கன்னிநிலம் – நாவல் : 4

நான் நள்ளிரவுதாண்டி எழுப்பபட்டேன். என்னைச்சுற்றி காற்றின் ஓலம் நிறைந்திருந்தது. கூடாரம் கிட்டத்தட்ட ஒருபக்கமாகச் சரிந்து பறந்தது. கைத்துப்பாக்கியுடன் எழுந்து அவளை நோக்கினேன். அவள் எழுந்து தன் கத்தியுடன் கட்டிலில் அமர்ந்திருந்தாள்.

வெளியே ஜவான் கார்பைனுடன் நின்றான். காற்று கூக்குரலிட்டபடி சுழன்றது.

”மழை வரப்போகிறது சார்”

நான் வெளியே ஓடி சிக்னல் அறைக்குச் சென்றேன்.

சண்முகம் என்னைப்பார்த்ததும் ”குட்மானிங் செர் ”என்றான்  ”அங்கே அண்டனா சாய்ந்திருக்கலாம். இப்போது சிக்னலே இல்லை”

”நம் லோக்கல் சிஸ்டம் எப்படி இருக்கிறது?”

“நம் அண்டனா இருக்கும்வரை அது வேலைசெய்யும்”

”அது இல்லை என்றே வைத்துக் கொள். வண்ண விளக்குகளை எல்லாருக்கும் கொடு…. ”

வெளியே மழை மண்ணை அறைந்தது. கூ என்று கூவியபடி சுழன்றடித்தது காற்று.

படீரென்று திரை அணைந்தது.

”ஷிட்”என்றான் மாணிக்கம்.

”என்ன?”

“நம் அண்டனாவும் போய்விட்டது”

மழையில் இறங்கி நேராக அலுவலக அறையை அடைந்தேன். அவளை ஹவல்தார் மேஜர் தியாகராஜன்  புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருந்தான். அவள் அசையாமல் சிலைத்த நோக்குடன் அமர்ந்திருக்க அவன்தான் சுற்றிச்சுற்றி வந்து கிளிக்கினான். நான் ரெயின் கோட்டை கழற்றிவிட்டு அவள் முன் வயர் நாற்காலியில் அமர்ந்தேன்.

”புயல் வருகிறது தியாகு ” என்றேன்

“ஆமாம்…பெரிய புயல்” என்றான் கிளிக்கியபடி. அவளது கை ரேகைக¨ளையும் கால்ரேகைகளையும் பதிவுசெய்தான். அவள் கழுத்தருகே ஒரு சிறு மச்சம். உதடுமீது சிறிய வெட்டுக்காயத்தழும்பு. அவற்றை எழுதினான்.

சாட்சிக்காக என்னிடம் நீட்டியபடி ” இவள் உண்மையிலேயே அழகான பெண்” என்றாள்

”அவளுக்கு அதுதெரியும்” என்றேன் புன்னகைத்தபடி

“இப்படி காட்டில் சுற்றினால் இரண்டுவருடத்தில் சப்பிஉலர்ந்துவிடுவாள்”  ஆவணங்களை எனக்கு நீட்டினான். நான் தாள்களை புரட்டி கையெழுத்திட்டபடி அவளை நோக்கி புன்னகை செய்தேன்

”பேசாமல் கல்யானம் கட்டிக்கொண்டு வாழச்சொல்லுங்கள் சார்”

“என்ன ஜ்வாலா? கேட்டாயா?”என்றேன் ”கல்யாணம் செய்து குழந்தைகுட்டிகளோடு வாழச்சொல்கிறான்”

அவள் ஒன்றும் சொல்லவில்லை

தியகாராஜன் வெளியே சென்றான்

அவளது மௌனம் என்னை வெறுப்பேற்றியது.”காட்டுக்குள் உங்கள் ஆட்களில் எத்தனைபேர் நாளை மிஞ்சுவார்கள் என்று தெரியவில்லை” என்றேன்.

