பக்தி ஞானம்-கடிதம்

ஜெ

புத்தகங்களின் பெயர்களை மின்னஞ்சல் செய்தமைக்கு மிக்க நன்றி .Richard Restack தவிர்த்து மற்ற இரண்டு புத்தகங்களும் கிடைத்தன .வாசிக்கத் தொடங்க வேண்டும் .

சென்ற வாரம் தங்களுடைய இந்திய ஞானத்தை மீண்டும் வாசித்து கொண்டு இருந்தேன் .வருடங்கள் செல்ல செல்ல புதிய விஷயங்கள் பிடிபடுகின்றன .இரண்டு வருடங்கள் முன் இதே நூலை நான் வாசித்து இருக்கிறேன்.அனால் அன்று ஒரு சில தகவல்களை விளக்கங்களை தேடி இயந்திரமயமாக வாசித்தேன் என்று எண்ணுகிறேன் .இம்முறை ஒரு நாவலை வாசிப்பது போன்று நிதானமாக வாசித்தேன் .இன்னும் விளக்கமாகக் கூறவேண்டும் என்றால் புத்தகத்தை ரசித்து வாசித்தேன் என்று கூறலாம் .

கடந்த முறை நான் அடிக்கோடு இட்ட வரிகளும் இம்முறை என்னைக் கவர்ந்த கருத்துக்களும் வெவ்வேறு .இலக்கியக் கோட்பாடுகள் இதனால்தான் ஒரு நூலை இடைவெளிவிட்டு மறு வாசிப்பு செய்ய வேண்டும் எனக் கூறுகின்றன போலும் .

இம்முறை என்னை மிகவும் கவர்ந்த கருத்து, “பக்தி அளிக்கும் விவேக ஞானம் ஒருவரை வேதாந்தம் நோக்கி கொண்டு செல்லும்.ஞானம் அளிக்கும் கனிவு ஒருவரை பக்தி நோக்கிக் கொண்டுசெல்லும்”(19).

பக்திக்கும் ஞானத்திற்கும் இடையே மேலோட்டமாகத் தோற்றமளிக்கும் முரண்பாட்டை, முரணியக்க கோட்பாட்டின் வாயிலாக அருமையாக உடைத்துள்ளிர்கள் .இதே கருத்து சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்னர் வடமொழியில் ஒருவரால் கூறப்பட்டுள்ளது .

“பக்தியா ஞானம் ததோ பக்தி:ததோ திர்ஷ்டி:தத : ச ஸ /
ததோ முக்தி ததோ பக்தி :சைவ ஸ்யாத் சுக ரூபிணி //”

பக்தியால் ஓரளவு ஞானம் கிடைக்கிறது.ஞானம் மேலும் பக்தியை விளக்குகிறது.அது முக்திக்கு வழியாகிறது என்ற பொருளை மேற்கண்ட ஸ்லோகம் கூறுகிறது .பக்தி இயக்கத்தினர் மட்டுமில்லை, தத்வஞாநிகளும் இந்த முரணியக்கத்தை உணர்ந்து அதனைப்பதிவு செய்துள்ளனர்.!!

கடைசியாக ஒரு கேள்வி.இந்த வட மொழி ஸ்லோகத்தின் ஆசிரியரை ஊகிக்க முடிகிறதா ?

தொடர்ந்து உரையாட விரும்பும்

அனீஷ் க்ருஷ்ணன்

அனீஷ்,

ஆச்சரியமான வரி. யாருடையது?

ஜெ

ஜெ,

ஸ்ரீ மத்வாசார்யார் !!

அனீஷ்க்ருஷ்ணன்

முந்தைய கட்டுரைஎத்தனை கைகள்! -சாம்ராஜ்
அடுத்த கட்டுரைகடிதங்கள்