தத்துவம் மேற்கும் கிழக்கும்

அன்புள்ள ஜெ

கேள்வி மேல் கேள்விகளாகவே கேட்பதற்கு மன்னிக்கவும் :) மேற்கத்திய தத்துவம் பற்றி ஒரு தெளிவு பெற இந்த கேள்வி.

Schopenhauer, Kant, Descartes போன்ற பல தத்துவ மேதைகளைப் படிக்கையில் எனக்குத் தோன்றுவது எப்படி ஒரு அனுபவ அறிவு இல்லாது அவர்களால் epistemology சம்பந்தப்பட்ட விஷயங்களைப் பேச முடிகிறது என்பது. வெறுமனே சிந்தித்தோ அல்லது சில மறுக்கப்பட முடியாத உதாரணங்கள் மூலமோ எப்படி அவர்கள் அறிவு, சுயம் போன்றவற்றை விளக்க முடிகிறது என்பது எனக்கு unconvincing – ஆகவே இருக்கிறது.

ஏனென்றால் அத்தகைய விஷயங்களைப் பற்றிப் பேசிய நான் படித்த இந்திய தத்துவ அறிஞர்களின் பின்னால் ஒரு spiritual பாரம்பரியம் இருந்துள்ளது. அந்தப் பாரம்பரியம் அவர்களுக்கு அவ்விஷயங்களுக்கான அனுபவ அறிவினை அளித்ததாக நான் அறிகிறேன். ஆகையால் அவர்களின் வாதங்களும் ஒப்புநோக்கையில் convincing -ஆக இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது!

நீங்கள் எப்படி இந்த கருத்தினை எதிர்கொள்வீர்கள் என்பதை அறிய ஆவலாய் உள்ளேன்.

-ஓப்லா விஷ்வேஷ்

அன்புள்ள விஸ்வேஷ்,

தாந்த்ரீகம் பற்றி அகேகானந்தபாரதி எழுதிய நூலில் இந்திய தத்துவ மரபை சரியான அர்த்தத்தில் தத்துவம் என்று சொல்லலாமா என்ற விரிவான விவாதம் ஒன்றை வாசித்த நினைவு. அதில் பேராசிரியர் குந்தர் அவர்களின் ஒரு மேற்கோள் உண்டு. இந்தியதத்துவம் என்பது தத்துவமல்ல ‘உள-குறியீட்டு-பிரபஞ்சவியல்’ என அவர் வகுத்திருந்தார்

கிரேக்க தத்துவத்தின் வழிவந்த மேலைத் தத்துவத்தை எப்படி நாம் தத்துவம் என்று சொல்கிறோமோ அந்த அர்த்ததில் இந்தியஞானவிவாதங்களைத் தத்துவம் என்று சொல்லமுடியாது.

மேலைத்தத்துவம் முற்றிலும் அறிவார்ந்த தர்க்கத்தின் விளைவு. அதில் எப்போதுமே இரு தரப்புகள் இருந்தன. அகவய அறிதலுக்கு இடமளிக்கும் போக்கு ஒன்று. முற்றிலும் புறவயப்பார்வையை நோக்கிச் செல்லும் போக்கு இன்னொன்று. இருபதாம் நூற்றாண்டில் படிப்படியாக அது புறவயத்தர்க்கப் பார்வையை முதன்மையாக ஆக்கிக் கொண்டது. அதை லாஜிக்கல் பாஸிட்டிவிஸம் என்றார்கள். இன்றைய மேலைநாட்டுச் சிந்தனையின் அடித்தளமாக இருப்பது அதுதான்.[Logical positivism]

எதையும் புறவயமாகப் பார்க்கும்  ‘தூய’ தர்க்கமுறையை அது இன்று வளர்த்துக்கொண்டிருக்கிறது. அதிலிருந்து கலையின், இலக்கியத்தின் சாயல்களை கூடுமானவரை வெளியேற்றி விட்டது. அது மீபொருண்மை [மெடஃபிசிக்ஸ்]க்கு முற்றிலும் எதிரானது. அறிவியலின் நிரூபண முறைகளைப்போல மெய்மைகள், கருத்துநிலைகள் எல்லாமே புறவயமாக ஆராயவும் நிறுவவும் மறுக்கப்படவும் தக்கவை என அது எண்ணுகிறது.