”இது எங்கள் மண் .எங்கள் காடு…” என்றாள் வெறுப்பு கண்களில் மின்ன

”இது என் நாடு, என் மண்” நான் அவளைக் கூர்ந்து நோக்கியபடிச் சொன்னேன் ” இந்தியா”

”புல் ஷிட்!” அவள் சீறினாள்.” இது மணிப்பூர். மணிப்புரிகளின் நாடு. நீங்கள் ஆக்ரமிப்பாளர்கள். ஒருநாள் உங்களை கூண்டோடு அழிப்போம். எங்கள் மண்ணை விடுவிப்போம்”

”எல்லாமே உனக்குக் கற்றுக்கொடுக்கப்பட்ட சொற்கள். யாரோ எங்கோ இவற்றை உருவாக்குகிறார்கள்…” நான் இகழ்ச்சியுடன் சொன்னேன் ” எல்லா மணிப்புரிகளும் இதையே திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள்”

”உன் ஏளனம் எனக்குக் குமட்டுகிறது…”

”ஏளனம்தான்.சாவதற்காக வந்து விழுகிறீர்களே அதைப்பார்த்து…விட்டில்கள்..”

” அமெரிக்காவில் குடியேறிய யாங்கிகள் குறிபழகுவதற்காக லட்சக்கணக்கில் யாக்குகளை சுட்டுக்கொன்றனர்.  நீங்கள் இந்தியர்கள் எங்களைப்பயன்படுத்துகிறீர்கள். உங்களுக்கு எங்களைப்பற்றி என்ன தெரியும்? சொல்லுங்கள்…”

”எங்களுக்கு ராணுவத்தில் தனி வகுப்புகளே எடுக்கிறார்கள்”

“வகுப்பு…… நான் யார் ?என்ன இனக்குழு? சொல்லுங்கள் பார்க்கலாம்”’

“நீ அனேகமாக குக்கி….”

அவள் ஏளனமாக உதட்டைச் சுழித்தாள்

”நாகா ? இல்லை. இப்பகுதியில் அவர்கள் இல்லை.  லுஷாய்ஸ்? ”

”நாகா . குக்கி , மிஜோ, லுஷாய்ஸ் — இவ்வளவுதானே சொல்ல முடியும் உங்களால்? இதெல்லாம் வெளியே இருந்துவந்தவர்கள் போட்ட பொதுப்பெயர்கள். இதெல்லாம் வெறும் அரசியலடையாளங்கள்… நாங்கள் அந்த அடையாலங்கள் அல்ல….  1956 டிரைப்ஸ் லிஸ்ட்,  பார்ட் 10 இங்கே முப்பது பழங்குடியினங்களை பட்டியலிட்டிருக்கிறது, தெரியுமா? அனிமோல், சீரு,கா பூய், காச்சா- நாகா, சுக்தே, கொய்ராவ், டாங்கூல், வாய்பேஹி …ஆனால் இன்னும் உங்களால் பெயரிடப்படாத பழங்குடிகள் ஒன்றரை லட்சம் பேர் இருக்கிறோம்…. எங்கள் அடையாளம் பாரம்பரியம் எங்கள் ஆசாபாசங்கள் ஏதாவது எங்களை ஆளும் உங்கள் அரசுக்குத்தெரியுமா? அரை நூற்றாண்டாக இங்கே ரத்தம் ஓடுகிறதே அப்போதாவது ஏன் இத்தனை பூசல்கள் என்று புரிந்துகொள்ள முயன்றீர்களா? கோடிக்கணக்கில் போருக்குச் செலவிடுகிறீர்களே பாதியை எங்களை புரிந்துகொள்ள செலவிடுவீர்களா?” அவள் உணர்ச்சிகளால் ஒரு நிமிடம் பேசாமலிருந்தாள் ”நாங்கள் இங்கே வாழ்வதாவது உங்களுக்குத்தெரியுமா? தெரியாது. நாங்கள் கண்ணுக்குத்தெரியாத உயிரினங்கள்….பூச்சிகள் …..புழுக்கள்.. யெஸ்…வி ஆர் இன்விசிபில் ”

