பிள்ளையின் பெயரும் தந்தையின் கொள்கையும்

அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய ஜெயமோகன் அவர்களுக்கு

உங்கள் இணையதளக் கடலில் தினந்தோறும் நீச்சல் பழகும் மாணவன் நான். அது தரும் அனுபவமும் எனக்குள் நிகழ்த்தும் மாற்றங்களும் சொல்லில் வெளிப்படுத்தமுடியாத உன்னதமிக்கவை. மனது சலிப்புற்று சோர்வுறும் போதெல்லாம் உயிர்தளிர்ப்பச் செய்யும் மாயம் கொண்டது உங்கள் கதைகளும் கட்டுரைகளும் உரைகளும். (மிகக் குறிப்பாக அந்தக் குறுந்தொகை உரை). உங்கள் பெருங்கருணைக்கு மிக்க நன்றி.

உங்களிடம் ஒரு விஷயத்தைப் பகிர்ந்து தெளிவு பெறவே இதை எழுதுகிறேன் (நீண்ட யோசனைக்குப் பிறகும் ஒருவித தயக்கத்துடனேயே). தொந்தரவுக்கு மன்னிக்கவும்.

சமீபத்தில் ஒரு ஆண் குழந்தைக்குத் தந்தையாகியுள்ளேன். தமிழ் மீது கொண்ட காதலாலும் ஆர்வத்தாலும் குழந்தைக்குத் தமிழ்ப் பெயர் சூட்டும்படி வீட்டுப் பெரியவர்களிடம் கேட்டுக் கொண்டேன். அவர்கள் பரிந்துரைத்த பெயர்களில் (ராஹூல், ரோஹன், ஸ்வதேஷ், சுதீப், சுனில்) சிறிதும் விருப்பமில்லாதலால் நானே (இணையத்தில் தேடி) குழந்தைக்கு செந்தமிழ்ப்பாரி என்று சூட்டிவிட்டேன். ஆனால் இந்தப் பெயரில் யாதொருவர்க்கும் உடன்பாடில்லை என் மனைவியுட்பட. பெயர் நவநாகரிகத் தன்மையற்று பிறர் உச்சரிப்பதற்கும் ஆரம்பக் பள்ளிக்கல்வியின் போது குழந்தை எழுதுதற்குக் கடினமாக இருக்குமென்றும் , மேலும் குழந்தை பெரியவனானதும் இப்படியொரு பெயரை வைத்ததற்கு என்னிடம் சண்டையிடுவான் என்பதுமே அனைவரது (சிற்சில நண்பர்களை தவிர்த்து) அதிருப்தியும் எதிர்ப்புமாக இருந்தது. அப்படியவன் சண்டையிட்டால் அவன் விரும்பும் பெயரையே வைத்துக் கொள்ள நானே அனைத்து ஏற்பாடுகளையும் செய்வதாகச் சொல்லி நான் தேர்ந்தெடுத்த பெயரிலேயே பிறப்புச் சான்றிதழைப் பெற்று விட்டேன்.

குழந்தை பிறந்து மூன்று மாதங்களாகியும் அந்தப் பெயர் மீதான அதிருப்தி விமர்சனங்கள் குழந்தையைக் காண வரும் உறவினர்களாலும் நண்பர்களாலும் தொடர்ந்தபடியே உள்ளது மிகுந்த எரிச்சலூட்டுவதாக இருக்கிறது. என்ன செய்வதென்றே புரியவில்லை. ஒருக்கால் எல்லோரும் சொல்வது போல நாளை அவனுக்கும் அப்பெயர் பிடிக்காது போய்விட்டால் ஒரு பெரும் பழிக்கு ஆளாவேனோ என்ற ஒரு மெல்லிய பயத்தினூடே என் நாட்களைக் கடத்திக் கொண்டிருக்கிறேன்.