அறிவியல் கல்வியின் அடிப்படையாக இன்று இருப்பது இந்த புறவயத்தர்க்கவாதம். இதுவே உண்மையைக் காணும் ஒரே வழி என நாம் நம்பிக்கொண்டிருக்கிறோம். இது கலைக்கும் இலக்கியத்துக்கும் எதிரானது என்றுகூட உணர்வதில்லை. இது மெய்மையறிதல்களுக்கு எவ்வகையிலும் பொருந்துவதல்ல என்றும் உணர்வதில்லை.

ஒரு மேனாட்டு தத்துவசிந்தனையாளன் இன்று அகவயப்பார்வை கொண்டவனாக இருந்தாலும்கூட தன்னை அந்தத் தூய தர்க்கத்தின் எல்லைக்குள் நிறுத்திக்கொள்கிறான் . [ஆனால் நான் உண்மையிலேயே முக்கியமானவர்களாகக் கருதுபவர்கள் அந்த எல்லையை மீறி இலக்கியத்துக்குள்ளும் வந்தவர்கள், இலக்கியவாதிகளாகவும் கருதப்படவேண்டியவர்கள். உதாரணம் நீட்சே] இன்றைய தத்துவஞானி புறவயத் தர்க்கத்தின் கருவிகளையே பயன்படுத்துகிறான்.

அந்தப் புறவயமான தர்க்கத்தால் மேலைத்தத்துவம் ஒரு புறவயமான கட்டமைப்பாகத் தொகுக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு தத்துவஞானியும் அதன் ஒரு பகுதியை உருவாக்க அது ஒரு கட்டிடம்போல அல்லது கரையான்புற்று போல வளர்ந்தபடியே இருக்கிறது.

ஒரு மேலைத்தத்துவவாதியின் தத்துவத்தின் பெறுமதி என்ன என்று எப்படித் தீர்மானிப்பது? அவன் சொல்வதை நாம் எப்படி சரிபார்ப்பது?

நாம் மேலைத்தத்துவமரபு உருவாக்கிய அந்தப் புறவயமான தத்துவக் கட்டுமானத்தை- தர்க்கமுறையைப் பொதுவாகவேனும் கற்பதே வழி. அதில் ஒவ்வொரு சிந்தனையாளனையும் அவனுக்குரிய இடத்தில் அமரச்செய்ய வேண்டும். அந்தக் கட்டுமானம் பல்லாயிரம் வருடங்களாக மானுடம் திரட்டிய உண்மைகளின் பெருந்தொகை. உண்மைகள் ஒன்றை ஒன்று நிரப்பிக்கொண்டும் ஒன்றை ஒன்று மறுத்தும் ‘பேருண்மை’களாக மாறியிருக்கும் ஒரு களம் அது. ஓர் ஐரோப்பியச்சிந்தனையாளனை அந்தக் களத்தில் அவன் எந்த இடத்தில் இருக்கிறான் என்பதை வைத்து மதிப்பிடலாம், புரிந்துகொள்ளலாம்.

உதாரணமாக ஹெகெலை எப்படி மதிப்பிடுவது? ஹெகலின் பெரும் வாசகராக இருந்த என் நண்பர் மறைந்த சோதிப்பிரகாசம் அவர்களிடம் அவரைப்பற்றி நான் விரிவாக விவாதித்திருக்கிறேன். சோதிப்பிரகாசம் சொல்வார். ஹெகலை மார்க்சைக் கொண்டும் மார்க்ஸை ஹெகலைக்கொண்டும் மதிப்பிடவேண்டும் என்று

மறுதரப்புகளைக் கொண்டு மதிப்பிடுவது என்பது உண்மையில் ஒட்டுமொத்தத்தைக்கொண்டு தனிச்சிந்தனையாளரை மதிப்பிடுவதே. ஐரோப்பிய சிந்தனைமரபில் ஹெகலுக்கு என்ன இடம் என்பதுதான் ஹெகலின் சிந்தனைகளுக்கு உண்மையில் என்ன மதிப்பு என்ற வினாவுக்கான விடையாகும்.