நான் ”நாங்கள் முயற்சி செய்கிறோம்” என்றேன்

“எத்தனை காலமாக?  1949 லேயே நாங்கள் இந்திய யூனியனில் இணைக்கப்பட்டோம். 1972 முதல் இந்தியாவின் மாநிலம் நாங்கள். ஆனால் நாற்பதுவருடம் போராடிய பிறகு 1992ல் தான் மணிப்புரி மொழியை மட்டுமாவது தேசியமொழியாக அங்கீகரிக்கவைக்க எங்களால் முடிந்தது…. இன்னும் இருக்கின்றன எண்பத்தெட்டு மொழிகள் இங்கே…. நீங்கள் எங்களைப் புரிந்துகொள்ள இன்னும் நூற்றைம்பது வருடம் ஆகும். நாங்கள் சும்மா இருந்தால் எங்களையும் ஹிந்தி பேச வைப்பீர்கள்…”

”நான் ஹிந்தி பேசுபவன் அல்ல. தமிழன். உன்னைப்போலவே இந்தியாவின் இன்னொரு விளிம்பைச் சேர்ந்தவன் ”

“எல்லாரும் ஒன்றுதான்…. நீங்கள் துப்பாக்கியைத் தூக்கியபடி இங்கெ எங்களைக் கொல்ல வந்தவர்கள்”

“சரி நான் உன்னைக் கேட்கிறேன். புரிந்துகொள்ளவில்லை என்கிறாயே. உண்மையிலேயே புரியவில்லை. ஏன் உங்களுக்குள் இத்தனை சண்டைகள்? குக்கி நேஷனல் அசெம்ப்ளிக்கு முதல் எதிரி குல்மி நேஷனல் யூனியன் என்கிறார்கள் . நாகாக்கள் மிஜோக்களைக் கொல்கிறார்கள். மீய்த்திகள் மற்ற அத்தனைபேரையும் கொல்கிறார்கள்…  இதற்கும் நாங்கள்தான் காரணமா?”

“எங்களுக்கும் இன்னும் அதிகாரச் சமநிலை உருவாகவில்லை . உருவாக நீங்கள் விடவில்லை. எங்களுக்கு அதிகாரமே இன்னும் கிடைக்கவில்லை. உங்கள் உளவுத்துறை எங்களுக்குள் சண்டை மூட்டிவிடுகிறது” அவள் சற்று வலு குறைந்த மொழியில் சொன்னாள். ”ஆனால் மணிப்புரிகள் ஒன்றுபடுவார்கள். ஒருங்கிணைந்த மணிப்புர் அமையும்.”

”ஒருங்கிணைந்த மணிப்பூர்? ”இகழ்ச்சியுடன் சிரித்தேன். என் கை ஓங்குவதை உணர்ந்தேன். ” பர்மாவிலிருந்தும் உங்கள் பங்கை பெறப்போகிறீர்களா? அதற்காகத்தான் பர்மாவிலிருந்து ஆயுதமும் பணமும் பயிற்சியும் பெற்று போராடுகிறீர்கள் இல்லையா? ”

“எங்கள் முதல் எதிரி இந்தியா. முதலில் இங்கே எங்கள் மண் அமையட்டும். எதிரியை பிறகு பார்த்துக் கொள்வோம்” அவள் குரல் திடமாக இருந்தாலும் கண்கள் தாழ்ந்தன.

அது எனக்கு வேகமூட்டியது” நீ£ படித்தவள்தானே? இந்தமாதிரி கதைகளை நம்ப உனக்கு வெட்கமாக இல்லையா? இது நடக்கிற காரியமா? உங்களை அப்படி விடுவதற்கு பர்மா என்ன முட்டாள்களின் நாடா? யாருக்காக இந்தப்போர்? இத்தனை மரணங்கள்?”

“சுதந்திரத்திற்காக. உன்னைப்போன்ற ஆக்ரமிப்பாளர்களை கொன்று ஒழிப்பதற்காக. உங்கள் ரத்தம்தான் எங்கள் மண்ணுக்கு உரம்” அவளில் தெறித்த அந்த உண்மையான உக்கிரம் என்னை அச்சுறுத்தியது. அவள் உரத்த குரலில் கூவினாள் ”உன்னைப்போன்ற ஒவ்வொரு ஆக்ரமிப்பாளனையும் கொல்வதுவரை நாங்கள் போராடுவோம். எங்கள் சந்ததிகள் போராடும்…”

வெளியே புயல் ஊளையிட்டது. விளக்குகள் அணைந்து அணைந்து எரிந்தன.

