கன்னிநிலம் – நாவல் : 3

மூங்கில் தறி அறைந்து கட்டப்பட்ட  மெல்லிய முள்கம்பியாலான வேலிக்கு நடுவே முகாமின் நீலப்பச்சைநிறக் கூடாரங்கள் காற்றில் உப்பி உப்பி அழுந்திக் கொண்டிருந்தன. மணல்மூட்டைகள் அடுக்கப்பட்டு உருவான சுற்று மதிலுக்கு அப்பால் எம் 249 ஸ்க்வாட்  ஆட்டமாட்டிக்  லைட் வெயிட் போர்ட்டபில் இயந்திரத்துப்பாக்கிகளின் மூக்குநுனிகள் தெரிந்தன. நிமிடத்துக்கு 750 ரவுண்ட் சுடக்கூடியவை. முகாமுக்குள் மரமேடைமீது எம் 203 கிரனேட் லாஞ்சர்கள் மூன்று நின்றன. ஒவ்வொன்றிலும் ஜவான்கள் தயாராக நின்றனர்.

நான்குபக்கமும் ரைபிள்கள் சூழ உள்ளே சென்றோம். வேலி மூடப்பட்டு வாயில் சாத்தப்பட்டது.

மெட்றாஸ் ஸாப்பர் ரெஜிமெண்டைச்சேர்ந்த இந்த பதினெட்டாவது ஹில்மேன் கம்பெனியின் சங்கேதப்பெயர் காட் ·ப்ளை. ஈஸ்டர்ன்  கமாண்டுக்கு கீழே சேவைக்கு வடக்கிலிருந்து அனுப்பபட்டது. அதிகாரபூர்வ தலைவர் கீழே ‘காங் டால்’லில் இருந்த மேஜர் திரிபாதி. ஆனால் மலையில் நான்கு தென் மாநிலங்களைச் சேர்ந்த ஐம்பது பேர் மட்டும் காப்டன் சௌகான் தலைமையில் இயங்கினோம்.  எட்டுபேர் சிக்னல் பிரிவைச்சேர்ந்தவர்கள். பத்துபேர் சமையல் செய்யும் சப்ராஸிகள். துப்புரவு மற்றும் பணிகள் செய்யும் டபேதார்கள். இயந்திரத்துப்பாக்கி இயக்குபவர்கள் பன்னிரண்டுபேர். பெரும்பாலும் அதிகாரிகள் வடமாநிலத்தவர்களாகவே அமைவது வழக்கம். சௌகான் வந்து எட்டு மாதமாகிறது.

நான் மூச்சுவிடாமல் உத்தரவுகளை சொல்லியபடியே சிக்னல் பிரிவை நோக்கி ஓட்டமும் நடையுமாகச் சென்றேன். அவளை அலுவலகத்துக்குக் கொண்டுசென்று பலத்த காவலில் வைக்கச்சொன்னேன். கம்பெனி முகாமை முதற்கட்ட விழிப்பில் இருக்கும்படி ஆணையிட்டேன். அத்தனை பேரும் டியூட்டியில் இருக்கவேண்டும். முகாமைச்சுற்றியுள்ள நான்கு செர்ச் லைட்டுகளும் எரியட்டும். ஐந்துநிமிடங்களுக்கு ஒருமுறை ஒவ்வொரு இடமும் ஒளியால் தொடப்படவேண்டும்.

மழைக்கோட்டை கழட்டி வீசிவிட்டு ஈரமான பூட்ஸ¤களுடன் நேராக சிக்னல் அறைக்குச் சென்றேன். வயர் நாற்காலியில் அமர்ந்தேன்.  அருகே  சுபேதார் மேஜர் சண்முகம் பச்சை நிற எல்சிடி திரை அவன் கண்ணாடிச்சில்லுகளில் ஒளிர ஹெட்செட் மீது கையை வைத்து அழுத்தியபடி கூர்ந்து கேட்க முயன்றான். உரக்க ” காட் ·ப்ளை காலிங்… காட் ·ப்ளை காலிங்… ஹலோ ஹலோ காட் ·ப்ளை காலிங்…காலிங் காட் ப்ளை…” என்று கூவினான்.

