே அந்த உரையில் முதன்மையாகச் சுட்டிக்காட்டினேன். அது மிக எளிதாக ஒரு கிசுகிசுநாவலாக வாசிக்கப்படும் அபாயம் கொண்டது. ஒரு நல்ல இலக்கிய வாசகன் அந்நாவலை அந்தக் கிசுகிசுத்தன்மையை முழுமையாகவே புறக்கணித்து அது தன் கையில் கிடைத்த ஒரு புனைவு என்று எண்ணிப் புனைவின் விதிகள் மற்றும் சாத்தியங்கள் வழியாகவே வாசிக்கவேண்டும். அப்போதுதான் அந்நூலுக்கு சரியான நியாயம் செய்தவனாவான் என்பதே நான் அன்று அழுத்திச் சொன்னது

இரண்டு, அந்நாவல் தன்வரலாற்றுநாவல் என்ற வகைமையைச் சார்ந்தது. ஆகவே அதில் கட்டற்ற கற்பனைக்கோ தீவிரங்களுக்கோ இடமில்லை. அது எந்த அளவுக்கு நேர்மையானது என்பதே முக்கியமானது. புனைகதை என்பதனால் அது நேர்மையானது என்பதற்குப் புறஆதாரங்கள் தேவை இல்லை.அந்நாவலை வாசிக்கும்போது வாசகனாக நாம் அதன் நேர்மையை அந்தரங்கமாக உணரமுடிந்தாலே போதும். அத்தகைய நம்பிக்கை எனக்கு உருவானது. ஆகவே அது எனக்குப்பிடித்தமானதாக இருந்தது என்று சொன்னேன்

மூன்று, அந்நாவலின் இலக்கிய முக்கியத்துவம் அது காட்டும் இரண்டு அம்சங்களால் ஆனது என்பது என் மதிப்பீடு. ஒன்று அது அதிகாரவர்க்கம் செயல்படும் விதத்தை நுட்பமாக சித்தரித்துக்காட்டுகிறது. அதன் உள்ளடுக்குகளையும் ஊடுபாவுகளையும் நாம் நம் அனுபவம்போல காணச்செய்கிறது. இரண்டு அதிகார அரசியலின் நேர் எல்லையில் ஒரு பெரும் இலட்சியவாதத்தை சுட்டிக்காட்டி நிற்கிறது. இவ்விரு கூறுகளாலும் அது முக்கியமான நாவல் என்பதே நான் அன்று தெளிவாகச் சொன்னது.

இவை என்னுடைய சாதகமான மதிப்பீடுகள். வடிவம்சார்ந்தும் மொழிசார்ந்தும் அந்நாவலைப்பற்றிய எதிர்மறை விமர்சனங்கள் உண்டு. அவற்றை அன்று ஆசிரியயையிடம் நேரிலும் தெரிவித்தேன். ஆனால் நூல்வெளியீட்டுவிழாக்களில் ஒருபோதும் எதிர்மறைக்கூறுகளை முக்கியமாகக் குறிப்பிடக்கூடாதென்பது என் முடிவு. ஏனென்றால் அந்நூல் அப்போதுதான் வெளிவந்திருக்கிறது. அந்த அவையில் பெரும்பாலானவர்கள் அதை இன்னமும் வாசித்திருக்கவில்லை. அவர்களிடம் எதிர்மறை மதிப்பீடுகளை செலுத்துவது நாவலுக்கும் அதன் ஆசிரியருக்கும் செய்யும் தீங்கே

நமக்கு ஒரு நூல் பிடித்திருந்தால் மட்டுமே அதை வெளியிட்டுப்பேச முன்வரவேண்டும். அதில் அந்நாவலை வாசகர்கள் சிறப்பான முறையில் வாசித்து உள்வாங்குவதற்கான முறையைப்பற்றி மட்டுமே பேசவேண்டும் என்பது என் கொள்கை. அவ்வகையிலேயே சிவகாமியின் நாவல் பற்றி என் உரை அமைந்திருந்தது.

நாவலின் விமர்சனக்கூட்டம் என்றால் அங்கே நாவலைப்பற்றிக் கறாராகவே விமர்சிக்கலாம். விமர்சனங்களில் நூலின் சாதக அம்சங்களையும் பாதக அம்சங்களையும் விரிவாகவே அளித்துப் பேசவேண்டும் என்பதே என் கொள்கை. என்னுடைய விமர்சனங்களில் அதை நீங்கள் காணலாம்

என்னுடைய உரையில் நான் சொன்ன அணுகுமுறைப்படி நீங்கள் வாசிக்கவில்லை என்று தெரிகிறது. அதை நீங்கள் வாழ்க்கைவரலாற்றின் ஒருவடிவமாக மட்டுமே வாசித்திருக்கிறீர்கள். அப்படியென்றால் உங்கள் சொந்த முடிவுகளுக்கு நீங்கள் வரலாம். அந்த வாசிப்பை நான் பரிந்துரைக்கவில்லை, அந்த முடிவுக்கு நான் பொறுப்பும் இல்லை.

ஜெ

மாபெரும் இயந்திரம்

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம்-கடிதம்
அடுத்த கட்டுரைகதைகள் நிராகரிக்கப்படுவது பற்றி…