நேர்மாறாக இந்தியசிந்தனையில் அதன் அடிப்படை என்பது தர்க்கத்தில் இல்லை. இங்கிருந்த தத்துவஞானிகள் மெய்ஞானிகளும்கூட. அதாவது அவர்களின் தேடல் தர்க்கத்தின் தளத்தில் நிகழவில்லை. உள்ளுணர்வின் தளத்தில் நிகழ்ந்தது. தியானம் மூலம் நிகழ்ந்தது. குந்தர் சொல்வதைப்போல அது ஓர் உளவியல்-குறியீட்டியல் நிகழ்வுதான்.

பெர்க்ஸன்

ஒரு கீழைத் தத்துவஞானியுடன் நாம் அவரது ஆளுமையையும் எப்போதும் பிணைத்துக்கொள்கிறோம். ஆனால் மேலைத்ததுவஞானியின் தத்துவம் அவரது ஆளுமையுடன் பிரிக்கமுடியாத தொடர்புள்ளது அல்ல. அது புறவயமானது.

அதாவது ஒரு கீழைத்தத்துவ ஞானியின் சிந்தனைகளுக்குப் பின்புலமாக உள்ளது அவரது அனுபவங்கள். அவரை வைத்தே நாம் அவரது சிந்தனைகளை மதிப்பிடுகிறோம். வெறுமே சிந்தனைகளை முன்வைத்தால் இங்கே ஒருவர் ஞானியாக அறியப்படுவதில்லை. அச்சிந்தனைகளை அவர் வாழ்ந்து காட்டியிருக்கவேண்டும். அவர் அச்சிந்தனைகளுக்கான நிரூபணமாக இருக்கவேண்டும்.

ஓர் உதாரணம் சொல்கிறேன். ஹென்றி பெர்க்ஸன் தத்துவஞானி. ஆனால் அவரது மாணவரான நடராஜகுரு வெறும் தத்துவஞானி அல்ல. அவர் உபாசனையையும் தியானத்தையும் தன் வழியாகக் கொண்ட மெய்ஞானியும்கூட.

நம்முடைய தத்துவசிந்தனையில் எப்போதும் ஓர் அகவயத்தன்மை உள்ளது. நம்முடைய சிந்தனைமரபில் பௌத்தம், வேதாந்தம், சைவசித்தாந்தம்ஆகியவற்றின் ஒரு சிறுபகுதி மட்டுமே புறவயமானது.இது பொதுவாக கீழைச்சிந்தனைகளுக்கே பொருந்தும் பார்வை.

நமது தத்துவஞானிகள் தங்களின் அறிதல்களைத் தர்க்கம் மூலம் அறியவில்லை. ஆனால் அவர்களில் ஒருசாரார் தர்க்கம்மூலம் அவற்றை வெளியிட்டார்கள். பெரும்பாலான சமயங்களில் அவர்கள் தங்கள் அகவய அறிதல்களை மொழியில் வெளிப்படுத்தியபின்னர் அவற்றை அவரது மாணவர்கள் தர்க்கபூர்வமாக விளக்கினர். அவற்றை முன்வைத்துப் பிற தரப்புடன் தர்க்கபூர்வமாக விவாதித்தனர்.

இவ்வாறு அவ்வறிதல்கள் தர்க்கத்தைச் சந்திக்கும் இடங்களில் மட்டுமே அவை தத்துவம் என்று சொல்லத்தக்கவையாக உள்ளன. இந்தத் தத்துவ அம்சம் இந்தியசிந்தனை மரபில் இரண்டாம்பட்சமானது என்பதே உண்மை.