சுபேதார் மாணிக்கம் ” குட் ஈவ்னிங் சார்” என்றான். ”சிக்னல் கிடைக்கவில்லை . ஒன்றரை மணிநேரமாக முயல்கிறோம்.”

“என்ன ஆச்சு?”

“கீழே ஒரு பெரிய புயல் கூடியிருக்கிறது. பாருங்கள்…”என்று ஸ்க்ரீனைக்காட்டினான். முற்றிலும் புகையால் மூடப்பட்டிருந்தது. ”ஒரே எலக்ட்ரான் கொந்தளிப்பு. ஹெட்போன் சீறுகிறது…”

நாயக் சுபேதார் ராமப்பா யூனி·பாமைப்போட்டபடி உள்ளே வந்தான். ”குட் மானிங் சார்” என்றான். சேரில் அமர்ந்தபடி மானிட்டரைப்பார்த்தான். ”மிகப்பெரிய மழை வரப்போகிறது… காற்றும் பயங்கரமாக இருக்கலாம்…”

”எப்போது சரியாகும்?”

” வடகிழக்கு மலைகளில் மேகத்தைப்பற்றி யாரும் எதுவும் சொல்ல முடியாது. ஒரே மணிநேரத்தில் திரை கிழிவது போல விலகலாம்.அல்லது கோட்டைச்சுவர் போல நான்குநாட்களுக்கு நிற்கவும் நிற்கலாம்”

நான் எழுந்தேன். ” இது செய்தி. ஐந்து நிமிடங்களுக்கு ஒரு முறை முயலுங்கள். எவ்வளவு முடியுமோ அவ்வளவு. இந்தச்செய்தியை அவர்களுக்குச் சொல்லிவிடவேண்டும். நாம் அபாயத்தில் இருக்கிறோம்” செய்தியை குறிப்புத்தாளில் எழுதி நீட்டிவிட்டு திரும்பினேன்.

சப்ராஸி சூடான டீ கொண்டுவந்தான். நான் ஒரு கோப்பையை எடுத்தேன். தொண்டைக்குழியும் மார்பும் வயிறும் மனமும் சூடான திரவத்தால் தீண்டப்பட்டன. ஒரு வகை தன்னம்பிக்கை உருவாயிற்று.

சண்முகம்”ஷிட் ” என்றபடி ஹெட்போனைக் கழற்றினான். ”வெறும் இரைச்சல். இந்த சிஸ்டமே முப்பதுவருஷம் பழசு…. ”

“இப்ப உள்ளது இன்னும் முப்பதுவருஷம் கழிச்சு நமக்கு வரும்”என்றான் ராமப்பா ” இங்க துப்பாக்கிகளே பழசு. ஏகே 57 வந்தாச்சு.நாம இன்னும் கார்பைன்கள வச்சுக்கிட்டு அலையறோம்”

“சார் , நாம் இந்தப்பெண்ணை இங்கே வைத்திருக்கத்தான் வேண்டுமா?”என்றான் மாணிக்கம்

“பின்னே?”

” அவளை தேடிவருவார்கள். அவள் மிக முக்கியமானவளாக இல்லாவிட்டால் சுடுவதை நிறுத்தியிருக்க மாட்டார்கள்…”

“ஆகவே?”

அவன் கண்களை தழைத்தான்.

“நம் காப்டன் அவர்களிடம் இருக்கிறான். காயம்பட்ட இரண்டுபேர் உயிருடன் அவர்களிடம் மாட்டியிருக்கலாம்…. இவள்தான் நமது பணயப்பொருள்..”

“நாம் ஒட்டுமொத்தமாக அவர்களுடைய கையில் பணயப்பொருளாக இருக்கிறோம் என்று நினைக்கிறேன்”என்றான் மாணிக்கம்

“ஷட் அப்” என்று அதட்டிவிட்டு வெளியே நடந்தேன்.

