எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு,
கம்பன் நிகழாத களங்கள் என்ற தலைப்பில் தாங்கள் எழுதியுள்ளதைப் படித்தேன். செறிவான விளக்கம். ”அவன் அவனே அறியாத தெய்வங்கள் வந்து ஆடிச்செல்லும் உடலும் நாவும் மட்டும்தான்” – என்ற இறுதிச் சொற்றொடர் முத்திரை வாக்கியம். தங்கள் விளக்கம் குறித்து மாறுபட்ட கருத்து ஏதும் இல்லை. ஏரெழுபது, சரஸ்வதி அந்தாதி ஆகியவற்றின் காலம் குறித்து எனது புரிதல் மட்டும் சற்று வேறுபடுகிறது.
கம்பன் கி.பி. 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவன். சரஸ்வதி அந்தாதியும் ஏரெழுபதும் 15 அல்லது 16ஆம் நூற்றாண்டுக்கு உரியனவாகத்தான் இருக்க இயலும். பத்மநாபபுரம் அரண்மனையிலிருந்து சரஸ்வதி படிமம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுவது குறித்த பழைய நம்பிக்கை, அரச குலத்தவர் அல்லாத வேளாண் மரபு ஆட்சியாளர்கள் கம்பனைத் தமது குருவாகக் கொள்ளுதல் (எடுத்துக்காட்டாகக் கொங்கு வேளாளர்கள் கம்பனுக்கு மாத்து அளித்து அடிமை புகுந்தமை, கம்பனை ஆதரித்த தொண்டை மண்டல வேளாளரான சடையப்ப வள்ளல் குறித்த பழங்கதைகள் போன்றவை) முதலான நிகழ்வுகள் சரஸ்வதி அந்தாதியும், ஏரெழுபதும் கம்பனால் இயற்றப்பட்டவை என்ற ஒரு தோற்றம் ஏற்படுவதற்குக் காரணமாக இருந்திருக்கக்கூடும்.
வாழ்த்துகளுடன்,
– எஸ். இராமச்சந்திரன்,
ஆய்வாளர்
அன்புள்ள ராமசந்திரன்,
ஆமாம் , அ.கா.பெருமாள் அவர்களும் அந்நூல்கள் கம்பனுடையவை அல்ல என்று சொல்லியிருக்கிறார். கம்பன் என்பது ஒரு துணைச்சாதிப் பெயர். ஆகவே வேறு எவரோ எழுதிய நூல் கம்பநாடர் மீது ஏற்றப்பட்டிருக்கலாம்
நான் கம்பனே எழுதியிருந்தால்கூட அப்படி இருக்க வாய்ப்புள்ளது என்ற பொருளில் ஒரு விளக்கம் அளிக்க முயன்றிருந்தேன்
நன்றி
ஜெ