மொழியைப் புறவயமாக வகுக்கும் சந்தஸ் சாஸ்திரம் , விவாதமுறைகளை வகுக்கும் நியாய சாஸ்திரம் ஆகிய அறிவுத்துறைகள் மூலம் தர்க்கம் இங்கே ஓரளவு புறவயமாக வரையறைசெய்யப்பட்டது. அவற்றின் அடிப்படையில் பெரும் தத்துவ விவாத அரங்குகளும் இங்கே நிகழ்ந்தன. அவற்றின் வழியாக இந்தியதத்துவம் என்ற மரபு உருவாகி வந்தது.

ஆயினும் அகவய அறிதலுக்கு தத்துவம் கருவியாக இல்லாதவரை அது இரண்டாம்பட்சமானதென்றே கருதப்பட்டது. மேலும் இங்குள்ள ஞானத்தரப்புகளில் கணிசமானவை பொதுவிவாதத்துக்கு முன்வரவே இல்லை

அத்துடன் இந்தியசிந்தனை மரபு மேலைச்சிந்தனை மரபைப்போல தூயதர்க்கம் நோக்கிச் செல்லவுமில்லை. இங்கே தத்துவவிவாதத்தில் இலக்கியமும் கலைகளும் ஊடுருவுவது சாதாரணம். இந்தியாவின் முக்கியமான பல தத்துவநூல்கள் கவிதையின் மொழியில் அமைந்துள்ளன. உண்மையை அறிவதற்கான ஆதாரங்களில் நேர்க்காட்சி, ஊகம், முன்னறிவு ஆகியவற்றுக்கு நிகராக உவமையையும் சேர்த்துக்கொண்ட சிந்தனைமரபுகள் இங்குண்டு.

ஆகவே இங்கே மெய்யறிதல்கள் தர்க்கம் மூலம் முழுமையாகத் தொகுக்கப்படவில்லை. திட்ட்வட்டமான புறவயமான அமைப்பாக உருவாகி வரவும் இல்லை. பெரும்பாலான தத்துவஞானிகளை இந்தியசிந்தனையின் ஒட்டுமொத்தத்தை வைத்து மதிப்பிடமுடியாது. ஆகவேதான் பல மேலையறிஞர்கள் இந்திய தத்துவம் தத்துவமல்ல என்கிறார்கள். அது ஒருவகையில் சரிதான்.

சரி, இந்திய தத்துவசிந்தனை மரபு மேலைத்ததுவசிந்தனைமரபு இரண்டில் எது சரியானது? அல்லது எது மேலானது?

அப்படி இரண்டில் ஒன்று மேல் அல்லது சரி என்று ஒருபோதும் சொல்லலாகாது என்பதை நடராஜகுருவும் நித்யசைதன்ய யதியும் திரும்பத்திரும்ப அவர்களின் நூல்களில் சொல்லியிருக்கிறார்கள். இரண்டுக்கும் அவற்றுக்குரிய தனித்தன்மைகளும் குறைபாடுகளும் உண்டு

இந்தியதத்துவமரபு அதன் அடிப்படையான அகவயத்தன்மை காரணமாக ஒருபோதும் புறவயமாக முழுமையாகப் புறவயமாக கற்றறியக்கூடியதாக இல்லை. நூல்களைப் பயிலலாம். கொள்கைகளைத் தெரிந்துகொள்ளலாம். ஆனால் இந்திய தத்துவம் அறிவார்ந்த தர்க்கத்துக்குள் முழுமையாக அடங்காதது என்பதனாலேயே உள்ளுணர்வைப் பயிலும் தியானம் வழியாக மட்டுமே எந்த ஒரு தத்துவ தரிசனத்தையும் உண்மையாக உள்வாங்க முடியும்.