வெளியே கூரையிலிருந்து நீர் சொட்டிக்கொண்டிருந்தது. கூடாரங்களில் காற்றின் அசைவு. காடு அப்பால் ஊளையிட்டது. அலுவலகத்தில் அவள் தரையில் ஈர உடையுடன் அமர்ந்திருந்தாள். மடியில் அவளது கத்தி

“நாயர்..இவளுக்கு உடைகள் கொடுக்கவில்லையா?”

“கொடுத்தோம் சார்…. அவள் தனிமையில் உடைமாற்ற விரும்புகிறாள்.”

நான் அவளைப்பார்த்தேன். “சரி. நான் இவளைப் பார்த்துக் கொள்கிறேன். தேடலுக்குப் போனவர்கள் மட்டும் குளித்து ஓய்வெடுக்கட்டும். மற்றவர்கள் விழித்திருக்கட்டும்.”என்றேன்.

நாயர் “எஸ் சார்”என்றான். அவனும் பிற மூன்று ஜவான்களும் வெளியே சென்றார்கள்.

எம்9 .45 பெரட்டா பிஸ்டலை உருவிய அக்கணத்தை நான் விரும்பினேன். அதன் கரிய கனத்தை வலக்கையில் உணர்ந்தபடி திடமான குரலில் அவளிடம்  ” எழுந்திரு” என்றேன். ஆயுதம் ஒருவனை ஆண்மையாக உணரச்செய்கிறதென்றால் அது ஓர் இழிவுதான். ஆனால் அது எப்போதுமே அப்படித்தான். ஆண்மை என்றால் ஒரு பாவனை. சிகரெட் அந்த பாவனையை அளிக்கிறது. சீருடை இன்னும். ஆயுதம் மேலும் பலமடங்கு.

அவள் எழுந்தாள். அருகே மேஜை மீதிருந்த உடைகளை எடுத்து அவள் மீது வீசினேன். ஆண்களுக்கான டி ஷர்ட். பேண்ட். அவள் அவற்றை கையில் வைத்தபடி நின்றாள்.

நான் நாடா நாற்காலியை இழுத்துப்போட்டு அமர்ந்தேன். கூடாரம் எழுந்தமர்ந்தது, மூச்சுவிடுவது போல. “நான் லெப்டினெண்ட்  நெல்லையப்பன். இப்போது இந்த கம்பெனிக்குப் பொறுப்பு நான்தான். உன் பெயர் என்ன?” என்றேன் ஆங்கிலத்தில்

அவள் பதில் சொல்லவில்லை

“பேசு” என்றேன்

அவள் பேசாமல் நின்றாள்.

” பேசித்தான் ஆக வேண்டும். ஏனென்ன்றால் நீ இன்று என்னுடன் படுக்கப்போகிறாய்”என்றேன் புன்னகையுடன்.

அதிர்ந்து சட்டென்று கத்தியை தன் கழுத்தை நோக்கி தூக்கினாள்

“ஆகா…அப்படியானால் உனக்கு ஆங்கிலம் தெரியும்…..”சிரித்தபடி ” சரி, இனிமேல் தந்திரங்கள் வேண்டாம்…சொல்லு. உன் பெயரென்ன?”என்றேன்

” ஜ்வாலா ” கத்தியை தழைத்தாள். மெல்லிய குரல். பர்மிய மூங்கில் வாத்தியம் போன்ற குரல்.

“முழுப்பெயர்?”

“ஜ்வாலாமுகி. ”

”சர் நெய்ம்?”

”அதை நான் சொல்லப்போவதில்லை”

“ஓக்கே. ஜ்வாலா நீ புத்திசாலிப்பெண். படித்தவள். உன்னைப்பார்த்தாலே தெரிகிறது. இப்போது நீ பணயக்கைதி. நாளை உனக்காக பேரம்பேச உன் ஆட்கள் வரப்போகிறார்கள். பேசி முடிவுக்கு வந்து எங்கள் காப்டனையும் ஜவான்களையும் பெற்றுக்கொண்டு உன்னை கைமாறுவோம். அதுவரை நீ ஒழுங்காக இருந்தால் உனக்கும் நல்லது எனக்கும் நல்லது. சரியா?”