பொதுவாகப் பிள்ளைகளுக்குப் பெயர் சூட்டும் போது பெற்றோர்கள் தற்போது எதன் அடிப்படையில் பெயரிடவேண்டும்? அப்பெயரைத் தன் வாழ்நாள் முழுக்கச் சுமக்கப் போகும் பிள்ளைகளை எந்த எல்லை வரை கருத்தில் கொண்டு பெயர் வைப்பது? பின்பற்ற வேண்டியதென ஏதாவது முறைகள் இருக்கின்றனவா? முன்னம் இருந்தனவா? உங்களிடம் கேட்பதால் இது பற்றி ஒரு பாதாதிகேச புரிதலைப் பெற முடியும் என்ற நம்பிக்கையில் கேட்டுவிட்டேன்.

மிக்க அன்புடன்
மணிமாறன்.

அன்புள்ள மணிமாறன் அவர்களுக்கு,

அன்றாட வாழ்க்கையின் பெரும்பாலான தளங்களில் இயல்பான வாழ்க்கைமுறையையும் உறுத்தாத நடைமுறைநோக்கையும் மட்டுமே நான் முன்வைப்பேன். என் வாழ்க்கையும் அப்படித்தான். நான் என்னை எங்கும் காட்டிக்கொள்வதில்லை. நான் வேலைசெய்த இடத்திலும் சரி, வாழும் இடத்திலும் சரி நான் அந்தந்த தளத்தில் யாரோ அதற்குமேல் நான் வெளிப்பட்டதில்லை. பார்வதிபுரத்தில் நீங்கள் என்னை ஓய்வுபெற்ற தொலைபேசி ஊழியராக மட்டுமே இன்று விசாரிக்கமுடியும்.

இலட்சியவாதம், தத்துவநோக்கு சார்ந்த கனவுகள் அவற்றுக்கு முக்கியத்துவமுள்ள இடங்களிலும் தருணங்களிலும் மட்டுமே வெளிப்படவேண்டும். அப்போதுதான் அவை உண்மையான மதிப்புடன் இருக்கும்.சந்தையில் சங்கீதம் பாடக்கூடாது என மலையாளத்தில் ஒரு பழமொழி உண்டு. பாடினால் என்ன ஆகுமென்று பல கல்யாணக்கச்சேரிகளைக் கண்டு புரிந்துகொண்டிருக்கிறேன். நம்மைச்சுற்றி உலகியல் வாழ்க்கை அதன் நடைமுறை விதிகளின்படி இயங்கிக்கொண்டிருக்கிறது. அதில் நாம் இருக்கையில் அதன் விதிகளின்படி செயல்படுவதே மேல்.

அந்த விதிகளை நாம் மறுக்கிறோம் மீறுகிறோம் என்றால் நமக்கு அதுசார்ந்த தெளிவான இலக்குகளும் அதன் விளைவுகளைப்பற்றிய அறிதல்களும் தேவை. ஒரு திட்டவட்டமான சமூகப்போராட்டமாக மட்டுமே அதைச் செய்யமுடியும். காந்தி எளிய விவசாயியின் உடையை அணிந்தது போல. நம்மாழ்வார் சட்டை இல்லாமல் இருப்பது போல

ஆகவே நன் தனியானவன் என்று காட்டிக்கொள்ளும் எந்த முயற்சியும் சற்று முதிரா இயல்புள்ளது மட்டுமே. இளமையில் நாம் நம்பும் இலட்சியவாதமும் தத்துவநோக்கும் எல்லாமே நம்மை ஒரு குறிப்பிட்டவகையில் உருவாக்கி சமூகத்தின் முன்னால் காட்டிக்கொள்ளவே நமக்குத் தேவைப்படுகின்றன. அந்த வயதில் ஒருவன் கவிஞனாக ஆவது கவிதைக்காக அல்ல. புரட்சியாளனாக ஆவது புரட்சிக்காக அல்ல. கலகக்காரனாகத் தோன்றுவது கலகத்துக்காக அல்ல. தன்னுடைய சுயத்துக்காக மட்டுமே.

ஆகவேதான் இளைஞர்கள் தங்கள் காலகட்டத்தில் மிக அழுத்தமான பிம்பங்களில் இருந்து தங்களுக்குரியதைத் தேர்வுசெய்துகொள்கிறார்கள். சேகுவேரா என்கிறார்கள். பாப் மார்லி என்கிறார்கள். பிரபாகரன் என்கிறார்கள். அந்த பிம்பம் அவர்களுடைய சுயத்தின் போதாமையை முழுக்க மறைத்துவிடுகிறது.