இந்திய தத்துவநூல்கள் பெரும்பாலும் சூத்திரங்கள் என்னும் ஒற்றை வரிகளாக இருப்பதைக் காணலாம். அவை இருபட்டை அணுகுமுறை வழியாக அறியப்பட வேண்டியவை. அவற்றைத் தர்க்கபூர்வமாக விளக்கி விரித்து எழுதும் உரைகள் வழியாக அறியும் முறை ஒருபட்டை. அவை தத்துவத்துக்குள் வருகின்றன. அவற்றை தியான மந்திரங்களாக ஆக்கி தியானித்து உபாசித்து அறியும் முறை இன்னொரு பட்டை. அது தத்துவமே அல்ல

உதாரணமாக திருக்குறள்

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தான் என்று
ஐம்புலத்தார் ஓம்பல் தலை

என்ற குறள் இந்திய தத்துவநூல்களுக்குரிய சூத்திர வடிவில் ஒரு தொன்மையான தரிசனத்தை முன்வைக்கிறது. தென்புலத்தார் என்றால் மூதாதையர். மூதாதையர், தெய்வம், விருந்து ,ஒக்கல் அதாவது சொந்தபந்தங்கள், தான் என ஐந்தையும் பேணவேண்டியது ஒருவனின் கடமை என்கிறது இக்குறள்

உரைகளின் வழியே விதவிதமாக இந்த ஒன்றரை வரி விரியும். தெய்வத்திற்கும் முதலாக தென்புலத்தாரை ஏன் வைத்தார் வள்ளுவர்? ஏனென்றால் அவர்கள்தான் ஆதிதெய்வங்கள். வழிபாட்டின் தொடக்கமே மூதாதையர் வழிபாடுதான். தெய்வம் என பன்மையில் சொல்லவில்லை என்பதைக் கவனிக்கலாம்.

விருந்து என்ற சொல் விருந்தினரை அல்ல சான்றோரையே குறிக்கிறது என விளக்கங்கள் உண்டு. ஒக்கல் என்பது உறவினரை மட்டும் சொல்லவில்லை. அச்சொல் சார்ந்திருப்பவர்களைச் சொல்கிறது. பழைய இல்லறவாழ்க்கையில் பல்வேறு சிறுகைத்தொழிலளர்கள் மற்றும் நாடோடிகள் இல்லறத்தானைச் சார்ந்திருந்தனர். வீட்டு மிருகங்களையும் இதில் சேர்க்கலாமென விளக்கப்படுவதுண்டு

சிந்திக்கும்தோறும் இந்த வரி விரிந்தபடியே போகும். இப்படி சுருக்கமாக, சூத்திரவடிவில் எழுதும் வழக்கம் மேலைச்சிந்தனை மரபில் பிற்காலத்தில்தான் தத்துவ அங்கீகாரம் பெற்றது. நீட்சேயின் ‘இவ்வாறு பேசினான் ஜரதுஷ்டிரன்’ என்ற நூல் முக்கியமான முன்னுதாரணம். பின்னர் விட்ஜென்ஸ்டீனின் நூல்கள்.

இந்த வரியை ஒரு தியானமந்திரமாக கொள்ளும்போது அதையொட்டி ‘சிந்திக்கும்’ பயிற்சியை நாம் திட்டமிட்டு ரத்துசெய்கிறோம். அதைவெறும் சொல்லாட்சிகளாக மட்டுமே எடுத்துக்கொண்டு அச்சொற்கள் நம் அகத்தை ஊடுருவி கனவுத்தளத்தை ஆழத்து அமைதியையும் தீண்ட அனுமதிக்கிறோம்.

எனக்குத்தெரிந்த ஒரு துறவி இவ்வரியை அவரது குருவிடமிருந்து மந்திர உபதேசமாகப்பெற்றார். நாளடைவில் ‘தென்புலத்தார்தெய்வம்விருந்தொக்கல்’ என்ற ஒற்றைவரியாக அது மாறியது. அவர் அதைச் சொல்லும்போது நான் மனம் அதிர்ந்தேன். தென்புலத்தவரே தெய்வமும் விருந்தும் சொந்தமும் ஆகிறார்கள் என்றும் தென்புலத்தாரின் தெய்வம் விருந்தும் சொந்தமும் தான் என்றும், தென்புலத்தார் விருந்தும் தெய்வமும்போன்றவர்கள் என்றும் விதவிதமாக அர்த்தம்கொடுக்க ஆரம்பித்தது அவ்வரி.