மெல்ல என்னை சமாதானம்செய்துகொண்டேன். ”இதோ பார். நீயும் நானும் சாதாரண மனிதர்கள். இந்த அரசியல் ஆட்டத்தின் சூதுகள் எனக்கும் உனக்கும் கண்டிப்பாக புரியாது…. இந்த போர் தொடங்கி முப்பதுவருடம் ஆகிறது. எத்தனை உயிர் போய்விட்டது… இன்னும் எத்தனை பேர் சாகப்போகிறார்கள்.இதுவரை என்ன ஆயிற்று? இரண்டுதலைமுறையே பாழாகியாயிற்று…இரண்டு தலைமுறை” அவள் கண்களை உற்றுப்பார்த்தேன்”…நீ ஒரு பெண். உன்னைப்போன்ற பெண்கள் எங்கள் ஊரில் மாசத்துக்கு ஒரு சுடிதார் எடுத்து அணிகிறார்கள். வாராவாரம் நெயில் பாலீஷ் மாற்றுகிறார்கள். செல் போனில் ராப்பகலாக பேசுகிறார்கள். ஐஸ்கிரீம் சாப்பிடுகிறார்கள்…’

”புல் ஷிட்”

” உண்மையைச் சொல். உனக்கு காதலிக்க கல்யாணம் செய்துகொள்ள பிள்ளைபெற்று வளர்க்க ஆசையில்லையா? ஒரு குடும்பம் பற்றிய கனவே இல்லையா?”

” டாமிட் . அந்ததுப்பாக்கிமட்டும் இல்லாவிட்டால் இந்நேரம் உன்னை கிழித்துப்போட்டிருப்பேன்….உன்னைப்போன்ற ஆட்களைக் கொல்வதுமட்டும்தான் என்னுடைய சந்தோஷம்….கெட் லாஸ்ட் …”

நான் சட்டென்று அந்த விபரீத எண்ணத்தை அடைந்தேன். ”நீ பொய் சொல்கிறாய்”என்றேன் ”உன்னிடமிருந்தே பொய் சொல்கிறாய்…” என் துப்பாக்கியை தூர வீசினேன். ”கொல் பார்க்கலாம்”

அவள் துப்பாக்கியை ஒருகணம் பார்த்தாள். என்னை திரும்பிப் பார்த்தாள். சட்டென்று பாய்ந்து என் மார்பில் கத்தியால் குத்தினாள். என் பயிற்சி மட்டும் எனக்கு உதவாவிட்டால் நான் இறந்திருப்பேன்.ஏன் கை இயல்பாக அவளை மடக்கியது.கீழே விழுந்தேன். என் மேல் அவளும் விழுந்தாள்.என் முழங்கையும் விலாவும் கிழிந்து சூடான ரத்தம் பீச்சியது. அவளது கத்தி பிடித்த கையை நான் பற்றிக் கொண்டேன். நாங்கள் புரண்டு புரண்டு போராடினோம்.  அவளது குத்துகளில் தரையில் விரிக்கப்பட்ட பிளாஸ்டிக் விரிப்பு கிழிபட்டது. நான் அவளை உதறி எழுந்து  ” தாமஸ்” என்று கூவினேன்

ஜவான் சட்டென்று உள்ளே வந்து சடவென்று சுட்டான். கூடாரத்துணி கிழிபட்டு நீரும் காற்றும் உள்ளே சீறின. அவள் எழுந்து தன் கத்தியுடன் கைதூக்கி நின்றாள். மூச்சிரைப்பில் அவளது சிறிய மார்பகங்கள் அதிர்ந்தன.

என் காயத்தை பற்றியபடி ” போதும்..சுடாதே” என்று ஆணையிட்டேன்.

காற்று சீறியடித்தது. கூடாரம் அதிர்ந்தது. ஜவான்கள் துப்பாக்கியுடன் பாய்ந்துவந்தனர். நான் அதிர்ந்து போயிருந்தேன்.

[,more]

முந்தைய கட்டுரைஇணையம் ,கடிதம்
அடுத்த கட்டுரைகிளி சொன்ன கதை :கடிதங்கள்