செயலின்மையின் இனிய மது

அன்புள்ள ஜெ,

முன்பு எப்போதோ படித்த சமயவேல் கவிதை. கவிதையாக என்னைக் கவரவில்லை. ஆனால் சில வரிகள் நினைவில் தங்கிவிட்டன. குறிப்பாக ”சிரித்துக் கொண்டிருக்கும் இளம் முகங்களில் பறக்கும் சிட்டுக் குருவிகளை நாம் நன்கறிவோம்” என்ற வரி. மற்றும் ”எல்லாவற்றிற்குமான மாயத் திறவுகோலை ஏதோ ஒரு சாலைத் திருப்பத்தில் எப்பொழுதோ நாம் தூக்கி எறிந்து விட்டோம்” என்ற வரி.

இன்று இந்த இரு வரிகளும் நினைவுக்கு வந்தன… திடீரென, எதிர்பாராதொரு சமயத்தில்… ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்றை மெய்ப்பு பார்த்துக் கொண்டிருந்த சமயத்தில்.. பின்பு என்னால் எதுவும் செய்ய முடியவில்லை…
சிட்டுக் குருவிகள் பறந்து விட்டன என்பது தெரியும். ஆனால் மந்திரச் சாவியையும் எங்கே எந்தத் திருப்பத்தில் தூக்கி எறிந்தேன் என்று புரியவில்லை… இந்தக் குளிர் இரவில் பயம் என்னைப் பற்றிக்கொண்டுவிட்டது.

***
இந்த இரவு

நான் அருந்திக் கொண்டிருப்பது
எனக்குப் பிடித்த ரம் இல்லை
வெறும் ஆப்பிள் ரஸம் தான் எனினும்
இந்த இரவு தளும்பிக் கொண்டே இருக்கிறது
நாம் நடந்து வரும் பொழுது எவ்வளவோ வாகனங்கள்
நம்மைக் கடந்தன
எவ்வளவோ நாம் பார்த்துவிட்டோம்
நாம் விவாதிப்பதற்கு ஒரு பொருளும் இல்லை
நடந்த மரணங்களும் வரும் மரணங்களும் உறையச் செய்த
நம் மெளனங்களின் இடைவெளிகளில்
இந்த இரவு தளும்பிக் கொண்டே இருக்கிறது
பக்கத்தில் ஆளுக்கொரு பானம் அருந்தியபடி
சிரித்துக் கொண்டிருக்கும் இளம் முகங்களில்
பறக்கும் சிட்டுக் குருவிகளை நாம் நன்கறிவோம்
எல்லாவற்றையும் புரிந்து கொள்கிறோம்
எல்லாவற்றையும் தாங்கிக் கொள்கிறோம்
ஆப்பிள் ரஸத்தின் இரத்தம் போன்றதோர் நிறம்
கோமியம் போன்றதோர் அதன் வாசம்
எல்லாவற்றிற்குமான மாயத் திறவுகோலை
ஏதோ ஒரு சாலைத் திருப்பத்தில்
எப்பொழுதோ நாம் தூக்கி எறிந்து விட்டோம்
நமது சிகரட்கள் நம்மை சுவாசிக்கும் நறுமணத்தில்
இந்த இரவு நிறைந்து தளும்பிக் கொண்டே இருக்கிறது.
(நண்பர் இராஜமார்த்தாண்டனுக்கு)

http://samayavel.blogspot.com/2009/07/blog-post.html

அன்புடன்

அன்புள்ள அ,

நலம்தானே?

உங்களுடைய முந்தைய கடிதத்துக்கு பதில்போட பலமுறை நினைத்தும் ஒத்திப்போட்டுவிட்டேன். ஏனென்றால் அப்போது எழுதியிருந்தால் மிகக்கடுமையாக எழுதியிருப்பேன். [இப்போதுகூட இது கடுமையாக ஆகிவிட எல்லா வாய்ப்பும் உள்ளது]

மிகமிக அரிதான நுண்ணுணர்வும், அறிவாற்றலும் கொண்டவர் நீங்கள். நான் உண்மையில் உங்கள் அளவுக்கு ஆற்றல்கொண்ட மிகச்சிலரையே கண்டிருக்கிறேன். ஆனால் என்னால் சரியாக புரிந்துகொள்ளமுடியாத ஒரு சோம்பலால் மூடப்பட்டிருக்கிறீர்கள்.