இக்காரணத்தால்தான் இந்திய தத்துவமாணவன் ஒரு குரு இல்லாமல் அதன் ஆழங்களுக்குச் செல்லவே முடியாது எனப்படுகிறது. சரியான குரு அமையாத ஒருவருக்கு நூற்றுக்கணக்கான விளக்கங்களும் முரண்பாடுகளுமே கிடைக்கும். ஒருபோதும் வாசிப்பறிவின்மூலம் ஒரு தெளிவை நோக்கிச் செல்லமுடியாது.இது அதன் மிகபெரிய பலவீனம்.

இந்திய தத்துவம் கல்லூரிகளில் கற்பிக்கப்படுவதைக் கண்டாலே இது புரியும். உண்மையில் இந்திய தத்துவத்தின் வரலாறு மட்டுமே இங்கே கற்பிக்கப்படுகின்றது. அதைப்புரிந்து விவாதிக்கும் தத்துவத்தர்க்கம் இன்று மேலைத்தர்க்கமாகவே இங்கே உள்ளது.உண்மையான தத்துவம் அதன் தரிசனத்தில் உள்ளது. அதை இங்கே நம் கல்லூரி வகுப்பில் கற்பிக்கமுடியாது.தேர்வு வைத்து மதிப்பெண்போடவும் முடியாது.

ஹெகலை கல்லூரி வகுப்பில் முழுமையாகவே கற்பிக்கலாம். அந்தத் தர்க்கமுறை புறவயமானது. ஆதிசங்கரரின் விவேகசூடாமணியைக் கல்லூரி வகுப்பில் அர்த்தபூர்வமாகக் கற்பிக்கமுடியாது. அதன் பல வரிகள் உணர்த்தப்படவேண்டியவை.

‘பரமார்த்திகம்’ என நாம் வகுக்கும் ஒரு தளத்தில் மட்டுமே இந்தியதத்துவத்தின் இவ்வியல்பு சாதகமானது. பரமார்த்திக ஞானம் ஒரு ஆழ்மனதில் இருந்து இன்னொரு ஆழ்மனதுக்கு மர்மமான அந்தரங்க வழிகளினூடாகப் பரிமாறப்படுவது.

ஆனால் தத்துவத்தின் பெரும்பாலான தளங்கள் மானுடவாழ்க்கையின் நூற்றுக்கணக்கான அறிவுத்துறைகளுடன் சம்பந்தப்பட்டவை. தத்துவம் என்பது மானுட அறிதல்களின் எல்லாப் போக்குகளையும் கட்டுப்படுத்தக்கூடிய, வழிநடத்தக்கூடிய, தொகுத்துக்கொள்ளக்கூடிய ஒரு ஆதாரமான ஞானமாகும்.

உதாரணமாக இந்திய ஆயுர்வேதம், சிற்பவியல், ஒழுக்கவியல் அல்லது வேளாண்மை என எதை எடுத்துக்கொண்டாலும் இந்திய தத்துவஞானம் அதன் சாராம்சமாக இருப்பதைக் காணலாம். இந்திய தத்துவஞானத்தைக் கொஞ்சமேனும் கற்காமல் ஒருவர் அவற்றைப் புரிந்துகொள்ள முடியாது

சென்ற காலங்களில் இந்தக்கலைகளும் குருமுகமாகவே கற்பிக்கப்பட்டன. ஆகவே இந்தியதத்துவ ஞானத்துடன் அவை சீரான உறவுகொள்ள முடிந்தது.ஆனால் இன்று இந்தத் துறைகள் அனைத்துமே புறவயமான அறிவுத்தளங்களாக மாறிவிட்டன. தர்க்கம் மூலம் புறவயமாகத் தொகுக்கப்பட்டு நூல்களாக ஆகி மனிதனுக்கு வெளியே ஒரு கட்டுமானமாக நின்றிருக்கின்றன