என்னுடைய இளமைப்பருவத்தில் அதிநவீனம்,தமிழினப்பற்று,இடதுசாரிப் புரட்சிகரம் என மூன்று பிரபல வேடங்கள் இருந்தன. முடியை நீளமாக வளர்த்துக்கொள்வதும் பாப்மார்லியோ போனிஎம்மோ கேட்பதும் முதல் அடையாளம். தூயதமிழில் பேசுவதும் வேட்டிசட்டை அணிவதும் இரண்டாவதற்கு அடையாளம். கலைந்த தலையும் தாடியுமாக எதற்கெடுத்தாலும் கலைச்சொற்களைப்போட்டு விவாதம்புரிவது மூன்றாவதற்கு.

இந்த அடையாளங்களில் இருந்து மெல்ல வெளிவந்து நாம் நம்மைக் கண்டுகொள்கிறோம். நம்முடைய இயல்பை. இந்த வாழ்க்கையில் நாம் செய்யக்கூடிய சிலவற்றை. அதன்மூலம் நாம் இந்த வாழ்க்கைக்கு அளிக்கச்சாத்தியமான பங்களிப்பை. அந்த உணர்வை அடைந்தபின் நாம் ‘நாலுபேருக்கு முன்னால் நம்மைக் காட்டிக்கொள்வது’ பற்றி சிந்திப்பதில்லை. நம்முடைய பணியில் நாம் அடையும் நிறைவும் மகிழ்ச்சியும்தான் நமக்கு முக்கியமாக இருக்கிறது. அதன் வழியாக ஒருகட்டத்தில் நாம் நம்முடைய சுய அடையாளத்தைக் கண்டுகொள்ளவும் கூடும்

அந்நிலையில் நாம் யாரோ அதுவாக நாம் இருக்கிறோம். நம்மைப்பற்றி நாம் சொல்லிக்கொள்ளவேண்டிய ஏதுமில்லை. அல்லது, நாம் நம் இருத்தல் வழியாகச் சொல்லிக்கொண்டிருப்பதெல்லாம் நம்மைப்பற்றித்தான். ஆனால் இளமைப்பருவத்தில் நாம் நம்முடைய அடையாளத்தை நமக்கு மேல் அணிந்துகொண்டிருக்கையில் அந்த அடையாளத்தை நாம் பிரகடனம் செய்துகொண்டே இருக்கவேண்டியிருக்கிறது.அதனால்தான் விவாதங்களில் உச்சகட்ட வேகத்தைக் காட்டுகிறோம். நம் சொற்களும் செய்கைகளும் கூச்சலிடுகின்றன

இந்த வயதில்தான் நம்மில் பெரும்பாலானவர்கள் புனைபெயர் சூட்டிக்கொள்கிறார்கள். அவை அவர்களின் பிரகடனமாக இருக்கும். தனியான நடைஉடைபாவனைகளை வளர்த்துக்கொள்பவர்கள் உண்டு. அவற்றின் ஒரு பகுதியாகத்தான் நாம் குழந்தைகளுக்குப் பெயரும் போடுகிறோம். அந்தப்பெயரும் நம்முடைய பிரகடனமாக இருக்க வேண்டுமென நினைக்கிறோம். அதை இளமையின் ஓர் வேகம் என்றே நினைக்கிறேன்

பெயர் என்பது ஓர் ஒலிக்குறிப்பு மட்டுமே. அது எதைக்குறிக்குமோ அதன் அடையாளத்தைக் காலப்போக்கில் அது பெற்றுவிடும். மம்மூட்டி என்றால் மிக கிராமத்தனமான முஸ்லீம்பெயர். அது இன்று நவீனத்தோற்றமுள்ள ஒரு நடிகரைக் குறிக்கிறது. நம் குழந்தைகளுக்கு நாம் என்ன பெயர் போட்டாலும் காலப்போக்கில் அவர்களுக்கென உருவாகி வரும் ஆளுமையின் அடையாளமே அந்தப்பெயருக்கு இருக்கும். அந்தப்பெயருக்கு நாம் என்னென்ன அர்த்தங்களை உத்தேசித்தோம் என்பதை எவரும் அறியமாட்டார்கள். நாமே கூட கொஞ்சகாலத்தில் மறந்துவிடுவோம்