“சரி”

“உடைமாற்றிக் கொள்.நான் உன்னைப்பார்க்கமாட்டேன். இந்த நிழலைத்தான் பார்ப்பேன். ஏதாவது தவறான அசைவு தெரிந்தால் சுடுவேன். கொல்லமாட்டேன். ஆனால் கால் போய்விடும்..”

அவள் தலையசைத்தாள். நிழலில் அவள் உடைமாற்றுவதை பார்த்திருந்தேன். சட்டென்று என் மனம் படபடத்தது. அந்த மனக் கிளர்ச்சியை நான் எதிர்பார்க்கவேயில்லை. அதை நான் வெறுத்தேன்.

அவள் கனைத்தாள். நான் திரும்பிக் கொண்டேன். அவள் புதிதாக நின்றிருந்தாள்.

அந்த அலுவல் கூடாரத்தில் இரு அறைகள். ஒன்றில் சௌகான் தங்கியிருந்தார். இன்னொன்று அலுவலுக்கு. அதிகாரிகளுக்குரிய இரட்டைத்திரைச்சீலைக் கூடாரம் அது. இரண்டிலும் நாடாக்கட்டில்கள் உண்டு.

”நீ அந்தக்கட்டிலில் படுத்துக் கொள்”என்றேன். அவள் சௌகானின் காம்ப் கட்டிலில் அமர்ந்து கத்தியை மடிமீதுவைத்துக் கொண்டாள்.

நான் வெளியே நின்ற ஜவானைக் கூப்பிட்டு பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு என் கூடாரத்துக்கு திரும்பினேன். அதில் நானும்  ஆறுபேரும் தங்கியிருந்தோம். உள்ளே சென்று டிரங்குப்பெட்டியை திறந்து உடைகளை எடுத்துக் கொண்டேன். நாயர் தூங்காமல் கண்கள் மீது பிளைண்டரைப் போட்டு படுத்திருந்தான்.

” நாயர், நான் சௌகான் கூடாரத்திலே தங்கிக்கறேன்” என்றேன்

“ஸெரி ”என்றான்.என்னிடம் எப்போதுமே மலையாளத்தமிழில் தான் பேசுவான்.

நான் வெளியே போகக் கிளம்பியபோது நாயர் ” பிள்ளைவாள்… அவள் முக்கியமானவள்னு ஊகிச்சது ஒரு பிரில்லியண்ட் ஐடியா. அதனாலதான் நாம தப்பினோம். தேங்க்யூ ”

“தேங்க் யூ டூ ” என்றேன். ”நீ கூட ரொம்பப் பிரமாதமா சுட்டே”

”அது தொழில்…. ”

”யூ ஆர் குட் அட் இட்” நான் சென்றேன்

பின்பக்கம் விறகடுப்பில் சப்ராஸி வெந்நீர் போட்டிருந்தான்., குளித்தேன். நீர் என் மீது பட்டபோது மெல்ல பாடல் ஒன்றை சீட்டியடித்தேன். ”ஒரு பெண்ணைப்பார்த்து நிலவைப்பார்த்தேன். நிலவில் ஒளியில்லை” . சப்ராஸி என்னைப்பார்ப்பதை உணர்ந்து திரும்பிக் கொண்டேன்.

மீண்டும் கூடாரத்துக்கு வந்து என் உடைகளை அணிந்தேன். “ஜ்வாலா”என்றேன் கண்ணாடியைப்பார்த்து

“எந்தா ?”

“ஜ்வாலா. அவ பேரு. ஜ்வாலாமுகி…” நான் தலைசீவியபடி ”நீ கூட பாடுவியே நீலகிரியுடெ சகிகளே ஜ்வாலாமுகிகளேன்னு..நீலமலைகளோட தோழி… இல்ல ?”

நாயர் அதை விரும்பவில்லை. ”ஷி இஸ் டேஞ்சரஸ்”என்றாள்

”ஹில்ஸ் ஆர் ஆல்வேய்ஸ் டேஞ்சரஸ்”

“பேசுறாளா?”