கூர்ந்து அவதானித்தால் அந்தச் சோம்பலுக்குப்பின்னால் உள்ளது உங்கள் அறிவாற்றல்மீதுள்ள பெருமிதம் என்றே தோன்றுகிறது. தன்னைப்பற்றிய நம்பிக்கை அளிக்கும் மிதப்பிலேயே எதையும்செய்யாமல் இருப்பதற்கான ஒரு இயல்பு கைகூடிவிடுகிறது. நான் இயல்பிலேயே கலைஞன் அல்லது அறிஞன், ஒன்றுமே செய்யாவிட்டாலும்கூட என்ற எண்ணமா அது என்று ஐயமாக இருக்கிறது.

இல்லை என நீங்கள் மறுக்கலாம். ஆனால் கூர்ந்துபாருங்கள், உங்கள் வயதுக்குள் சொல்லும்படியான சாதனைகளைச் செய்தவர்களைப் பார்க்கையில் என்ன தோன்றுகிறது என்று. அது ஒன்றும்பெரிய விஷயமல்ல, நானும் எளிதாக இதையெல்லாம் செய்துவிடுவேன் என்றுதானே? ஒரு அலட்சியம் மட்டும்தானே?

அறிவுத்திறனும் நுண்ணுணர்வும் சாத்தியங்கள் மட்டும்தான், சாதனைகள் அல்ல. சாதனைகள் செயல்மூலமே உருவாகின்றன. சாத்தியங்கள் நடைமுறையைச் சந்திக்கும்போதுதான் அவற்றின் உண்மையான மதிப்பு வெளியாகிறது. எந்த ஒரு தளத்திலும் செய்துபார்ப்பதே முக்கியமானது. செயல் மூலம் கிடைக்கும் படிப்பினைகளைக்கொண்டுதான் ஒவ்வொரு ஆளுமையும் தன்னைக் கண்டடைகிறது. சொல்லப்போனால் ஒரு எண்ணம் செயலாக்கப்படுகையில் கண்டுகொள்ளும் தடைகள்மூலமே அவ்வெண்ணத்தின் உண்மையான சாத்தியக்கூறு கண்டடையப்படுகிறது.

நான் இதை எப்போதுமே சொல்லிவருகிறேன். தடைகளே ஒரு விஷயத்தின் இயல்பைத் தீர்மானிக்கின்றன. பிறந்தகுழந்தை வெறும் சாத்தியக்கூறுகளின் தொகை மட்டுமே என்பார்கள். அச்சூழலில் உள்ள அனைத்துமே அதற்குத்தடைகள்தான். அங்குள்ள பருவநிலை, பாக்டீரியா , பாரம்பரியம் , மொழி எல்லாமே. அவை அக்குழந்தையுடன் கொள்ளும் மோதல் மற்றும் வெற்றி மூலமே அக்குழந்தை ஓர் ஆளுமையாக ஆகிறது.

நான் எழுத ஆரம்பிப்பதற்கு முன்னர் என்னைப்பற்றி மிகையான எண்ணம் கொண்டிருந்தேன். ஏன் என்றால் நான் என்னுடைய சாத்தியங்களைக் கொண்டே என்னை மதிப்பிட்டேன். என்னுடைய கற்பனைத்திறனும் என்னுடைய அறிவாற்றலும் எனக்குத்தெரியும்.

ஆனால் எழுத ஆரம்பித்தபோது முதல்தடையைக் கண்டடைந்தேன். என்னுடைய அகமொழி என்னுடைய மலையாளக்கலவையான வட்டாரவழக்கினால் ஆனதாக இருந்தது. தரமான மொழிநடையை அதிலிருந்து உருவாக்கமுடியாது. மறுபக்கம் நான் வாசித்து அறிந்த தமிழ் பத்திரிகைமொழி மிகச் சல்லிசாக இருந்தது. அதுவும் நல்ல மொழிநடையாக ஆக முடியாது.