ஆகவே குழந்தைகளுக்குக் கொள்கைகளையோ நம்பிக்கைகளையோ பெயராக இடுவதில் பொருளே இல்லை.பெயர்போடுவதில் மிதமிஞ்சி நம்முடைய திட்டங்களைத் திணிக்கவேண்டியதில்லை. பலசமயம் நம்முடைய முதிராத அகங்காரத்தின் விளைவாகவே அப்படிப் பெயர்போட நாம் முயல்கிறோம் என உணந்தால்போதும்

அப்படியென்றால் எந்தப் பெயரை வேண்டுமென்றாலும் போடலாமா? போடக்கூடாது. பெயரென்பது சமூக அடையாளம். சமூகம் அந்தப்பெயர் வழியாக அடையும் மனப்பிம்பம் முக்கியமானது. மிகவிசித்திரமான மிகச்சிக்கலான பெயர்கள் இயல்புக்கு மாறான சமூக எதிர்வினையை உருவாக்குகின்றன. குழந்தைகள் அந்தப்பெயராலேயே எங்கும் தனித்துவிடப்படுகின்றன. அந்தப்பெயரின் காரணமாக ஓவ்வொருமுறையும் வேறாக அடையாளம் காணப்படுகின்றன. காலப்போக்கில் அப்பெயர் அவர்களுக்கு சுமையாக ஆகின்றது. அதை அவர்கள் வெறுக்கவும் ஆரம்பிக்கலாம்.

அதற்கு மிகமுக்கியமான ஒரு காரணம் உள்ளது. இதை நம்மில் பலர் கவனித்தே இருக்க மாட்டோம். குழந்தைகள் தங்கள்சமூகத்தில் இருந்து பிரிந்து தனியாக இருக்க விரும்புவதில்லை. அனைவருடனும் இணையவே அவை ஆசைப்படுகின்றன. திரளில் ஒன்றாகக் கலப்பதையே பேரானந்தமாக எண்ணுகின்றன. குழந்தை தேடுவது சமூகத்தில் தனக்கான கச்சிதமான ஓர் இடத்தை

ஆகவேதான் ‘ஆட்டத்துக்குச் சேத்துக்கொள்ளாமல் விடப்படுவதை’ குழந்தைகள் மிகமிக அஞ்சுகின்றன. குழந்தையின் பெரும் துயரமே தன்னையொத்த பிறகுழந்தைகளால் விலக்கப்படுவதுதான்.

இதன் மறுபக்கமாக, குழந்தைகள் தங்கள் பொதுவான இயல்புக்கு மாறாக ஒரு குழந்தை இருந்தால் அதை மிக அதிகமாக கவனிக்கின்றன.அவனுடைய வேறுபாட்டை நிராகரிக்கவோ அழிக்கவோ முயல்கின்றன. குழந்தைகளின் உலகில் கொஞ்சம் வேறுபட்ட ஒரு குழந்தை கிண்டலுக்கும் கேலிக்கும் தாக்குதலுக்கும் உள்ளாவது இதனால்தான். ஒருவேளை இதுதான் மனிதனின் அடிப்படை இயல்பாக இருக்கக்கூடும்– மந்தையாதல்.

குழந்தை தன்னை தான் என உணர ஆரம்பிப்பது இளமையில். அந்த இளமையில் இருவகைப் பண்புகள் வெளிப்படுகின்றன. பெரும்பான்மையினர் ‘எல்லாரையும்போல’ இருக்க விரும்புகின்றார்கள். ‘ஃபேஷன்’ என அடையாளம் காணப்பட்ட உடைகளை அணிகிறார்கள். ‘ஹிட்’ பாட்டுகளைக் கேட்கிறார்கள்.‘சூப்பர் ஸ்டார்களை’ வழிபடுகிறார்கள்.‘சக்ஸசு’க்கான வழிகளில் செல்கிறார்கள். ஒரே ’கலைச்சொற்’களால் ’கலாய்’க்கிறார்கள்.