“ஒரு வார்த்தை மட்டும்தான் பேசினா. பாப்போம்”

நான் வெளியே நடந்தேன்”குட் நைட்”

” நாட் எ குட் நைட்.  பெரிய மழையும் காத்தும் வரப்போகுது”என்றான் நாயர். பெருமூச்சுடன் திரும்பிப்படுத்தபடி. ”இது திம்மன் படுத்த கட்டில். இதில வேற ஆளை படுக்க வைக்கணும். காலியா இருக்கிறது பாத்தா ரொம்ப கஷ்டமா இருக்கு”

“சரி…நாளைக்கு பாப்பம்”

“அவன் பாடியை நாம கேட்டு வாங்கிடலாம் இல்ல? ”என்றான் நாயர் ”அவன் அம்மாஅப்பாவுக்கு மூணு பொண்ணு. இவன் மட்டும்தான் ஆம்பிளை”

என் நெஞ்சை ஏதோ ஒன்று இறுக்கியது .ஒருகணம் நிண்றேன்

“ஸாரி” என்றான் நாயர்.

நான் தலையசைத்துவிட்டு வெளியேறினேன். வெளியே காற்று கூவியபடி சுழன்றது. காவல் ஏற்பாடுகளை சரி பார்த்தேன். டவர் மீதிருந்த நாயக் ரங்கராஜன் ” ராஜர் அலெர்ட் சர்” என்றான் .

தியாகராஜன் அவ்வழியாக வந்து நின்று மெல்ல சல்யூட் வைத்து ” புயல் வரும் சார்”

“ஆமா”

”எத்தனைபேர் சாவு?”

“மூணுபேர்னு நினைக்கறேன்”

”பேட் லக்”

நான் பேசாமல் நடந்தேன். கைவலிக்க பீரங்கிக் குண்டை தூக்குவது போல மனதைச் சுமந்தேன்.

கூடாரத்துக்குள் சென்று உள்ளே எட்டிப்பார்த்தேன். அவள் தூங்கிக் கொண்டிருந்தாள். மெல்ல ஒலியில்லாமல் உள்ளே நுழைந்தேன்.  காட்டு பூனைபோல விருட்டென்று எழுந்து அமர்ந்தாள், கையில் கத்தியுடன்.

“விழிப்பான தூக்கம்… அப்படியானால் நீ மிகவும் பயிற்சி பெற்றவள். ” என்றேன். என்னுள் வெறுப்பு கொந்தளிப்பதை உணர்ந்தேன். ”கொல்வதற்கான பயிற்சி…”

அவள் மீண்டும் படுத்துக் கொண்டாள். முகத்தில் எந்த உணர்ச்சியுமில்லை

நான் அலுவலகத்திற்கு வந்து அங்கே கிடந்த காம்ப் கட்டிலில் படுத்து போர்த்திக் கொண்டேன். தூக்கம் வரவில்லை. சௌகானின் இல்லாத இருப்பு அந்த அறைக்குள் நிரம்பியிருந்தது. அவரது மனைவி தைத்த அலங்காரத்துணி மாட்டிய சுவர். நானக் படம். பொற்கோயில் படம். அவரது பெல்ட். உடைகள். பஞ்சாபி டர்பன் துணிகள். ஹிந்தி சினிமாப் பாட்டு காசெட்டுகள்

எழுந்து அவரது மேஜையை அடைந்து பெட்டியை திறந்தேன். சௌகான் தன் குடும்ப ·போட்டோவை மேலாகவே வைத்திருந்தார். குடுமி வைத்த இரு பையன்கள் நடுவே அவரும் குண்டான சர்தாரிணியும் சிரித்தபடி காமிராவை உற்று பார்த்தனர்.

பெருமூச்சுடன் அவற்றை வைத்துவிட்டு மீண்டும் வந்து படுத்துக் கொண்டேன்.

[மேலும்]

முந்தைய கட்டுரைகன்னிநிலம் – நாவல் : 2
அடுத்த கட்டுரையூதக்கொலைகள்:கடிதங்கள்