உண்மையில் நான் எழுதிய ஆரம்பகாலக் கதைகள் எனக்களித்த சோர்வு சாதாரணமானதல்ல. ஒன்று செயற்கையான ஒரு நடையில் இருக்கும் அல்லது குமுதம்நடையில் இருக்கும். ஆனால் அந்தத் தடையை நான் சந்தித்தேன். எழுதி எழுதி அதைத் தாண்டிவந்தேன்.

இன்று நான் உறுதியாக ஒன்றைச் சொல்வேன், நவீனத்தமிழிலக்கியத்தின் மிகச்சிறந்த ஒரு சில நடைகளில் ஒன்று என்னுடையது. புதுமைப்பித்தனிடமன்றி எவரிடமும் அவ்வகையில் என்னை ஒப்பிடமுடியாது. என்னுடைய தமிழை நான் எங்கும் கொண்டுசெல்லமுடியும் கொற்றவை , விஷ்ணுபுரம் போல செவ்வியலுக்குள். அல்லது காடு, ஏழாம் உலகம்போல வட்டாரவழக்குக்குள்

நான் எழுதும் வட்டாரவழக்கு ஒருவகையில் நானே உருவாக்கிக் கொண்டது. குமரிமாவட்ட வட்டார வழக்கை அப்படியே எழுதினால் அது மலையாளக்கலவையாக மட்டுமே இருக்கும். நான் அதிலிருந்து உருவாக்கிக் கொண்ட அழகான, கச்சிதமான ஒரு வட்டாரவழக்கே என் புனைவுலகில் உள்ளது. குட்டப்பன் பேசக்கூடிய படிமங்களும் சொலவடைகளும் நிறைந்த மொழியை நீங்கள் இங்கே வந்து எவரும் பேசிக்கேட்கமுடியாது. என்னுடைய புனைவுலகில் உள்ள பாடல்கள், பழமொழிகள், சொலவடைகள், வழக்காறுகள் எல்லாமே நான் புதியதாக உருவாக்குபவை.

என் இடத்தை நான் மொழியில் உருவாக்கிக் கொள்ள எனக்கு வந்த தடைகளே வழிவகுத்தன.என்னுடைய சமகாலத்தில் தமிழில் எழுதவந்த மற்ற எழுத்தாளர்களிடம் எனக்கிருக்கும் தனித்தன்மைகொண்ட நடையை நீங்கள் காணமுடியாது. ஏனென்றால் அவர்கள் எதில் புழங்கினார்களோ அதுவே அவர்கள். அது பொதுவான ஒரு வெளி. நான் எனக்கே உரிய தடைகளைத் தாண்டியதுமூலம் உருவாக்கிக் கொண்டது எனக்குமட்டுமே உரிய வெளி. எழுத்தாளனை அடையாளப்படுத்துவது எப்போதும் அந்தத் தனித்தன்மைதான்

உங்கள் தடைகளை நீங்கள் சந்திக்க, வென்றுசெல்ல ஏற்கனவே மிகவும் தாமதமாகிவிட்டது. நீங்கள் யார்? புனைவெழுத்தாளனா? தத்துவவாதியா? அதை முடிவெடுக்க, அந்தத் தளத்தில் தீவிரமாகப் பாய்ந்திறங்க இன்னும் தயங்கிக்கொண்டிருக்கிறீர்கள்.

1985இல் சுந்தர ராமசாமி என்னுடைய கதைகளை வாசித்துவிட்டுச் சொன்னார். ‘உங்களால உரையாடலை எழுத முடியலை…பெரிய இரும்புக்கதவுதான் அந்த தடை’ நான் சொன்னேன் ‘சார், தமிழிலேயே நல்ல உரையாடலை நான்தான் எழுதப்போறேன். என் முன்னால வரக்கூடிய இரும்புக்கதவுகள நான் தட்டிப்பாக்கமாட்டேன். உதைச்சும் பாக்கமாட்டேன். மண்டையால முட்டி உடைப்பேன். கதவு உடையலைன்னா அந்த இடத்திலேயே செத்திருவேன்’. அந்தவேகம்தான் எப்போதும் படைப்பிலக்கியத்தின் வாசலைத் திறக்கிறது