மிகசிறுபான்மையினரான சிலர் தனித்துநிற்க விரும்புகிறார்கள். நான் வேறு என்று உணர்கிறார்கள். அவர்கள்தான் இளமையில் தனியடையாளம் தேடுபவர்கள்.

இப்படி தனியடையாளம் தேடுபவர்களே அரசியலில் இலக்கியத்தில் கலையில் எல்லாம் தங்களைக் கண்டுகொள்பவர்கள். அவர்கள் அவ்வாறு உருவாக்கிக்கொண்ட சுயஅடையாளம் சார்ந்த ஒரு பெயரைத் தன் குழந்தைகளுக்குச் சூட்டி விடுகிறார்கள். தங்கள் குழந்தை தனித்துத் தெரியவேண்டும், அதன் பெயர் எங்கும் விலகி ஒலிக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள்.

ஆனால் குழந்தை அது குழந்தையாக இருப்பதனாலேயே தனியடையாளம் இல்லாமல் திரளில் கரைய விரும்புகிறது. அப்போது அதற்குச் சூட்டப்பட்ட தனியடையாளம் கொண்ட பெயர் அதற்குப் பெரிய தடையாக அமைகிறது.நான் பள்ளியில் படிக்கும்காலத்தில் வளவன் என்று ஒரு பையன் இருந்தான். பள்ளி இறுதிவரை அவனை வளவளவன் என்றுதான் கூப்பிடுவோம். பத்துவருடம் அந்தப் பெயரால் அவன் வதைபட்டான்

பின்னாளில் அந்தக்குழந்தை வளர்ந்து தனக்குத் தனியடையாளம் தேவை என்று உணரும்போதுகூட அது அந்தப் பெயர் அளிக்கும் அடையாளத்தை விரும்பவேண்டுமென்பதில்லை. வளவனை நான் நெடுங்காலம் கழித்து சென்னையில் சந்தித்தேன். அவன் அப்போது ஒரு டிரம் கலைஞன். அவன் தன் பெயரை வெறுமே வி என்று சுருக்கிக் கொண்டிருந்தான். டிரம்மர் வி.

அப்படியென்றால் பிள்ளைகளுக்கு நாம் விரும்பும் பெயரைப் போடக்கூடாதா? கண்டிப்பாகப் போடலாம். பிள்ளைக்குப் பெயரிடுவது நாம் பிள்ளைபெற்று வளர்ப்பதில் உள்ள பெரிய ஆனந்தங்களில் ஒன்று. அதை நாம் இழக்கவே கூடாது. நமக்குப்பிடித்தவர்களின் பிடித்தவற்றின் பெயரைப் பிள்ளைக்குப்போடுவது முக்கியமானது.

ஆனால் அது இரண்டு எதிர்த்தரப்பைக் கணக்கில்கொண்டதாக இருக்கவேண்டும். அந்தப்பெயர் குழந்தை எந்தச் சமூகத்தில் போய்ப் புழங்கப்போகிறதோ அந்தச் சமூகத்துக்கு முற்றிலும் அன்னியமானதாக இருக்கக் கூடாது. அந்தச் சமூகத்தில் கலக்க அந்தப் பெயர் குழந்தைக்குத் தடையாக இருக்கக் கூடாது. ஆகவே ஒரு பொதுவான உச்சரிப்புக்குள் பொதுவான அர்த்த தளத்துக்குள் நிற்கும் பெயரே குழந்தைக்கு உகந்தது

இன்னொன்று குழந்தை நம்முடையது மட்டுமல்ல. தாய்க்கும் குழந்தையில் சம பங்குண்டு. அவரது கருத்தும் முக்கியமானது. என்னுடைய நோக்கில் குழந்தை தாத்தாபாட்டியருக்கும் உரிமையானதுதான். அவர்களின் கருத்தும் கணக்கிலெடுக்கப்படவேண்டும்

ஆகவே பெயர் விஷயமாகப் பிடிவாதம்பிடிப்பது தேவையற்றது என்பதே என் எண்ணம். எல்லா விஷயங்களையும் கருத்தில்கொண்டு பேசி முடிவுசெய்யப்படும் ஒரு சமநிலையான பெயர்தான் நல்லது.

ஜெ

முந்தைய கட்டுரைகடைசி அங்கத்தில்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைகடிதங்கள்