அந்தப் புறவய அறிவுத்துறைகளுடன் மேலைத்தத்துவமே உரையாடமுடிகிறது. ஆகவே இன்று உலகம் முழுக்க உள்ள எல்லா அறிவுத்துறைகளையும் மேலைத் தத்துவமே வழிநடத்துகிறது. இந்தியதத்துவம் இன்றுள்ள நிலையில் அச்சவாலைச் சந்திக்கமுடியாது.

இதை ஆரம்பத்திலேயே அரவிந்தர் போன்றவர்கள் முன்னுணர்ந்திருந்தார்கள். இந்திய தத்துவஞானமரபைத் திட்டவட்டமான தர்க்கங்களுக்குள் கொண்டு முடிந்தவரை புறவயமாக ஆக்க அரவிந்தர் காலம் முதலே பெரும் முயற்சிகள் நிகழ்ந்தன

நடராஜகுரு இந்தப் பிரச்சினைக்கு ஒரு தீர்வை உருவகித்தார். கீழைச்சிந்தனையின் தர்க்கவியல் காலாவதியாகிவிட்டது என அவர் நினைத்தார். ஆகவே நன்கு வளர்ந்த மேலைச்சிந்தனையின் தர்க்கவியலைக் கொண்டு இந்தியசிந்தனையை விளக்கிவிரிவாக்கலாம் என்று முயன்றார். அவருக்கு நெருக்கமான ஏ.என்.வைட்ஹெட் போன்றவர்களின் முழுமைநோக்கு அணுகுமுறை அவருக்கு முன்னுதாரணமாக அமைந்தது.

நடராஜகுருவின் வழிகாட்டலில் அவரது நண்பரும் பிரெஞ்சு தத்துவ ஆசிரியருமான ஜான் ஸ்பியர்ஸின் ஆசிரியத்துவத்தில் 1930கள் முதல் கிட்டத்தட்ட முப்பதாண்டுக்காலம் தொடர்ச்சியாக வெளிவந்த வேல்யூஸ் [values] தத்துவ இதழ் இந்த தளத்தில் ஆற்றிய பங்களிபு மிகப்பிரம்மாண்டமானது. நடராஜகுரு அதற்காக ஈஸ்ட் வெஸ்ட் யுனிவர்சிட்டி என்ற அமைப்பையும் உருவாக்கினார்

ஆனால் செய்யவேண்டிய பணியின் அளவை வைத்துப்பார்த்தால் செய்தது சிறு துளியே. அந்த முயற்சி இன்றும் முன்னெடுக்கப்படாத ஒன்றாகவே உள்ளது. அதற்குக்காரணம் இரண்டு. நம் கல்வித்துறையில் உண்மையான தத்துவக்கல்வி அனேகமாகக் கிடையாது. இந்தியதத்துவம் மீதான மேலைநாட்டு ஆய்வுகளை ஒட்டி பாடப்புத்தகங்களை எழுதுவதன்றி ஒன்றுமே நிகழவில்லை. மறுபக்கம் நம்முடைய தத்துவஞானத்தின் மரபார்ந்த தரப்புகள் தங்களை சடங்குகளுடனும் நம்பிக்கைகளுடனும் பிணைத்துக்கொண்டு குறுகுங்குழுக்களாக நீடிக்கவே விரும்புகிறார்கள்

நாளை அந்தப் பணி நிகழலாம். நம் அறிவார்ந்த இளைஞர்களில் ஒரு சாரார் தொழில்நுட்ப ஞானத்தில் கொஞ்சம் சலிப்படையும்போது

ஜெ

முந்தைய கட்டுரைகம்பராமாயண அகராதி
அடுத்த கட்டுரைவெண்கடல்-கடிதம்