நீங்கள் இன்று ஆய்வுத்துறையில் இருக்கிறீர்கள். நல்ல விஷயம் ஆனால் ஒரு பேராசிரியராவது என்பது வெறுமே ஒரு தொழிலை உருவாக்கிக் கொள்வது மட்டுமே. அது ஒன்றும் ஓர் ஆளுமையின் நிறைவாக்கமோ சாதனையோ அல்ல. நாட்டில் பல்லாயிரம் பேராசிரியர்கள் உள்ளனர். நீங்கள் மட்டுமே செய்யக்கூடிய ஒன்றைக் கண்டடைதலும் அதைவெல்லுதலுமே நீங்கள் செய்யவேண்டியது

அதில் நீங்கள் இன்றுவரை என்ன செய்திருக்கிறீர்கள்? உங்களை அறிந்தவன் என்றவகையில் சொல்கிறேனே நீங்கள் பெரிதாக ஒன்றுமே செய்ததில்லை. கடலின் கரையில் சப்பாத்துகளைக்கூடக் கழற்றாமல் சும்மா நின்றுகொண்டிருக்கிறீர்கள், அவ்வளவுதான்.

நான் உங்களிடம் சிலவருடங்களுக்கு முன் சொன்னேன். நீங்கள் நாவலாசிரியர் என்று நீங்கள் நினைத்தால் உங்களுடைய மிகச்சிறந்த நாவலை எழுத ஆரம்பியுங்கள் என்று. எழுதும்போதுதான் அதிலுள்ள உண்மையான சவால்கள் உங்களுக்குத்தெரியும்,. தடைகள் திடீரென்று பெரும் சுவர்களாக மாறி வழிமறிக்கும். அவற்றைத் தாண்டுவதனூடாகவே நீங்கள் மட்டும்எழுதக்கூடிய ஒரு நாவலை நீங்கள் அடையமுடியும். நீங்கள் தத்துவவாதி என்றால் உங்களுடையது என நீங்கள் நினைக்கும் மிகப்பெரிய நூலை ஆரம்பியுங்கள்.குதியுங்கள், குதிக்காமல் நீந்தமுடியாது.

உண்மையில் எதையாவது செய்ய ஆரம்பித்து, அதன் சவால்களைச் சந்தித்து, அச்சவால்களைத் தாண்டுவதுபோல சிறந்த கல்வி என ஏதுமில்லை. அது மிகமிகக் கூர்மையான கல்வி. உங்கள் ஆர்வம் திசை திரும்பாது. அது செயல்முறைக்கல்வி ஆதலால் ஒருபோதும் வெற்றுத் தகவல்சேகரிப்பாக அது நின்றுவிடாது. உங்கள் ஆளுமை எதைக்கோருகிறதோ அதை மட்டுமே நீங்கள் கற்பீர்கள் என்பதனால் ஒருபோதும் அதன் ஒரு துளிகூட வீணாகாது.

ஆனால் அதற்குத்தேவை மறுகரை வரை விடாப்பிடியாக நீந்தும் மனநிலை. ஒருபோதும் தோற்கமாட்டேன் என்ற வேகம். எழுத்தாளனாக ஆகவேண்டும் என்பதற்காக இந்திய விண்வெளி ஆய்வுத்துறை அறிவியலாளராக இருந்த மலையாள எழுத்தாளர் சி.ராதாகிருஷ்ணன் தன் வேலையை உதறினார், வேலையில் இருந்தபடியே ஏன் எழுதக்கூடாது என்ற கேள்விக்கு ‘எழுதமுடியாமலானால் நான் பட்டினி கிடந்து சாகவேண்டும் , அதற்காகத்தான் ’ என்று பதில் சொன்னார்

நான் அதை இன்றைய இளைஞனுக்குச் சொல்லமாட்டேன். இன்றைய உலகம் இன்னும் சிக்கலானது. அதிக தேவைகள் கொண்டது. ஒருவர் தன் தொழிலை, தொழிலுக்கான கல்வியை நிகழ்த்தியபடியே தன்னுடைய ஆளுமை மலரும் துறையில் முழு வீச்சுடன் செயல்பட முடியும். தன் மண்டையைத் தனக்கான இரும்புக்கதவுகளில் மோதிக்கொள்ளமுடியும்.

சோம்பலின் இரு வெளிப்பாடுகள், ஒன்று திடீரென்று வரும் அதி உற்சாகம். சட்டென்று உற்சாகமடைந்து ஏகப்பட்ட திட்டங்கள் போடுவது. பரபரப்படைவது. அது அப்படியே நுரைபோல அடங்கிப்போகும். இன்னொரு வெளிப்பாடு அவ்வப்போது வரும் தன்னிரக்கம். தன்னிரக்கத்துக்கு வருவதற்கான சுருக்கவழியாக அதிஉற்சாகத்தை வைத்திருப்பவர்களும் உண்டு

தன்னிரக்கம் விசித்திரமான ஒரு மனநிலை. அதைப்போல இனிய துக்கம் வேறில்லை. தன்னுடைய பலவீனங்கள் பிழைகள் செயலின்மை அனைத்தையும் அங்கே இனியவையாக ஆக்கிக்கொள்ளமுடியும். அனுபவிக்க அனுபவிக்க தன்னிரக்கம் பெருகும். அதனுடன் கொஞ்சம் கவிதை கொஞ்சம் இசை கொஞ்சம் இயற்கை என்று சேர்த்துக்கொண்டால் கவித்துவமான மனநிலையில் இருப்பதாகக் கற்பனைசெய்துகொள்ளவும் முடியும்.

ஏன் செயலாற்றவேண்டும், இபப்டியே இருந்துவிட்டாலென்ன என்று கேட்கலாம். அது இயற்கையால் விதிக்கப்படவில்லை என்பதே பதிலாகும். நீங்கள் செயலாற்றுவதனூடாக மானுடசிந்தனைக்கோ கலைக்கோ பண்பாட்டுக்கோ பெரிதாக ஒன்றும் கொடுக்கப்போவதில்லை. மார்க்ஸோ தல்ஸ்தோயோ நிகழாவிட்ட்டாலும் மானுடஞானம் பெரிதாக ஒன்றும் குறைந்துபோயிருக்காது. அது மாபெரும் ஒழுக்கு. அதில் துளிகள், கொப்பளங்கள்தான் நாம்

செயலாற்றுவதால் வரும் பணம்,புகழ், கௌரவம் எல்லாம் பெரியவைதான். ஆனால் ஒருகட்டத்தில் தெரியும் அவற்றுக்கெல்லாம் எந்த மதிப்பும் இல்லை என்று. தேரோட்டிக்கு அது தெரியும், ஆகவேதான் அதை முதல் அத்தியாயத்தில் நாலைந்து வரிகளில் சொல்லித் தாண்டிச்செல்கிறான். செயலாற்றுவதால் கிடைப்பது ஒரு தன்னிறைவு. என்னுடைய சாத்தியங்களை நான் முழுமையாக நிகழ்த்தும்போதுதான் எனக்குள் இருந்து என்னை கவனித்துக்கொண்டிருக்கும் ஒன்று நிறைவடைகிறது. என்னுடைய சாத்தியங்கள் முழுவெளிப்பாடு கொள்ளும் களமே தன்னறம் என்பது. அதில் இறங்கிச் செயலாற்ற நான் என் பிறப்பால் பணிக்கப்பட்டிருக்கிறேன். ஒவ்வொரு புல்லும் அதைத்தான் செய்கிறது, தன் முழு ஆற்றலாலும் இந்தபூமியைப் புல்லால்மூட அது முயல்கிறது.

ஆகவே செயல்புரிக என்று சொல்லவே இவ்வளவையும் எழுதினேன். melancholic idleness ன் இனிய வெறுமையில் திளைக்க இன்னும் காலமிருக்கிறது, ஒரு ஐம்பதுவருடம்

ஜெ

பிகு

சமயவேலின் கவிதை நல்ல கவிதை என்று சொல்லமுடியாது. கவிதைக்கான உள்ளொழுங்கு சிதறிய அனுபவக்குறிப்பு என்றே எனக்குப்படுகிறது. ஆனால் சில குறிப்பிட்ட வகையான உணர்ச்சிவெளிப்பாடுகள் நம்முடைய அந்தத் தருணத்து மனநிலையுடன் சரியாக இணைந்துவிடும்.

முந்தைய கட்டுரைபின் தொடரும் நிழலின் குரல்-கடிதம்
அடுத்த கட்டுரைஅம்மையப்பம் -கடிதம்